ஞாயிறு திருவழிபாட்டுக் குறிப்புக்கள்

இங்கே பின்வரும் நாட்களுக்குரிய திருப்பலி முன்னுரை, வாசகங்கள் மன்றாட்டு என்பன கீழ்வரும் ஒழுங்கில் இணைக்கப்பட்டள்ளன. ( மேலிருந்து கீழாக.)

1.கிறிஸ்து பிறப்புப் பெருவிழா பகல் திருப்பலி.

2.கிறிஸ்து பிறப்புப் பெருவிழா காலைத்  திருப்பலி.

3.கிறிஸ்து பிறப்புப் பெருவிழா இரவுத் (24ம் திகதி) திருப்பலி.

4.திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு.

கிறிஸ்து பிறப்பு பெருவிழா.

2017.12.25

முன்னுரை.

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்: தம் நீதியை வெளிப்படுத்தினார். வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! வாக்களிக்கப் பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் என்றென்றும்  நினைவுகூர்ந்து, நம்மை வாழவைக்கும் நம் இறைத் தந்தையின்  நாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்து வின் பிறப்பு விழாவைக் கொண்டாட பெருமகிழ்ச்சியுடன் ஒன்று கூடியுள்ள அனைவரையும் அன்புடன் வரவேற் கின்றோம்.

நாம் செய்கின்ற அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தினால் கடவுள் நம்மை மீட்கின் றார்: நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத் தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன, என்னும் இறை வார்த்தையின் நிறை உண்மைகள் கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு கொண்டுவரும் சிறப்பான ஆசீரை வெளிப்படுத்துகின்றன. மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும் என்பது நமது எதிர்பார்ப்பு மகிழ்ச்சியை இன்னும் இரட்டிப்பாக்குகின்றது.

எனவே நாமும் ஆண்டவருக்குள் மகிழ்ந்திருந்து, ஆண்டவரை மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்து வோம். மனிதருடைய கொள்கைகளைக் கைவிட்டு இறைவனுடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை கொள்வோம். இயேசுவை அயலவரிலும், நாம் பெறும் அருட்சாதனங்களிலும் கண்டு செயற்ப்படுவோம். அத்தோடு அமைதியின் தூதுவராய் வாழவும் பணிபுரியவும் வரம் கேட்டுச் செபிப்போம்.

முதல் வாசகம்

மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்:

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 52:7-10

நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்த வும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலை யைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி,  உன் கடவுள் அரசாளுகின்றார் ; என்று கூறவும் வருவோனின் பாதங் கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்: அவர் கள் அக்களிப்பு ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்: ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். எருசலேமின் பாழ் இடங் களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்: ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்: எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். புற இனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டி யுள்ளார்: மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா. 98: 1-6.

பல்லவி: உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். ஆவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.பல்லவி

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்: பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார்.பல்லவி

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.பல்லவி

யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்தேத்துங்கள்: யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்,பல்லவி

இரண்டாம் வாசகம்.

கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்:

எபிரேயருக்கு எழுதப்பட்ட  திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-6

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக் கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்: இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாள ராக்கினார்: இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றை யும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமை மிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

இவ்வாறு இறைமகன் வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார். ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது  ;நீ என் மைந்தர்: இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்  என்றும்,  நான் அவருக் குத் தந்தையாயிருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார் என்றும் எப்போதாவது கூறியதுண்டா? மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது,   கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி .

அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்: பிற இனத்தாரே வருவீர், இறைவனின் மலரடி தொழுவீர்: ஏனெனில் உலகின் மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்:
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்:
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18
தொடக்கத்தில் வாக்கு இருந்தது: அவ்வாக்கு கடவுளோடு இருந்தது: அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.
அனைத்தும் அவரால் உண்டாயின. உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது. அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது. இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்;.அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல. மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.
அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ
பிறந்தவர்கள் அல்ல. மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம்.அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார். யோவான் அவரைக் குறித்து, “எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்;.ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்” என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.

இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது. அருளும் உண்மையும் இயேசு
கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

1.பேரன்பையும் உறுதிமொழியையும் என்றென்றும் நினைவுகூருகின்ற தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் தங்கள் நாளாந்த வாழ்விலும், செயற்பாடுகளிலும் உமது வல்லமைமிக்க பிரசன்னத்தைக் கண்டு அனுபவித்து, உம்மிடமிருந்து கேட்டவை, கண்டவை அனைத்தையும் தங்களுடைய வாழ்விலே பிரதிபலித்து வாழ அவர்களுக்கு தேவையான அருள் வரங்களை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகின்ற தந்தையே இறைவா! உம்முடைய பிள்ளை களாகிய நாங்கள், இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுட னும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் வாழத் தேவை யான நல்லுள்ளத்தை எமக்கு அளித்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.இரக்கத்தின் அரியணையில் அமர்ந்திருக்கும் தந்தையே இறைவா! வன்முறையும், சுயநலமும், அநீதியும், போதைப் பொருள் பயன்பாடும் எம் மண்ணி லிருந்து அகன்றுபோகவும், எம் மக்கள் நிம்மதியாக வாழ வும் நீர் அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.அனைவரையும் அன்பு செய்யும் தந்தையே இறைவா! பிளவுபட்டருக்கின்ற தனிமனிதரும், குடும்பங்களும், குழுக்களும், சமூகங்களும் இம் மகிழ்வின் காலத்தில் மன்னிப்பின் மகத்துவத்தை உணர்ந்து, மன்னித்து, அன்புசெய்து, ஒருவவரையொருவர் ஏற்றுக்கொண்டு, உறவின் சமூகமாக வாழ்வதற்கு  வேண்டிய நல்லுள் ளத்தை அனைவருக்கும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.மாட்சியையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் அருளுகின்ற தந்தையே இறைவா! இன்று இத்திருப்பலி யில் பங்குகொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதைமுகாம் களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத் தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர்மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்         Christmas 25day2017

 

கிறிஸ்து பிறப்பு பெருவிழா.
2017.12.25

முன்னுரை.

நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள்!

அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! நேர்மை யாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கின்ற நம் இறைத் தந்தையின் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி, நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பு விழாப் பெருமகிழ்ச்சித் திருப்பலியில் கலந்து செபிக்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

தம் இரக்கத்தை முன்னிட்டு கடவுள் நம்மை மீட்டார். ‘ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்’ என்றும் ‘தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்’ என்றும் இனி ‘கைவிடப்படாத நகர்’ என்றும் பெயர் பெறுவாய்.என்னும் இறைவனின் வாக்குறுதிகள் அவலங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு பெரும் ஆறுதல் தரும் செய்தியாக இருக்கின்றன. அவர்களுக்குச் சொல்லப்பட்ட வாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது என்னும் இறைவாக்கும், நமக்குத் தரப்படுகின்ற இறைவனின் வாக்குறுதிகள் நிறைவேறியே தீரும் என்ற உண்மையை அழுத்திக் கூறுகின்றன.ஆண்டவர் நம்மை ஆட்சி செய்கின்ற போதுதான் நாம் முழுமையான விடுதலையைப் பெற்றுக் கொள்ளுகின்றோம் என்பதுதான் இன்றைய முக்கிய செய்தியாக இருக்கின்றது.

இச் செய்திகளை நம் மனத்தில் இருத்திக்கொண்டு, இவ்வுலகில் வாழும் நாம்; கடவுளுக்கு உகந்ததோர் வாழ்க்கை வாழவும், எப்பொழுதும் இயேசுவை அயலவரிலும், அருட்சாதனங்களிலும் கண்டு செயல்படுகின்றவர்களாகவும் வாழ வரம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் செபிப்போம்.

முதல் வாசகம்

இதோ, உன் மீட்பர் வருகின்றார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 62:11-12
உலகின் கடைக்கோடி வரை ஆண்டவர் பறைசாற்றியது: “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ, உன் மீட்பு வருகின்றது, அவரது வெற்றிப்பரிசு அவருடன் உள்ளது; அவரது செயலின் பயன் அவர் முன்னே உள்ளது.”‘புனித மக்களினம்’ என்றும் ‘ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்’ என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்; நீயோ, ‘தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்’ என்றும் இனி ‘கைவிடப்படாத நகர்’ என்றும் பெயர் பெறுவாய்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா. 987: 1,6.11-12

பல்லவி: பேரொளி இன்று நம்மேல் ஒளிரும்: ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்துள்ளார்.

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார். பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! வானங்கள் அவரது நீதியைஅறிவிக்கின்றன் அனைத்து மக்களினங் களும் அவரது மாட்சியைக் காண்கின்றன.பல்லவி

நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க் கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன. நேர்மை யாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள்.பல்லவி

இரண்டாம் வாசகம்.

கடவுள் தம் இரக்கத்தை முன்னிட்டு நம்மை மீட்டார்.

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலி ருந்து வாசகம் 3: 4-7

நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக். 2:14

அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

இடையர்கள் மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும்; கண்டார்கள்:

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 15-20
வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ;வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித் திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்; என்று சொல்லிக்கொண்டு, விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.

அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்ட வாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

1. நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் மீட்பளிக்கும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்,  துறவிகள், அனைவரும் என்றும் உமக்கு உகந்தோராயும், நேர்மையாளராயும், நேரிய உள்ளமுடை யோராயும், வாழ்வதற்குத் தேவையான அருள் வரங் களை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.ஒளியும் மகிழ்ச்சியும் விதைக்கின்ற தந்தையே இறைவா! உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், உமக்கு உகந்ததோர் வாழ்க்கை வாழவும், எப்பொழுதும் இயேசுவை அயலவரிலும், அருட்சாதனங்களிலும் கண்டு செயல்படுகின்றவர்களாகவும் வாழவேண்டிய மனப்பக்குவத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.இரக்கத்தின் அரியணையில் அமர்ந்திருக்கும்; தந்தையே இறைவா! வன்முறையும், சுயநலமும், அநீதியும், போதைப் பொருள் பயன்பாடும் எம் மண்ணிலிருந்து அகன்றுபோகவும், எம் மக்கள் நிம்மதியாக வாழவும் நீர் அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.அனைவரையும் அன்பு செய்யும் தந்தையே இறைவா! பிளவுபட்டருக்கின்ற தனிமனிதரும், குடும்பங்களும், குழுக்களும், சமூகங்களும் இம் மகிழ்வின் காலத்தில்; மன்னிப்பின் மகத்துவத்தை உணர்ந்து, மன்னித்து,அன்புசெய்து, ஒருவவரையொருவர் ஏற்றுக்கொண்டு, உறவின் சமூகமாக வாழ்வதற்கு வேண்டிய நல்லுள்ளத்தை அனைவருக்கும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே! இன்று இத்திருப்பலியில் பங்குகொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதை முகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர்மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்        2017 Christmas 25

 

கிறிஸ்து பிறப்பு பெருவிழா. (இரவில் திருப்பலி)

2017.12.24

முன்னுரை.

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்: சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர்  ஒளி உதித்துள்ளது. ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்:

அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! வியத்தகு ஆலோசகராகவும்;, வலிமை மிகு இறைவனாகவும் என்றுமுள தந்தையாகவும், அமைதியின் அரசராகவும் நம்மத்தியில் பிரசன்னமாகியருக்கும் நம் இறைத் தந்தையின்  இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி  நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாட பெருமகிழ்ச்சியுடன் வந்திருக்கும் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

இயேசுவின் பிறப்பு நமக்கெல்லாம் சிறப்பு. இழந்து போன உறவுகள், தொலைந்து போன இலட்சியங்கள், மீளவும் தளிர்விடும் சுயநல வேர்கள், பாதை மாறிப்போன பயணங்கள், எதிர்பார்ப்புக்களில் ஏமாற்றம் என்னும் வேதனைக் களங்களை கண்டு மனம்வாடிப் போயிருக்கும் நமக்கு இன்றைய இறைவார்த்தைகள் மீளவும் ஒரு புத்தூக்கத்தைத் தருவதாக அமைந்துள்ளன.  கடவுள் நம்மோடு என்னும் வாக்குறுதி மாறிப் போய்விடவில்லை. நம்முடைய எண்ணங்கள் கடவுளுடைய எண்ணங்கள் அல்ல என்னும் விசுவாச உறுதியோடு, நாம் இறைப் பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் வாழும்போது வாக்குறுதிகள் நிறைவேறியே தீரும் என்பது இன்றைய வெளிப்பாடாக இருக்கின்றது. இதுவே நமக்கு மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாகத் தரப்படுகின்றது.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் நாமும் விசுவாசத்தில், இறை நம்பிக்கையில் தளர்ந்து விடாது, இவ் விழாக் காலத்தில் வீணடிக்கப்படும் பணம், பொருள், நேரம் அத்தனையையும், வறியோர், வாழ்வடையப் பயன்படுத்துவோம். இறைப் பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் வாழும் மனநிலையை உருவாக்குவோம். அதனையே இயேசுவுக்கு காணிக்கையாகக் கொடுத்து மகிழ்வோம்.

முதல் வாசகம்

ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்:

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 9: 2-4, 6-7

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்: சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர்  ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்: அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்: அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்: கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பது போல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்: அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்: அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர்.

ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர்  தோள்மேல் இருக்கும்: அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்  என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது: தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலை நாட்டுவார்: இன்றுமுதல் என்றென்றும் நீதி யோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலை பெயராது உறுதிப்படுத்துவார்: படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா. 96: 1-3, 11-13

பல்லவி:  இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார், அவரே ஆண்டவராகிய மெசியா.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்: ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்: அவர் பெயரை வாழ்த்துங்கள்:பல்லவி

அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்: அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.பல்லவி

விண்ணுலகம் மகிழ்வதாக: மண்ணுலகம் களிகூர்வதாக: கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்: அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.பல்லவி

ஏனெனில் அவர் வருகின்றார்: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்: நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்.பல்லவி

இரண்டாம் வாசகம்.

மனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய  திருமுகத்திலிருந்து வாசகம் 2: 11 -14

மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப் பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர் நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப் போகிறது. அவர் நம்மை எல்லா நெறி கேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   லூக்.2:10-11

அல்லேலூயா, அல்லேலூயா! பெரும் மகிழ்ச்சி யூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் நமக்காகப் பிறந்தி ருக்கிறார்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்:

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14

அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடு மாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இரு ந்தபோது முதன் முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலு ள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார்.  மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்.  விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.  எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டி யில் கிடத்தினார்.

அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங் கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள் முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது: மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், ;அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்: இதுவே உங்களுக்கு அடையாளம்  என்றார்.

உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, ; உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! ; என்று கடவுளைப்  புகழ்ந்தது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

 1. மீட்கின்றவரும் தூய்மைப்படுத்துகின்றவருமான தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் தம்மைச் சூழ்ந்திருக்கும் தீமைகளை இனங்கண்டு  இறைப் பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் சாட்சிய வாழ்வு வாழ அவர்களுக்குத் தேவையான அருள் வரங்களை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 2. வியத்தகு ஆலோசகரான தந்தையே இறைவா! உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், எம்மைச் சூழ்ந்திருக்கும் தீமைகளை இனங்கண்டு இறைப் பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் சாட்சிய வாழ்வு வாழ , தேவையான ஞானத்தை அளித்துக் வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 3. இரக்கத்தின் அரியணையில் அமர்ந்திருக்கும்; தந்தையே இறைவா! வன்முறையும், சுயநலமும், அநீதியும், போதைப் பொருள் பயன்பாடும் எம் மண்ணிலிருந்து அகன்றுபோகவும், எம் மக்கள் நிம்மதியாக வாழவும் நீர் அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 4. அனைவரையும் அன்பு செய்யும் தந்தையே இறைவா! பிளவுபட்டருக்கின்ற தனிமனிதரும், குடும்பங்களும், குழுக்களும், சமூகங்களும் இம் மகிழ்வின் காலத்தில்; மன்னிப்பின் மகத்துவத்தை உணர்ந்து, மன்னித்து, அன்புசெய்து, ஒருவவரையொருவர் ஏற்றுக்கொண்டு, உறவின் சமூகமாக வாழ்வதற்கு வேண்டிய நல்லுள்ளத்தை அனைவருக்கும் அளித்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 5. எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே! இன்று இத்திருப்பலியில் பங்குகொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதை முகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர்மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்   Christmas Night2017

 

 

திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு.

2017.12.24

முன்னுரை.

நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை! ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக!

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! ஞானமே உருவாகிய, எதிரிகளின் தொல்லையினின்று விடுதலை அளிக்கின்ற நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி திருவருகைக் கால நான்காம் ஞாயிறு தினத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று நிற்கின் றாம்.

நான் கேதுரு மரங்களால் ஆன அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது” என்று கூறி கடவுளுக்கு ஆலயம் கட்ட விளைந்த தாவீதுக்கு, ஆண்டவர் தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். என்று எடுத்துக் கூறும் ஆண்டவருடைய வாக்குகள்: மனிதருடைய எண்ணங்கள் கடவுளுடைய எண்ணங்கள் அல்ல என்னும் உண்மையை மேலும் உறுதியாக எடுத்துரைக்கின்றன. மறுபுறமாக ஆண்டவரிடமிருந்து வரும் செய்தியை, அன்னை மரியா தாழ்மையோடு ஏற்று அதற்காகத் தன்னை முழுமையாக அர்பணிப்பதை நற்செய்தி தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

அந்த உண்மைகளை நாம் இதயத்தில் பதித்தவர்களாக இறைவனுடைய விருப்பமே நமது செயற்பாடாக இருக்க, இறைவனின் திருவுளத்தைக் கண்டறியும் ஞானத்தைக் கேட்டு இத் திருப்பலியில் பங்கேற்றுச் செபிப்போம்.

முதல் வாசகம்.

தாவீதின் அரசு ஆண்டவர் முன் என்றென்றுமே உறுதியாக இருக்கும்!

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம். 7:1-5,8-12,14-16

அரசர் தம் அரண்மனையில் குடியேறிய பின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லை யினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார்.அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, ‘பாரும், நான் கேதுரு மரங்களால் ஆன அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது” என்று கூறினார்.

அதற்கு நாத்தான், ‘நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்: ஏனெனில் ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்” என்று அரசரிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது.’நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்:

நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? என் மக்கள் இஸ்ரயே லின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன்.நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்: உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்: மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர் போல் நீ புகழுறச் செய்வேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன். அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல் மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும் ஆண்டவர் தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார்.

உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறு செய்யும் போது மனித இயல்புக்கேற்ப அடி த்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். உன் முன்பாக நான் சவுலை விலக்கியது போல, என் பேரன்பினின்றும் அவனை விலக்கமாட்டேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 89: 1- 4, 26,28

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்;.

ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன். நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். உமது பேரன்பு என்றென்றும் நிலைத் துள்ளது என்று அறிவிப்பேன். உமது உண்மை வானைப்போல் உறுதியானது.பல்லவி:

நீர் உரைத்தது. நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன். என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது.உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன். உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத் திருக்கச் செய்வேன்.பல்லவி:

நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை| என்று அவன் என்னை அழைப்பான்.அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன். அவ னோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.பல்லவி:

இரண்டாம் வாசகம்.

ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 16:25-27

சகோதரர் சகோதரிகளே,

இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவு ளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. லூக்.1:38

அல்லேலூயா, அல்லேலூயா! ‘நான் ஆண்டவரின் அடிமை. உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்”. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்:

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாச ரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தின ராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ‘அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம் மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ் த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

வானதூதர் அவரைப் பார்த்து, ‘மரியா, அஞ்சவேண்டாம்: கடவுளின் அருளைக் கண்ட டைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்: அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்: உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவரு டைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், ‘இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார்.

வானதூதர் அவரிடம், ‘தூயஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம் மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.பின்னர் மரியா, ‘நான் ஆண்டவரின் அடிமை. உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

 1. நிபந்தனையற்ற பேரன்புடையவரான தந்தையே இறைவா! உம்; பதிலாட்களாக எமக்குப் பணிபுரியும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: அவர்கள் அனைவரும்: ‘நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்னும் அன்னை மரியாவின் அர்ப்பணத்தைப் பின்பற்றி, தாங்கள் அறிவிக்கும்; நற்செய்திக்கு ஏற்ப வாழ அவர்களை உறுதிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 2. என்றும் வாழும் தந்தையே இறைவா! சவால்களும், ஏமாற்றங்களும் நிறைந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் உமது பிள்ளைகளாகிய நாங்கள்: உமது விருப்பம் என்ன என்பதைக் கண்டுணர்ந்த செயற்படுவதற்கு வேண்டிய அருளாற்றலை எமக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 3. உன்னதமான தந்தையே இறைவா! இறைபக்தியுள்ள, ஞானமுள்ள, கண்ணியமுள்ள, நேர்மையுள்ள, நல்லொழுக்கமுள்ள, பணியார்வமுள்ள, எம் இளைஞர்கள் வாழ அவர்களைப் பக்குவப்படுத்தி வழிநடாத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 4. என்றென்றும் மாட்சிக்க உரித்தான தந்தையே இறைவா! நீதிக்காகவும், அமைதிக்காகவும், உண்மைக்காகவும் உழைக்கும் அனைவருக்கும் நீரே சக்தியூட்டி அவர்களைப் பாதுகாத்து வழிநடாத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்            Sunday 4th Advent 2017

 

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு.

2017.12.17

முன்னுரை.

அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்கு உரியவர்.

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் இயேசுவை நம் மத்தியில் அனுப்பிய  நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி, திருவருகைக் கால மூன்றாம் ஞாயிறு தினத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று நிற்கின்றோம்.

இறைவன் மிகுந்த வல்லமை நிறைந்தவர்: அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்குகின்றவர். அரும்பெரும் செயல்கள் செய்கின்றவர். அவர் தூயவர். தலைமுறை தலை முறையாய் இரக்கம் காட்டி வருகிறவர். பசித்தோரை நலன்களால் நிரப்புகின்றவர். என்றென்றும் நம்மை இரக்கத்தோடு நினைவி;ல் கொண்டிருப்பவர். இதுவே இறைவனின் வல்லமையின் இரகசியம்.இந்த உண்மையை இன்றைய இறைவார்த்தைகள் பல்வேறு கோணங்களிலிருந்து நமக்குத் தெளிவாக விளக்கிக் கூறுகின்றன.

இச் செய்தியை நமது உள்ளத்தில் பதித்தவர்களாக, நம் ஆண்டவர் இயேசுவிடம் நாங்கள் செய்யவேண்டியதென்ன என்று தாழ்ச்சியோடு கேட்போம். மனமாற்றம் என்னும்  வாழ்வினூடாக தூய உள்ளத்தோடு ;யெசுவைச் சந்திக்க அருள்வரம ;கேட்டு இத் திருப்பலியில் பங்கேற்றுச் செபிப்போம்.

முதல் வாசகம்.

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 61:1-2,10-11

ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது. ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார். ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், என்னை அனுப்பியுள்ளார்.

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன். என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும். மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார். நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். லூக். 1: 47- 50, 53-54

பல்லவி: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்.

ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.பல்லவி

ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலை முறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.பல்லவி

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்: செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவி;ல் கொண்டுள்ளார்:பல்லவி

இரண்டாம் வாசகம்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது, கடவுள் உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் காப்பாராக!.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5:16-24

சகோதரர் சகோதரிகளே,

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.

தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்.

அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக! உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்கு உரியவர். அவர் இதைச் செய்வார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. எசா.61:1

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது. ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார்.அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்:

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 6-8, 18-28

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார். அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல. மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, ‘நீர் யார்?” என்று கேட்டபோது அவர், ‘நான் மெசியா அல்ல” என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, ‘அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று அவர்கள் கேட்க, அவர், ‘நானல்ல” என்றார். ‘நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், ‘இல்லை” என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், ‘நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப் பற்றி என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது| என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே என்றார்.

பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், ‘நீர் மெசியாவோ எலியாவோ வரவேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள்.யோவான் அவர்களிடம், ‘நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்: அவர் எனக்குப்பின் வருபவர். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

 1. முற்றிலும் தூய்மையாக்குகின்ற தந்தையே இறைவா! ஊம் பதிலாட்களாய் எமக்குப் பணிபுரியும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: அவர்கள் அனைவரும்: தங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காத்து சாட்சிய வாழ்விலும், இறைவார்த்தைப் பணியிலும், ஆறுதல் வழங்குகின்ற பணியிலும் ஆர்வமுடை யோராய் வாழ்ந்திட, அவர்களை வழிநடாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 2. பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ள தந்தையே இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் ஒவ்வொருவரும்: எங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றிப் பாதுகாத்து, செப வாழ்விலும், பணிவாழ்விலும் அதிக ஆர்வம் காட்டி, தாழ்ச்சியோடு மனமாற்றம் அடைந்து புது வாழ்வு வாழ வேண்டிய அருளாற்றலை எமக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 3. செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகின்ற செய்யும் தந்தையே இறைவா! வன்முறையிலும், அதிகாரத்திலும், ஆயுத்திலும், பணத்திலும் மனித வல்லமையிலும் நம்பிக்கை கொண்டு தீய செயல்களைச் செய்து வரும் அனைவரையும், வலுவற்றவர்களாக்கி , அவர்களை மனம் மாற்றி, அமைதியின் பாதையில் அவர்கள் நடந்திட வேண்டிய நல்லுள்ளத்தை அவர்கள் அனைவருக்கும் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 4. எம்மை அருள் பொழிவு செய்துள்ள தந்தையே இறைவா! நீர் எமக்குக் கொடுத்த தூய யோசேவ் வாஸ் அடிகளாரின் வாழ்வைப் பிற்பற்றி, எங்கள் ஒவ்வொருக்கும் நாம் வாழும் சூழலில் செய்யவேண்டிய பணிகளை அடையாளம் கண்டு செயற்படுவதற்கு வேண்டிய நல்லுள்ளத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Advent 3rd Sunday 2017

 

 

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு.

2017.12.10

முன்னுரை.
நல்லதையே ஆண்டவர் அருள்வார். நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும். அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாற வேண்டுமென விரும்புகிறவரும், புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் படைக்கின்றவருமான நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி: திருவருகைக் கால இரண்டாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாட ஆன்மிக தாகம் கொண்டு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று நிற்கின்றோம்.

ஆழம், அகலம், நீளம், என்பனவற்றிற்கு அப்பாற்றபட்ட இறைவனின் அன்பையும், நேசத்தையும், பாசத்தையும், பரிவையும் இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு தெளிவாக எடுத்துக்கூறி நிற்கின்றன. ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார். அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார். சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார். என்னும் இறைவார்த்தைகள், இறைவனிடம் காணப்படும் தன்னிகரற்ற தாய்மைப் பாசத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன.

புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாம், இறைவனின் இந்த வாக்குறுதிகள் எம்மிடையே தங்கிநின்று பலனளிக்க வேண்டுமானால், நாம் மாசுமறுவற்றவர்களாயும், நல்லுறவு கொண்டவர்களாயும் வாழ்ந்து அன்புச் சமூக சூழலை உருவாக்கி, பணியாற்ற வேண்டும் என்பதே இறைவன் நமக்குத் தரும் இன்றைய செய்தியாகின்றது.

எனவே நாம் ஒவ்வொருவரும் பரிவுள்ளமும், பணியார்வமும் கொண்டு அன்புச் சமூக வாழ்வு வாழ அருள் வரம் கேட்டு இத் திருப்பலியில் பங்கேற்றுச் செபிப்போம்.

முதல் வாசகம்.

ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 40:1-5,9-11
‘ஆறுதல் கூறுங்கள். என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள். அவள் போராட்டம் நின்றுவிட்டது. அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது. அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.

குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள். பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும். மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும். கோணலானது நேராக்கப்படும். கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும். மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர். ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.

சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! இதோ உன் கடவுள்| என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார். அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார். அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார். அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார். சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 85: 8- 13

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பைக் காட்டி எங்களை மீட்டருளும்.

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன். தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி. நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.பல்லவி:

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும். நீதியும் நிறைவாழ்வும் ஒன்றை யொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும். விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.பல்லவி:

நல்லதையே ஆண்டவர் அருள்வார். நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும். அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.பல்லவி:

இரண்டாம் வாசகம்.

புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம்; திருமுகத்திலிருந்து வாசகம் 3:8-14
சகோதரர் சகோதரிகளே,

அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிட வேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன. ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாற வேண்டுமென விரும்புகிறார்.

ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப் போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும். பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். இவை யாவும் அழிந்து போகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும்! கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறு வற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. லூக்.3:4,6

அல்லேலூயா, அல்லேலூயா! ‘பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள். அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள். அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர் அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

ஆண்டவருக்காகப் பாதையைச் செம்மை யாக்குங்கள்”.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-8

கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்:

‘இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள். அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.

இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார். யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர். தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர். யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார். தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார். வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். அவர் தொடர்ந்து, ‘என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன். அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” எனப் பறைசாற்றினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

1. தூதர்களை அனுப்பி பணியாளருக்குப் பலமளிக்கும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும்: நல்ல ஆயர்களாய் இருந்து, நல்லதையே மக்களக்குக் கொடுத்து, உமக்கு நல் விளைச்சலைக் கொடுக்கின்றவர்களாக வாழ வேண்டிய அருளாற்றலை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

2 நிறைவாழ்வை வாக்களிக்கின்ற தந்தையே இறைவா! நாங்கள் ஒவ்வொருவரும்: நல்லுறவோடும், மாசுமறுவற்றவர்களாயும் வாழ்ந்து அன்புச் சமூக சூழலை உருவாக்கி, பணியாற்ற வேண்டிய நல்லுள்ளத்தை எமக்கு அளித்திட வேண்டுமெ ன்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஆற்றலோடு ஆட்சி செய்கின்ற தந்தையே இறைவா! பொது நிலைப் பணியாளர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் உமது அரசுதான் மனுக்குலத்தின் ஏக்கங்களைப் போக்கி அமைதியை நிலைநாட்டும் என்பதை எமது வாழ்வாலும், பணியாலும் எடுத்துக்காட்டுகின்ற சக்தியையும், பலத்தையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஆறுதலின் ஊற்றான தந்தையே இறைவா! எம் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு விழாவைக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில், ஏழைகள், கைவிடப்பட்டோர், இடம்பெயர்ந்து வேதனைகளை அனுபவிப்போர் சிறைகளுக்குள் வாழ்வோர், நோயுற்றிருப்போர் ஆகியோர் மட்டில் அக்கறையுடைவர்களாய் இருந்து அவர்களுக்கு ஆறுதலாய் இருந்திடும் அருளை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்  Advent 2nd 2017 Sunday.

 

திருவருகைக் காலம் முதலாம் ஞாயிறு.

2017.12.03

முன்னுரை.

இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம். எமக்கு வாழ்வு அளித்தருளும். நாங்கள் உமது பெயரைத் தொழு வோம்;!

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசுக் கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற நம்மை அழைத்துள்ள  நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி திருவருகைக்காலம் முதலாம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றுச் செபிக்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம்.

தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? என்னும் இறைவனுடைய இரக்கம்; தரும் நம்பிக்கையில்: தம்முடைய பலவீனத்தையும், இயலாமையையும், பாவ நிலையையும் நினைந்து குமுறும் மக்களின் மனநிலையை இன்றைய இறைவார்த்தையிலே நாம் காணுகின்றோம். அதனைத் தொடர்ந்து நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்;காகக் காத்திருக்கும் நமக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை,  என்னும் மகிழ்வின் செய்தியை தூய பவுலடியார் வழியாக நாம் பெற்றுக் கொள்ளுகின்றோம்.

எனவே இன்றைய நாட்களிலே இறை நம்பிக்கைக்கு எதிராக நம்மைச் சிந்திக்கவும், செயற்படவும் வைக்கும் எல்லாத் தீய சக்திகள் மட்டிலும் அவதானமாகவும், விழிப்பாகவும் இருப்போம். கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்! என்னும் செபத்தை எப்பொழுதும் நினைவில் வைத்துச் செயற்படுவோம். கிறிஸ்துவின் பிறப்பு விழாவை கிறிஸ்து விரும்பியபடி நாம் கொண்டாடும் வெளிப்பாடு நமக்குக் கிடைக்க அருள் வரம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்.

நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா?

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 63:16-17, 64: 1, 3-8

ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை. பண்டை நாளிலிருந்து எம் மீட்பர்| என்பதே உம் பெயராம். ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வதேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய, குலங்களை முன்னிட்டும் திரும்பி வாரும். நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே!

நீர் இறங்கி வந்தீர். மலைகள் உம் முன்னே உருகி ஓடின! தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை. செவியுற்றதுமில்லை, கண்ணால் பார்த்ததுமில்லை. மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும் உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர்.

இதோ, நீர் சினமடைந்தீர். நாங்கள் பாவம் செய்தோம். நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்? நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம். எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடை போல் ஆயின. நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம். எங்கள் தீச் செயல்கள் காற்றைப் போல் எங்களை அடித்துச் சென்றன.

உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை. உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை. நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர். எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர். ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை. நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன். நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 80: 1- 2, 14-15, 17-18

பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்!.

இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! பல்லவி

படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும். இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி

உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம். எமக்கு வாழ்வு அளித்தருளும். நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். பல்லவி

இரண்டாம் வாசகம்.

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படவேண்டும்; எனக் காத்திருக்கின்றோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1:3-9

சகோதரர் சகோதரிகளே,

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.

கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள். மேலும் கிறிஸ்துவைப் பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதி வரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்குரியவர். தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்க

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. திபா.85:7

ல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும். உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 33-37

அக்காலத்தில்

அக்காலத்தில்

மானிட மகன் வருகையைப் பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.

அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. ஆவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக் கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்”.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

 1. அருட்கொடைகளை வழங்குவதில் குறைவுபடாத தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள்,அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: அவர்கள் அனைவரும்: இறை நம்பிக்கைக்கு எதிராகவும், பணி வாழ்விற்கு எதிராகவும் தம்மைச் சிந்திக்கவும், செயற்படவும் வைக்கும் எல்லாத் தீய சக்திகள் மட்டிலும் எப்பொழுதும் கவனமாயிருக்கவும்;, விழிப்பாயிருக்கவும்;, விவேகத்தோடு அவதானமாகச் செயற்படவும் வேண்டிய அருளாற்றலை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 2. உமது பேரன்பால் எம்மை வாழ்விக்கும் தந்தையே இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் ஒவ்வொருவரும்: உமக்கெதிராகப் பாவம் செய்து, தீட்டுப்பட்டவரைப்போலவும், அழுக்கடைந்த ஆடைபோலவும் ஆகிவிட்ட எங்கள் நேரிய செயல்களை எல்லாம் தாழ்மையுடன் ஏற்றுக் கொண்டு, மனம் வருந்தி, மனமாற்றம் பெற்று புது வாழ்வு வாழ்ந்திடும் அருளை எமக்கு அளித்துக் காத்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 3. சொல்வன்மையாலும் நிறையறிவாலும் எம்மை வளப்படுத்துகின்ற தந்தையே இறைவா! இறைமக்கள் சமுதாயத்தின் உயிருள்ள கற்களாக இருக்கின்ற நாங்கள் ஒவ்வொருவரும்: திருச்சபை வளர்ச்சி பற்றி அக்கறையற்றவர்களாக வாழும் போக்கிலிருந்து வெளியேறி, நீர் எமக்குக் கொடுத்திருக்கும் அனைத்தையும் திருச்சபையின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தும் நல்லுள்ளத்தை எமக்கு தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 4. எமக்கு வாழ்வு அளிக்கின்ற தந்தையே இறைவா! இயற்கையின் சீற்றத்தாலும், வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டு வேதனையுறும் அனைவரையும் ஆசீர்வதித்து, புதிய நம்பிக்கை வாழ்வை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Adventfirstsunday2017

 

 

 

 

 

 

 

கிறிஸ்து அரசர் பெருவிழா.

2017.11.27

முன்னுரை.

என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள். உலகம் தோன்றியதுமுதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! நம்மைத் தேடி வருபவரும், பேணிக் காக்கின்றவரும்,மீட்டுக்கொள்கின்றவரும், திடப்படுத்து கின்றவரும், நமக்கு நீதிவழங்குகின்றவருமான நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி  கிறிஸ்து அரசர் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டத்தில் இரண்டறக் கலந்து செபிக்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம்.

இன்றைய உலகிற்கு: அன்பு, பாசம், பரிவு, அக்கறை, மன்னிப்பு, உண்மை, நீதி, அமைதி உடைய தலைமைத் துவம், நம்மைத் தேடிவரும் தலைமைத்துவம் தேவை. இவை அனைத்தும் நம் அண்டவர் இயேசுக்கிறிஸ்து விடம் மாத்திரமே உண்டு என்னும்; அதி உன்னதமான உண்மையை இன்றைய இறைவார்த்தைகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.அவை நமது நம்பிக்கையை இன்னும் அதிகமாக்குகின்றன.

எனவே:  நம் வாழ்நாள் எல்லாம் நம்மைப்; புடைசூழ்ந்து வரும் இறைவனின் அருள் நலத்திலும் பேரன்பிலும், நம்பிக்கை கொண்டவர்களாக, மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர் கள் என உறுதியாக உங்களுக் குச் சொல்லுகிறேன்: என்னும் இயேசுவின் பொன் வாக்கை வாழ்வாக்க அருள் வரம் கேட்டு இத் திருப்பலி யில் பங்கேற் றுச் செபிப்போம்.

முதல் வாசகம்.

ன் மந்தையே, நான் ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக் கிடாய்களுக்கும், வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையேயும் நீதி வழங்குவேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம். 31:11-12, 15-17

தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடித் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன்.

நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். காணாமல் போனதைத் தேடுவேன். அலைந்து திரிவ தைத் திரும்பக்கொண்டு வருவேன். காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன். நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்.

எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன்னைப் பொறுத்தவரை, என் மந்தையே, நான் ஆட்டுக் கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக் கிடாய்களுக்கும், வெள் ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையேயும் நீதி வழங்குவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 23: 1- 3, 5-6

பல்லவி: ஆண்டவரே என் ஆயர். எனக்கேதும் குறையில்லை.

ஆண்டவரே என் ஆயர். எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். பல்லவி

அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். பல்லவி

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர். என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர். எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும். நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி

இரண்டாம் வாசகம்.

கிறிஸ்துவின் வருகையின்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15:20-26,28

சகோதரர் சகோதரிகளே,

ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப் பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியா கவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனை வரும் சாவுக்குள் ளானது போலக் கிறிஸ்துவை முன் னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார். அடு த்து, கிறிஸ்து வின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர். அதன் பின் னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார்.

எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும். அனைத்துமே மகனுக்கு அடிபணி யும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணி வார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. மாற்.11:10

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ‘வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப் பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடு களையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறி  யாடுகளை வலப்பக்கத் திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ் வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள். உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர் கள். தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள். அன்னியனாக இருந் தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள். நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள். நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள். சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்| என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள் ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித் தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்ற வராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?| என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோத ரிகளுள் ஒருவருக்கு நீங் கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல் லுகிறேன்| எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லு ங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை. தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ள வில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ள வில்லை” என்பார்.

அதற்கு அவர்கள், ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியா கவோ, தாகமாகவோ, அன்னி யராகவோ, ஆடையின் றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?| எனக் கேட்பார்கள்.

அப்பொழுது அவர், மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல் லாம் செய்யவில் லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக் குச் சொல்கிறேன்| எனப் பதிலளிப்பார்.

இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்”.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

 1. இறை ஆட்சியை உரிமைப்பேறாகத் தரும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவி கள்,அனைவரும், உமது வார்த்தையால் புத்தூக்கம் பெற்று அன்பு, பாசம், பரிவு, அக்கறை, மன்னிப்பு, உண்மை, நீதி, அமைதி ஆகிய நற்பண்புகளை தம் வாழ்வில் வெளிப்படுத்தி ஆசீர்வாதத்தின் ஊற்றுக் களாகத் திகழ்ந்திட, அவர்களுக்கு வேண்டிய நல்லுள் ளத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 2. எம்மைத் தேடி வருபவரும் தந்தையே இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும், தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று அவர்களுடைய தேவைகளில் தன்னலமின்றி உதவிடும்  அருளை எமக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின் றோம்.
 3. புத்துயிர் அளிக்கும் தந்தையே இறைவா! இறந்து போன திருத்தந்தை, ஆயர் கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரையும் ஆசீர் வதித்து, நிறைவாழ்வை அவர்களுக்கு உரிமைப் பேறாக வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அமைதியான நீர்நிலைகளுக்கு எம்மை அழைத்துச் செல்லும் தந்தையே இறைவா! எமது மறைமாவட்ட த்தை உமது திருவுளத்திற்கேற்ப வழநடாத்தும்  சிறந்த தொரு மேய்ப்பரை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Christ the King 2017 Feast

 

பொதுக்காலம் 33ம் ஞாயிறு

2017.11.19

முன்னுரை.

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!

அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! என்றும் நமக்கு ஆசீர் வழங்கி, பேறுபலன்களும், நலமும் அளித்து, நல்வாழ்வைக் காணும்படி செய்யும் நம் தந்தையாம் இறைவனின் திருப்பெயரில் வாழ்த்துக்கள் கூறி, ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திமூன்றாம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்தில் இரண்டறக் கலந்து செபிக்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம்.

எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்: ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே நம்மை வாழ்விக்கும்: இறைவனுடைய பராமரிப்பில் நம்பிக்கைகொண்டு அவர் சொல்வதுபோல் வாழுகின்றவர்கள் பெற்றுக்கொள்ளும் அருள் நலன்கள் மிகவும் பெறுமதியானவை: அதாவது மனிதருடைய நிலையில்லா வாழ்விலே இறையருள் மாத்திரமே நிலைத்து நின்று நம்மைத் தாங்கிக் கொள்ளும்: இவையே இன்று நமக்கு இறைவனிடமிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியின் செய்திகளாக இருக்கின்றன.

எனவே இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் கொடைகளையும், ஆற்றல்களையும் சரியாகவும், சிறப்பாகவும் பயன்படுத்தி மனிதருக்கு ஆறுதலையும், கடவுளுக்கு மகிமையையும் கொண்டுவ ருவோம். நாம் எப்பொழுதும் விவேகத்தோடும், அறிவுத் தெளிவோடும் இருந்து தீமைகளை விலக்கி; கடவுளைச் சந்திக்கத் தயாராவோம். இந்தச் சிந்தனைகளை நாம் நம் மனத்தில் ஆழமாகப் பதித்து, இறைவன் விரும்பும் வாழ்வை நாம்  வாழ வரம் கேட்டுச் செபிப்போம்.

முதல் வாசகம்

திறமை வாய்ந்த பெண் தன் வேலையனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம். 31:10-13,19-20,30-31

திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது: அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள். அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்: அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்: ஒரு நாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்: தன் வேலையனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.

இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்: நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.

எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்: ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்: அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.

.இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல்      திபா: 128:1-5

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்.

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!பல்லவி:

உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்: உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.பல்லவி:

ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!பல்லவி:

இரண்டாம் வாசகம்.

திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய  முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

சகோதரர் சகோதரிகளே!

காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. ஏனெனில் திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.

;எங்கும் அமைதி, ஆபத்து இல்லை ; என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவதுபோல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்: யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது. ஆனால், அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல: ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்: பகலில் நடப்பவர்கள்.  நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல.

ஆகவே மற்றவர்களைப்போல் நாமும் உறங்கலாகாது: விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.

.இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   யோவா. 15: 4அ, 5ஆ

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும்  இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர்.  எனவே உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்  என்றார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25:14-30

அக்காலத்தில்

விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். ஆவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.

நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ; ;ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்: இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன் என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர்.  எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன்.  உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்  என்றார்.

இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர்.  இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன் என்றாhர். அவருடைய தலைவர் அவரிடம், நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர்.  எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன்.  உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் என்றார்.

ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ஐயா, நீர் கடின உள்ளத்தினர்: நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்: நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது ; என்றார்.

அதற்கு அவருடைய தலைவர், சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன்.  நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன் என்று கூறினார். எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள்.  அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்  என்று அவர் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

 1. ஞானமும் வல்லமையும் உடையவரான தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் : அவர்கள் ஒவ்வொருவரும் விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் செயற்பட்டு, உம்மோடு இணைந்திருந்து நற்கனிகளைக் கொடுக்கும் நற்பணியாளர்களாய் வாழ்ந்திட வேண்டிய மனப்பக்குவத்தை அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 2. அருளின் ஊற்றான தந்தையே இறைவா! உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், நிலையில்லா எமது வாழ்விலே: உமது அருள்; மாத்திரமே நிலைத்து நின்று எம்மைத் தாங்கிக் கொள்ளும் என்பதை ஆழமாக உணர்ந்துகொண்டு, நீர் எமக்குக் கொடுத்திருக்கும் ஆற்றல்களைப் பயன்படுத்தி உமக்கு மகிமையைக் கொண்டுவர வேண்டிய ஆற்றலை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 3. நற்பேறும் நலமும் அளிக்கின்ற தந்தையே! குடும்ப அமைதி, உடல் நலம், விடுதலை வாழ்வு, குழந்தைப்பேறு அகியவற்றிற்காக ஏங்கித் தவிக்கும் அனைவர் மீதும் கருணைகூந்து அவர்களின் ஏக்கத்தைப் போக்கி, அவர்களின் தேவைகளை நிறைவு செய்திட வேண்டுமென்றும்,இறந்த அனைத்து விசுவாசிகளுக்கும் முடிவில்லா வாழ்வை அளித்திட வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 4. விடுதலையின் தந்தையே இறைவா! சிறைகளுக்குள்ளும், வதை முகாம்களுக்குள்ளும், தடும்பு முகாம்களுக்குள்ளும் அடைபட்டு வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களின் கண்ணீரைத் துடைத்து அவர்கள் விடுதலைபெற்று அமைதியோடும், பாதுகாப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.(பதிவிறக்கம் செய்ய.) 33rdsundayofordinarytime2017

 

பொதுக்காலம் காலம் முப்பத்திரெண்டாம்  ஞாயிறு.

2017.11.12.

முன்னுரை.

கடவுளே! உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.

அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! நமக்குத் துணை யாக இருந்து தம் ஆறுதலின் நிழலில் நமக்கு அடைக் கலம் தரும் இறைத்தந்தையின் திருப்பெயரில் வாழ்த்துக் கள் கூறி, ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தி ரெண்டாம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றுச் செபிக்க வந்திருக்கும் உங்கள் அனை வரையும் அன்போடு வரவேற்கின்றோம்.

நம்முடைய தேடல்கள், சிந்தனை, சொல் அனைத்தும் ஞானத்தை மையப்படுத்தியதாக இருக்க வேண் டும். இங்கு ஞானம் என்பது கடவுளைக் குறித்து நிற்கின் றது. அவர் ஒளியாகவும், வழியாகவும், வாழ்வாகவும் இருக்கின்றார். அவர் மீது அன்பு கொள்வோரும், அவரை ஆவலோடும், பெருவிருப் போடும் தேடிச் செல்வோரும், அவர்மீது தம் மனத்தைச் செலுத்துவோரும், கடவுளின் அறிவுரைகளைக் கடைப்பிடித்து விழிப்போடு வாழ்வோ ரும் பெற்றுக் கொள்ளும் அருள் ஆசீர்வாதங்களை இன்றைய இறைவார்த்தைகள் நமக்குத் தெளிவுபடுத்தி நிற்கின்றன.

தூய யோசேவ் வாஸ் அடிகளாரின் தூய பணியையும், சாட்சிய வாழ்வையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் நாமும்: அவர் எவ்வாறு கிறிஸ்துவாகிய ஞானத்தைக் கண்டு பிடித்து அதன் ஒளியில் வாழ்ந்து முன்மாதிரிகை காட்டினாரோ, அவ்வாறே நாமும் கிறஸ்துவை நம் வாழ்வில் முதன்மைப்படுத்தி வாழ நம்மை அர்ப்பணித்த வர்களாய் இறைவரம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் அர்தமுடன் பங்கேற்போம்.

முதல் வாசகம்.

ஞானத்தைத் தேடுவோர், அதைக் கண்டடைவர்.

சாலமோனின் ஞான  நூலிருந்து வாசகம். 6:12-16

ஞானம் ஒளிமிக்கது: மங்காதது. அதன்பால் அன்பு கூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்; அதைத் தேடு வோர் கண்டடைவர்.தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும்.

வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடையமாட் டார்கள்; ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப் பதை அவர்கள் காண்பார்கள். அதன்மீது மனத்தைச் செலுத்துவதே ஞானத்தின் நிறைவு. அதன்பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர்.

தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது: அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டு கிறது: அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர் களை எதிர்கொள்கிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல். திபா. 63: 1-7

பல்லவி:  என் இறைவா! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது

கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது: நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. பல்லவி

உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது: என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. பல்லவி

என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். பல்லவி

நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன். ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். பல்லவி

இரண்டாம் வாசகம்.

இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4:13-18

சகோதர சகோதரிகளே!

இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர் களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படி யானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோ ரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆண்டவரு டைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக் குக் கூறுவது இதுவே ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.

கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினி ன்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டு போகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர் கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தை களைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. மத்.24:42,44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்: ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  25:1-13

இயேசு தம் சீடர்களுக்குச் சொன்ன உவமையாவது: “ விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்; மணமகனை எதிர் கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார் கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்க ளோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதி யுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண் ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கி விட்டனர்.

நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர் கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மண மகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்கு களை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன் மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன் உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள். முன்மதி உடை யவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே  நல்லது’ என்றார்கள்.

அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள். அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக் குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

 1. ஆற்றலையும் மாட்சியையும் கொண்டிருக்கும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் ஞானமும், வல்லமையுமாகிய கிறிஸ்துவின் பாதச் சுவடுகளைப் பக்குவமாய்ப் பின்பற்றி, எப்போதும் அனைத்திலும் விழிப்போடும், விவேகத்தோடும் பணியாற்றுவதற்கு வேண்டிய வல்லமையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 2. உயிரினும் மேலான பேரன்பு உடையவரான தந்தையே இறைவா! உமது மக்களாகிய நாங்களும் அனைத்திற் கும் மேலாக கிறிஸ்துவின் பாதச் சுவடுகளைப் பக்குவமாய்ப் பின்பற்றி, எப்போதும் அனைத்திலும் விழிப்போடும், விவேகத்தோடும் வாழவேண்டிய மனப் பக்குவத்தை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 3. இறந்தோரை உயிhத்தெழச் செய்யும் அன்புத் தந்தையே இறைவா! இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு இறந்துபோன அனைவருக்கும், யாரும் நினையாத ஆன்மாக்களுக்கும், வேதனைப் படும் ஆன்மாக்களுக்கும் முடிவில்லா அமைதியை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 4. ஞானமும், வல்லமையும் உடையவரான தந்தையே இறைவா! எமது இளைஞர்கள் அனைவரும்: உம்மையே நோக்கவும், உம்மையே தேடவும், நாடவும், உமக்காக தாகமுற்றிருக்கவும், உம்மையே சிந்திக் கவும், உம்மையே புகழவும் அவர்களுக்கு வல்ல மையை அளித்து, அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.
 5. சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

https://arudkadal.com/wp-content/uploads/2017/11/32ndOrdiSunda2017.pdf