பிப்ரவரி:03 புனித பிளாசியுஸ்

பிப்ரவரி:03
புனித பிளாசியுஸ்
ஆயர், மறைசாட்சி-(கி.பி.316)

 

இப் புனிதர் ஆர்மீனீயா(துருக்கி) நாட்டில் செபாஸ்டே நகர் ஆயராக இருந்து சிலினியஸ் கொடுங்கோல்மன்னன் காலத்தில் கிறிஸ்துவுக்காக குருதி சிந்தி இறந்தவர் என்பது மட்டும் உறுதியாகச் சொல்லப்படுகிறது; அடுத்துக் கூறப்படுபவவை ஆதாரமற்ற பாரம்பரியத்திலிருந்து வருபவை. இவை புனிதர் இறந்து 400 ஆண்டுகளுக்குப்பின் குறிப்பிடப்பட்டாலும் மத்திய நூற்றாண்டுகளில் உரோமை நகரில் மட்டும் இவரது பெயரால் 30 ஆலயங்கள் எழுப்பப்பட்டிருந்தன.
கிறிஸ்தவர்களை நசுக்கும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பிளாசியுஸ் தேவ ஏவுதலால் ஒரு காட்டுக்குள் சென்று தவமுனிவராக குகை ஒன்றில் நாள்களை செலவழித்தார். இவரைச் சுற்றிலும் வனவிலங்குகள் காத்திருந்தன். அவை உடல் நலம் குறைவு பட்டிருந்தால் அல்லது காயமுற்ற நிலையில் இருந்தால் அவற்றைக் குணப்படுத்தி வந்தார். இதனால் விலங்குகள் அவரது ஆசீருக்காக காத்துக் கொண்டிருந்தன. வேட்டைக்காரர்கள் அரசு சர்க்கஸ்களுக்கு விலங்குகள் பிடிக்க வந்தபொழுது குகையில் புனிதர் இருப்பதைக் கண்டு அவரை விலங்கிட்டு அரசனிடம் கொண்டு சென்றார்கள். போகும் வழியில் ஒரு தாய் தன் மகனின் தொண்டையில் மீன்முள் சிக்கி தவித்து உயிருக்குப் போராடியதால் அவன்மீது கைவைத்து செபிக்கக் கேட்டுக் கொண்டார். புனிதரும் அவனது தொண்டையை தொட்டு செபித்தவுடன் மீன் முள் தூரத்தில் வந்து விழுந்தது.
கப்படோசியாவின் ஆளுநர் அக்ரிகோலாஸ் பிளாசியுசிடம் சிலைகளுக்கு ஆராதனை செலுத்தப் பணித்தான். முதல் தடைவ மறுதலித்த போது அவரை நையப் புடைத்தான். அடுத்த முறை மரத்தில் கட்டித் தொங்கவிட்டு கூர்மையான ஆணிகள் நிறைந்த ஆயுதம் ஒன்றை கொண்டு அவரது உடலில் இரத்தம் பீறிட்டுத் தெறிக்குமாறு கீறிக் கிழித்தான். இதிலிம் பனிதரின் உடல் பிரியவில்லை என்ற ஆத்திரத்தில் அவரது தலையை வெட்டிக் கொன்றான்.
கீழத் திருச்சபையில் தொண்டையில் ஏற்படும் சிதைவுகளை இவர் ஆற்றியதன் புகழ் கி.பி.6ம் நூற்றாண்டில் விரைவாகப் பரவியது. இவரது திருநாள் கீழத் திருச்சபையில் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 1222ல் கூடிய ஆக்ஸ்போர்டு ஆயர் பேரவை இந்தத் திருநாளன்று இங்கிலாந்து முழுவதும் விடுமுறையாக இருக்கும்படி அறிவித்தது. ஜெர்மனி,பிரான்ஸ் நாட்டினர் இந்தத் திருநாளை எழுச்சியுடன் கொண்டாடுகின்றனர். இன்றுவரை காலங்காலமாக அமெரிக்க நாட்டு கத்தோலிக்க அருட்பணியாளர்கள் இந்தத் திருநாளன்று 2 தேன்திரிகளைச் சிலுவை வடிவில் அமைத்து மக்களின் தொண்டையில் வைத்து நோயினின்று நலம்பெற மந்திரிப்பது குறிப்பிடத்தக்கது. அப்போது கீழ்கண்ட செபம் சொல்லப்படுகிறது. “ஆயரும், மறைசாட்சியுமான புனித பிளாசியசின் மன்றாட்டால் இறைவன் உம் தொண்டையில் ஏற்பட்டுள்ள எல்லா நோய்களினின்றும் இன்னும் பல தீங்குகளிலிருந்தும் விடுவிப்பாராக. தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே ஆமென்.”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *