நற்கருணை
திருவருட்ச்சாதனங்கள் பற்றி திருச்சபை சட்டநூலின் படிப்பினைகள்
நூல் 4
பகுதி 1 தலைப்பு 3 புனிதமிகு நற்கருணை திருச்சபை சட்டம் 897. புனிதமிகு நற்கருணை மாண்புமிக்க அருளடையாளம். இதில் ஆண்டவராகிய கிறிஸ்துவே உடனிருக்கிறார், ஒப்புக்கொடக்கப்படுகிறார், உட்கொள்ளப்படுகிறார். இதனால் திருச்சபை இடைவிடாமல் வாழ்ந்து, வளர்கிறது. நுற்கருணைப்பலி ஆண்டவரின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் நினைவுச் சின்னம். இதில் சிலுவைப்பலி என்றென்றும் நீடிக்கிறது. இது கிறிஸ்தவ வழிபாடு மற்றும் வாழ்வு முழுவதின் உச்சியும் ஊற்றுமாகும். இதனால் இறைமக்களின் ஒற்றுமை குறிக்கப்பட்டு விளைவிக்கப்படுகிறது, கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்புதல் நிறைவடைகிறது. ஏனைய அருளடையாளங்களும் திருத்தூதுப்பணி சார்ந்த எல்லாவிதத் திருச்சபை அலுவல்களும் புனிதமிகு நற்கருணையுடன் இணைக்கப்பட்டு, அதை நோக்கியுள்ளன. தி.ச. 898. கிறிஸ்தவ விசுவாசிகள் நற்கருணை மீது மாபெரும் மதிப்புக் கொண்டிருக்கவேண்டும். அவர்கள் புனிதமிகு திருப்பலிக் கொண்டாட்டத்தில் ஈடுபாட்டுடன் பங்கேற்கவேண்டும். இவ்வருளடையாளத்தை மிகுந்த பக்தியுடனும் அடிக்கடியும் பெறவேண்டும். மேலும் மேன்மைமிகு ஆராதனையுடன் அதை வழிபடவேண்டும். ஆன்ம ஆமய்ப்பர்கள் இவ்வருளடையாளத்தைப் பற்றிய கோட்பாட்டை விளக்கி, இக்கடமைபற்றி விசுவாசிகளுக்கு ஆர்வமுடன் கற்பிக்கவேண்டும். இயல் 1 நற்கருணைக் கொண்டாட்டம் தி.ச. 899. நற்கருணைக் கொண்டாட்டம் கிறிஸ்துவினுடையவும் திருச்சபையினுடையவும் செயல். இதில் ஆண்டவராகிய கிறிஸ்து, குருவின் பணிவழியாக, அப்ப இரச வடிவில் பொருட்தன்மையில் உடனிருந்து, தம்மையே தந்தையாகிய இறைவனு;கு ஒப்புக்கொடுக்கிறார், தமது ஒப்புக் கொடுத்தலில் இணைக்கப்பட்டுள்ள விசுவாசிகளுக்குத் தம்மையே ஆன்ம உணவாக அளிக்கிறார். 2) நற்கருணை விருந்தில் இறைமக்கள், கிறிஸ்துவின் பெயரால் செயல்படும் ஆயர் அல்லது அவரின் அதிகாரத்தின் கீழுள்ள குருவின் தலைமையில், ஒன்றாக அழைக்கப்படுகின்றனர். உடனிருக்கும் அனைத்து விசுவாசிகளும், திருப்பணியாளராயினும் அல்லது பொதுநிலையினராயினும், பட்டங்கள் மற்றும் திருவழிபாட்டுப் பணிகளின் வேறுபாட்டிற்கேற்ப, தத்தமக்குரிய விதத்தில் பங்கேற்று ஒன்றுகூடுகின்றனர். 3) கிறிஸ்து நற்கருணைப்பலியைப் பல்வேறு பலன்களுக்காக ஏற்படுத்தினார், நற்கருணைக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் அவற்றைப் பெறும் வண்ணம் இக்கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்யவேண்டும்.. உட்பிரிவு 1 புனிதமிகு நற்கருணைப் பணியாளர் தி.ச. 900. கிறிஸ்துவின் பெயரால் நற்கருணை அருளடையாளத்தை உருவாக்கக் கூடிய பணியாளர், செல்லத்தக்கவிதத்தில் பட்டம் பெற்ற குரு மட்டுமே ஆவார். 2) திருச்சபைச் சட்டத்தால் தடைசெய்யப்படாத குரு, கீழ்க்கண்ட திருச்சபைச் சட்டத்தின் விதியமைப்புகளைக் கடைப்பிடித்து, சட்டமுறைப்படி நற்கருணையைக் கொண்டாடலாம். தி.ச. 901. வாழ்வோர் அல்லது இறந்தோர் எவருக்காகவும் திருப்பலியை ஒப்புக்கொடுக்க குருவுக்கு உரிமையுண்டு. தி.ச. 902. கிறிஸ்தவ விசுவாசிகளின் நலன் வேறுவிதமாகக் கோரினாலோ தூண்டினாலோ அன்றி, குருக்கள் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றலாம், ஆயினும், ஒவ்வொரு குருவுக்கும் தனிப்பட்ட விதத்தில் திருப்பலி நிறைவேற்றத் தன்னுரிமை உண்டு. ஆனால், அதே ஆலயத்தில் அல்லது செபக்கூடத்தில் கூட்டுத்திருப்பலி நடைபெறும்போது அவ்வாறு செய்யலாகாது. தி.ச. 903. ஒரு குரு, தமது சொந்தத் திருச்சபை ஆளுநர் அல்லது தலைவரின் குறைந்த அளவு ஓராண்டிற்குள் வழங்கப்பட்ட பரிந்துரைக் கடிதத்தை அளித்தால், அல்லது அவர் திருப்பலி நிறைவேற்றுவதிலிருந்து தடைசெய்யப்படவில்லை என்று விவேகத்துடன் தீர்மானிக்க முடியும் என்றால், அவர் ஆலய அதிபருக்கு அறிமுகமற்றவர் என்றாலும்கூட, திருப்பலி நிறைவேற்ற அனுமதிக்கப்படவேண்டும். தி.ச. 904. குருக்கள், நற்கருணைப்பலியாகிய மறைபொருளில் மீட்பின் அலுவல் இடைவிடாது நிறைவேற்றப்படுகிறது என்பதை என்றும் நினைவுகூர்ந்து, அடிக்கடி திருப்பலி நிறைவேற்றவேண்டும்: உண்மையில் ஒவ்வொருநாளும் திருப்பலி நிறைவேற்ற அவர்கள் உளமாரப் பரிந்துரைக்கப்படுகின்றனர்: ஏனெனில், விசுவாசிகள் உடனிருக்க இயலாது என்றாலும்கூட, திருப்பலி கிறிஸ்துவினுடையவும் திருச்சபையினுடையவும் செயல். இதில் குருக்கள் தங்கள் முதன்மையான பணியை நிறைவேற்றுகின்றனர். தி.ச. 905. ஒரே நாளில் தனியாகவோ கூட்டாகவோ பலமுறைத் திருப்பலி நிறைவேற்றச் சட்டம் அனுமதிக்கும் காரியங்களுக்குப் புறம்பே, ஒரு குரு ஒரு நாளில் ஒன்றுக்கும் அதிகமாகத் திருப்பலி நிறைவேற்ற அனுமதிக்கப்படுவதில்லை. 2) குருக்கள் பற்றாக்குறை இருந்தால், நியாயமான ஒரு காரணத்திற்காக ஒரே நாளில் இருமுறையும், மேய்ப்புப் பணித் தேவை கோரும்போது ஞாயிறு மற்றும் கடன் திருநாள்களில் மூன்று முறை கூடத் திருப்பலி நிறைவேற்ற குருக்களுக்குத் தலத்திருச்சபை ஆளுநர் அனுமதி வழங்கலாம். தி.ச. 906. நியாயமானதும் அறிவுக்கு ஒத்ததுமான ஒரு காரணம் இருந்தாலன்றி, குறைந்த அளவு ஒரு விசுவாசியின் பங்கேற்பின்றிக் குரு நற்கருணைப்பலி நிறைவேற்றக்கூடாது. தி.ச. 907. திருத்தொண்டர்களும் பொதுநிலையினரும் நற்கருணைக் கொண்டாட்டத்தில் திருப்பலி நிறைவேற்றும் குருவுக்குரிய இறைவேண்டலை, குறிப்பாக நற்கருணை மன்றாட்டைச் சொல்லவோ செயல்களைச் செய்யவோ கூடாது. தி.ச. 908. கத்தோலிக்க குருக்கள், கத்தோலிக்கத் திருச்சபையுடன் முழுமையான உறவுஒன்றிப்புக் கொண்டிராத திருச்சபைகள் அல்லது திருச்சபைச் சமூகங்களின் குருக்கள் அல்லது பணியாளர்களுடன் இணைந்து நற்கருணையைக் கொண்டாடத் தடைசெய்யப்பட்டுள்ளனர். தி.ச. 909. குரு நற்கருணைப் பலிக் கொண்டாட்டத்திற்கு இறைவேண்டலினால் தக்கவிதத்தில் தம்மைத் தயார் செய்வதையும், அதை நிறைவேற்றியபின் இறைவனுக்கு நன்றி செலுத்துவதையும் விட்டுவிடக்கூடாது. தி.ச. 910. திருவிருந்தின் சாதாரணப் பணியாளர், ஆயர், குரு அல்லது திருத்தொண்டர் ஆவார். 2) திருவிருந்தின் அசாதாரணப் பணியாளர், பீடத்துணைவர் அல்லது தி.ச.230, 3 ன் விதிமுறைக்கேற்ப நியமிக்கப்பட்ட மற்றொரு கிறிஸ்தவ விசுவாசி ஆவார். தி.ச. 911. பங்குக்குரு, துணைப் பங்குக்குருக்கள் மற்றும் சிறப்புப் பணிக்குருக்கள் புனிதமிகு நற்கருணையை இறுதி வழி உணவாக நோயாளிகளுக்குக் கொண்டு செல்லும் உரிமையையும் கடமையையும் கொண்டுள்ளனர்: இதே கடமையையும் உரிமையையும், திருப்பணியாளர் துறவற சபைகள் அல்லது மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்களின் தலைவர்கள் தங்கள் இல்லத்தில் வாழும் அனைவரையும் பொறுத்தவரையில் கொண்டுள்ளனர். 2) ஓர் அவசரத் தேவை எழும்போது அல்லது பங்குக்குரு, சிறப்பு பணிக்குரு அல்லது தலைவரின் குறைந்த அளவு ஊகிக்கப்பட்ட அனுமதியுடன் எந்தவொரு குருவும் அல்லது மற்றொரு திருவிருந்து பணியாளரும் இதைச் செய்யவேண்டும்: அதன்பின் அதைப் பற்றி அவர்களிடம் தெரிவிக்கவேண்டும். உட்பிரிவு 2 புனிதமிகு நற்கருணையில் பங்கேற்பு தி.ச. 912. சட்டத்தால் தடைசெய்யப்படாத, திருமுழுக்குப் பெற்ற எவரையும் திருவிருந்திற்கு அனுமதிக்கலாம்: அனுமதிக்கவேண்டும். தி.ச. 913. சிறுவர்களுக்கு புனிதமிகு நற்கருணை வழங்க வேண்டுமென்றால், அவர்கள் போதுமான அறிவையும் நுட்பமான தயாரிப்பையும் பெற்றிருக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தங்களது திறமைக்கேற்பக் கிறிஸ்துவின் மறைபொருளைப் புரிந்துகொள்ளவும், ஆண்டவரின் உடலை விசுவாசத்துடனும் பக்தியுடனும் பெற்றுக்கொள்ளவும் இயலும். 2) ஆயினும் இறக்கும் ஆபத்திலுள்ள சிறுவர்கள் கிறிஸ்துவின் உடலைச் சாதாரண உணவிலிருந்து வேறுபடுத்திக் காணக்கூடியவர்களாகவும் இருந்தால், அவர்களுக்குப் புனிதமிகு நற்கருணை வழங்கலாம். தி.ச. 914. அறிவுப் பயன்பாடு அடைந்துள்ள சிறுவர்கள் சரியான விதத்தில் தயாரிக்கப்பட்டு, முன்னதாக அருளடையாளப் பாவஅறிக்கை செய்து, கூடிய விரைவில் இந்த இறை உணவால் ஊட்டம் பெறுமாறு பார்த்துக்கொள்வது முதன் முதலில் பெற்றோர்கள், பெற்றோர்களின் இடத்தில் இருப்பவர்கள் மற்றும் பங்குக்குரு ஆகியோரின் கடமையாகும். அறிவுப் பயன்பாடு அடையாதவர்கள் அல்லது போதுமான ஏற்புடையநிலையில் இல்லாதவர்கள் என்று பங்குக்குரு கருதும் சிறுவர்கள் திருவிருந்தை அணுகாதபடி விழிப்புடன் கவனிப்பதும் பங்குக்குருவின் கடமை. தி.ச. 915. திருச்சபை உறவு ஒனிறிப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அல்லது இறைவழிபாடுவிலக்கிற்கு உள்ளானவர்கள், அத்தகைய தண்டனை விதிக்கப்பட்டபின் அல்லது அறிக்கையிடப்பட்டபின் மற்றும் வெளிப்படையான, கனமான பாவத்தில் பிடிவாதமாய் நிலைத்திருக்கும் மற்றவர்களைத் திருவிருந்திற்கு அனுமதிக்கக்கூடாது. தி.ச. 916. கனமான ஒரு காரணம் இருந்து மற்றும் பாவ அறிக்கையிடும் வாய்ப்பு இல்லாதிருந்தாலன்றி, கனமான பாவம் இருப்பதாக உணரும் ஒருவர், முன்னதாக அருளடையாளப்பாவ அறிக்கை செய்யாமல், திருப்பலி நிறைவேற்றவோ ஆண்டவரின் உடலைப் பெறவோ கூடாது. இத்தகைய சூழ்நிலையில் அவர், கூடிய விரைவில் பாவ அறிக்கை செய்யும் எண்ணத்தை உள்ளடக்கிய நிறைவான மனத்துயரை வெளியிடக் கடமைப்பட்டுள்ளார் என்பதை நினைவுகூர வேண்டும். தி.ச. 917. புனிதமிகு நற்கருணையை ஏற்கெனவே பெற்றுக்கொண்ட ஒருவர், அதே நாளில் அவர் பங்கேற்கும் நற்கருணைக்கொண்டாட்டத்தில் மட்டுமே அதை மீண்டும் ஒருமுறை பெறலாம். இக்காரியத்தில் தி.ச. 921, 2 ன் விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும். தி.ச. 918. விசுவாசிகள் நற்கருணைக் கொண்டாட்டத்திலேயே திருவிருந்தைப் பெற்றுக் கொள்ள மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றனர். இருப்பினும், நியாயமான ஒரு காரணத்திற்காக, திருப்பலிக்குப் புறம்பே அதைக் கேட்பவர்களுக்கு அதனை வழங்கவேண்டும். இக்காரியத்தில் திருவழிபாட்டுச் சடங்குமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். தி.ச. 919. புனிதமிகு நற்கருணையைப். பெறவிருக்கும் ஒருவர், திருவிருந்துக்கு முன் குறைந்த அளவு ஒருமணி நேரம், தண்ணீரும் மருந்தும் மட்டும் நீங்கலாக, எவ்வித உணவையும் பானத்தையும் தவிர்க்கவேண்டும். 2) அதே நாளில் இரண்டு அல்லது மூன்று முறை புனிதமிகு நற்கருணையைக் கொண்டாடும் குரு, இரண்டாவது அல்லது மூன்றாவது கொண்டாட்டத்துக்குமுன், ஒருமணி நேர இடைவேளை இல்லையென்றாலுங்கூட, ஏதாவது உட்கொள்ளலாம். 3) வயது முதிர்ந்தவர்களும் ஏதாவது ஓர் உடல்நலக் குறைவால் துன்புறுபவர்களும் மற்றும் அவர்களைக் கவனிப்பவர்களும், கடந்த ஒரு மணி நேரத்திற்குள் ஏதாவது உட்கொண்டிருந்தாலும்கூட, புனிதமிகு நற்கருணையைப் பெற்றுக்கொள்ளலாம். தி.ச. 920. ஒருமுறை நற்கருணை உட்கொள்ளத் தொடங்கியபின், அனைத்து விசுவாசிகளும் குறைந்த அளவு ஆண்டுக்கொருமுறையாவது திருவிருந்து உட்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர். 2) நியாயமான காரணத்திற்காக ஆண்டின் மற்றொரு காலத்தில் இக்கட்டளை நிறைவேற்றப்பட்டாலன்றி, பாஸ்கா காலத்தில் அதை நிறைவேற்றவேண்டும். தி.ச. 921. எக்காரணத்தினாலாவது இறக்கும் ஆபத்திலிருக்கும் கிறிஸ்தவ விசுவாசிகளை இறுதி வழி உணவு என்ற முறையில் திருவிருந்தால் ஊட்டமளிக்கவேண்டும். 2) அதே நாளில் நற்கருணை உட்கொண்டிருந்தாலும்கூட, இறக்கும் ஆபத்திலிருப்பவர்கள் மறுபடியும் நற்கருணை உட்கொள்ள மிகவும் அறிவுறுத்தப்படுகின்றனர். 3) இறக்கும் ஆபத்து நீடிக்கும்போது, திருவிருந்து பலமுறை, ஆனால் வெவ்வேறு நாள்களில் வழங்கப்பட பரிந்துரைக்கப்படுகிறது. தி.ச. 922. நோயாளிகளுக்கான இறுதி வழி உணணவை மிகவும் காலம் தாழ்த்தக்கூடாது: நோயாளிகள் முற்றிலும் தன்னுர்வுடன் இருக்கும்போது இறுதி வழி உணவால் ஊட்டம் பெறுவதை ஆன்ம அக்கறை கொண்டவர்கள் ஆர்வமுடனும் விழிப்புடனும் கவனிக்கவேண்டும். தி.ச. 923. கிறிஸ்தவ விசுவாசிகள் எந்தவொரு கத்தோலிக்க வழிபாட்டு முறையிலும் நற்கருணைப்பலியில் பங்கேற்கலாம், திரு உணவு உட்கொள்ளலாம். இக்காரியத்தில் தி.ச. 844 ன் விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும்..
உட்பிரிவு 3 நற்கருணைக் கொண்டாட்டத்தின் வழிபாட்டுமுறைகளும் சடங்குமுறைகளும் தி.ச. 924 புனிதமிகு நற்கருணைப்பலியை அப்பத்திலும் திராட்சை இரசத்திலும் கொண்டாடவேண்டும். 2) அப்பம் கோதுமையில் மட்டும் செய்யப்பட்டதாகவும், கெட்டுப்போகும் ஆபத்தை விலக்க, அண்மையில் செய்யப்பட்டதாகவும் இருக்கவேண்டும். 3) திராட்சை இரசம் இயற்கையானதாக இருக்கவேண்டும், திராட்சைப் பழத்திலிருந்து செய்ததாகவும் கெட்டுப்போகாமலும் இருக்கவேண்டும். தி.ச. 925. திருவுணவு அப்ப வடிவத்தில் மட்டும் அல்லது திருவழிபாட்டுச் சட்டங்களின் விதிமுறைகளுக்கேற்ப இரண்டு வடிவங்களில் அல்லது தேவையின் போது திராட்சை இரச வடிவத்தில் மட்டும் வழங்கவேண்டும். தி.ச. 926. இலத்தீன் திருச்சiயின் தொன்மைவாய்ந்த மரபிற்கேற்ப, நற்கருணைக் கொண்டாட்டத்தில், குரு அதை ஒப்புக்கொடுக்கும் இடமெல்லாம் புளியாத அப்பத்தைப் பயன்படுத்தவேண்டும். தி.ச. 927. இன்றியமையாத ஓர் அவசரத் தேவையில்கூட, மற்றொரு பொருளின்றி ஒரு பொருளை மட்டும் அர்ச்சிப்பதோ அல்லது இரண்டு பொருள்களையும்கூட நற்கருணைக் கொண்டாட்டத்திற்குப் புறம்பே அர்ச்சிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தி.ச. 928. நற்கருணைக் கொண்டாட்டம் இலத்தீன் மொழியில், அல்லது திருவழிபாட்டு மூலப்பாடங்கள் சட்டமுறைப்படி அங்கீகரிக்கப்பட்டிருந்தால் மட்டுமே மற்றொரு மொழியில் நிறைவேற்றப்படவேண்டும். தி.ச. 929. குருக்களும் திருத்தொண்டர்களும், நற்கருணையைக் கொண்டாடுவதிலும் வழங்குவதிலும் வழிபாட்டு விதிமுறைகளின்படி திரு உடைகளை அணியவேண்டும். தி.ச. 930. நோயுற்றுள்ள அல்லது வயதான குரு, நிற்கமுடியவில்லையென்றால், உட்கார்ந்து கொண்டு திருவழிபாட்டுச் சட்டங்களைக் கடைப்பிடித்து, நற்கருணைப் பலியைக் கொண்டாடலாம். ஆயினும், தலத்திருச்சபை ஆளுநரின் அனுமதியின்றி, மக்கள் முன்னிலையில் அவ்வாறு செய்யக்கூடாது. 2) பார்வையிழந்த அல்லது வேறு ஏதாவது ஓர் உடல் நலக்குறைவால் துன்புறும் குரு, அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு திருப்பலியின் மூலப்பாடத்தைப் பயன்படுத்தி, தேவைப்பட்டால் மற்றொரு குரு அல்லது திருத்தொண்டர் அல்லது உரியமுறையில் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பொதுநிலையினரின் உதவியுடன்கூட, சட்ட முறையாக நற்கருணைப் பலியைக் கொண்டாடலாம். உட்பிரிவு 4 நற்கருணைக் கொண்டாட்டத்தின் நேரமும் இடமும் தி.ச. 931. திருவழிபாட்டு விதிமுறைகளால் விலக்க.ப்பட்டுள்ள நாளும் நேரமும் நீங்கலாக, நற்கருணைக் கொண்டாட்டமும் அதன் பகிர்ந்தளித்தலும் எந்தவொரு நாளிலும் நேரத்திலும் நடைபெறலாம். தி.ச. 932. நற்கருணைக் கொண்டாட்டத்தை ஒரு புனிதமான இடத்தில் நிறைவேற்றவேண்டும். ஒரு குறிப்பிட்ட சூழ்நழலையில் ஓர் அவசரத் தேவை வேறுவிதமாகக் கோரினால், கொண்டாட்டம் தகுதியான ஓர் இடத்தில் நடைபெறவேண்டும். 2) நற்கருணைப் பலியை, நேர்ந்தளிக்கப்பட்ட அல்லது ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு பீடத்தின் மேல் நிறைவேற்றவேண்டும். புனித இடத்திற்குப் புறம்பே, பீடத்துணியையும் திருவிருந்துத் தணியையும் வைத்துப் பொருத்தமான ஒருமேசையைப் பயனபடுத்தலாம். இயல் 2 புனிதமிகு நற்கருணையைப் பாதுகாத்து வைத்தலும் அதன் வணக்கமும் தி.ச. 934. புனிதமிகு நற்கருணையை மறைமாவட்டப் பேராலயம் அல்லது அதற்கு இணையானவை, ஒவ்வொரு பங்கு ஆலயம், துறவற சபை அல்லது மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகத்தின் இல்லத்துடன் இணைக்கப்பட்ட ஆரயம் அல்லது செபக்கூடம் ஆகியவற்றில் பாதுகாத்து வைக்கவேண்டும். ஆயரின் சிற்றாலயத்திலும், தலத்திருச்சபை ஆளுநரின் அனுமதியுடன்,மற்ற ஆலயங்கள், செபக்கூடங்கள் அல்லது சிற்றாலயங்களிலும் பாதுகாத்து வைக்கலாம். 2) புனிதமிகு நற்கருணை பாதுகாத்து வைக்கப்படும் புனித இடங்களில், அதன் பாதுகாப்புக்காக யாராவது ஒருவர் எப்பொழுதும் இருக்கவேண்டும்.: மேலும், இயன்றவரை, அங்கு ஒவ்வொரு மாதமும் குறைந்த அளவு இருமுறை திருப்பலி கொண்டாடப்படவேண்டும். தி.ச. 935. மேய்ப்புப் பணி சார்ந்த ஓர் அவசரத் தேவை இருந்து, மறைமாவட்ட ஆயரின் விதியமைப்புகளைக் கடைப்பிடித்தாலன்றி, புனிதமிகு நற்கருணையைத் தம்முடன் வைத்திருப்பதோ பயணத்தின்போது அதை எடுத்துச் செல்வதோ எவருக்கும் அனுமதிக்கப்படுவதில்லை. தி.ச. 936. துறவறச்சபை இல்லத்தில் அல்லது மற்றப் பக்திநெறி இல்லத்தில் புனிதமிகு நற்கருணை அந்த இல்லத்துடன் இணைக்கப்பட்ட ஆலயம் அல்லது செபக்கூடத்தில் மட்டுமே பாதுகாத்துவைக்கப்பட வேண்டும். ஆயினும், நியாயமான ஒரு காரணத்திற்காக, திருச்சபை ஆளுநர் அதே இல்லத்தின் மற்றொரு செபக்கூடத்திலும் அதைப் பாதுகாத்துவைக்க அனுமதிக்கலாம். தி.ச. 937. கனமான ஒரு காரணம் தடுத்தாலன்றி, புனிதமிகு நற்கருணை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆலயத்தை, ஒவ்வொரு நாளும் குறைந்த அளவு சிலமணி நேரங்கள் விசுவாசிகளுக்குத் திறந்து விட வேண்டும். இவ்வாறு அவர்கள் புனிதமிகு அருளடையாளத்திறகு முன்பாகச் சிறிது நேரம் இறைவேண்டலில் செலவிட முடியும். தி.ச. 938. புனிதமிகு நற்கருணையை வழக்கமாக ஓர் ஆலயம் அல்லது செபக்கூடத்தின் ஒரு திருப்பேழையில் மட்டும் பாதுகாத்து வைக்கவேண்டும். 2) நற்கருணை பாதுகாத்துவைக்கப்பட்டுள்ள திருப்பேழையை, ஆலயம் அல்லது செபக்கூடத்தின் சிறப்புமிக்க, தெளிவாகத் தெரிகின்ற, அழகுடன் அணிசெய்யப்பட்டுள்ள, இறைவேண்டல் செய்வதற்குப் பொருத்தமான ஒரு பகுதியில் வைக்கவேண்டும். 3) வழக்கமாக நற்கருணை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருப்பேழை அசைக்க முடியாததாகவும், உறுதியானதாகவும் ஒளி ஊடுருவாத பொருளால் செய்யப்பட்டதாகவும் இருக்கவேண்டும். இறைநிந்தனை ஆபத்து முற்றிலும் தவிர்க்கப்படும் வண்ணம் பூட்டிவைக்கவேண்டும். 4) கனமான ஒரு காரணத்திற்காக, புனிதமிகு நற்கருணை குறிப்பாக இரவு நேரத்தில், அதிக பாதுகாப்பும் தகுதியுமுள்ள மற்றோர் இடத்தில் பாதுகாத்து வைக்க அனுமதிக்கப்படலாம.; 5) ஆலயம் அல்லது செபக்கூடத்தின் பொறுப்பைக் கொண்டவர் நற்கருணை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருப்பேழையின் திறவுகோல் மிகுந்த கவனமுடன் பாதுகாக்கப்படுவதைக் கவனித்துக்கொள்ளவேண்டும். தி.ச. 939. அர்ச்சிக்கப்பட்ட திருவுணவை நற்கருணைப் பாத்திரம் அல்லது கலத்தில் விசுவாசிகளின் தேவைகளுக்குப் போதுமான அளவில் பாதுகாத்து வைக்கவேண்டும். அவற்றை அடிக்கடி புதுப்பிக்கவேண்டும், பழைய திருவுணவை உரிய முறையில் உட்கொள்ளவேண்டும். தி.ச. 940. புனிதமிகு நற்கருணை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருப்பேழைக்குமுன் கிறிஸ்துவின் உடனிருப்பைக் குறித்துக்காட்டவும் மகிமைப்படுத்தவும் ஒரு சிறப்பு விளக்கு எப்பொழுதும் எரியவேண்டும். தி.ச. 941. புனிதமிகு நற்கருணை பாதுகாத்து வைக்கப்பட அனுமதிக்கப்பட்டுள்ள ஆலயங்கள் அல்லது செபக்கூடங்களில், நற்கருணைப் பாத்திரத்தைக் கொண்டோ அல்லது கதிர்ப்பாத்திரத்தைக் கொண்டோ நற்கருணையை ஆராதனைக்கு வைக்கலாம். இக்காரியத்தில் திருவழிபாட்டுப் புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும.; 2) திருப்பலிக் கொண்டாட்டத்தின் போது, அதே ஆலயம் அல்லது செபக்கூடத்தின் ஒரு பகுதியில் புனிதமிகு நற்கருணை ஆராதனைக்கு வைக்கப்படக்கூடாது. தி.ச. 942. இவ்வாலயங்களிலும் செபக்கூடங்களிலும் புனிதமிகு நற்கருணை, ஆண்டுதோறும் உரிய காலத்திற்கு நீடிக்கக்கூடிய, அது தொடர்ச்சியாக இல்லை என்றாலும்கூட, ஆடம்பரமாக ஆராதனைக்கு வைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. இவ்வாறு தலச் சமூகமானது நற்கருணை மறைபொருளை மிக ஆழமாகத் தியானிக்கலாம், மற்றும் ஆராதிக்கலாம். ஆயினும், தக்க அளவில் விசுவாசிகள் கூட்டம் இருக்கும் என்று முன்னறியப்பட்டால் மட்டுமே இத்தகைய ஆராதனைக்கு வைத்தல் நடைபெறவேண்டும், மேலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். தி.ச. 943. புனிதமிகு அருளடையாளத்தை ஆராதனைக்கு வைத்தல் மற்றும் நற்கருணை ஆசீர் வழங்குதலின் பணியாளர், குரு அல்லது திருத்தொண்டர் ஆவார். குறிப்பிட்ட சூழ்நிலைகளில், நற்கருணை ஆசீர் வழங்காமல், நற்கருணையை ஆராதனைக்கு வைத்து, அதைத் திருப்பேழையில் மீண்டும் வைக்கும் பணியாளர், பீடத்துணைவர், திருவிருந்தின் அசாதாரணப் பணியாளர் அல்லது தலத்திருச்சபை ஆளுநரால் நியமிக்கப்பட்ட வேறொருவர் ஆவார். இக்காரியத்தில் மறைமாவட்ட ஆயரின் விதியமைப்புகளைக் கடைப்பிடிக்கவேண்டும். தி.ச. 944. மறைமாவட்ட ஆயரின் கணிப்பின்படி எங்கு இயலுமோ அங்கு புனிதமிகு நற்கருணை மீதுள்ள வணக்கத்திற்குப் பகிரங்க சான்று பகரும் விதத்தில், சிறப்பாகக் கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழாவில், பொது வீதிகள் வழியாகப் பவனி நடத்தவேண்டும். 2) பவனிகளில் பங்கேற்பது மற்றும் அவற்றைத் தகுந்த மரியாதையுடன் நடத்துவது பற்றிய ஒழுங்குமுறைகளை நிர்ணயிப்பது மறைமாவட்ட ஆயரைச் சார்ந்தது. இயல் 3 திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு அளிக்கப்படும் காணிக்கை தி.ச. 945. திருச்சபையின் அங்கீகரிக்கப்பட்ட வழக்கத்திற்கேற்ப, திருப்பலி அல்லது கூட்டுத்திருப்பலி நிறைவேற்றும் எந்தக் குருவும், திருப்பலியைக் குறிப்பிட்ட ஒரு கருத்திற்காக ஒப்புக் கொடுக்கக் காணிக்கைப் பெறலாம். 2) காணிக்கை எதையும் பெறாமலும், கிறிஸ்தவ விசுவாசிகளின் கருத்துக்களுக்காக, சிறப்பாக வறியவர்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றுமாறு குருக்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. தி.ச. 946. தங்களுடைய கருத்துக்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுக்கக் காணிக்கை அளிக்கும் கிறிஸ்தவ விசுவாசிகள் திருச்சபையின் நலனுக்காக உதவுகின்றனர், மேலும், அக்காணிக்கை மூலம் தன் பணியாளர்களையும் அலுவல்களையும் பராமரிப்பதில் திருச்சபைக்குள்ள அக்கறையில் பங்கு பெறுகின்றனர். தி.ச. 947. வாணிபம் அல்லது வியாபாரத்தின் எவ்விதத் தோற்றத்தையும் திருப்பலிக் காணிக்கையிலிருந்து முற்றிலுமாக விலக்கவேண்டும். தி.ச. 948. எத்தனைக் கருத்துக்களுக்காகத் தனிப்பட்ட காணிக்கை, அது சிறியதாக இருந்தாலும் கூட, அளிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டதோ, அத்தனைக் கருத்துக்களுக்காகத் தனிப்பட்ட திருப்பலிகளை ஒப்புக் கொடுக்கவேண்டும். தி.ச. 949. காணிக்கை அளித்தவர்களின் கருத்துக்;காகத் திருப்பலி நிறைவேற்றி, அதை ஒப்புக் கொடுக்க வேண்டிய கடமையுள்ளவர், ஏற்றுக்கொள்ளப்பட்ட காணிக்கைகள் அவரது சொந்தக் குற்றமின்றி இழக்கப்பட்டிருந்தாலும்கூட, அதே கடமையைக் கொண்டுள்ளார். தி.ச. 950. காணிக்கைக் கொடுத்தவர்களின் எண்ணம் வேறானது என்று முறையாக ஊகிக்கவேண்டும் என்றிருந்தாலன்றி, நிறைவேற்றவேண்டிய திருப்பலிகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படாமல் திருப்பலி ஒப்புக் கொடுப்பதற்குப் பணத்தொகை கொடுக்கப்பட்டால், காணிக்கைக் கொடுத்தவர் வாழும் இடத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள காணிக்கையைக் கருத்திற்கொண்டு திருப்பலிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடவேண்டும். தி.ச. 951. ஒரே நாளில் பல திருப்பலிகள் நிறைவேற்றும் குரு, ஒவ்வொரு திருப்பலியையும் எந்தக் கருத்துக்காகக் காணிக்கை அளிக்கப்பட்டதோ அதற்காக ஒப்புக்கொடுக்கலாம். இருப்பினும், கிறிஸ்து பிறப்பு நாள் நீஙிகலாக, ஒரு திருப்பலிக் காணிக்கையை மட்டும் அவர் வைத்துக்கொண்டு, மற்றவற்றைத் திருச்சபை ஆளுநரால் குறிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக அனுப்பிவிடவேண்டும் என்ற சட்டத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். திருப்பலிக்குப் புறம்பான உரிமைத்தகுதியின் அடிப்படையில் ஏதாவது கைமாறு பெற்றுக் கொள்ளலாம். 2) ஒரே நாளில் இரண்டாவது திருப்பலியைக் கூட்டுத்திருப்பலியாக நிறைவேற்றும் குரு அதற்காக எவ்வித உரிமைத்தகுதி அடிப்படையிலும் காணிக்கைப் பெற முடியாது. தி.ச. 952. மறைமாநிலப் பேரவை அல்லது மறைமாநில ஆயர்கள் கூட்டம், திருப்பலி நிறைவேற்றுவதற்கும் ஒப்புக் கொடுப்பதற்கும் அளிக்க வேண்டிய காணிக்கையை, மறைமாநிலம் முழுவதற்கும் ஓர் ஆணை மூலம் வரையறுக்கவேண்டும்.. அதற்கு அதிகமானத் தொகையைப் பெறுவதற்குக் குருவுக்கு அனுமதியில்லை. இருப்பினும், அதிகமாகவோ அல்லது குறைவாகவோகூட விரும்பிக் கொடுக்கப்படும் காணிக்கையைப் பெறலாம். 2) அத்தகைய ஆணை இல்லாத இடத்தில், மறைமாவட்டத்தில் நடைமுறையில் இருக்கும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். தி.ச. 953. ஓராண்டுக்குள் தம்மால் ஒப்புக் கொடுக்க முடியாத திருப்பலிக் காணிக்கைகளை எவரும் பெறக்கூடாது. தி.ச. 954. ஒரு சில ஆலயங்களில் அல்லது செபக்கூடங்களில், அங்கு நிறைவேற்றக்கூடிய திருப்பலிகளைவிட அதிகமான எண்ணிக்கையில் திருப்பலி நிறைவேற்றும்படி கேட்கப்பட்டிருந்தால், காணிக்கை அளித்தவர்கள் நேர்மாறான விருப்பத்தைத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தாலன்றி, அத்திருப்பலிகளை வேறு இடங்களிலும் நிறைவேற்றலாம்.. தி.ச. 955. ஒப்புக்கொடுக்கவேண்டிய திருப்பலிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க விரும்பும் ஒருவர், கூடிய விரைவில், அவற்றின் கொண்டாட்டத்தைத் தமக்கு ஏற்புடைய குருக்களிடம், அவர்கள் எவ்வித ஐயத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என்பது அவருக்குத் தெளிவாகத் இருந்தால் மட்டுமே, ஒப்படைக்கலாம்.. மறைமாவட்டக் காணிக்கைக்கு மிகுதியான தொகை சொந்தக் காரணங்களுக்காகக் கொடுக்கப்பட்டது என்பது தெளிவாக இருந்தாலன்றி, அவர் தாம் பெற்றுக்கொண்ட முழுக் காணிக்கையைக் கைமாற்றிக் கொடுத்துவிடவேண்டும். திருப்பலி நிறைவேற்ற வேண்டிய கடமை ஏற்றுக் கொள்ளப்பட்டதென்றும், காணிக்கை பெறப்பட்டதென்றும் சான்றுறுதி பெறும்வரை, திருப்பலிகள் கொண்டாட்டத்தைக் கவனித்துக் கொள்ளும் கடமையையும் அவர் கொண்டுள்ளார். 2) வேறுவிதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலன்றி, திருப்பலிகளை நிறைவேற்ற வேண்டிய நேரம், அவற்றை நிறைவேற்ற வேண்டிய குரு அவற்றைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து ஆரம்பமாகிறது. 3) நிறைவேற்ற வேண்டிய திருப்பலிகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பவர்கள், பெறப்பட்ட திருப்பலிகள், மற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டவை, அவற்றின் காணிக்கை ஆகியவற்றைத் தாமதமின்றி ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்யவேண்டும். 4) ஒவ்வொரு குருவும், தான் பெற்றுக் கொண்டதும் நிறைவேற்றியதுமான திருப்பலிகளைத் துல்லியமாகக் குறிக்கவேண்டும். தி.ச. 957. திருப்பலிக் கடமைகளை நிறைவேற்றுவதைக் கவனித்துக்கொள்ளும் கடமையும் உரிமையும், மறைமாவட்ட ஆயரையும், துறவறசபைகள் மற்றும் மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்களின் ஆலயங்களைப் பொறுத்தவரையில் அவற்றின் தலைவர்களையும் சார்ந்தது. தி.ச. 958. பங்குக்குரு மற்றும் திருப்பலிக் காணிக்கைகள் வழக்கமாகப் பெறப்படும் ஆலயம் அல்லது மற்றப் புனித இடத்தின் அதிபர் ஒரு சிறப்புக் குறிப்பேடு வைத்திருக்கவேண்டும். அதில் நிறைவேற்ற வேண்டிய திருப்பலிகளின் எண்ணிக்கை, கருத்து, அளிக்கப்பட்ட காணிக்கை மற்றும் நிறைவேற்றிய திருப்பலிகள் ஆகியவற்றை அவர்கள் துல்லியமாகப் பதிவு செய்யவேண்டும். 2) திருச்சபை ஆளுநர், தாமாகவோ மற்றவர்கள் மூலமாகவோ இக்குறிப்பேடுகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளார்.
|