திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி

முதல் வாசகம்

பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 9b-14

ஆண்டவர் கூறுவது: உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும். ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்; வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்; உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்றுபோலும் இருப்பாய். உன் மக்கள் பண்டை நாளிலிருந்து பாழடைந்து கிடப்பவற்றைக் கட்டியெழுப்புவர்; தலைமுறை தலைமுறையாக உள்ள அடித்தளங்களின் மேல் கட்டியெழுப்புவாய்; தகர்ந்த மதிலைத் திரும்பக் கட்டுபவன் என்றும் குடியிருப்பதற்குத் தெருக்களைச் சீர்படுத்துபவன் என்றும் பெயர் பெறுவாய்.

ஓய்வுநாளின் முறைமைகளினின்று விலகிச் செல்லாது, என் புனித நாளில் உன் விருப்பம் போல் செய்யாதிருந்து, ஓய்வுநாள் `மகிழ்ச்சியின் நாள்’ என்றும் `ஆண்டவரின் மேன்மைமிகு புனித நாள்’ எனவும் சொல்லி அதற்கு மதிப்புத் தந்து, உன் சொந்த வழிகளில் செல்லவோ உன் சொந்த ஆதாயத்தை நாடவோ வெற்றுப் பேச்சுகளைப் பேசவோ செய்யாதிருந்தால், அப்பொழுது, ஆண்டவருக்கு ஊழியம் புரியும் மகிழ்ச்சியைப் பெறுவாய்; நானோ, மண்ணுலகின் உயர்விடங்களில் உன்னை வலம் வரச்செய்வேன்; உன் மூதாதையாகிய யாக்கோபின் உரிமைச் சொத்தின் மூலம் உனக்கு உணவளிப்பேன்; ஆண்டவரின் வாய் இதை உரைத்தது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்: திபா 86: 1-2. 3-4. 5-6

பல்லவி: ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பியும்.

ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான் எளியவன்; வறியவன். என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில் நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். பல்லவி

என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். பல்லவி

ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

`தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே என் விருப்பம்,’ என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32

அக்காலத்தில் இயேசு சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிதண்டுபவர் ஒருவரைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா!” என்றார். அவர் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரிய விருந்து அளித்தார். வரிதண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள்.

பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், “வரிதண்டுபவர்க ளோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?” என்று கேட்டனர்.

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *