உரோமன் திருவழிபாட்டுத் தமிழ்த் திருப்பலிப் புத்தகத்தில் மீளவும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.இத் திருத்தங்களோடு புதிய திருப்பலிப் புத்தகம் இம்மாதம் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்டு திருப்பலியில் பயன்படுத்தப்படும்.
இந்திய தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் முயற்சியினால் புதிய திருப்பலிப் புத்தகம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உரோமை வத்திக்கான் திரு அவையின் திருவழிபாட்டுத் திருப் போராயத்தினதும், மற்றும் திருவழிபாட்டு, அருளடையாளங்களின் ஒழுங்குமறைப் பேராயமும் ஒப்புதலும், அனுமதியும் வழங்கியுள்ளன.
இத் திருப்பலிப் புத்தகத்தில் மாற்றங்களுக்குள்ளான சில பகுதிகளை இங்கே குறிப்பிட்டுக் காட்டப்படுகின்றன.
அருட்பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.
மக்கள்: ஆமென்.
அருட்பணியாளர்: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
மக்கள்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக. (முன்னைய திருப்பலிப் புத்தகத்தில் உம்மோடும் இருப்பதாக என்று உள்ளது)
அருட்பணியாளர்: ஆண்டவர் உங்களோடு இருப்பாரக.
மக்கள்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக. (முன்னைய திருப்பலிப் புத்தகத்தில் உம்மோடும் இருப்பதாக என்று உள்ளது)
உன்னதங்களிலே
உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
உலகினிலே நல் மனத்தோருக்கு அமைதி ஆகுக.
உம்மைப் புகழ்கின்றோம்.
உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம்.
உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே,எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே,
ஆண்டவராகிய இறைவா. இறைவனின் செம்மறியே, தந்தையின் திருமகனே,
உலகின் பாவங்களை போக்குபவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களை போக்குபவரே,எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசுகிறிஸ்துவே,
நீர் ஒருவரே தூயவர். நீர் ஒருவரே ஆண்டவர்.
நீர் ஒருவரே உன்னதர்.
தூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின்மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.
விசுவாச அறிக்கை.
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, உண்மைக் கடவுளினின்று உண்மைக்கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம்
உடல் எடுத்து மனிதர் ஆனார்.
மேலும் நமக்காக பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டு,
பாடுபட்டு இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி,
எல்லாம் வல்ல தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவிராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும்
ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாக பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.
அருட்பணியாளர்: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக. (முன்னைய திருப்பலிப் புத்தகத்தில் உம்மோடும் இருப்பதாக என்று உள்ளது)
அருட்பணியாளர்: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
மக்கள்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அருட்பணியாளர்: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
மக்கள்:அது தகுதியும் நீதியும் ஆனதே.