புனித ஜோசப்வாஸ் தேசிய தினத்தை முன்னிட்டு கிறீஸ்தவ மத அலுவல்கள் சுற்றுலாத்துறை அமைச்சினால் 28.10.2017 அன்று கம்பஹா மாவட்டத்தில் திருச்சிலுவைக் கல்லூரி அரங்கில் நடைபெற்ற தேசிய நிலைப் போட்டிகளில் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து பல பங்குகளின் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியங்கள் பங்கேற்றிருந்தன. மன்னார் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு இயக்குனர் அருட்பணி ச.ஜெயபாலன் அடிகளார் இவர்களை இப்போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்கமூட்டி அழைத்துச் சென்றார்.
இவற்றுள் குறுநாடகப் போட்டியில் வங்காலை பங்கைச்சேர்ந்த கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம்;, தேசியரீதியில் முதலாம் இடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நாடகத்தை திரு. றெ. செல்வராஜ் குலாஸ் தயாரித்து நெறிப்படுத்தினார். வங்காலை தூய ஆனாள் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தலைவர் செல்வன் யோ.பிரியாந் றொட்றிக்கோ இந்நாடகத்திற்கு பொறுப்பாக இருந்து ஒழுங்கமைத்து செயற்பட்டார். இந்நாடகத்திற்கான பாடல் வரிகளை திரு. வின்சன் லெம்பேட் அவர்கள் எழுதியிருந்தார்
23 கலைஞர்கள் பங்குபற்றிய இந்நாடகத்தில் பல சிறப்பு விருதுகளையும் வங்காலை கத்தோலிக்க ஒன்றியம் தனதாக்கிக்கொண்டது. சிறந்த நாடகத்திற்கான விருது, சிறந்த ஒப்பனையாளர் விருது, சிறந்த துணை நடிகைக்கான விருது, சிறந்த இசையமைப்பளருக்கான விருது, சிறந்த மேடை அமைப்பாளருக்கான விருது, சிறந்த ஒளியமைப்பிற்கான விருது என மொத்தமாக எட்டு விருதுகளை இவர்கள் தமதாக்கிக்கொண்டனர்.
அத்தோடு கோமரசன்குளம் பங்கு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் தயாரித்து வழங்கிய நாடகத்தில் சிறந்த பெண் நடிகைக்கான விருதையும். கற்கிடந்தகுளம் பங்கு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம வழங்கிய நிகழ்ச்சியில் சிறந்த பாடகிக்கான விருதையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.