உங்களோடு சேர்ந்து பயணிக்க வந்திருக்கின் றோம். பயணத்தை ஆரம்பியுங்கள் நாங்கள் உங்களுக்கு வலுவூட்டு கின்றோம், நாம் அனைவரும் இறைமக்கள் நம்மை யாரும் பிரிக்க முடியாது, நிலைத்த, உறுதியான, நீடித்த, தொடர்ச்சியான, உயிரித் தொடர்பை நாம் உருவாக்க வந்திருக்கின்றோம், என்னும் பரிவுள்ளத்தோடு இந்தியா தமிழ்நாடு கத்தோலிக்க அருட்பணியாளர் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது.
இலங்கையில் தமிழ்மக்களிடம் வலுவிழந்து போயுள்ள ஆன்மிக, பொருளாதார, சமூக, கலாச்சார, அறிவியல் துறைகளில் ஆக்கபூர்வமான வளர்ச்சியை உருவாக்கி, கடந்தகால கசப்பான சோக வரலாற்றிலிருந்து மக்களை மீட்டெடுத்து புதிய உத்வேகத்தை உருவாக்கும் நோக்குடன், இன்றைய இலங்கைத் தமிழ் மக்களின் தேவைகளைக் கண்டறிந்து அதனை சீராக்க இந்தக் குழு பல நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இந்தக் குழுவை வழிநடாத்துபவராக மதுரை மறைமாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர் அருட்பணி. அந்தோனி பாக்கியம் அடிகளார் செயற்பட அவரோடு இணைந்து கோயம்புத்தூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணி.பாலு அடிகளார், சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணி. அமல்றாஜ் அடிகளார், அருட்பணி.கிளமென்ற் அடிகளார் மற்றும் மதுரையைச் சேர்ந்த திரு.றாயு ஆகியோர் இங்கு வந்து தமது தியாக, நல்லெண்ண, பரிவுள்ளப் பணியை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் இந்தியா தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் மதுரைப் பேராயர் பேரருட்கலாநிதி அந்தோனி பாப்புசாமி ஆண்டகை மற்றும் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி சூசைமாணிக்கம் ஆண்டகை அவர்களின் நெறிப்படுத்துதலோடு இப்பணியை முன்னெடுத்துச் செல்லுகின்றனர்.
இவர்கள் குறிப்பாக இலங்கையில் தமிழ் பேசும் மறைமாவட்டமாகிய திரிகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மறைமாவட்டங்களுக்குச் சென்று, தமிழ் பேசும் கத்தோலிக்கராக நாம் இணைந்து நம்முடைய ஆன்மிக வளர்ச்சியில் ஒருவருக்கொருவர் எவ்வாறு பங்களிப்புச் செய்ய முடியும் என்பதும், தமிழ்க் கத்தோலிக்க திருச்சபையாகிய நாம் எவ்வாறு பாகுபாடற்ற விதத்திலே எல்லாமக்களுக்கும் பணியாற்ற வேண்டும் என்பது பற்றியும், இன்றைய சூழலில் போருக்குப் பின்னரான நமது மக்களின் அவலங்களுக்கு நாம் எந்தெந்த வகையிலே உறுதியான தீர்வையும், உதவிகளையும் வழங்கமுடியும் என்பது பற்றிய விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்று முன்னோடித்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இதனுடைய அடிப்படையிலே மன்னார் மறைமாவட்டத்திற்கு நான்கு நாள் இப்பணியை முன்னெடுத்துச் செல்ல வருகை தந்த இந்தப் பணிக்குழு 16.10.2018 செவ்வாய்க்கிழமை மாலையில் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் ஆண், பெண் துறவற சபைகளின் பிரதிநிதிகளை மன்னார் குடும்பம், பொது நிலையினர் பணி மையத்தில் சந்தித்து உரையாடல்களை நடாத்தினர். இன்று 17.01.2018 காலையில், மன்னார் ஆயர் இல்லக் கேட்போர் கூடத்தில், மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர், இப்பணியை முன்னெடுத்துச் செல்ல பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உடனடியாக செயற்படுத்தப்படவேண்டியவை முன்னுரிமைப் படுத்தப்பட்டன.
நாம் இந்திய கத்தோலிக்க திருச்சபைக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கின்றோம். சிறப்பாக தமிழ் நாடு கத்தோலிக்க திருச்சபை எம் மக்களுக்குச் செய்த அளப்பரும் உதவிகளை மறந்துவி முடியாது. தூய யேசேவ் வாஸ் அடிகளார் இலங்கைக்கு வந்தபோது எமது மன்னார் மண்ணிலேதான் முதன் முதலாகப் பாதம் பதித்தார். உங்களுடைய வருகையும், நல்லெண்ணமும் எமக்கு மகிழ்ச்சியையும், புதிய உற்சாகத்தையும் தருகின்றது. நாம் என்றும் உறவில் நிலைத்திருப்போம்.
இவ்வாறு, இன்று 17.01.2018 காலையில், மன்னார் ஆயர் இல்லக் கேட்போர் கூடத்தில்: இந்தியா தமிழ்நாடு கத்தோலிக்க அருட்பணியாளர் குழுவினர் மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்களைச் சந்தித்தபோது அதனை ஆரம்பித்து வைத்த உரையாற்றிய மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்கள் கூறினார்கள்.