திருவருகை காலம் நான்காம் வாரம் டிசம்பர் 21 ஆம் நாள்

முதல் வாசகம்

இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 2: 8-14

தலைவி கூறியது: என் காதலர் குரல் கேட்கின்றது; இதோ, அவர் வந்துவிட்டார்; மலைகள்மேல் தாவி வருகின்றார்; குன்றுகளைத் தாண்டி வருகின்றார். என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர். இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்; பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்; பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார். என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா. இதோ, கார்காலம் கடந்துவிட்டது. மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன; பாடிமகிழும் பருவம் வந்துற்றது; காட்டுப்புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது. அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன; திராட்சை மலர்கள் மணம் தருகின்றன; விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.” பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை; எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

அல்லது


இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.”

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்  : திபா 33: 2-3. 11-12. 20-21

பல்லவி: நீதிமான்களே, புதியதொரு பாடல் ஆண்டவர்க்குப் பாடுங்கள்.

யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.
புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்;
திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். பல்லவி

ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்;
அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.
ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது;
அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். பல்லவி

நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;
அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்;
ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இம்மானுவேலே, சட்டம் இயற்றும் எம் அரசே, இறைவனாம் எம் ஆண்டவரே, எம்மை மீட்க எழுந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45

அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டில் உள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.

அப்போது எலிசபெத்து உரத்த குரலில், பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *