மார்ச்:08 புனித தேவ அருளப்பர் சேவா வீரர்

மார்ச்:08
புனித தேவ அருளப்பர்
சேவா வீரர் – (கி.பி.1495-1550)

இவர் போர்த்துக்கல் நாட்டினர். ஆனால் சிறுவயதிலே ஸ்பெயின் நாட்டிற்கு ஓடி அங்கு ஒரு செல்வந்தரின் ஆடுகளை மேய்த்து வந்தார். பிறகு பிரான்சுக்கும் சென்று படைவீரனாக மாறினார். 40ம் வயதில் தமது பழைய பாவ வாழ்க்கையை நினைத்து துயரத்தில் ஆழ்ந்தார். மனம் மாறி இறைபணிக்கு தம்மை அர்ப்பணிக்க முடிவெடுத்து ஆபிரிக்கா சென்றடைந்தார். மூர் ஜாதியினரின் கொடிய வேதனைக்கு உள்ளாகியிருந்த கிறிஸ்தவர்களை மீட்க ஆவல் கொண்டார். சிலருடைய அறிவுரையைக் கேட்டு ஸ்பெயின் திரும்பினார். அங்கு படங்கள், சுருபங்கள் விற்கும் பணியில் இறங்கினார். ஆனால், அவருக்கு இன்னும் இறை அமைதி திரும்பவில்லை.
இச் சூழலில் ஒருமுறை அவிலா ஜான் கொடுத்துக் கொண்டிருந்த மறையுரையைக் கேட்டுப் பலர் முன்னிலையில் தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டார். தமது பாவவாழ்க்கையை ஆண்டவர் மன்னிக்க வேண்டுமென மன்றாடினார். இவரது மனம் உடைந்த நிலை கண்டு இவரை மனநோய் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவிலா ஜான் அவரைச் சந்தித்தார். “பின் தங்கிய மக்களுக்கு தொண்டு செய்ய நல்ல ஆற்றலை இறைவன் உங்களுக்கு அளித்துள்ளார்” என்று இறைவாக்கு உரைத்தது போல் அவிலா அறிவுரை அளித்தார். அச்சொற்கள் அவருக்கு முழு மனஅமைதியை கொடுக்கவே உடனே மனநோய் மருத்துவ மனையினின்று வெளிக்கிளம்பினார்.
நோய்வாய்ப்பட்டவர்களைச் சுமந்து கொண்டு வந்து அவர்களுக்கு மருத்துவம் அளித்து வந்தார். அங்கே அவர்களை குளிப்பாட்டி பாடுபட்ட சுரூபத்தைக் கொடுத்து முத்தி செய்யச் சொல்வார். கட்டிலில் படுக்க வைத்து அருகில் உள்ள குருவானவரைக் கூப்பிட்டு ஒப்பரவு அருட்சாதனத்திற்கு வழி பண்ணுவார். அவர்களை நன்கு பேணியபின் வெளியில் சென்று வீதிகள் தோறும் பொருள் உதவி தருமாறு இயேசுவின் பெயரால் ஓலமிட்டுக் கதறுவார். அதன் பயனாக செல்வந்தர்கள் தங்கள் பணப்பெட்டியைத் துறந்து தாராளமாகப் பொருள் கொடுத்து உதவினர்.
இந்தத் தொண்டு நிலையாக நடைபெற ஆண்டவர் உறுதுணையாய் இருந்தார் என்பதை எண்பிக்கும் வகையில் இவருடன் ஒத்துழைத்தவர்கள் 20 ஆண்டுகளுக்குப் பின் “நன்மை செய்யும் சகோதரர்” என்ற பெயரில் மருத்துவமனைகள் தொடங்கினார்கள். இன்று இவர் காட்டிய வழியைப் பின்பற்றி உலகெங்கும் ஏறத்தாழ 100 மருத்துவமனைகள் தொண்டாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொண்டினை 10 ஆண்டுகள் நிறைவேற்றிய அருளப்பர் நோய்வாய்ப்பட்டார். ஒருமுறை நற்கருணை நாதர் முன் மண்டியிட்டுக் மன்றாடிக் கொண்டிருக்கும் போது இவரது நிலையை உணர்ந்து இரக்கப்பட்டு ஒசோரியா என்ற பெயர் கொண்ட பெண்மணி தமது ஊர்தியில் கட்டாயப்படுத்தித் தூக்கி சென்றார். அவருக்கு சத்துணவு கொடுத்தார். “எனது ஆண்டவர் புளித்த காடியைத் தானே குடித்தார்?” என்று சொல்லி சத்துணவை ஒதுக்கி விட்டார். ஜான் அந்த வீட்டிற்கு கொண்டுவரப்பட்டதை அறிந்த பிலபுக்கள் அவரை அனுகி அவரது ஆசீரை மன்றாடினர். ‘நான் ஒரு பாவி நான் பலருக்கும் துர்மாதிரிகையாய் வாழ்ந்தவன்’ என்று சொல்லி ஆசீர் அளிக்க மறுத்தார். இருப்பினும் அவரது உயிர் பிரிவதற்குச் சற்று முன் அருகிலிருந்த பேராயர் அவரைச் சந்தித்து நகர் முழுவதையும் ஆசீர்வதிக்கக் கேட்டுக் கொண்டார். பின்னர் ஒரு ஆலயத்திற்கு கொண்டுபோகப் பட்டு இதே நாளில் நற்கருணை நாதர் முன் செபித்துக் கொண்டிருக்கும் போது அவரது தூய ஆன்மா இறைவனிடம் சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *