மருதமடுத் திருத்தாயாரின் தொடக்ககால இருப்பிடமும் , வரலாற்றச் சிறப்புமிக்கதுமான மாந்தை தூய லூர்து அன்னை திருத்தலப் பெருவிழா, இன்று (17.02.2018) சனிக்கிழமை காலை பல ஆயிரம் இறைமக்கள் ஒன்று கூடி நிற்க மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இத் திருத்தலத்திற்கு அருட்பணி நோக்கோடு முதன் முதலாக வருகை தந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை குருக்கள், துறவியர், அழைக்கப்பட்ட விருந்தினர்கள், இறைமக்கள் அனைவரும், இத் திருத்தலத்தோடு இணைந்துள்ள மாந்தைக் குளத்திற்கு அருகே வைத்து வரவேற்றனர்.
அடம்பன் மத்திய மகாவித்தியாலய மாணவர்களின் மகிழ்வொலி அணிவகுப்போடு ஆயர் அவர்கள் லூர்து அன்னையின் திருத்தலத்திற்கு அழைத்து வரப்பட்டார். அதன் பின்னர் ஆயர் தலைமையில் திருவிழாக் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. தென் பகுதியிலிருந்து வந்திருந்த சிங்கள மொழி பேசுகின்ற கத்தோலிக்க சகோதர சகோதரிகளுக்கா சிங்கள மொழியில் மறையுரையும், இறைவார்த்தையும், நம்பிக்கையாளர் மன்றாட்டும் இடம் பெற்றது.
திருப்பலி முடிவில் லூர்து அன்னையின் திருவுருவ ஆசீரும் ஆயர் அவர்களால் வழங்கப்பட்டது. மாந்தைப் பங்கு இறைமக்களும், பங்குத் தந்தை அருட்பணி.ச.மரியதாசன் அடிகளாரும் அனைத்தையும் சிறப்பாக ஒழுங்குபடுத்தியிருந்தனர்.