33rdsundayofordinarytime2017பொதுக்காலம் 33ம் ஞாயிறு
2017.11.19
முன்னுரை.
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!
அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! என்றும் நமக்கு ஆசீர் வழங்கி, பேறுபலன்களும், நலமும் அளித்து, நல்வாழ்வைக் காணும்படி செய்யும் நம் தந்தையாம் இறைவனின் திருப்பெயரில் வாழ்த்துக்கள் கூறி, ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திமூன்றாம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்தில் இரண்டறக் கலந்து செபிக்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம்.
எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்: ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே நம்மை வாழ்விக்கும்: இறைவனுடைய பராமரிப்பில் நம்பிக்கைகொண்டு அவர் சொல்வதுபோல் வாழுகின்றவர்கள் பெற்றுக்கொள்ளும் அருள் நலன்கள் மிகவும் பெறுமதியானவை: அதாவது மனிதருடைய நிலையில்லா வாழ்விலே இறையருள் மாத்திரமே நிலைத்து நின்று நம்மைத் தாங்கிக் கொள்ளும்: இவையே இன்று நமக்கு இறைவனிடமிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியின் செய்திகளாக இருக்கின்றன.
எனவே இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் கொடைகளையும், ஆற்றல்களையும் சரியாகவும், சிறப்பாகவும் பயன்படுத்தி மனிதருக்கு ஆறுதலையும், கடவுளுக்கு மகிமையையும் கொண்டுவ ருவோம். நாம் எப்பொழுதும் விவேகத்தோடும், அறிவுத் தெளிவோடும் இருந்து தீமைகளை விலக்கி; கடவுளைச் சந்திக்கத் தயாராவோம். இந்தச் சிந்தனைகளை நாம் நம் மனத்தில் ஆழமாகப் பதித்து, இறைவன் விரும்பும் வாழ்வை நாம் வாழ வரம் கேட்டுச் செபிப்போம்.
முதல் வாசகம்
திறமை வாய்ந்த பெண் தன் வேலையனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம். 31:10-13,19-20,30-31
திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது: அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள். அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்: அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்: ஒரு நாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்: தன் வேலையனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.
இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்: நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.
எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்: ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்: அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.
.இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா: 128:1-5
பல்லவி:ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்.
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!பல்லவி:
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்: உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.பல்லவி:
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!பல்லவி:
இரண்டாம் வாசகம்.
திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6
சகோதரர் சகோதரிகளே!
காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. ஏனெனில் திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.
;எங்கும் அமைதி, ஆபத்து இல்லை ; என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவதுபோல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்: யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது. ஆனால், அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல: ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்: பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல.
ஆகவே மற்றவர்களைப்போல் நாமும் உறங்கலாகாது: விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.
.இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா. 15: 4அ, 5ஆ
அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும் என்றார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25:14-30
அக்காலத்தில்
விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். ஆவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.
நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ; ;ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்: இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன் என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும் என்றார்.
இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன் என்றாhர். அவருடைய தலைவர் அவரிடம், நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் என்றார்.
ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ஐயா, நீர் கடின உள்ளத்தினர்: நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்: நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது ; என்றார்.
அதற்கு அவருடைய தலைவர், சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன் என்று கூறினார். எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் என்று அவர் கூறினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மன்றாட்டுக்கள்.
- ஞானமும் வல்லமையும் உடையவரான தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் : அவர்கள் ஒவ்வொருவரும் விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் செயற்பட்டு, உம்மோடு இணைந்திருந்து நற்கனிகளைக் கொடுக்கும் நற்பணியாளர்களாய் வாழ்ந்திட வேண்டிய மனப்பக்குவத்தை அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- அருளின் ஊற்றான தந்தையே இறைவா! உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், நிலையில்லா எமது வாழ்விலே: உமது அருள்; மாத்திரமே நிலைத்து நின்று எம்மைத் தாங்கிக் கொள்ளும் என்பதை ஆழமாக உணர்ந்துகொண்டு, நீர் எமக்குக் கொடுத்திருக்கும் ஆற்றல்களைப் பயன்படுத்தி உமக்கு மகிமையைக் கொண்டுவர வேண்டிய ஆற்றலை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- நற்பேறும் நலமும் அளிக்கின்ற தந்தையே! குடும்ப அமைதி, உடல் நலம், விடுதலை வாழ்வு, குழந்தைப்பேறு அகியவற்றிற்காக ஏங்கித் தவிக்கும் அனைவர் மீதும் கருணைகூந்து அவர்களின் ஏக்கத்தைப் போக்கி, அவர்களின் தேவைகளை நிறைவு செய்திட வேண்டுமென்றும்,இறந்த அனைத்து விசுவாசிகளுக்கும் முடிவில்லா வாழ்வை அளித்திட வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- விடுதலையின் தந்தையே இறைவா! சிறைகளுக்குள்ளும், வதை முகாம்களுக்குள்ளும், தடும்பு முகாம்களுக்குள்ளும் அடைபட்டு வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களின் கண்ணீரைத் துடைத்து அவர்கள் விடுதலைபெற்று அமைதியோடும், பாதுகாப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பதிவிறக்கம் செய்ய.