வஞ்சியன்குளம் பங்கின் துணை ஆலயமான புதுக்கமம் தூய யோசேப்பு ஆலயம் புதிதாக அமைக்கப்பட்டு 03.02.2018 சனிக்கிழமை மாலை மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் அர்சித்து ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.புதுக்கமம் தூய யோசேப்பு ஆலயச் சமூகமும், குருக்கள்,துறவிகள், அழைக்கப்பட்ட முக்கிய விருந்தினர்கள்,இறைமக்கள் ஆகியோர் ஆயரைக் கிராமத்தின் நுழைவாயிலில் வைத்து சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மன்னாரின் சிறப்பான கலை வடிவமாக விளங்கும் நாடக வரவேற்ப்புக் கவியை ஆயரின் குணம்சங்கள், வரலாற்றுப் பின்னணிகளை இணைந்து, வடிவமைத்து இக்கிராமத்தின் நாடக, வாசாப்பு துறைசார் புலவர்கள் அழகாகப் பாடிக்கொண்டு ஆயரை விருந்தினர்களோடு பவனியாக அழைத்து வந்தனர்.
ஆலயத்தை வந்தடைந்ததும் ஏனைய குருக்களோடு இணைந்து, ஆயர் அவர்கள் திருப்பலிக்கான திருவழிபாட்டு திருவுடை அணிந்து தூய நீரை அர்த்தித்து அதன் பின் ஆலயத்தையும் அர்ச்சித்துப் புனிதப் படுத்தினார். அதனைத் தொடர்ந்து திருப்பலி ஆரம்பமாகியது. அவ்வேளையில் திருச்சபையின் திருவழிபாட்டு ஒழுங்கு மரபில் குறிக்கப்பட்டபடி உரிய நேரங்களில் ,பலிப் பீடம், தூய நற்கருணைப் பேழை அகியவற்றையும் ஆயர் அர்ச்சித்துப் புனிதப் படுத்தினார்.
திருப்பலி முடிவில் கலைநிகழ்வும், நன்றி கூறல் நிகழ்வும் இடம் பெற்றது. அனைத்து நிகழ்வுகளையும் பங்குத் தந்தை அருட்பணி.லோ.ஞானாதிக்கம் அடிகளார் நெறிப்படுத்தி முன்னெடுத்துச் சென்றார்.












































































































































