மன்னார் மறைசாட்சிகளின் மண்ணில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மருதமடுத் திருத்தாயாரின் ஆரம்ப இடமாகிய மாந்தையில் அமைந்துள்ள மாந்தை மாதா பெருவிழா நாளை (17.02.2018) சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இன்று (16.02.2018) வெள்ளிக்கிழமை இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மாலை 05.30 மணிக்கு திருச் சிலுவைப் பாதைத் தியானத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து சிறப்பு மாலைப் புகழ் ஆராதனையும், நற்கருணை ஆராதனையும் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் தலைமையில் நடைபெற்றன. தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் மறையுரைகள் வழங்கப்பட்டன. இத் திருவிழாவிற்கு கணிசமான சிங்கள மொழி பேசுகின்ற கத்தோலிக்க சகோதர, சகோதரிகளும் வருகை தந்திருந்தனர்.
இன்றைய வழிபாடுகள் அனைத்தையும், வங்காலை தூய ஆனாள் பங்கு மக்களும், மாந்தைப் பங்கு மக்களும் இணைந்து நடாத்தினர். முhந்தைப் பங்குத் தந்தை அருட்பணி.ச.மரியதாசன் சீமான் அடிகளார் அனைத்து ஒழுங்குகளையும் ஒழுங்கமைப்புச் செய்திருந்தார். மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலிருந்தும் மக்கள் வருகைதந்து இவ் வழிபாட்டில் பங்கேற்றனர்.