தூய வாரத்தின் திங்கட் கிழமை மாலையில் வழமையாக மன்னார் மறைமாவட்டத்தில் நடைபெறும் திருவருட்சாதனங்க ளுக்குப் பயன்படுத்தப் படும் தூய எண்ணெய் புனிதப்படுத்தும் திருச் சடங்கும், குருக்களுக்கான குருத்துவ அர்ப்பண வாக்குறுதிகளைப் புதுப்பிக்கும் திரு நிகழ்வும் நேற்று (26.03.2018) திங்கட்கிழமை மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது.மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர். இவ்வேளையில் குருக்கள் அனைவரும் தமது குருத்துவ அர்ப்பண வாக்குறதிகளைப் புதுப்பித்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து திருவருட்சாதன அர்ச்சிப்பக்குப் பயன்படுத்தப்படும் புகுமுக அருட்சாதன ( ஆயத்தக்காரரின்) தூய நெய், நோயாளின் அர்ச்சிப்புத் தூய நெய், கிறிஸ்மா அர்ச்சிப்பு தூய நெய் ஆகியன கத்தோலிக்க திருச் சபையின் திருவழிபாட்டு ஒழுங்கின்படி ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இத் தூய நிகழ்வில் பெருந்தொகையான குருக்கள், துறவிகள், இறைமக்கள் கலந்து செபித்தனர்.