தூய ஆரோக்கிய அன்னைக்கான புதிய ஆலயம்

நானாட்டான் பங்கின் தூய ஆரோக்கிய அன்னைக்கான புதிய ஆலயம் அமைக்கப்பட்டு ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. முன்னர் இருந்த ஆலயம், யுத்தத்தின் கொடுமைக்குள்ளாகி பாதிப்படைந்திருந்ததனாலும், பழைய ஆலயத்தில் இடப் பற்றாக்குறை இருந்ததனாலும், புதிய ஆலயம் கட்டப்படவேண்டிய அவசிய தேவை இருந்தது.ஏறத்தாழ பத்து வருடங்களாக நடைபெற்று வந்த இப்புதிய ஆலயத்தின் அமைப்பு வேலைகள் முடிவடைந்த நிலையிலே நேற்று 05.02.2018 திங்கட்கிழமை மாலை மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் இப் புதிய ஆலயம் அர்சித்து ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இப்பங்கின் வங்காலைத் திசைப் பக்கமாக அமைந்துள்ள கிளை ஆலயமான ஆவணம் கிராமத்தின் பிரதான வீதியில் வைத்து ஆயர் அவர்கள் உந்துருளி அணிப் பவனியோடும், நாடகப் பொம்மைக் குதிரை அணிவகுப்போடும் அழைத்துவரப்பட்டு நானாட்டான் பாடசாலைச் சந்தியில் வைத்து குருக்கள், துறவிகள், இறைமக்களால் வரவேற்கப்பட்டு நானாட்டான் மத்திய மகாவித்தியாலயத்தின் மேலைநாட்டு மகிழ்வொலி இசைக்குழுவினரின் அணிவகுப்போடு ஆலயத்தை வந்தடைந்தார்.

இதனைத் தொடர்ந்து திருச்சபையின் திருவழிபாட்டு ஒழுங்கு மரபில் குறிக்கப்பட்டபடி உரிய நேரங்களில் ஆலயம் ,பலிப் பீடம், தூய நற்கருணைப் பேழை அகியவற்றையும் ஆயர் அர்ச்சித்துப் புனிதப்படுத்தினார்.

பெருந் தொகையான குருக்கள் துறவிகள் இறைமக்களோடு அரச, அரச சார்பற்ற பணி முக்கிய பணிப்பொறுப்பாளர்களும், ஏனைய சமயத் தலைவர்களும் இத் தூய நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இப் பங்கின் பங்குத் தந்தை அருட்பணி.க.அன்ரனிற்றோ அருள்றாஜ் அடிகளார் ஆலயத்தின் கட்டிடப் பணியையும், இந்நிகழ்வையும் சிறப்பாக நெறிப்படுத்தி ஒழுங்கமைப்புச் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *