06ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

கடவுள் எவரையும் சோதிப்பதில்லை.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-18

 

அன்பிற்குரியவர்களே, சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றி வாகையினை அவர்கள் பெறுவார்கள்.

சோதனை வரும்போது, `இச்சோதனை கடவுளிடமிருந்தே வருகிறது’ என்று யாரும் சொல்லக் கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை.

ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப் படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது. பின்னர் தீய நாட்டம் கருக்கொண்டு பாவத்தைப் பெற்றெடுக்கிறது. பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கிறது.

என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, ஏமாந்துபோக வேண்டாம். நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரம் எல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்: திபா 94: 12-13. 14-15. 18-19

பல்லவி: ஆண்டவரே! நீர் கண்டித்து பயிற்றுவிப்போர் பேறுபெற்றோர்.

ஆண்டவரே! நீர் கண்டித்து உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும் மனிதர் பேறுபெற்றோர்; அவர்களின் துன்ப நாள்களில் அவர்களுக்கு அமைதி அளிப்பீர். பல்லவி

ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார். தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன் வழி நடப்பர். பல்லவி

`என் அடி சறுக்குகின்றது’ என்று நான் சொன்னபோது, ஆண்டவரே! உமது பேரன்பு என்னைத் தாங்கிற்று. என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது. பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

 

பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 14-21

 

அக்காலத்தில் சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது.

அப்பொழுது இயேசு, “பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, “நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா?

ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?” என்று அவர் கேட்க, அவர்கள், “பன்னிரண்டு” என்றார்கள்.

“ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?” என்று கேட்க, அவர்கள், “ஏழு” என்றார்கள்.

மேலும் அவர் அவர்களை நோக்கி, “இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கேட்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *