மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயாராக பேரருட்கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் நேற்றைய தினம் (30.12.2017) சனிக்கிழமை பணிப்பொறுப்பேற்றார். நேற்றைய தினம் மடுமாதா திருத்தலத்திலிருந்து கொழும்பு அதியுயர் மறைமாவட்டதின் பேராயர் அதி மேன்மைமிகு கர்தினால் கலாநிதி மல்கம் றஞ்சித் ஆண்டகையோடும், இன்னும் சில ஆயர்களோடும் மன்னார் நகருக்கு வருகை தந்த ஆயர் பேரருட்கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை தள்ளாடி தூய அந்தோனியார் ஆலய முன்பக்கமாக உள்ள மன்னார் பிரதான வீதியில் வைத்து மன்னார் மற்றும் வன்னிப் பகுதி இராணுவ உயர் அதிகாரிகள் கண்டிய நடனக் குழுவினரின் கலாச்சார நிகழ்வுகளோடு வரவேற்றனர்.
அங்கு சில நிமிடங்கள் நடைபெற்ற ஓய்வு உபசரிப்பு நிகழ்வின் பின் ஏற்கனவே தயார் நிலையில் நின்ற மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அவர்களின் தலைமையிலான, புதிய ஆயர் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வுகளுக்கான பல்வேறு பணிக்குழுக்களை உள்ளடக்கிய மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்கள் ஆயரை வரவேற்று, போக்குவரத்துப் பொலிசாரின், முக்கிய பிரமுகர்களுக்கான போக்குவத்து நடைமுறைகளை நெறிப்படுத்தும் உந்துருளிகளும் விசேட வாகனங்கள் முன்செல்ல பல்வேறு பங்குகளிலிருந்து வந்து அணிவகுத்து நின்று கொண்டிருந்த உந்துருளி பவனிக்கான பணியாளர்கள் அதனைத் தொடர்ந்து சென்றனர். இறுதியாக ஆயரின் தனது வாகனத்தில் வந்தார்
மன்னார் தீவிற்குள் நுழையும் கடலூடான தரை வழிப் பாதை ஆரம்பமாகும் தள்ளாடி தூய அந்தோனியார் திருவுருவச் சந்தியிலிருந்து, மன்னார் நகர பள்ளிமுனைச் சந்தி வரையிலான சுமார்3.5கிலோமீற்றர் தூரம் வரை நீடித்த இந்தப் பவனி, மன்னார் பிரதான பாலத்தின் மறுமுனையில் மன்னார் மாவட்ட நீதவான் நீதி மன்றத்திற்கு முன்னுள்ள பகுதியை வந்தடைந்ததும் அங்கு நின்ற கொண்டிருந்த மன்னார் மறைமாவட்ட திருத்தூதரகநிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, இலங்கைக்காக திருத்தந்தையின் பிரதிநிதி அதிமேன்மை தங்கிய கலாநிதி பியர் நுயென் வான் ரொற், மற்றும் ஆயர்களும், மன்னார் மறைமாவட்ட ,மன்னார் மவட்ட பிரதிநிதிகளும், பெருந்தொகையான மக்களும் கூடிநின்று மாலையணிவித்து வரவேற்கப்பட்டனர்.பாதைகளின் இருபுறமும் திருத் தந்தையினதும், இலங்கைக் கத்தோலிக்க திருச்சihயினதும், இலங்கைத் தேசியக் கொடிகளும், பதாதைகளும், வர்ணக்கொடிகளும் அழகிய வர்ணங்களாக மிளிர்ந்து கொண்டிருந்தன.
அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட ஊர்தியிலே ஆயர் பேரருட்கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை,கொழும்பு அதியுயர் மறைமாவட்டதின் பேராயர் அதி மேன்மைமிகு கர்தினால் கலாநிதி மல்கம் றஞ்சித் ஆண்டகை, இலங்கைக்காக திருத்தந்தையின் பிரதிநிதி அதிமேன்மை தங்கிய கலாநிதி பியர் நுயென் வான் ரொற் ஆண்டகை ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியிலே பவனியாக அழைத்து வரப்பட்டனர்.
மன்னார் நகரத்திலிருந்து மன்னார் தூய செபஸ்தியார் பேராலயம் வரை பாதையின் இருபுறமும் மக்கள் நின்றும் ஆயரை வரவேற்றனர். அலங்கார வாகனத்தின் முன்பாக தமிழர் பண்பாட்டின் அடையாளமான நாதஸ்வர வாத்தியம் முழங்க பவனி ஆரம்பமாகியது. முன்னார் மாவட்டச் செயலர் அவர்களும், பணியாளர்களும், மாவட்டச் செயலரின் வதிவிடத்திற்கு முன்மாக சிறப்ப மரியாதைகளோடு ஆயரை வரவேற்றனர். ஞானவைரவர் ஆலயத்தின் முன் இந்து சமய குரவர் ஆயரை வரவேற்றார்.
தொடர்ந்து மன்னார் மோட்டார் போக்குவரத்து பணிமையம் தொடக்கம் மன்னார் தொலை தொடர்பு பணியகம் வரை மன்னார் தூய சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்களின் மேற்கத்திய இசை அணிவகுப்பு நடைபெற்றது. அதன்பின் மன்னார் தொலை தொடர்பு பணியகம் தொடக்கம் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயம் வரை மன்னார் தூய சவேரியார் பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலை மாணவிகளின் மேற்கத்திய இசை அணிவகுப்பு நடைபெற்றது.
மன்னார் பேராலயத்தை ஆயர் வந்தடைந்ததும், பேராலய நுழைவாயில் அரச, அரசசார்பற்ற முக்கிய தலைவர்கள் ஆயரை வரவேற்று அறிமுகம் செய்து கொண்டனர். அதன் பின் ஆயரின் பணியேற்கும் நிகழ்வு கத்தோலிக்க திருச் சபையின் திருவழிபாட்டு மரபு ஒழுங்குமுறைக்கு அமைய நடைபெற்றது.அதனோடு இணைந்த திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
பேராலய பிரதான நுழைவாயிலில் வைத்து குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அவர்கள் திருச்சிலுவை வழங்க பேராலயப் பங்குத்தந்தை அருட்பணி பெப்பி சோசை ஆசிநீர்க் கலசம் வழங்கினார். ஆலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக பேரருட்கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை நியமிப்பது தொடர்பாக வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தை இலங்கைக்காக திருத்தந்தையின் பிரதிநிதி அதிமேன்மை தங்கிய கலாநிதி பியர் நுயென் வான் ரொற் ஆண்டகை அவர்கள் இறைமக்களுக்கு வாசித்துத் தெரியப்படுத்த அதனுடைய தமிழ் மொழி பெயர்ப்பை அருட்பணி. அ.இராயப்பு அடிகள் வாசித்தார் : அதன்பின் கொழும்பு அதியுயர் மறைமாவட்டதின் பேராயர் அதி மேன்மைமிகு கர்தினால் கலாநிதி மல்கம் றஞ்சித் ஆண்டகையும், மன்னார் மறைமாவட்ட திருத்தூதரகநிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும அழைத்துச் சென்நு ஆயருக்குரிய இருக்கையில் அமர்த்தியபின், மன்னார் மறைமாவட்ட திருத்தூதரகநிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் ஆயருக்குரிய கோலை வழங்கினார். அதன்பின்
விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார். மத்.16:9 என்னும் இயேசுவின் வார்த்தைகளைப் பின்பற்றி பணப்பொறுப்பை ஒப்படைத்தலின் அடையாளமாக பேராலயத் திறப்பை மன்னார் மறைமாவட்ட திருத்தூதரகநிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும், நற்கருணைப் பேழையின் திறவுகோலை மன்னார் மறைமாவட்ட திருத்தூதரகநிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும் வழங்கினார்கள்.
இந் நிகழ்வுக்கு இலங்கையின் பதின்மூன்று மறைமாவட்டங்களின் ஆயர்களும், பெருந்தொகையான அருட்பணியாளர்களும், துறவிகளும், அருட்சகோதரிகளும், பல்சமயத் தலைவர்களும், நீதிபதிகளும், மத்திய, மாகாண அமைச்சர்களும், பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களும் மன்னார் வன்னிப் பிரதேச முப்படைகனின் முக்கிய அதிகாரிகளும், பெருந்தொகையான இறைமக்களும் கலந்து கொண்டனர்.