05ஆம் வாரம் – வியாழன்


முதல் வாசகம்

என் உடன்படிக்கையை நீ மீறினதால், உன் அரசைக் கூறு கூறாக்குவோம். தாவீதின் பொருட்டு ஒரு கோத்திரத்தை உன் மகனுக்கு அளிப்போம்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 4-13

 
அந்நாள்களில் சாலமோன் முதுமை அடைந்தபோது, அவருடைய மனைவியர் அவர் இதயத்தை வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றும்படி மாற்றிவிட்டனர். அதனால் அவர் உள்ளம் தம் தந்தை தாவீதின் உள்ளத்தைப்போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கவில்லை.

சாலமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்தையும் அம்மோனியரின் அருவருப்பான மில்கோமையும் வழிபடலானார். இவ்வாறு சாலமோன், ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தார். தம் தந்தை தாவீது ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியது போன்று அவர் செய்யவில்லை.

சாலமோன் எருசலேமுக்கு எதிரில் இருந்த மலையில் மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும் அம்மோனியரின் அருவருப்பான மோலேக்குக்கும் தொழுகை மேடுகளைக் கட்டினார்.

இப்படியே தங்கள் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுவதற்காக, வேற்றினத்தாரான தம் மனைவியர் எல்லாருக்கும் சாலமோன் இவ்வாறு செய்து கொடுத்தார். ஆண்டவர் சாலமோன்மீது சினமுற்றார்.

ஏனெனில் தமக்கு இருமுறை காட்சியளித்திருந்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து அவர் இதயம் விலகிச் சென்றது. வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம் என்று ஆண்டவர் அவருக்குக் கட்டளையிட்டிருந்தும், அக்கட்டளையை அவர் கடைப்பிடிக்கவில்லை.

ஆகையால் ஆண்டவர் சாலமோனை நோக்கி, “நான் உன்னோடு செய்த உடன்படிக்கையையும், நான் உனக்கு விதித்த நியமங்களையும் மீறி, நீ இவ்வாறு நடந்துகொண்டதால் உன் அரசை உன்னிடமிருந்து பறித்து அதை உன் பணியாளனுக்குக் கொடுக்கப்போவது உறுதி.

ஆயினும் உன் தந்தை தாவீதின் பொருட்டு, உன் காலத்தில் நான் இதைச் செய்யமாட்டேன். உன் மகன் கையினின்று அதைப் பறித்து விடுவேன். ஆயினும் அரசு முழுவதையும் பறித்துவிடாமல், என் அடியான் தாவீதின் பொருட்டும் நான் தேர்ந்து கொண்ட எருசலேமின் பொருட்டும் ஒரு குலத்தை உன் மகனிடம் விட்டுவைப்பேன்” என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்: திபா 106: 3-4. 35-36. 37, 40

பல்லவி: ஆண்டவரே! உம் மக்கள்மீது இரக்கம் காட்டி என்னை நினைவுகூரும்!

நீதிநெறி காப்போர் பேறுபெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபெற்றோர்! ஆண்டவரே! நீர் உம் மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவுகூரும்! அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணை செய்யும்! பல்லவி

வேற்றினத்தாரோடு கலந்து உறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர்; அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்; அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின. பல்லவி

அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர்; எனவே, ஆண்டவரின் சினம் அவர்தம் மக்களுக்கெதிராகப் பற்றியெரிந்தது; தமது உரிமைச் சொத்தை அவர் அருவருத்தார். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களிடம் மிகுந்துள்ள தீமையை அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

 

சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே!

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 24-30

 

அக்காலத்தில் இயேசு புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.

உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது. அவர் ஒரு கிரேக்கப் பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.

இயேசு அவரைப் பார்த்து, “முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார்.

அதற்கு அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தார்.

அப்பொழுது இயேசு அவரிடம், “நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று” என்றார்.

அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *