ஆண்டின் பொதுக்காலம், வாரம் 2 – திங்கள்

முதல் வாசகம்

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 15: 16-23

அந்நாள்களில் சாமுவேல் சவுலை நோக்கி, “நிறுத்தும், இன்றிரவு ஆண்டவர் எனக்குக் கூறியவற்றை உமக்குச் சொல்கிறேன்” என, சவுல், “சொல்லுங்கள்” என்றார். சாமுவேல் கூறியது: “நீர் உமது பார்வைக்கே சிறியவராய் இருந்த போதல்லவா இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர் ஆனீர்? ஆண்டவரும் உம்மை இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்தார். ஆண்டவர் உமக்கு வழிகாட்டி, “நீ சென்று அந்தப் பாவிகளான அமலேக்கியரை அழித்துவிட்டு வா. இறுதிவரை போரிட்டு அவர்களை ஒழித்துவிடு” என்று சொன்னார். அப்படியிருக்க, நீர் ஏன் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை? கொள்ளைப்பொருள்மீது பாய்ந்து ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்ததேன்?” அதற்குச் சவுல், சாமுவேலை நோக்கி, “ஆண்டவரின் குரலுக்கு நான் செவிகொடுத்தேன், அவர் காட்டிய வழியிலும் சென்றேன். அமலேக்கியரின் மன்னன் ஆகாகைக் கொண்டு வந்தேன். ஆனால் அமலேக்கியரை அழித்துவிட்டேன். ஆனால் வீரர்கள் உம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கில்காலில் பலி செலுத்த, தடை செய்யப்பட்ட கொள்ளைப் பொருளினின்று சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு வந்தனர்” என்றார். அப்போது சாமுவேல் கூறியது: “ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரிபலிகள், பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா? கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது, கீழ்ப்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது! கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம்! முரட்டுத்தனம் சிலைவழிபாட்டுக்கு ஒப்பான குற்றம். நீர் ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்தீர்! அவரும் உம்மை அரச பதவியினின்று நீக்கிவிட்டார்.”

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 50: 8-9. 16-17. 21,23

பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் எனது மீட்பைக் கண்டடைவர்.

நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.
உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக் கிடாய்களையோ, நான் ஏற்றுக்கொள்வதில்லை. பல்லவி

என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?
நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். பல்லவி

இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால்,
இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்து உரைக்கின்றேன்.
நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா. : மாற்கு 2:18-22

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 18-22

யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்து வந்தனர். சிலர் இயேசுவிடம், “யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்க முடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பு இருக்க முடியாது. ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள். எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற் பைகளுக்கே ஏற்றது” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *