மன்னார் மறைமாவட்டக் கத்தோலிக்க இளைஞர் ஒன்றித்தின் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை யொட்டிய ஒளிவிழா கலை பண்பாட்ட நிகழ்வுகள் இன்று (17.12.2017) ஞாயிற்றுக்கிழமை மாந்தையில் அமைந்துள்ள மருதமடுத் திருத்தாயாரின் ஆரம்ப இடமான மாந்தை மாதா திருத்தல முன்றலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அவர்களும், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுகந்தி செபஸ்ரியன் அவர்களும் கலந்து கொண்டனர். அவர்களோடு பல அருட்பணியாளர்களும், அருட்சகோதரிகளும் பல மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
மாலை 06.00 மணிக்கு விருந்தினர்களை மாந்தை மாதா திருத்தல பிரதான நுழைவாயிலில் வைத்து தமிழ்ப் பண்பாட்டு கோலங்களோடு மன்னார் மறைமாவட்டக் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியப் பிரதிநிதிகள் மாலையிட்டு ஆராத்தி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து வங்கால தூய ஆனாள் ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் வாத்திய இசையோடு விருந்தினர்கள்¸நிகழ்ச்சி மேடைக்கு அழைத்துவரப்பட்டனர்.தொடர்ந்து மறைமாவட்டப் பங்குகளின் கத்தோலிக்க இளைஞர்கள் மிகவும் சிறப்பான, விசுவாச வாழ்வை இன்னும் ஆழப்படுத்தக்கூடிய கலை பண்பாட்டு நிகழ்வுகளை வழங்கினார்கள்.
இந் நிகழ்வில் வரவேற்புரையை இளைஞர் ஒன்றியத் தலைவர் செல்வன் டெஸ்மன் அவர்கள் வழங்கினார்.ஆசியுரை வழங்கிய மாந்தை மாதா பங்குப் பணியாளர் அருட்பணி ச.மரியதாசன் (சீமான்) அடிகளார் இளைஞர்கள் தமது சக்தியைப் பன்மடங்காகப் பெருக்கிக் கொள்ள இவ்வாறான நிகழ்வுகள் வழி வகுக்கின்றன என்றும். சுpறப்புரை வழங்கிய மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுகந்தி செபஸ்ரியன் அவர்கள் கத்தோலிக்க இளைஞர்கள் மன்னாரின் எதிர்காலத்தை நினைவிற் கொண்டு மாவட்டத்தில் பல்வேறு துறைகளிலும் வழங்கப்படுகின்ற நல் வாய்ப்புக்களை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும், சிறப்புரை வழங்கிய மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அவர்கள் இளைஞர்களே நீங்கள் வலிமை மிக்கவர்கள் என்னும் தூய பவுலடியாரின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி, இளைஞர்கள் தன்நம்பிக்கையோடும், சமூகநல ஈடுபாட்டோடும் செயற்பட வேண்டுமெனவும், முதன்மை விருந்தினர் உரை வழங்கிய மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள்;: இளைஞர்கள் மூத்த பிரஜைகள் மட்டில் அக்கறையுடையவர்களாகவும், அவர்களை மதித்து நடக்கின்றவர்களாவும் இருக்க வெண்டுமெனவும் கூறினார்கள்.
நன்றி உரையை இளைஞர் ஒன்றியத் துணைச் செயலர் செல்வி. சுமி வழங்கினார்.அனைத்து நிகழ்வுகளையும் மன்னார் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு இயக்குனர் அருட்பணி.சீ.ஜெயபாலன் அடிகளார் மிகவும் சிறப்பாக ஒருங்கிணைத்து செயற்படுத்தினார். மன்னார் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு உறுப்பினர்கள் இவருக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்டனர்.