மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு ஆட்காட்டிவெளிப் பங்குச் சமூகம் இன்று (13.02.2018) செவ்வாய்க்கிழமை மாபெரும் வரவேற்பளித்தது.ஆட்காட்டிவெளிப் பங்கு ஆரம்பமாகும் புவியியல் எல்லையான நெடுங்கண்டல் கிராமத்தின் இறுதிப்பகுதியில் வைத்து உந்துருளி அணிவகுப்போடு வரலாற்றுச் சிறப்புமிக்க பரப்புக்கடந்தான் கர்த்தர் கோவில்வரை அழைத்து வரப்பட்டார்.
ஆலயத்திற்கு 100மீற்றர் தொலைவில் வைத்து பங்குத் தந்தை அருட்பணி.எ.டெஸ்மன் அஞ்சலோ அடிகளாரும் பங்குச் சமூகமும் ஆயருக்கும், மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளாருக்கும், ஆயரின் செயலாளருக்கும் மலர்ச் செண்டு கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஆயரை வாழ்த்தி ஊர்ப் பெரியவர்கள் கவிபாடி அழைத்துச் சென்றனர்.
ஆலயத்தை அடைந்ததும், ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த இயேசுவின் திருமுக திருவுருவத்தை ஆயர் அவர்கள் அர்ச்சித்துப், தூய்மைப்படுத்தி, திறந்து வைத்தார். அதன் பின்னர் ஆலயத்தில் சில நிகழ்வுகள் இடம் பெற்றன:
இந்நாட்களில் தவக்காலத்திகாக மக்களை ஆன்மிக வழியில் தயாரித்த இந்தியாவிலிருந்து வருகைதந்த அருட்பணி.யா.அந்தோணிறாஜ், சகோ.இளங்கோ ஆகியோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர் முக்கிய விருந்தினர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். இறுதியாக ஆயரின் ஆசியுடன் அனைத்தும் நிறைவுற்றன.