வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்குமக்களின் கிறிஸ்து பிறப்பு ஒளிவிழாக் கலை பண்பாட்டு நிகழ்வுகள் நேற் (26.12.2017 ) செவ்வாய்க்கிழமை மாலை 06.30 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெற்றது. வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்குப் பணியாளர் அருட்பணி.சீ.ஜெயபாலன் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்டத்திற்கான திருத்தூதரக நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வு நிலை மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆபேல் றெவல் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
விருந்தினர்கள் சிறுவர்களின் மேலைநாட்டு இசைக்கருவிகளின் மங்கள வாழ்த்து இசையோடு அழைத்து வரப்பட்டனர். இறை வழிபாட்டைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. குறிப்பாக 5ம் ஆண்டிற்கு கீழ்ப்பட்ட மாணவர்கள் கிராமியக் கலைவடிவங்களான நாட்டுக்கூத்து, கரகாட்டம், இசைநாடகம், போன்றவற்றினூடாக கிறிஸ்து பிறப்பு நல்விழுமியங்களை தத்ரூபமாக வெளிக் கொணர்ந்தமை சிறப்பம்சமாக அமைந்திருந்தது.
தொடர்ந்து சிறப்பம்சமாக, வங்காலை கத்தோலிக்க ஆசிரியர் சங்கம் ஆலய அருட்பணிப் பேரவையின் பங்களிப்போடு வங்காலை மண்ணின் மைந்தர்களாக ஆசிரியப்பணியாற்றி ஓய்வு பெற்ற 75வயதிற்கு மேற்பட்ட எல்லா ஆசிரியர்களையும் கொளரவித்தனர். இவ்வாறனவர்களில் 19 பேர் ஏனைய இளம் ஆசிரியர்களால் மாலை அணிவிக்கப்பட்டதோடு மன்னார் மறைமாவட்டத்திற்கான திருத்தூதரக நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டதோடு, ஏனைய ஆசிரியர்களால் வாழ்த்துப் பொறிக்கப்பட்ட நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டன. இதனை பதில் கல்விப் பணிப்பாளர் திரு.ஆரோக்கியம் அவர்கள் நெறிப்படுத்தினார்.
இவ்விழாவிற்கு ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.கூறேதாஸ் மார்க் அவர்கள் தலைரமயுரையை வழங்க ஆலய அருட்பணிப் பேரவைச் செயலர் திரு.சூசைநாயகம் றெவல் நன்றியுரை வழங்கினார். வங்காலை தூய ஆனாள் ஆலயப் உதவிப் பங்குப் பணியாளர் அருட்பணி.றொசான் அடிகளாரின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நெறிப்படுத்தினார்.