தூய வளனார் சபை அருட் சகோதரிகள் வங்காலைப் பங்கில்

ஏறத்தாழ 90 ஆண்டுகளாக வங்காலை தூய ஆனாள் பங்கில் சிறப்பாகப் பணியாற்றிய திருக்குடும்ப அருட்சகோ தரிகளின் யாழ் மாகாண அருட்சகோதரிகள் இம்மாதம்  07ம் திகதியுடன் (07.01.2018) தங்களுடைய பணியை நிறுத்திக் கொண்டு வேறு இடத்திற்குச் சென்றுள்ளமையால், அங்குள்ள இறைமக்களின் வேண்டுகேளுக்கு இணங்க, மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் மற்றும் குருக்களின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் லீயொன் என்னும் இடத்தைத் தலைமையமாகக் கொண்டு இயங்கும் தூய வளனார் சபை அருட் சகோதரிகள் இந்தியாவிலிருந்து வந்து, வங்காலைப் பங்கில் தமது பணியை இன்று (21.01.2018) செவ்வாய்க் கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளனர்.

இச்சபையின் இந்தியா தமிழ்நாடு, இலங்கை ஆகியவற்றிற்கான சபை மேலாளர் அருட்சகோதரி.சிசிலி சவேரியார், ஆலோசகர் அருட்சகோதரி. சூசையம்மாள் மற்றும் இந் தியாவிலிருந்து பணியாற்ற வந்திருக்கும் அருட்சகோதரி அருள்மேரி ஆகியோரோடு ஏற்கனவே மன்னார் மறைமாவட்டத்தில் மன்னார் நகரம், உயிலங்குளம் பங்கில் உள்ள நொச்சிக்குளம் கிராமம் மற்றும் யாழ் மாவட்டத்தில் மணற்காடு பங்கில் பணியாற்றும் இச் சபையின் அருட் சகோதரிகள் ஆகியோர் இன்றைய நிகழ்வில் கலந்து கெண்டனர்.

இவர்கள் அனைவரையும் இன்றைய திருப்பலிக்கு முன்னர் வங்காலை தூய ஆனாள் பங்குச் சமூகம் பெருமகிழ்ச்சியோடு வரவேற்றது. திருப்பலியின் முடிவில் இவர்களுடைய துறவற இல்லம் மன்னார் ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இவ்வேளையில் பங்குச் சமூகம் இங்கு ஒன்று கூடிச் செபித்தது.

திருக்குடும்ப அருட்சகோதரிகள் தங்களுடைய பணிக்காலத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார்கள் என்பதும், இவர்கள் குருத்துவ, துறவற அழைத்தல்களை ஊக்குவித்ததோடு, கல்விப் பணி, சமூகப் பணி மற்றும் ஆன்மிகப் பணிகளில் அர்ப்பணத்தோடு தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள் என்பதும் முக்கியமாக குறிப்பிடப்படவேண்டியதொன்று. இவர்களுடைய பணி நிறுத்தம் பங்கு மக்கள் மத்தியில் வருத்தத்தை உண்டு பண்ணியிருந்தது. இம் மக்கள் திருக்குடும்ப சபை அருட்சகோதரிகளுக்கு என்றும் நற்றியுடையவர்களாகவே இருக்கின்றார்கள்.

தங்களுடைய தற்காலப் பணி இலக்குகளைக் கருத்திற் கொண்டு தாங்கள் நீண்ட காலமாகப் பணியாற்றிய மடுத் தாயாரின் திருத்தலம், பேசாலை தூய வெற்றிநாயகி ஆலயப் பங்கு ஆகிவற்றிலும் தமது பணிகளை கடந்த வருடமும், அதற்கு முந்திய ஆண்டுகளிலும் நிறுத்திக் கொண்டுள்ளனர். மொத்தத்தில் மன்னார் மறைமாவட்டத்தில் நிண்டகாலமாக பணியாற்றிய முக்கியமான மூன்று இடங்களில் திருக்குடும்ப அருட்சகோதரிகள்; தங்களுடைய பணியை நிறுத்திக் கொண்டுள்ளனர். நீண்டகாலமாக மன்னார் மண்ணில் பணியாற்றிய இச் சகோதரிகளின் இம் மாற்றம் இறைமக்கள் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *