ஜனவரி:24 புனித பிரான்சிஸ் சலேசியார்

ஜனவரி:24
புனித பிரான்சிஸ் சலேசியார்
மறைவல்லுனர்-(கி.பி.1567-1622)

 

ஜெனிவா நகரின் ஆயராக விளங்கியவர். புனித ஜான் பிரான்சிஸ் தே சாந்தாளுடன் சேர்ந்து மினவுதல் சபையைத் தோற்றுவித்தவர். “புனிதத்தில் வளர்வது எளிதிலும் எளிது. போர் வீரருக்கும் இது கைகூடும். பணித்தளத்தில் இருப்பவருக்கும் இது கைகூடும். ஏழை, பணக்காரருக்கும் இது கைகூடும். எங்கிருந்தாலும் இதயங்களை ஆண்டவரிடம் எழுப்பி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.”என்பார். “இறைவன் நமது இதயத்தில் மையங்கொண்டு வாழ விரும்புகிறார்.” என்பது இவரின் அசையாத நம்பிக்கை.
இவர் பிரான்ஸ் நாட்டில் சவாய் என்ற பகுதியில் உயர் குலத்தில் 13 மக்களில் மூத்தவராக தோன்றியவர். இவர் தம் தந்தை இவரை சட்டபடிப்புக்கு அனுப்பி உலகில் உயர்ந்த பதவியேற்க திட்டம் தீட்டினார். இத்திட்டத்துடன் பதுவை நகர் பல்கழைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார். சட்டக் கலையில் பட்டம் பெற்றபின் தந்தையின் கனவை தவிடுபொடியாக்கி விட்டு குருத்துவத்தை இவர் தேர்ந்து கொண்டார்.இயறற்கையில் இறைவனை இவர் கண்டுகளித்ததின் பயனாக இவரது பிற்கால மறைபோதனையில் இவ்வுண்மைகள் பளிச்சிட்டன.
இவர் கவனத்துடனும் திறமையுடனும் எழுதிய மறை விளக்க நூல்கள் பலவற்றைக் கால்வின் பதித்தனம் நிலவிய ஸாப்ளே எனும் மாவட்டத்தில் வாசிக்க அவற்றை மக்களிடம் வழங்கினார். அதன் பின் அங்கு அவர் நேரடியாக போதிக்கவும் கால்வின் பதிதத்தை சேர்ந்த பலரை மனந்திரும்பவும் முடிந்தது. “கடவுள் மீது அன்பு” என்ற நூலை இவர் எழுதி முடிக்க 10 ஆண்டுகள் ஆயின.
திருத்தந்தை 23ம் அருளப்பர் இவரைத் தம் வாழ்நாளெல்லாம் முன் மாதிரிகையாகத் தெரிந்து கொண்டார். திருத்தந்தை தமது நாள் குறிப்பில் இவ்வாறு எழுதியுள்ளார். “புனித சலேரியாரின் வாழ்க்கை வரலாற்றை பலமுறை படித்திருக்கிறேன். அவருடைய அறிவுரைகள் என் வாழ்வில் எவ்வளவு பொருத்தமாக உள்ளன! அவரது முன்மாதிரிகையால், தாழ்ச்சி, சாந்தகுணம், அமைதி இவைகளின் மீது என் உள்ளம் தணியாத வேட்கை கொண்டுள்ளது. நாள்தோறும் நான் சாதாரண அலுவல்களையும் மிக மேலான நோக்கத்துடன் செய்தாலே போதும் என்று இப்போது புரிந்து கொண்டேன். பிரான்சிஸ் அமைதிப் பண்பு உள்ளவராகவே மக்கள் அனைவரிடத்திலும் நடந்து கொண்டார் என்பதை அவரைத் தேடி வந்த யாவரும் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.”
“ஒரு பீப்பாய் நிறைய புளித்த காடி ஈக்களை ஈர்க்க முடியாது. ஆனால் ஒரு கரண்டி தேன் பல ஈக்களை ஈர்க்க முடியும்” என்பது இவரது விருதுவாக்காயிருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *