மன்னார் மறைமாவட்டத்தின் பணி எல்லைக்குள் அமையும், வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள தரணிக்குளம் பங்கின் கிளை ஆலயமான சுந்தரபுரம் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் நேற்றைய நாளில் (29.11.2017) புதன் கிழமை மாலை 04.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட திருத்தூதூப் பணி நிர்வாகி பேரருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டு ஆலயத் திருவிழாவின் தொடக்கநாள் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பங்கினை கப்புச்சியன் துறவற சபை அருட்பணியாளர்கள் பொறுப்பேற்று வழி நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மிகவும் கடினமான பணிமுன்னெடுப்புக்களைக் கொண்ட இந்தப் பங்கிலே கப்புச்சியன் துறவற சபை அருட்பணியாளர்களின் பணிகள் மிகவும் பாராட்டத்தக்கவையாக அமைந்துள்ளன.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னதாக இப் பங்கு வவுனியா பம்பைமடுப் பங்கின் பணிப் பரப்பெல்லைக்கள் இருந்தபோது, அவ்வேளையில் பம்பைமடுப் பங்குப் பணியாளராக இருந்த அருட்பணி.இ.அகஸ்ரின் புஸ்பராஜா அடிகளார் இங்கு நீண்ட தூரம் மிகுந்த சிரமத்தின் மத்தியில் பயணம் செய்து இங்கு வாழும் மக்களைச் சந்தித்து அந்த மக்களுக்கான ஆன்மிகப் பணியை முன்னெடுத்துச் சென்றபோது, இம் மக்களுக்கான ஓர் ஆலயம் நிறுவப்படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, ஓய்வு நிலை ஆயர் பேரருட்கலாநிதி இரா.யோசேப்பு ஆண்டகை அவர்களின் அனுமதியோடும் ஆசீரோடும், வவுனியா மறைக்கோட்ட முதல்வராக இருந்த அருட்பணி பெப்பி சோசை அடிகளரின் பிரசன்னத்தில் இவ் ஆலயத்திற்கான அடிக்கல்லை இடுகை செய்து ஆரம்பப் பணிகளை ஊக்குவித்து நெறிப்படுத்தினார்.
அதன் பின், சில ஆண்டுகளுக்கு முன்னர் கப்புச்சியன் துறவற சபை அருட்பணியாளர்கள் இந்தப் பங்கினைப் பொறுப்பேற்று சிறப்பாக பணி செய்து வருகின்றனர். அவர்களின் பெருமுயற்சியினாலும்-நிதிப் பங்களிப்பினாலும், அமெரிக்காவில் வாழும் சில இலங்கைத் தமிழர்களின் நிதியுதவியோடும் இவ் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில், கப்புச்சியன் துறவற சபையின் இந்திய இலங்கை பணித்தள இணைப்பாளர் அருட்பணி. ஜெகதீஸ், பங்குப் பணியாளர் அருட்பணி. ஆரோக்கியசாமி, தரணிக்குளம் கப்புச்சியன் துறவற இல்ல மேலாளர் அருட்பணி.பீற்றர் அமலதாஸ், வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி.இ.அகஸ்ரின் புஸ்பராஜா, வவுனியா இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்குப் பணியாளர் அருட்பணி.ச.சத்தியறாஜ், வேப்பங்குளம் பங்குப் பணியாளர் அருட்பணி.அ.லக்ஸ்ரன் டீ சில்வா, பம்பைமடுப் பங்குப்பணியாளர் அருட்பணி லெஸ்லி ஜெகானந்தன், ஆயரின் செயலர் அருட்பணி நீக்லஸ் ஆகியரோடு இன்னும் பல கப்புச்சியன் துறவற சபை அருட்பணியாளர்கள் அருட்சகோதரிகள், இறைமக்கள் அரச, அரச சார்பற்ற பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.