பொதுக்காலம், 32ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 1-7

மண்ணுலகை ஆள்பவர்களே, நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்; நன்மனத்துடன் ஆண்டவரைப் பற்றி நினைந்திடுங்கள்; நேர்மையான உள்ளத்துடன் அவரைத் தேடுங்கள். அவரைச் சோதியாதோர் அவரைக் கண்டடைகின்றனர்; அவரை நம்பினோர்க்கு அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார்.

நெறிகெட்ட எண்ணம் மனிதரைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடும். அவரது ஆற்றல் சோதிக்கப்படும்பொழுது, அது அறிவிலிகளை அடையாளம் காட்டிவிடும். வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை; பாவத்திற்கு அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதில்லை. நற்பயிற்சி பெற்ற உள்ளம் வஞ்சனையினின்று விலகியோடும்; அறிவற்ற எண்ணங்களை விட்டு அகலும்; அநீதி அணுகுகையில் அது நாணி ஒதுங்கும்.

ஞானம் மனிதநேயமுள்ள ஆவி; ஆயினும் இறைவனைப் பழிப்போரை அது தண்டியாமல் விடாது. கடவுள் அவர்களுடைய உள்ளுணர்வுகளின் சாட்சி; உள்ளத்தை உள்ளவாறு உற்று நோக்குபவர்; நாவின் சொற்களைக் கேட்பவரும் அவரே. ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது; அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் – திபா 139: 1-3. 3b-6. 7-8. 9-10

பல்லவி: என்றும் உள்ள வழியில் என்னை நடத்தும் ஆண்டவரே.

ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.  நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர். பல்லவி

என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகு முன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர். எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்; உமது கையால் என்னைப் பற்றிப்பிடிக்கின்றீர். என்னைப் பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது; அது உன்னதமானது; என் அறிவுக்கு எட்டாதது. பல்லவி

உமது ஆற்றலை விட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்? 8 நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! பல்லவி

நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும், 10 அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக்கொள்ளும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. பிலி 2: 15-16

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நான் மனம் மாறிவிட்டேன் என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-6

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: பாவச் சோதனை வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு!

அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வதை விட அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது.

எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்து கொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள்.

ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, `நான் மனம் மாறிவிட்டேன்’ என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.”

திருத்தூதர்கள் ஆண்டவரிடம், எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள்.

அதற்கு ஆண்டவர் கூறியது: கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, `நீ வேரோடே பெயர்ந்து போய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *