இம்மாதம் 23ந் திகதி மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் திருப்பீடத்திற்கான தூதரகம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடவுள் தரும் நற்செய்தியையும் நல்லொழுக்க வாழ்க்கைப் பண்புகளையும் உலகெங்கும் விதைக்கவே திருப்பீடத்திற்கான தூதரகங்கள் அமைக்கப்படுகின்றன என்று பேராயர் அஞ்சலோ பெக்சியூ அவர்கள் தெரிவித்தார்.
புதிய தூதரக ஆரம்பவிழாவுக்கு வருகைதந்திருந்த போராயர் அஞ்சலோ பெக்சியூ அவர்கள் திருத்தந்தையின் வாழ்த்துக்களையும் தனது தொடக்கவுரையில் குறிப்பிட்டார். திருப்பீடத்திற்கான செயலரின் பிரதிநிதியாக பேராயர் அஞ்சலோ பெக்சியூ அவர்கள் கலந்த கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மலேசிய நாட்டில் திருப்பீடத்திற்கான தூதரகம் அமைக்கப்படுவது அந் நாட்டில் வாழும் கத்தோலிக்க இறைமக்கள் மேலும், அந்நாட்டின் ஏனைய மக்கள் மீதும் திரு அவை கொண்டிருக்கும் ஆழமானதொரு கரிசனையின் வெளிப்பாடு இது என பலரும் கருதுகின்றனர். இவ்விழாவில் மலேசியாவின் பிரதி அயலுறவுப் பணி அமைச்சர் றீசால் மெரிக்கார், கோலாலம்பூர் முன்னாள் பேராயர் கர்தினால் அன்ரனி சோற்றர் பெனாண்டஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அரச தலைவர்கள், பொதுநிலையினர் எனப் பலர் கலந்து கொண்டனர். இந் நாட்டிற்குரிய திருத்தந்தையின் பிரதிநிதியாக பேராயர் ஜோசவ் சல்வடோர் மரினோ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்குத் தீமோர்,புரூனே ஆகியவற்றுக்கான திருத்தூதுப்பணி தூதுவராகவும் பணியாற்றுகின்றார். இது திருப்பீடத்தின் 179வது தூதரகமாகும்.