மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையமான கலையருவி, தூய யோசேவ் வாஸ் சிறப்பு ஆண்டை மெருகூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், தூய யோசேவ் வாஸ் அடிகளாரின் வாழ்வையும், பணியையும் மையப்படுத்திய மாணவர்களுக்கும் பெரியவர்களுக்குமாக ஒழுங்குபடுத்தி நடாத்திய இயல், இசை, நாடக திறன்காண் போட்டிகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று (20.12.2017) புதன்கிழமை காலை 09.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட குடும்பம், பொதுநிலையினர் அருட்பணி மையத்தில் நடைபெற்றது.
கலையருவி மறைமாவட்ட இயக்குனர் அருட்பணி.பா.கிறிஸ்து நேசநெட்ணம் (தமிழ்நேசன்) அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு இயல், இசை, நாடக திறன்காண் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும், அவர்களுடைய பெற்றோரும், உறவினரும், அருட்பணியாளர்களும், துறவிகளும், நலன் விரும்பிகளும் எனப் பலர் பிரசன்னமாகியிருந்தனர். முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும், சிறப்பு விருந்தினராக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. அ.விக்ரர் சோசை அடிகளாரும், மதிப்பளிப்பு விருந்தினராக மன்னார் மறைமாவட்ட குடும்பம், பொதுநிலையினர் பணி இயக்குனர் அருட்பணி.ச.தேவறாஜா கொடுதோர் அவர்களும், வவுனியா மண்ணின் மைந்தரும் கெர்பெரிக்கொல்லாவ நீதிமன்ற நீதிபதி மேன்மைமிகு பிரபாகரன் அவர்களும், மேலும்; ஓய்வுநிலை மன்னார் கல்விவலய தமிழ் ஆசிரிய ஆலோசகர் திருமதி. பெப்பி விக்ரர் லெம்பேட் அவர்களும் வருகை தந்திருந்தனர்.
வெற்றிபெற்றவர்கள் மதிப்புமிக்க சான்றதழ்களும், மதிப்புச் சின்னங்குளும் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். அனைத்து இயல், இசை, நாடக வெளிப்பாடுகளும் அந்தந்தப் பங்குசார் கலைஞர்களின் வெளிப்பாடாக அமைந்தது மிகவும் பாராட்டிற்குரியது. சிறப்பான சொல்லாடல், பாடல்வரிகள், இசையமைப்பு, கருத்துருவாக்கம், ஒப்பனை, நெறியாள்கை, நடனம், நடன நுட்பங்கள் எனப் பரந்து விசாலமாகிச் சென்ற இந்த முத்தமிழ் கலைபண்பாட்டு நிகழ்வுகளின் வெளிப்பாடுகள், நம் மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் நிறைந்து கிடக்கும் கலைவளங்களை வெளிச்சமிட்டுக்காட்டின.
Thank a lot Fr. Dalima for covering the entire event. I really appreciate your commitment in this regard. May God bless you.