மன்னார் மறைமாவட்டத்தின், வவுனியா மறைக்கோட்ட மறைக்கல்வி மாணவர்களின் ஒளிவிழா இன்று (18.12.2017) திங்கட்கிழமை காலை 09.30 மணிக்கு வவுனியா இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வவுனியா மறைக்கோட்டத்திற்கான மறைக்கல்வி உதவி இயக்குனர் அருட்பணி. அ.லக்ஸ்ரன் டீ சில்வா தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இவ் விழாவிற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்பணி. அ.விக்ரர் சோசை அடிகளாரும், சிறப்பு விருந்தினராக மன்னார் மறைமாவட்ட கல்வி மறைக்கல்விப் பணிகளுக்கான இயக்குனர் அருட்பணி. பி.சே.றெஜினோல்ட் அடிகளாரும், கௌரவ விருந்தினர்களாக இலுப்பைக்களம் பங்குப்பணியாளர் அருட்பணி அற்புதறாஜ் அ.ம.தி அடிகளாரும், வவுனியாத் தெற்கு வலய கத்தோலிக்க சமய கல்விப் பணிப்பாளர் திரு. பி.றஞ்சித் ஒஸ்வேல்ட் அவர்களும் கலந்து கொண்டனர். அவர்களோடு பல அருட்பணியாளர்களும், அருட்சகோதரிகளும், அருட்சகோதரர்களும், மறையாசிரியர்களும், பெற்றோரும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
முதலில் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் நுழைவாயிலில் விருந்தினர்கள் அனைவரும் தமிழ்ப் பாண்பாட்டுக் கோலங்களுடன் மாலையிட்டு ஆராத்தி வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து ஒளியேற்றலும் ஆரம்ப வழிபாடுகளும் நடைபெற்றன. அடுத்து மறைக்கல்வி மாணவர்களின் சிறப்பான ஆற்றல்களின் ஆழுமையோடு கூடிய கூடிய கிறிஸ்து பிறப்பு செய்தியை வெளிக் கொணரும் பல்தரப்பட்ட கலை பண்பாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன. இறுதியாக வவுனியா மறைக்கோட்ட மறையாசிரியர் ஒன்றியச் செயலர் திரு.தாசன் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது. பாராட்டிற்குரியதாயும், தரமிக்கதுவாயும் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு வவுனியா மறைக்கோட்ட மறையாசிரியர்களும், அருட்பணியாளர்களும், துறவியரும் பங்களிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத் தக்கது.