இறந்தோர் உயிர்ப்பில் நாம் அறிக்கையிடும் விசுவாசம், நம்மை நம்பிக்கையுள்ள மனிதர்களாக ஆக்குகின்றது என்று, திருஅவையில் இறந்த கர்தினால்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்களின் நினைவுத் திருப்பலியை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், இவ்வெள்ளி முற்பகல் 11.30 மணிக்கு நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறினார்.
திருஅவைக்கும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கும் சேவையாற்றி, இறைவனில் துயில்கொள்ளும் கர்தினால்களையும், ஆயர்களையும் இன்று நாம் நினைவுகூர்ந்து, நற்செய்திக்கும், திருஅவைக்கும், அவர்கள் தாராளமனத்தோடு பணியாற்றியதற்கு நன்றி கூர்கின்றோம் என்றுரைத்த திருத்தந்தை, எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது என்ற புனித புவலடிகளாரின் வார்த்தைகளை, இறந்த இவர்கள் கூறுவதை நாம் கேட்பதுபோன்று உள்ளது என்றும் கூறினார்.
உண்மையில், கடவுள் பிரமாணிக்கமுள்ளவர், நாம் அவரில் வைத்திருக்கும் நம்பிக்கை வீணாய்ப் போகாது என்றும், இறந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களின் ஆன்மாக்கள் நிறைசாந்தி அடையச் செபிப்போம் என்று சொல்லி, மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.