ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வளமிகு நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த நாடு பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்கின்ற ஆறுகளையும் ஊற்றுகளையும் ஏரிகளையும் கொண்டது. கோதுமை, திராட்சை, அத்தி, மாதுளை, பார்லி ஆகியவை நிறைந்த நாடு.
அது ஒலிவ எண்ணெயும் தேனும் நிறைந்த நாடு. அந்த நாட்டில் பஞ்சமின்றி நீங்கள் அப்பங்களை உண்பீர்கள். அங்கு உங்களுக்கு எந்தக் குறையும் இராது. அந்த நாட்டின் பாறைகள் அனைத்தும் இரும்பு. அதன் மலைகளிலிருந்து செம்பு வெட்டி எடுக்கலாம். நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள். அப்போது, வளமிகு நாட்டை உங்களுக்குக் கொடுத்ததற்காக உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவீர்கள்.
இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளை கள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றினின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள்.
நீங்கள் உண்டு நிறைவுகொள்ளும் போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும், உங்கள் ஆடுமாடுகள் பலுகும் போதும், வெள்ளியும் பொன்னும் உங்களுக்ககு மிகுதியாகும் போதும், உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும் போதும், நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழி நடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்; இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே.
எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித்தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள். உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டுச் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை உங்களுக்கு அளித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள்.
இணைச்சட்டம் 8:7- 17