2015, 2016ம் ஆண்டுகளில் சிறப்பிக்கப்பட்ட இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களோடு உரோம் நகரில் யூபிலியை சிறப்பித்த திருத்தந்தையின் எண்ணத்தில் உருவான, வறியோரின் உலக நாள், முதன்முதலாக இவ் ஆண்டு சிறப்பிக்கப்படுகின்றது. இம்மாதம் 19ந் திகதி ஆண்டின் பொதுக்காலம் 33ம் ஞாயிறன்று இந் நாளைக் கடைப்பிடிக்கும் படி திருத்தந்தை கேட்டுள்ளார். இந் நாழுக்குரிய கருப்பொருளாக “வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நாம் அன்புகூருவோம்” என்பதனையும் திருத் தந்தை முன்வைத்துள்ளார்.
இம்மாதம் 19ந் திகதி ஆண்டின் பொதுக்காலம் 33ம் ஞாயிறன்று காலை 10 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருப்பலி நிறைவேற்றுவார் என்று, திருப்பீட வழிபாட்டுத் துறையின் தலைவர், அருள்பணி குயிதோ மரீனி அவர்கள் அறிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 440பேர்வரை இறந்ததாகவும் சுமார் 7460 பேர்வரை காயமுற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கும் நிலையில் இவ்விரு நாடுகளுக்கும் தனித்தனியாக திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்து துயர்பகிர்வு செய்தியினை திருப்பீடத்திற்கான செயலர் பியெத்றோ பறேலின் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் இத்துயர் பகிர்வு செய்தியில் பாதிக்கப்பட்ட மக்களுடன் செபத்தோடு ஒன்றித்திருப்பதாகவும், இறந்த அனைவருக்காகவும் வேண்டுதல் செய்வதாகவும், காயமுற்றோர், இவர்களுக்காகப் பணியாற்றும் இனைவருக்கும் இரக்கம் நிறைந்த இறைவனின் ஆசீரையும், ஆறுதலையும் கேட்டு வேண்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாவ சோதனைகள் வருவது தவிர்க்க முடியாதது, ஆனால், அதற்கு காரணமாக இருப்பவர்களுக்கு ஐயோ கேடு என இயேசு எடுத்துரைக்கும் பகுதியை அடித்தளமாக கொண்டு திருப்பலி மறையுரையில் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்களுக்கு இடறலாக இருப்பது என்பது, அவர்களின் நம்பிக்கைகளையும், எதிர்காலத்தையும் கொல்வதற்கு ஈடாகும் எனவும், இடறலான வாழ்வு என்பது, இதயங்களைக் காயப்படுத்தி, மனிதர்களின் நம்பிக்கையைக் கொல்கின்றது எனவும், கிறிஸ்தவன் என்ற பெயரை தாங்கிக்கொண்டு, புறவினத்தாரின் வாழ்வை வாழ்வது, இறைமக்களுக்கு ஓர் இடறலான வாழ்வாகும் எனவும், சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருக்கும்போது, இறைவனின் மந்தையைக் குறித்த அக்கறையற்ற நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம் எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளுக்கும் பணத்துக்கும் நாம் ஒரே நேரத்தில் பனிபுரிய முடியாது என்பதை, இறைமந்தைக்குப் பொறுப்பாக இருக்கும் மேய்ப்பர்கள் உணர்ந்து செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.