ஜரோப்பிய நாடுகளில், தமிழ்க் கத்தோலிக்க மக்களுக்குப் பணிபுரியும் தமிழ் கத்தோலிக்க ஆன்மிக இயக்குனர்களுக்கான ஒன்று கூடல் இன்று ( 13.11.2017) திங்கட்கிழமை ஜேர்மன் நாட்டின் எசன் நகரிலுள்ள கார்டினல் கென்ஸ்பாக் என்னும் இடத்தில், ஜரோப்பிய நேரப்படி 19.00மணிக்கு ஆரம்பமாகின்றது. ஜரோப்பாவில் தமிழ் கத்தோலிக்க மக்களுக்கான ஆன்மிகப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் அருட்பணியாளர்களின் ஆன்மிகத்தை வலுப்படுத்தவும், மக்களுக்கான ஆன்மிகப் பணியிலே ஒரேவிதமான பணி நலன்களை நடைமுறைப்படுத்தவும் திட்டங்களை வகுக்கவும் இவ் ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்படுகின்றது.
இந் நிகழ்வு முதன் முதலாக2015ம் ஆண்டு தைமாதம் 28,29,30ம் திகதிகளில் சுவிஸ் நாட்டின் ஓல்ரன் நகரிலுள்ள கப்புச்சியன் துறவற சபையினரின் ஆச்சிரமத்தில் நடைபெற்றது. இவ் ஒன்றுகூடலில் ஜரோப்பிய மண்ணல் தமிழ் மக்களுக்கும் பணியாற்றும் அருட்பணியாளர்களுள் எட்டுப்பேர் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2016ம் ஆண்டில் இவ் ஒன்றுகூடல் இலண்டனிலுள்ள அய்லொ வைஸ் என்னும் தீவில் அமைந்துள்ள மரியா விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
இவ் ஒன்றுகூடல் 13.11.2017 திங்கட்கிழமை தொடக்கம் 16.11.2017 வியாழக்கிழமை வரை நடைபெறும்.இதுவரை கிடைக்கப்பெற்ற செய்தியின்படி அருட்பணி தேவறாஜன் அடிகளார், அருட்பணி செபநேசரெட்ணம் அடிகளார்,( இலண்டன்), அருட்பணி கமலநாதன் அ.ம.தி அடிகளார் ( பிரான்ஸ்);, அருட்பணி டக்ளஸ் அடிகளார் (சுவிஸ்), அருட்பணி விமல்றாஜன் அ.ம.தி அடிகளார் (இத்தாலி), அருட்பணி நிரூபன் அடிகளார் (ஜேர்மனி);, அருட்பணி ஜெயந்தன் அ.ம.தி; அடிகளார் (நோர்வே), அருட்பணி அல்றின் அ.ம.தி. அடிகளார் (டென்மார்க்),ஆகியோர் கலந்து கொள்வது தெரியவந்துள்ளது. ஏனைய ஆன்மிக இயக்கனர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.