கடந்த மாதம் 17ம் ,18ம் திகதிகளில் நடந்து முடிந்த மன்னார் மறை மாவட்ட அருட்பணித் திட்டமிடல் மாநாட்டில் பங்கு திட்டமாக வழங்கப்பட்ட பொதுநிலையினரின் அழைப்பும், பணியும், வாழ்வும் என்னும் கருப் பொருளை மையமாக வைத்து தங்கள் பங்குத் திட்டங்களை வகுப்பதற்காக மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று (10.12.2017) ஞாயிற்றுக் கிழமை மாலை 03.00 மணிக்கு, மன்னார் தூய செபஸ்தியார் பேராலய பணிக்குழுக்கள் பேராலயத்தின் கேட்போர் கூடத்தில் ஒன்று கூடினர்.
பங்குத் தந்தை அருட்பணி. ச.ஜொ.பொப்பி சோசை அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒளியேற்றுதல், இறைவழிபாடு ஆகியவற்றைத் தொடர்ந்து, பங்குத் தந்தை அருட்பணி. ச.ஜொ.பொப்பி சோசை அடிகளாரின் அறிமுக உரை இடம் பெற்றது. அதன் முடிவில் மேலே குறிப்பிட்டுக்காட்டப்பட்ட மையப் பொருளை ஆழ்ந்து சிந்தித்து திட்டங்களை வகுக்க உறுதுணை செய்யும் நோக்கோடு ஆற்றுப்படுத்தும் உள்ளீட்டு உரை இடம் பெற்றது. அதன் பின்னர் குழு ஆய்வு இடம் பெற்றது. இக் கருத்தமர்வில் பேராலயத்தில் பணிபுரியும் ஏனைய அருட்பணியாளர்கள், மற்றும் துறவிகள், பணியாளர்கள் என பெருந்தொகையானவர்கள் கலந்து கொண்டனர். குழு ஆய்வினைத் தொடர்ந்து மன்னார் பேராலய அருட்பணிப் பேரவைச் செயலர் திரு சதீஸ் அவர்களின் நன்றியுரையுடன் அனைத்தும் நிறைவுற்றன.