உறுதிப்பூசுதல் வழங்கும் திருநிகழ்வு

மன்னார் மறைமாவட்டத்தின், மன்னார் தூய செபஸ்தியார் போராலயப் பங்கில் 136 இளம் வயதினருக்கான உறுதிப்பூசுதல் வழங்கும் திருநிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (24.09.2017) மிகவும் பக்தி அருட்சியோடு நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபையில் உள்ள இறைமக்களுக்கு ஒவ்வொரு பருவத்திலும் திருவருட்சாதனங்கள் வழங்கப்படுகின்றன. அவ் வகையில், கத்தோலிக்க திருச்சபையின் இளம் வயதினரின் கிறிஸ்தவ வாழ்வின் முதிர்ச்சியை நோக்கிய பயணத்திலே, அவர்களைக் கத்தோலிக்க விசுவாச, ஆன்மிக, சமூக ஈடுபாட்டு அருள்நிலைப் பண்புகளிலே ஆழுமை செறிந்தவர்களாக உருவாக்க மேற்கொள்ளப்படும் அருட்பணிச் செயலாக்கத்தில் இவ் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனமும் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

கத்தோலிக்க திருச்சபையின் இறைமக்களின் அருட்பணிக்காக அமைக்கப்படும் பங்குகள் ஒவ்வொன்றிலும் உள்ள இளம் வயதினருக்கு, ஒருங்கிணைந்த மிகவும் ஆழமான அறிவூட்டல் பயிற்சியோடு ஒவ்வொரு வருடமும் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனம் அது சார்ந்திருக்கும் மறைமாவட்ட ஆயர் அவர்களால் வழங்கப்படுகின்றது.

இன்றைய திருப்பலின்போது மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி நிலை ஆயர் பேரருட் கலாநிதி யோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் மன்னார் தூய பேராலயப் பங்கைச் சேர்ந்த 138 இளம் வயதினருக்கு உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தை வழங்கி அவர்களை அர்ச்சித்தார். இவர்களை அப் பங்கின் மறையாசிரியர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், அருட்பணியாளர்கள் என பல்வேறு அருட்பணி வளவாளர்கள் பல மாதங்களாக ஆன்மிக அறிவூட்டி ஆற்றுப்படுத்தி இவ் அருட்பொழிவுத் திரு நிகழ்வுக்கு ஆயத்தம் செய்தனர்.

இத் திருப்பலியை ஆயரோடு இணைந்து மன்னார் தூய போராலயப் பங்குத் தந்தை அருட்பணி ச.ஜெ.பெப்பி சோசை, மேலதிக அருட்பணி இணைப்பாளர் அருட்பணி. மொ.போ.பீற்றர் மனோகரன், உதவிப் பங்குத் தந்தையர்கள்  அருட்பணி. கிளைன், அருட்பணி அமல்றாஜ், மன்னார் மடுமாதா சிறிய குருமட அதிபர் அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் ஆகியோர் இணைந்து ஒப்புக் கொடுத்தனர். இத் திருப்பொழிவு அர்ச்சிப்புத் திருப்பலியில் பல மக்கள் கலந்து இறையருள் பெற்றுச் சென்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *