நூல் 1
பொது விதிமுறைகள்
தி.ச. 1- இச்சட்டத் தொகுப்பில் உள்ள திருச்சபைச் சட்டங்கள் இலத்தீன் வழிபாட்டு முறைத் திருச்சபைக்கு மட்டுமே பொருந்தும்.
தி.ச. 2 – திருவழிபாட்டுச் செயல்களின் கொண்டாட்டத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சடங்கு முறைகளை இச்சட்டத் தொகுப்பு பெரும்பாலும் வரையறுக்கவில்லை; எனவே அவற்றுள் குறிப்பிட்ட ஒன்று இச்சட்டத் தொகுப்பின் சட்டங்களுக்கு நேர்மாறாக இருந்தாலன்றி, இந்நாள்வரை நடைமுறையில் இருக்கும் திருவழிபாட்டுச் சட்டங்களே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
தி.ச. 3 – இச்சட்டத் தொகுப்பு திருத்தூதரக ஆட்சிப்பீடம், நாடுகளோடு அல்லது மற்ற அரசியல் சமூகங்களோடு செய்துகொண்ட ஒப்பந்தங்களை முழு நீக்கமோ பகுதி நீக்கமோ செய்வதில்லை. எனவே, அவை இச்சட்டத் தொகுப்பின் விதியமைப்புகளுக்கு எவ்விதத்திலும் நேர்மாறாக இருந்தாலும், தற்போது உள்ளபடி தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
தி.ச. 4 – இச்சட்டத் தொகுப்பின் சட்டங்களால் அவை தெளிவாகத் திரும்பப் பெறப் பெற்றிருந்தாலன்றி, மானுட ஆள்கள் அல்லது சட்டம் ஆள்கள் முயன்று பெற்ற உரிமைகளும், அவ்வாறே இந்நாள்வரை திருத்தூதரக ஆட்சிப்பீடத்தால் வழங்கப்பட்ட சலுகைகளும், தற்போது நடைமுறையில் இருந்து திரும்பப் பெறப்படாமல் இருந்தால் முழுமையாக இருக்கும்.
தி.ச. 5 – §1. இந்நாள்வரை நடைமுறையில் உள்ள பொது அல்லது தனி வழக்கங்கள் இச்சட்டத் தொகுப்பின் விதியமைப்புகளுக்கு நேர்மாறாகவும் அதே சட்டத் தொகுப்பின் திருச்சபைச் சட்டங்களால் புறக்கணிக்கப்பட்டவையாகவும் இருந்தால், அவை முழுமையாக நீக்கப்படுகின்றன; அவை எதிர்காலத்தில் மீண்டும் நடைமுறைக்கு வர அனுமதிக்கப்படுவதில்லை; சட்டத்தொகுப்பு வேறு விதமாகத் தெளிவாக ஏற்பாடு செய்தாலன்றி, மற்ற வழக்கங்களும், அவை நூறு ஆண்டுக் காலத்துக்குரியதாகவோ தொல்பழமையானதாகவோ இருந்தாலன்றி, நீக்கப்பட்டவையாகவே கருதப்படும்; திருச்சபை ஆளுநரின் கணிப்பில், இடம் மற்றும் ஆள்களின் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அவற்றை விலக்கிவிட முடியாது எனில், சகித்துக் கொள்ளலாம்.
§2. இந்நாள்வரை நடைமுறையில் இருக்கின்ற சட்டத்திற்கு அப்பாற்பட்ட பொது அல்லது தனி வழக்கங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.
தி.ச. 6 – §1. இச்சட்டத் தொகுப்பு நடைமுறைக்கு வரும்போது கீழ்க்கண்டவை முழு நீக்கம் செய்யப்படுகின்றன.
1 1917 ல் பிரகடனம் செய்யப்பட்ட திருச்சபைச் சட்டத்தொகுப்பு;
2 தனிப்பட்ட சட்டங்களால் வேறுவிதமாகத் தெளிவாக ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தாலன்றி, இச்சட்டத் தொகுப்பின் விதியமைப்புகளுக்கு நேர்மாறான பொது அல்லது தனிச்சட்டங்கள்;
3 இச்சட்டத் தொகுப்பில் மீண்டும் இடம் பெற்றாலன்றி, திருத்தூதரக ஆட்சிப்பீடத்தால் இயற்றப்பட்ட எவ்விதப் பொது அல்லது தனிக் குற்றவியல் சட்டங்கள்
4 இச்சட்டத் தொகுப்பால் முழுமையாக ஒழுங்குப்படுத்தப்பட்ட காரியங்களைப் பற்றிய மற்ற எல்லாப் பொது ஒழுங்குமுறைச் சட்டங்கள்.
§2. இச்சட்டத் தொகுப்பில் உள்ள திருச்சபைச் சட்டங்கள், எந்த அளவுக்கு முந்திய சட்டங்களைக் குறிப்பிடுகின்றனவோ, அந்த அளவுக்கு அவை திருச்சபைச் சட்ட மரபுகளுக்கேற்ப மதிப்பீடு செய்யப்படல் வேண்டும்.