மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கின், தூய மரியன்னை ( தூய காணிக்கை அன்னை) திருவிழா இன்று காலை (02.02.2018) வெள்ளிக்கிழமை, சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.காலை 06.45மணிக்கு ஆலய பிரதான நுழைவாயில் வைத்து மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் பங்கு மக்கள் முன்னிலையில் பங்குத் தந்தை அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அடிகளாரால்; வரவேற்க்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இன்றைய திருவிழாவின் ஆரம்ப வழிபாடான மெழகுதிரிகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வும் மெழுகுதிரிப் பவனியும் நடைபெற்றது. மன்னார் ஆயர் அவர்கள் ஆரம்ப வழிபாடுகளை முன்னெடுத்து மெழுகுதிரிகளை ஆசீர்வதித்து மெழுகுதிரிப் பவனியை ஆரம்பித்து வைத்தார்.
பவனியின் இறுதியில் ஆலய முன்றலில் ஆயரும் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் குருக்களும் திருப்பலித் திருவுடையணிந்து திருப்பலிப் பீடம் நோக்கி வந்தனர். திருப்பலிப் பீடத்தை வந்தடைந்தவுடன் பீடத்திற்கு முன் ஆயரும், ஏனைய திருப்பலி நிறைவேற்றும் குருக்களும் தமிழ்ப்பாண்டில் ஆராத்தி வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஆன்மிக பிரதிநிதிகள் குத்துவிளக்கேற்றினர்.; தொடர்ந்து ஆயர் தலைமையில் திருவிழாக் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இன்றைய திருவிழாவற்கான மறையுரையை அருட்கலாநிதி லெறின் டீ றோஸ் கொஸ்தா அவர்கள் வழங்கினார்.
இவ்விழாவிற்கு மன்னார் மாவட்ட மேலதிக செயலர் திருமதி ஸ்ரன்லி டிமெல், மன்னார் பிரதேச செயலர் திரு.ம.பரமதாஸ், மன்னார் நகரசபைச் செயலர் திரு.பிறிற்றே றெஜினோல்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.இவ்விழாவில் பெருந்தொகையான இறை மக்கள் கலந்து செபித்தனர்.