திருவருகைக் காலம் முதல் வாரம் சனி

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 30: 19-21,23-26

இஸ்ரயேலின் தூயவராம் ஆண்டவராகிய இறைவன் கூறுவது: சீயோன்வாழ் மக்களே, எருசலேமில் குடியிருப்போரே, நீங்கள் இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்; அவர் உங்கள்மேல் திண்ணமாய் அருள்கூர்வார். நீங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவிசாய்த்து உங்களுக்கு மறுமொழி அளிப்பார். என் தலைவராகிய உங்கள் போதகர் உங்களுக்குத் துன்பம் எனும் அப்பத்தையும் ஒடுக்குதல் எனும் நீரையும் கொடுத்திருந்தாலும், இனித் தம்மை மறைத்துக்கொள்ளமாட்டார்; உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள். நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்” என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும். நீங்கள் நிலத்தில் விதைத்துள்ள விதைமீது ஆண்டவர் மழை பொழிவார்; நிலத்தின் விளைவான உணவு செழுமையாகவும் மிகுதியாகவும் இருக்கும்; அந்நாளில் உன் மந்தை பரந்த மேய்ச்சல் வெளியில் மேயும். முறத்தாலும் சுளகாலும் தூற்றப்பட்டுச் சுவையூட்டப்பட்ட தீனியை நிலத்தை உழும் காளைகளும் கழுதைகளும் தின்னும். கோட்டைகள் இடிந்து விழுகின்ற மிகப்பெரும் அழிவு நாளில் வானளாவிய மலைகள் அனைத்தின் மேலும் உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மேலும் கால்வாய்களும் நீரோடைகளும் தோன்றும். ஆண்டவர் தம் மக்களின் முறிவுகளைக் கட்டி, தாம் அடித்து ஏற்படுத்திய காயங்களைக் குணமாக்கும் நாளில், நிலவின் ஒளி கதிரவன் ஒளிபோலாகும்; கதிரவன் ஒளி ஏழு பகல்களின் ஒளி ஒன்றுதிரண்டாற் போல ஏழு மடங்காகும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்: திபா 147: 1-2. 3-4. 5-6

பல்லவி: ஆண்டவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்.

நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது;
அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது. ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார்.பல்லவி

உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார். விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். பல்லவி

நம் தலைவர் மாண்புமிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ள வர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது. ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்;  பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே நமக்கு நீதித் தலைவர்; ஆண்டவரே நமக்கு நியமம் வழங்குபவர்; ஆண்டவரே நமக்கு வேந்தர்; அவரே நமக்கு மீட்பு அளிப்பவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 35 – 10: 1, 6-8

அக்காலத்தில் இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள். அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார். இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். இயேசு பன்னிருவருக்கும் அறிவுரையாகக் கூறியது: “வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *