திருச்செபமாலை செபிப்போம்

செபமாலையின் வரலாறு

ஆதிகால திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே திருத்தூதர்களும், இதர விசுவாசிகளும் கர்த்தர் கற்பித்த செபத்தையும் அருள்நிறைந்த மரியே என்ற வானதூதரின் வாழ்த்துச் செபத்தையும் உருக்கமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆனால் இன்று செபிக்கும் கன்னிமரியின் செபமாலையை, கி.பி. 1214ல் தான் புனித தோமினிக் வழியாக அன்னை மரியாள் திருச்சபைக்கு வழங்கினார்கள். அக்காலத்தில் ஆல் பிஜென்சியன்ஸ் என்ற முரண்பாட்டுக் கொள்கையினர் மனம் மாறி திருச்சபைக்குத் திரும்பி வரவேண்டுமென்று புனித தோமினிக் செபித்து வந்தார். பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு காட்டுக்குள் சென்று பாவிகள் மனந்திரும்ப வேண்டி செபித்தார். மூன்றாம் நாள் செபத்தின் தவத்தின் விளைவால் உணர்வற்ற நிலையில் இருந்தார். அப்பொழுது அன்னை மரியாள் புனித தோமனிக்குக் காட்சி தந்து எதிரிகளை முரண்பாட்டுக் கொள்கையினர்களை, பாவிகளை முறியடிக்கும் ஒரே கருவி செபமாலை என்று கற்றுக் கொடுத்தார்கள்.

அந்த நாளிலிருந்து தனது வாழ்நாள் முழுவதும் புனித தோமனிக் செபமாலையின் புகழையையும் பெருமையையும் தனது மறையுரைகளின் வழியாகப் போதித்து அறிக்கையிட்டு வந்தார்.

படிப்பறியாத பாமரமக்கள் தாவீது எழுதிய 150 திருப்பாக்களையும் செபிக்க முடியாத வேளையில், கன்னிமரியாள் கொடுத்த செபமாலை பேருதவியாக இருந்தது.செபமாலையில் நாம் செபிக்கும் 150 அருள் நிறைந்த மரியே செபம் 150 திருப்பாக்களை ஒத்ததாக அமைந்திருப்பதை நாம் கருத்தில் கொள்வது நல்லது.

செபமாலையின் மகிமையைப் பற்றி அன்னை மரியாள் பலருக்குத் தோன்றி விளக்கியுள்ளார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் அருள் நிறைந்த மரியே என்ற செபத்ததை சொல்லும்பொழுது எனக்கு ஒரு ரோசாப்பூவை அன்பளிப்பாக அளிக்கின்றீர்கள். என்கிறார்கள். செபமாலையை முழுமையாக எல்லா மறையுண்மைகளையும் தியானித்து செபிக்கும் பொமுது எனக்கும் இயேசுவுக்கும் ரோசாக்களைக் கோர்த்த கிரீடமாக நீங்கள் கொடுக்கிறீர்கள் என்றும் கூறியுள்ளார்கள். ரோசாமலர் பூக்களின் அரசி. ஆகவே செபமாலை என்பது முக்கியமான பக்தி முயற்சிகளின் ரோசாமலர் என்பது தெளிவாகப் புலனாகும்.

 

செபமாலை

செபமாலையில் இரண்டு அம்சங்கள் உள்ளன :
1. வாய்ச் செபம்.
2. அதே வேளையில் நாம் உள்ளத்தில் தியானிக்க வேண்டிய மறை நிகழ்ச்சி என்ற மனச் செபம்.

‘மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து கொண்டிருந்தார்’ என்பதை லூக்கா இருமுறை நினைவுப் படுத்துகிறார் (2: 19, 51). அந்த அன்னையின் இதயங் கொண்டு, அவரது பார்வையில் நம் மீட்பின் மறைநிகழ்ச்சிகளை நாம் தியானிக்கிறோம்.

அந்த மறை நிகழ்ச்சிகள் நம் மீட்புப் பணியின் நான்கு கட்டமாக தியானிக்கலாம்

  1. தம்மையே வெறுமையாக்கி மனித உருவில் தோன்றினார் – மகிழ்ச்சி மறைநிகழ்ச்சிகள்
    2. இயேவுவின் பணிவாழ்வு, இறையன்பின் வெளிப்பாடு – ஒளியின் மறை நிகழ்ச்சிகள்.
    3. சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்படிபவரானார் – துயர மறை நிகழ்ச்சிகள்
    4. கடவுள் அவரை எல்லோருக்கும் மேலாக உயர்த்தினார் – மகிமை மறை நிகழ்ச்சிகள்.

நற்செய்தியின் பொழிவே செபமாலை என்பதால், அனைவரும் பாராட்டிப் பயில வேண்டிய பக்தி முயற்சி இது.

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்.

இறைவா எங்களுக்குத் துணையாக வந்தருளும்
ஆண்டவரே எங்களுக்கு உதவி செய்ய விரைந்தருளும்.

பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக
ஆதியில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக -ஆமென்.

  1. விசுவாச அறிக்கை:

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். -ஆமென்.

2.பெரிய மணி : மெய்யான இறைவனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற இயேசுநாதர்சுவாமி படிப்பித்த செபத்தை சொல்லுவோம்.

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

3.மூன்று சிறிய மணிகள் :

(1) பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும் படியாக திரு மைந்தனை மன்றாடுவோம்.
அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்வர்நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சிஸ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

(2) திருமகனாம் இறைவனுக்குத் தாயாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் நம்பிக்கை வளரும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
அருள் நிறைந்த….

(3) தூய ஆவியாராகிய இறைவனுக்கு மிகவும் ஏற்புடையவராய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் அன்பு வளரும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும். அருள் நிறைந்த….

4.மூன்று சிறிய மணிகளுக்குப் பின் (திரித்துவ துதி) :

பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. -ஆமென்.

5.ஒவ்வொரு மறை நிகழ்ச்சியாகச் சொல்லித் தியானிப்போம்.

ஒரு பர. 10 அருள். ஒரு திரி. சொல்வோம்.

6.ஒவ்வொரு பத்து மணிகள் முடிந்ததும் :

ஓ என் இயேசுவே!
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும்.
எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும்.
உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ,
அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.

  1. முடிவு செபங்கள்

மகிழ்ச்சி நிறை பேருண்மை