பொதுக்காலம், 32ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்

மன்னர்களே, நீங்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 1-11

மன்னர்களே, நான் சொல்வதற்குச் செவிசாய்த்துப் புரிந்து கொள்ளுங்கள்; உலகின் கடையெல்லை வரை நீதி வழங்குவோரே, கற்றுக் கொள்ளுங்கள். திரளான மக்களை ஆள்வோரே, பல மக்களினங்களைப் பற்றிப் பெருமை பாராட்டுவோரே, எனக்குச் செவிசாயுங்கள்.

ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது; உன்னத இறைவனிடமிருந்தே உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது. அவரே உங்கள் செயல்களைச் சோதித்து அறிபவர்; உங்கள் திட்டங்களை ஆராய்பவரும் அவரே. அவரது அரசின் பணியாளர்களாய் இருந்தும், நீங்கள் நேர்மையுடன் தீர்ப்பு வழங்கவில்லை; திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை; கடவுளின் திருவுளப்படி நடக்கவில்லை. கொடுமையாகவும் விரைவாகவும் அவர் உங்கள்மேல் வருவார்; உயர் நிலையில் உள்ளவர்களுக்குக் கடும் தீர்ப்பு வழங்குவார்.

எளியோர்க்கு இரக்கங்காட்டி அவர்களைப் பொறுத்தருள்வார்; வலியோரை வன்மையாகத் தண்டிப்பார். அனைத்திற்கும் ஆண்டவர் யாருக்கும் அஞ்சி நடுங்க மாட்டார்; உயர்ந்தோர்க்கென்று தனி மதிப்பு அளிக்க மாட்டார். ஏனெனில் பெரியோரையும் சிறியோரையும் படைத்தவர் அவரே; எல்லாரும் ஒன்று என எண்ணிக் காப்பவரும் அவரே. அவர் வலியோரிடம் கண்டிப்பான கணக்குக் கேட்பார்.

எனவே, மன்னர்களே, நீங்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்ளவும், நெறி பிறழாது நடக்கவும், உங்களுக்கு நான் கூறுகிறேன்; தூய்மையானவற்றைத் தூய்மையாய்க் கடைப்பிடிப்போர் தூயோர் ஆவர்; தூய்மையானவற்றைக் கற்றுக் கொண்டோர் தங்கள் செயல்களை முறைப்படுத்த வழி காண்பர். எனவே என் சொற்கள்மீது நாட்டங்கொள்ளுங்கள்; ஏக்கங்கொள்ளுங்கள். நீங்கள் அவற்றால் நற்பயிற்சி பெறுவீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 82: 3-4. 6-7 (பல்லவி: 8)

பல்லவி: கடவுளே, உலகில் எழுந்தருளும், நீதியை நிலைநாட்டும்.

எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும் நீதி வழங்குங்கள்; சிறுமை யுற்றோர்க்கும் ஏழைகட்கும் நியாயம் வழங்குங்கள்! எளியோரையும் வறியோரையும் விடுவியுங்கள்! பொல்லாரின் பிடியினின்று அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்! பல்லவி

`நீங்கள் தெய்வங்கள்; நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள். ஆயினும், நீங்களும் மனிதர்போன்று மடிவீர்கள்; தலைவர்களுள் ஒருவர் போல வீழ்வீர்கள்’ என்றேன். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. 1 தெச 5: 18

அல்லேலூயா, அல்லேலூயா! எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19

அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.

ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார்.

அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.

இயேசு அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.

பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *