திருமணம்
திருவருட்ச்சாதனங்கள் பற்றி திருச்சபை சட்டநூலின் படிப்பினைகள்
நூல் – 4
பகுதி 1
தலைப்பு 7.
திருமணம்.
திருச்சபை சட்டம் 1055. திருமண உடன்படிக்கையால் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தங்கள் வாழ்வு முழுவதற்குமான ஓர் உறவுசமூகத்தைத் தங்களிடையே ஏற்படுத்துகின்றனர், இவ்வுடன்படிக்கை, தன் இயல்பிலே மணமக்களின் நலனுக்காகவும் மகப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்புக்காகவும் அமைந்துள்ளது, இது திருமுழுக்குப் பெற்றறவர்களிடையே ஓர் அருளடையாள மாண்பிற்கு ஆண்டவராகிய கிறிஸ்துவால் உயர்த்தப்பட்டுள்ளது.
2) எனவே, திருமுழுக்குப் பெற்ற ஆள்களிடையே நிகழும் செல்லத்தக்க ஒரு திருமண ஒப்பந்தம், தன் இயல்பிலே அருளடையாளமற்றதாக இருத்தல் இயலாது.
தி.ச. 1056. திருமணத்தின் இன்றியமையாத பண்புக் ஒருமைத்தன்மையும் முறிவுபடாத்தன்மையுமாகும், இவை, கிறிஸ்தவத் திருமணங்களில் அருளடையாளத்தின் காரணமாகத் தனிப்பட்ட உறுதித்தன்மையைப் பெற்றுள்ளன.
தி.ச. 1057. சட்டத்திறகேற்பத் தகுதியுள்ள ஆள்களின், சட்டமுறையாக வெளிப்படுத்தப்பட்ட சம்மதம் திருமணத்தை உருவாக்குகின்றது. இச்சம்மதம் வேறு எந்த அதிகாரத்தாலும் வழங்கப்படமுடியாது.
2) திருமண சம்மதம் என்பது மனத்தின் ஒரு செயல். இதனால், ஓர் ஆணும் ஒரு பெண்ணும், திருமணத்தை உருவாக்கும் பொருட்டு, திருப்பிப் பெற முடியாத உடன்படிக்கையால் தங்களையே ஒருவருக்கொருவர் கையளித்து, ஏற்றுக் கொள்கின்றனர்.
தி.ச. 1058. சட்டத்தால் தடை செய்யப்பட்டிராத அனைவரும் திருமண ஒப்பந்தம் செய்யலாம்.
தி.ச. 1059. தம்பதியரில் ஒருவர் மட்டுமே திருமுழுக்குப் பெற்றிருந்தாலும் கூட, கத்தோலிக்கர்களின் திருமணம் இறைச் சட்டத்தால் மட்டுமல்ல, திருச்சபைச் சட்டத்தாலும் நெறிப்படுத்தப்படுகிறது. இத்தகைய திருமணத்தின் நாட்டுச்சட்ட விளைவுகளை மட்டும் பொறுத்தவரை, நாட்டுச்சட்ட அதிகாரத்தின் தகுதியுடமையைக் கருத்தில்கொள்ளவேண்டும்.
தி.ச. 1060. திருமணம் சட்டத்தின் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே, ஐயம் இருக்கும்போது, நேர்மாறானது எண்பிக்கப்படும்வரை, திருமணத்தின் செல்லத்தக்கநிலையை நிலைநாட்டவேண்டும்.
தி.ச. 1061. திருமுழுக்குப் பெற்றவர்களிடையே நிகழும் செல்லத்தக்க ஒரு திருமணம், அது தாம்பத்திய உறவால் முழுமையடையாது இருந்தால், உறுதிப்படுத்தப்பட்டத் திருமணம் மட்டுமே எனப்படுகிறது, தன் இயல்பிலே மகப்பேறுக்குத் தகுதியுள்ள தாம்பத்திய செயலைத் தம்பதியர் தங்களிடையே மனித முறையில் செய்திருந்தால், அத்திருமணம் “உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் முழுமை பெற்றத் திருமணம்” எனப்படுகிறது. இச்செயலுக்கெனத் திருமணம் தன்னியல்பிலே அமைந்துள்ளது, இதனால் தம்பதியர் ஓருடலாகின்றனர்.
2) திருமணக்கொண்டாட்டத்திற்குப்பின் தம்பதியர் கூடிவாழ்ந்திருந்தால், நேர்மாறானது எண்பிக்கப்படும் வரை, தாம்பத்திய உறவால் முழுமை அடைதல் ஊகிக்கப்படுகிறது.
3) ஒரு செல்லாநிலைத் திருமணமானது, குறைந்த அளவு தம்பதியரில் ஒருவரால் நல்லெண்ணத்துடன் கொண்டாடப்பட்டிருந்தால், அத்திருமணத்தின் செல்லாநிலையைத் தம்பதியர் இருவரும் நிச்சயமாக அறியும் வரை, அது செல்லத்தக்கத் திருமணம் என ஊகிக்கப்படுகிறது.
தி.ச. 1062. திருமணம் செய்வதற்கான வாக்குறுதி, அது ஒரு தரப்பாயினும் அல்லது இரு தரப்பாயினும், நிச்சயதார்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இது நடைமுறையில் இருக்கக்கூடிய வழக்கம், நாட்டுச் சட்டங்களைக் கருத்திற்கொண்டு ஆயர் பேரவை இயற்றியுள்ள தனிச்சட்டத்தால் நெறிப்படுத்தப்படுகிறது.
2) திருமணம் செய்வதற்கான வாக்குறுதியிலிருந்து, திருமணக்கொண்டாட்டத்தைக் கோருகின்ற வழக்கு நடவடிக்கை எழுவதில்லை. ஆயினும், இழப்பீடு தேவைப்பட்டால் அதை ஈடுசெய்வதற்கான வழக்கு நடவடிக்கை எழுகிறது.
இயல் 1
மேய்ப்புப்பணி சார்ந்த அக்கறையும் திருமணக் கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளும்.
தி.ச. 1063. ஆன்ம மேய்ப்பர்கள், தங்களுடைய திருச்சபைச் சமூகம் கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு அளிக்கும் உதவியினால், திருமண நிலை, அதன் கிறிஸ்தவ மனநிலையில் காக்கப்பட்டு, நிறைவை நோக்கி முன்னேறுவதைக் கவனித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர். இவ்வுதவியை முக்கியமாகக் கொடுக்க வேண்டிய வழிகளாவன:
1) போதனை, சிறுவர், இளைஞர் மற்றும் வயதுவந்தோருக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட மறைக்கல்வி, மேலும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துவது: இவற்றின் மூலம் கிறிஸ்தவ விசுவாசிகள் கிறிஸ்தவத் திருமணத்தின் கொருள், கிறிஸ்தவத் தம்பதியர் மற்றும் பெற்றோரின் கடமைகள் ஆகியவற்றில் பயிற்றுவிக்க முடியும்.
2) திருமணத்தில் நுழைவதற்கான தனிப்பட்டத் தயாரிப்பு, இதன்மூலம் தமபதியர் தங்களுடைய புதிய நிலையின் புனிதத்தன்மைக்கும் கடமைகளுக்கும் ஏற்ற நிலையைப் பெறுவர்,
3) பயனுள்ள திருவழிபாட்டுத் திருமணக் கொண்டாட்டம், இக்கொண்டாட்டம் கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையே நிலவும் ஒற்றுமை மற்றும் வளமான அன்பின் மறைபொருளைத் தம்பதியர் குறித்தக்காட்டி, அதில் பங்கு பெறுவதைத் தெளிவாக வெளிப்படுத்தும்.
4) திருமணமானவர்களுக்கு அளிக்கப்படும் உதவி, இதன் மூலம் அவர்கள் தாம்பத்திய உடன்படிக்கையில் உண்மையுடன் நிலைத்திருந்து, அதைப் பாதுகாத்து, குடும்பத்தில் நாளுக்கு நாள் இன்னும் புனிதமான, நிறைவான வாழ்வு நடத்த இயலும்.
தி.ச. 1064. இந்த உதவி தக்கமுறையில் ஒழுங்கு செய்யப்படுவதைக் கவனித்துக்கொள்வது தலத் திருச்சபை ஆளுநரின் கடமையாகும். பொருத்தமென்று தேன்றினால், அவர் தேர்ச்சிமிக்க அனுபவமும் திறமையும் வாய்ந்த ஆண்களையும் பெண்களையுங்கூட கலந்தாலோசிக்கவேண்டும்.
தி.ச. 1065. உறுதிப்பூசுதல் அருளடையாளத்தை இன்னும் பெறாத கத்தோலிக்கர்கள், கடினமான இடைஞ்சலின்றிப் பெற இயலுமென்றால், திருமணத்திற்கு அனுமதிக்கப் படுமுன் அதைப் பெறவேண்டும்.
2) திருமண அருளடையாளத்தைப் பயனுள்ள விதத்தில் பெறும்பொருட்டு, தம்பதியர்கள் ஒப்புரவு, புனிதமிகு நற்கருணை அருளடையாளங்களை அணுகும்வண்ணம் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
தி.ச. 1066. திருமணம் கொண்டாடுவதற்குமுன், அதனுடைய செல்லத்தக்க, சட்டமுறையான கொண்டாட்டத்திற்கு எவ்விதத் தடையும் இல்லை என்பது தெளிவாக இருக்கவேண்டும்.
தி.ச. 1067. திருமணத்திற்கு முந்திய, தேவையான விசாரணைகளை நடத்துவதற்காக மணமக்களின் ஆய்வு, திருமண அறிக்கை மற்றும் பொருத்தமான மற்ற வழிமுறைகள் ஆகியவைபற்றி ஆயர் பேரவை விதி முறைகளை அளிக்கவேண்டும். இவ்விதிமுறைகளைக் கவனமாகக் கடைப்பிடித்துப் பங்குக்குரு திருமணத்தை நடத்தலாம்.
தி.ச. 1068. மரண ஆபத்தில், மற்ற சான்றுறுதிகள் கிடைக்கவில்லை என்றால், நேர் மாறான அறிகுறிகள் இருந்தாலன்றி, மண ஒப்பந்தம் செய்பவர்கள், தேவைப்பட்டால் பிரமாண வாக்குமூலம் செய்து, அவர்கள் திருமுழுக்குப் பெற்றவர்கள் என்றும், எவ்விதத் தடையாலும் கட்டுண்டவர்கள் அல்ல என்றும் உறுதிசெய்தல் போதுமானது.
தி.ச. 1069. விசுவாசிகள் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த தடைகளைத் திருமணக் கொண்டாட்டத் திற்குமுன் பங்குக்குருவிடமோ தலத்திருச்சபை ஆளுநரிடமோ தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
தி.ச. 1070. திருமணத்தை நடத்தவேண்டிய பங்குக் குருவைத் தவிர வேறொருவர் ஆய்வு செய்திருந்தால், அவர் அதன் முடிவுகளை, கூடிய விரைவில், நம்பத்தக்க ஆவணத்தின் மூலம் அந்தப் பங்குக்குருவுக்குத் தெரிவிக்கவேண்டும்.
தி.ச. 1071. தேவை நீங்கலாக, தலத்திருச்சபை ஆளுநரின் அனுமதியின்றி எவரும் பின்வரும் திருமணங்களை நடத்தக்கூடாது:-
1) நாடோடிகளின் திருமணம்,
2) நாட்டுச்சட்ட விதிமுறைக்கேற்ப அங்கீகரிக்கமுடியாத அல்லது அதன் விதிமுறைகளுக்கேற்ப கொண்டாட முடியாத திருமணம்,
3) முந்திய பிணைப்பால், மற்றொரு தரப்பினர் அல்லது குழந்தைகள் குறித்து எழும் இயலபான கடமைகளால் கட்டுண்டவரின் திருமணம்,
4) கத்தோலிக்க விசுவாசத்தைப் பகிரங்கமாகப் புறக்கணித்துவிட்ட ஒருவரின் திருமணம்,
5) திருச்சபைக் கண்டனத்திற்கு உட்பட்ட ஒருவரின் திருமணம்,
6) றுப்பேற்கும் வயதை அடையாதவரின் திருமணம், அவரின் பெற்றோர் அதைப்பற்றி அறியாதபோது அல்லது காரணத்தோடு அதை எதிர்க்கும்போது,
7) தி.ச. 1105 ல் குறிப்பிடப்பட்டுள்ள பதில் ஆள் மூலம் செய்யவேண்டிய திருமணம்,
2) தி.ச. 1125 ன் விதிமுறைகள், பொருத்தமான தழுவல் களுடன் கடைப்பிடிக்கப்பட்டாலன்றி, தலத்திருச்சபை ஆளுநர் கத்தோலிக்க விசுவாசத்தைப் பகிரங்கமாகப் புறக்கணித்துவிட்ட ஒருவரின் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கக்கூடாது.
தி.ச. 1072. ஆன்ம மேய்ப்பர்கள், ஒரு மண்டலத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கப்படி, வழக்கமாகத் திருமணம்புரியும் வயதுக்கு முன்பே, இளம் வயதினர் திருமணம்புரிவதைத் தடுக்கக் கவனம் செலுத்த வேண்டும்.
இயல் 2
திருமண முறியல்தடைகள் பொதுவாக
தி.ச. 1073. ஒருமுறியல்தடை, ஓர் ஆளைச் செல்லத்தக்க விதத்தில் திருமண ஒப்பந்தம் செய்ய இயலாதவராக ஆக்குகிறது.
தி.ச. 1074. ஒரு தடையை வெளியரங்கில் எண்பிக்க முடியும் என்றால், அது பகிரங்கமானது என்றும், அவ்விதம் இல்லையென்றால், அது மறைவானது என்றும் சொல்லப்படும்.
தி.ச. 1075. திருச்சபையின் உச்ச அதிகாரம் மட்டுமே எப்போது இறைச்சட்டம் ஒரு திருமணத்தைத் தடை செய்கிறது அல்லது செல்லாததாக்குகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிக்கையிடமுடியும்.
2) அதே உச்ச அதிகாரம் மட்டுமே, திருமுழுக்குப் பெற்ற வர்களுக்காக வேறு தடைகளை ஏற்படுத்தும் உரிமை கொண்டுள்ளது.
தி.ச. 1076. புதிய தடைகளை அறிமுகப்படுத்தும் அல்லது தற்போதுள்ள தடைகளுக்கு நேர்மாறாக உள்ள வழக்கம் புறக்கணிக்கப்படுகிறது.
தி.ச. 1077. தலத்திருச்சபை ஆளுநர் ஒரு குறிப்பிட்ட காரியத்தில், தம் ஆளுகைக்கு உட்பட்டவர்களின், அவர்கள் எங்கு தங்கியிருப்பினும் சரி தமது எல்லைக்குள் தற்போது தங்கியிருக்கும் அனைவரின் திருமணத்தைத் தடைசெய்யமுடியும். ஒரு குறிப்பிட்டக் காலத்திறகு, மிகக் கனமான காரணத்திற்காகவும் அக்காரணம் நீடிக்கும் வரையிலும் மட்டுமே அவர் இதைச் செய்யமுடியும்.
2) திருச்சபையின் உச்ச அதிகாரம் மட்டுமே ஒரு தடைக்குச் செல்லாநிலைத் தன்மைக்கான நிபந்தனை விதிக்கூற்றை இணைக்கமுடியும்.
தி.ச. 1078. 1) தலத்திருச்சபை ஆளுநர், தமது ஆளுகைக்கு உட்பட்டவர்களுக்கும், அவர்கள் எங்கு தங்கியிருப்பினும் சரி மற்றும் தமது எல்லைக்குள் தற்போது இருக்கும் அனைவருக்கும், திருத்தூதரக ஆட்சிப்பீடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள திருமணத்தடை விலக்கீடுகள் நீங்கலாக, அனைத்துத் திருச்சபைச் சட்டத் தடைகளிலிருந்தும் விலக்கீடு வழங்க முடியும்.
2) திருத்தூதரக ஆட்சிப்பீடத்திறகு ஒதுக்கப்பட்டுள்ள திருமணத்தi விலக்கீடுகளாவன:
1) திருப்பட்டங்களிலிருந்து அல்லது திருஆட்சிப் பீடத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட துறவற சபைகளில் கொடுக்கப்படும் பகிரங்க, நிரந்தரக் கற்பு வார்த்தைப் பாட்டிலிருந்து எழுகின்ற தடை,
2) தி.ச. 1090 ல் குறிப்பிடப்பட்டுள்ள பாதகம் எனும் தடை,
3) நேர்வழி இரத்த உறவினால் அல்லது கிளைவழி இரண்டாம் கால் இரத்த உறவினால் எழும் தடைகளுக்கு விலக்கீடு ஒருபோதும் கொடுக்கப்படுவதில்லை.
தி.ச. 1079. 1) மரண ஆபத்தில், தலத்திருச்சபை ஆளுநர், தமது அதிகாரத்திற்கு உட்பட்டவர்களுக்கும், அவர்கள் எங்கு தங்கியிருப்பினும் சரி மற்றும் தமது எல்லைக்குள் தற்போது இருக்கும் அனைவருக்கும் திருமணக் கொண்டாட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முறை யிலிருந்தும், திருச்சபைச் சட்ட ஒவ்வொரு மற்றும் அனைத்துத் தடைகளிலிருந்தும், அவை பகிரங்கமாக இருப்பினும் அல்லது மறைவாக இருப்பினும் சரி விலக்கீடு அளிக்கலாம். குருப்பட்டத்தினால் எழும் தடையிலிருந்து அவர் விலக்கீடு அளிக்க முடியாது.
2) 1 ல் குறிப்பிடப்பட்டுள்ள அதே சூழ்நிலைகளில், தலத் திருச்சபை ஆளுநரை அணுக முடியாத காரியங்களில் மட்டுமே, பங்குக்குரு, முறையான கட்டளைப் பேராண்மை பெற்றுள்ள திருப்பணியாளர் மற்றும் தி.ச. 1116, 2 ன் விதிமுறைக்கேற்ப, திருமணத்தை நடத்தும் குரு அல்லது திருத்தொண்டர் ஆகியோர் அதே தடைகளிலிருந்து விலக்கீடு அளிக்கும் செயலுரிமை கொண்டுள்ளனர்.
3) மரண ஆபத்தில், ஒரு பாவமன்னிப்பாளர் அக அரங்கில், ஒப்புரவு அருளடையாளத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ, மறைவானத் தடைகளிலிருந்து விலக்கீடு அளிக்கும் செயலுரிமை கொண்டுள்ளார்.
4) 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள காரியத்தில், தலத்திருச்சபை ஆளுநரைத் தந்தி அல்லது தொலைபேசி வழியாக மட்டுமே அணுக முடியுமென்றால், அவர் அணுக முடியாத நிலையில் உள்ளார் எனக் கருதப்படும்.
தி.ச. 1080. 1) திருமணத்திறகு எல்லா ஏற்பாடுகளும் ஏற்கெனவே செய்யப்பெற்ற பிறகு தடை கண்டு பிடிக்கப்பட்டு மற்றும் தகுதி வாய்ந்த அதிகாரியிடமிரு ந்து விலக்கீடு பெறும்வரை திருமணத்தை ஒருவேளைப் பெருந்தீங்கு விளைவிக்கும் ஆபத்தின்றி ஒத்தி வைக்கமுடியாதபோதெல்லாம், தி.ச.ச1078, 2, 1 ல் குறிப்பிடப்பட்டுள்ள தடைகளைத் தவிர, மற்ற அனைத்துத் தடைகளிலிருந்தும் விலக்கீடு அளிக்கும் செயலுரிமையைக் கீழ்க்கண்டவர்கள் கொண்டுள்ளனர், தலத் திருச்சபை ஆளுநர் மற்றும் காரியம் மறைவாக இருந்தால் மட்டும் தி.ச. 1079, 2 மற்றும் 3 ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும், அச்சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
2) தாமதத்தின் காரணமாக இதே ஆபத்து இருக்கும் போது மற்றும் திருத்தூதரக ஆட்சிப்பீடத்தையோ அல்லது தலத்திருச்சபை ஆளுநர் விலக்கீடு அளிக்கக்கூடிய தடைகளில் அவரையோ அணுகுவதற்குப் போதுமான காலம் இல்லாதபோது, இந்ந அதிகாரம் திருமணத்தை முறைப்படுத்துவதற்குப் பொருந்தும்..
தி.ச. 1081. தி.ச. 1079, 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள பங்குக்குரு அல்லது குரு அல்லது திருத்தொண்டர், புற அரங்கிற் காகக் கொடுக்கப்பட்ட விலக்கீட்டை உடனடியாகத் தலத்திருச்சபை ஆளுநருக்குத் தெரிவிக்கவேண்டும். மேலும் அதனைத் திருமணப் பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும்.
தி.ச. 1082. பாவமன்னிப்புக்கான அகநிலைப்பரிவின் மேல்நிலைச் சலுகை வேறுவிதமாகக் குறிப்பிட்டா லன்றி, அருளடையாளத்திற்கு வெளியே அக அரங்கில் மறைவானத் தடைக்குக் கொடுக்கப்பட்ட விலக்கீடு, செயலகத்தின் இரகசிய ஆவணக் காப்பகத்தில் வைக்க வேண்டிய புத்தகத்தில் பதிவுசெய்யவேண்டும், இந்த மறைவான தடையானது பின்னர் பகிரங்கமாகிவிட்டால், வேறெந்த விலக்கீடும் வெளி அரங்கிற்குத் தேவை இல்லை.
இயல் 3.
திருமண முறியல் தடைகள் குறிப்பாக
தி.ச. 1083. 1) பதினாறு வயதை நிறைவுசெய்வதற்குமுன் ஓர் ஆணும், அவ்வாறே பதினான்கு வயதை நிறைவு செய்வதற்குமுன் ஒரு பெண்ணும் செல்லத்தக்க ஒரு திருமணத்தைச் செய்யமுடியாது.
2) சட்டமுறையான திருமணக் கொண்டாட்டத்திற்கு ஓர் உயர் வயதை நிர்ணயிப்பது ஆயர் பேரவையின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்.
தி.ச. 1084. 1) திருமணத்திற்கு முந்தைய மற்றும் நிரந்தரமான பாலுறவு கொள்ளும் ஆற்றலின்மை, அது ஆண் தரப்பில் இருப்பினும் அல்லது பெண் தரப்பில் இருப்பினும் அல்லது சார்பு நிலையாக இருப்பினும், தன் இயல்பிலேயே திருமணத்தைச் செல்லாததாக்கி விடுகிறது.
2) பாலுறவு கொள்ளும் ஆற்றலின்மை என்னும் தடை ஐயத்துக்குரியதாக இருந்தால், அது சட்டமாக ஐயமாக இருப்பினும் அல்லது நிகழ்வு ஐயமாக இருப்பினும் திருமணத்தைத் தடைசெய்யக் கூடாது, ஐயம் நீடிக்கும் வரை, திருமணம் செல்லாது என்று அறிக்கையிடக் கூடாது.
3) மலட்டுத்தன்மை திருமணத்தைத் தடை செய்வது மில்லை, செல்லாததாக்குவதும் இல்லை, இக் காரியத்தில் தி.ச. 1098 ன் விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 1085. 1) முந்தைய திருமணப் பிணைப்பால் கட்டுண்ட ஒருவர், அத்திருமணம் தாம்பத்திய உறவால் முழுமையடையவில்லை என்றாலும்கூட, செல்லா நிலைத் திருமணம் செய்யமுயற்சி செய்கிறார்.
2) எந்தவொரு காரணத்தைமு;னிட்டும் முந்தைய திருமணம் செல்லாநிலைத் திருமணமாகவோ அல்லது பிணைப்பு அவிழ்க்கப்பட்ட திருமணமாகவோ அருப்பினும்கூட, அதன் பொருட்டு முந்தைய திருமணத்தின் செல்லாநிலை அல்லது பிணைப்பு அவிழ்ப்பு சட்டமுறையாகவும் நிச்சயமாகவும் எண்பிக்கப்படுவதற்குமுன், மற்றொரு திருமண ஒப்பந்தம் செய்ய அனுமதிக்கப்படுவரில்லை.
தி.ச. 1086. 1) கத்தோலிக்கத் திருச்சபையில் திரு முழுக்குப் பெற்ற அல்லது அதில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மேலும் அதிலிருந்து வெளிப்படையான செயல் மூலம் விலகாத ஒருவருக்கும் திருமுஐக்குப் பெறாத மற்றொருவருக்கும் இடையே நிகழும் திருமணம் செல்லத்தக்கதல்ல.
2) தி.சச.1125 மற்றும் 1126 ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந் தனைகள் நிறைவேற்றப்பட்டாலன்றி, இத்தடை யிலிருந்து விலக்கீடு அளிக்கக் கூடாது.
3) திருமணம் செய்யப்பட்டபோதுஒரு தரப்பினர் பொது வாகத் திருமுழுக்குப் பெற்றவர்என்று கருதப்பட்டால் அல்லது அவரின் திருமுழுக்கு ஐயத்திற்கு உரியதாக இருந்தால், ஒரு தரப்பினர் திருமுழுக்குப் பெற்றவ ரென்றும் மறு தரப்பினர் திருமுழுக்குப் பெறாதவ ரென்றும் நிச்சயமாக எண்பிக்கப்படும் வரை தி.ச.1060 ன் விதிமுறைக்கேற்ப அத்திருமணத்தின் செல்லுநிலையை ஊகிக்கவேண்டும்.
தி.ச. 1087. திருப்பட்டத்தினர் செல்லாத நிலையில் திருமணம் செய்ய முயற்சி செய்கின்றனர்.
தி.ச. 1088. துறவற சபையில் பகிரங்க, நிரந்தரக் கற்பு வார்த்தைப்பாட்டினால் கட்டுண்டவர்கள் செல்லாநிலையில் திருமணம் செய்யமுயற்சி செய்கின்றனர்.
தி.ச. 1089. ஓர் ஆணுக்கும், திருமணம் செய்யும் நோக்கத்துடன் கடத்தப்பட்ட அல்லது குறைந்த அளவு காவலில் வைக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கும் இடையே, அவள் கடத்தல்காரரிடமிருந்து பிரிக்கப்பட்டு, பாது காப்பான மற்றும் சுதந்திரமான இடத்தில் வைக்கப்பட்டு, தானாகவே திருமணத்தைத் தேர்ந்தெடுத்தாலன்றி, எவ்விதத் திருமணமும் நடக்க முடியாது.
தி.ச. 1090. 1) ஒரு குறிப்பிட்ட ஆளுடன் திருமணம் செய்யும் நோக்கத்துடன் அக்குறிப்பிட்ட ஆளின் வாழ்க்கைத் துணைவரின் சாவை அல்லது தனது சொந்த வாழ்க்கைத் துணைவரின் சாவை விளைவித்திருக்கும் ஒருவர் செல்லாநிலையில் திருமணம் செய்ய முயற்சி செய்கிறார்.
2) உடல் ரீதியான அல்லது மனரீதியான பரஸபர ஒத்துழைப்புடன் தங்களுடைய வாழ்க்கைத் துணைவர் ஒருவரின் சாவை விளைவித்தவர்களும் தங்களிடையே செல்லாநிலையில் திருமணம் செய்ய முயற்சி செய்கின்றனர்.
தி.ச. 1091. 1) நேர்வழி இரத்த உறவில், எல்லா ஏறுமுக மற்றும் இறங்குமுக இரத்த உறவினரிடையே, அவர்கள் சட்டமுறையானவர்களாக இருப்பினும் அல்லது இயல்பானவர்களாக இருப்பினும், திருமணம் செல்லாது.
2) இரத்த உறவுத் தடையானது பன்மடங்கு ஆக்கப்படுவது இல்லை.
3) மணமக்கள் இரத்த உறவில் எந்தக் காலிலாவது அல்லது கிளைவழி இரத்த உறவில் இரண்டாம் காலில் உறவினர்களாக உள்ளனரா என்னும் ஐயம் இருப்பின், திருமணம் ஒருபோதும் அனுமதிக்கப்படுவதில்லை.
தி.ச. 1092. திருமணவழி உறவு, நேர்வழியில் எல்லாக் கால்களிலும் திருமணத்தை செல்லாததாக்குகிறது.
தி.ச. 1093. வெளிப்படை மதிப்பு என்னும் தடை, ஒரு செல்லாநிலைத் திருமணத்திற்குப்பின் தம்பதியர் கூடி வாழ்ந்தாலும் அல்லது வசைப்பெயர் எடுத்த அல்லது பகிரங்கமான காமக் கூட்டுறவினாலும் எழுகிறது. இத்தடையானது, அந்த ஆணுக்கும் அந்தப் பெண்ணின் இரத்த உறவினர்களுக்கும் இடையே, நேர்வழி முதலாம் காலில் திருமணத்தைச் செல்லாததாக்குகிறது, அவ்வாறே, அந்தப் பெண்ணுக்கும் அந்த ஆணின் இரத்த உறவினர்களுக்குமிடையே நேர்வழி முதலாம் காலில் திருமணத்தைச் செல்லாததாக்குகிறது.
தி.ச. 1094. தத்தெடுத்தலிலிருந்து வரும் சட்டவழி உறவின் மூலம் நேர்வழியில் எல்லாக் கால்களிலும் அல்லது கிளை வழியில் இரண்டாம் காலிலும் உள்ளவர்கள் தங்களிடையே செல்லத்தக்கவிதத்தில் திருமணம் செய்யமுடியாது.
இயல் 4
திருமணச் சம்மதம்.
தி.ச. 1095. கீழ்கண்டவர்கள் திருமணம் செய்வதற்குத் தகுதியற்றவர்கள் ஆவர்:
1) போதுமான அளவு பகுத்தறிவு பயன்பாடு அற்றவர்கள்,
2) இரு தரப்பினராலும் பரஸ்பரமாக வழங்கப்பட்டு, ஏற்றுக்கொள்ள வேண்டிய திருமணத்தின் இன்றியமையாக் கடமைகளையும் உரிமைகளையும் பற்றிச் சீர்தூக்கிப்பார்க்கும் திறனாய்வுப் பண்பு மிகக்குறைவாக இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்,
3) உளவியல் காரணங்களால் திருமணத்தின் இன்றியமையாக் கடமைகளை ஏற்க இயலாதவர்கள்.
தி.ச. 1096. 1) திருமணச் சம்மதம் இருக்கவேண்டு மென்றால், திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயுள்ள நிரந்தர ஓர் உறவுச் சமூகம் என்பதையும், அது பாலியல்பு சார்ந்த ஓரளவு ஒத்துழைப்பால் மகப்பேற்றுக்காக அமைந்துள்ளது என்பதையும், திருமண ஒப்பந்தம் செய்யும் இரு தரப்பினரும் குறைந்த அளவு அறியாதவர்கள் அல்ல என்பது அவசியமாகும்.
2) இந்த அறியாமை பூப்பெய்தியபிறகு உள்ளதென்று ஊகிக்கப்படுவதில்லை.
தி.ச. 1097. 1) ஓர் ஆளைப் பற்றிய தவறு திருமணத்தைச் செல்லாததாக்குகிறது.
2) ஓர் ஆளின் குணத்தைப் பற்றிய தவறு, அந்த தவறு ஒப்பந்தம் செய்வதற்குக் காரணமாக இருந்தாலும்கூட, அந்தக் குணம் நேரடியாகவும் முதன்மையாகவும் விரும்பப்பட்டிருந்தாலன்றி, திருமணத்தைச் செல்லாத தாக்குவதில்லை.
தி.ச. 1098. சம்மதம் பெறுவதற்காக இழைக்கப்பட்ட மோசடியால் வஞ்சிக்கப்பட்டு, திருமணம் செய்யும் ஓர் ஆள் செல்லத்தகாத விதத்தில் திருமண ஒப்பந்தம் செய்கிறார், இம்மோசடியானது தன்னியல்பிலேயே திருமண வாழ்வு உறவுச் சமூகத்தைக் கடுமையாகச் சீர்குலைக்கக் கூடிய மற்றத் தரப்பினரின் ஏதாவதொரு குணத்தைப் பற்றியதாகும்.
தி.ச. 1099. திருமணத்தின் ஒருமைத் தன்மை, முறிவு படாத் தன்மை அல்லது திருமண அருளடையாள மாண்பு பற்றிய தவறு, மனத்தைத் தீர்மானிக்காதவரை, திருமணச் சம்மதத்தைக் கெடுப்பதில்லை.
தி.ச. 1100. திருமணத்தின் செல்லாநிலை பற்றிய அறிவு அல்லது கருத்து திருமணச் சம்மதத்தைக் கட்டாயமாக விலக்குவதில்லை.
தி.ச. 1101. 1) மனத்தின் அக ஒப்புதல், திருமணக் கொண்டாட்டத்தின்போது பயன்படுத்தப்படும் வார்த் தைகள் அல்லது அடையாளங்களுடன் ஒத்துள்ளது என ஊகிக்கப்படுகிறது.
2) ஆனால், ஒருதரப்பினரோ அல்லது இரு தரப்பினரோ, மனத்தின் நேர்மறையான செயலால், திருமணத்தையோ அல்லது திருமணத்தின் இன்றியமையாத ஏதாவதொரு கூறினையோ அல்லது இன்றியமையாத ஏதாவதொரு பண்பையோ விலக்கிவிட்டால், அத்தரப்பினர் செல்லத்தகாதவிதத்தில் ஒப்பந்தம் செய்கிறார்.
தி.ச. 1102. 1) எதிர்கால நிபந்தனைக்கு உட்பட்டுச் செல்லத்தக்க விதத்தில் திருமண ஒப்பந்தம் செய்ய முடியாது.
2) இறந்தகால அல்லது நிகழ்கால நிபந்தனைக்கு உட்பட்டுச் செய்யப்பெற்ற திருமணம், நிபந்தனையின் அடிப்படை உள்ளது அல்லது இல்லை என்பதைப் பொறுத்து செல்லத்தக்கது அல்லது செல்லத்தக்கதல்ல.
3) ஆயினும் 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனையை, தலத்திருச்சபை ஆளுநரின் எழுத்துவடிவ அனுமதியின்றி, சட்டமுறையாக இணைக்க முடியாது.
தி.ச. 1103. வெளியிலிருந்து திணிக்கப்பட்ட வலுவந்தத் தாலோ பயத்தாலோ, அது வேண்டுமென்றே திணிக்கப் படவில்லை எனினும், அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் பொருட்டு, திருமணத்தைத் தெரிவு செய்ய ஒருவர் கட்டாயப்படுத்தப்பட்டுச் செய்த திருமணம்; செல்லத்தக்கதல்ல.
தி.ச. 1104. 1) செல்லத்தக்கவிதத்தில் திருமண ஒப்பந்தம் செய்ய வேண்டுமென்றால், ஒப்பந்தம் செய்யும் தரப்பினர் இருவரும் சேர்ந்து தாமாகவோ பதில் ஆள் மூலமாகவோ உடனிருப்பது அவசியமாகும்.
2) மணமக்கள் திருமணச் சம்மதத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தவேண்டும், இருப்பினும், அவர்களால் பேச இயலாது எனில், நிகரான அடையாளங்களால் அதை வெளிப்படுத்த வேண்டும்.
தி.ச. 1105. 1) பதில் ஆள் மூலமாகச் செல்லத்தக்கவிதத் தில் திருமணம் செய்யத் தேவையானவை:
1) குறிப்பிட்ட ஓர் ஆளுடன் ஒப்பந்தம் செய்யச் சிறப்பு ஆணை இருத்தல் வேண்டும்,
2) பதில்-ஆள் ஆணைக் கட்டளை கொடுப்பவரால் நியமிக்கப்பட வேண்டும், அவர் தாமே இப்பணியை ஆற்றவேண்டும்,
2) ஆணை செல்லத்தக்கதாக இருக்கவேண்டுமென்றால், அது ஆணை வழங்கியவராலும், அத்துடன் ஆணை வழங்கப்பட்ட இடத்தின் பங்குக்குரு அல்லது தலத்திருச்சபை ஆளுநர், அல்லது அவர்களில் யாராவது ஒருவரால் ஆணை பெற்ற ஒரு குரு அல்லது குறைந்த அளவு இரண்டு சாட்சிகளாலும் கையொப்பமிடப்பட வேண்டும், அல்லது நாட்டுச் சட்ட விதிமுறைக்கேற்ப, நம்பத்தக்க ஆவணம் மூலம் அதைச் செய்யவேண்டும்.
3) ஆணை வழங்குபவர் எழுத முடியாதவராக இருந்தால், ஆணையிலேயே அதைக் குறிப்பிடவேண்டும், மேலும், வேறொரு சாட்சி சேர்க்கப்பட்டு, அவரும் ஆவணத்தில் கையொப்பமிடவேண்டும் .இல்லையெனில் ஆணை செல்லத்தக்கதல்ல.
4) ஆணை வழங்கியவர், பதில்- ஆள் அவர் பெயரால் ஒப்பந்தம் செய்யும் முன், ஆணையைத் திரும்பப் பெற்றாலோ மனநிலை பாதிக்கப்பட்டவரானாலோ, பதில்- ஆள் அல்லது ஒப்பந்தம் செய்யும் மறுதரப்பினர் இதை அறியாதிருந்தாலும் கூட, திருமணம் செல்லத்தக்கதல்ல.
தி.ச. 1106. திருமண ஒப்பந்தம் ஒரு மெழிபெயர்ப்பாளர் மூலம் செய்யமுடியும், ஆயினும் பங்குக்குரு, மொழிபெயர்ப்பாளரின் நம்பகத்தன்மை பற்றி உறுதியாக இருந்தாலன்றி, அத்தகைய திருமணத்தை நடத்தக் கூடாது.
தி.ச. 1107. தடை அல்லது திருமண முறை குறைபாடு காரணமாக ஒரு திருமணம் செல்லத்தகாத விதத்தில் செய்யப்பட்டிருந்தாலும், கொடுக்கப்பட்ட சம்மதம், அது திரும்பப் பெற்ப்பபட்டது என்று எண்பிக்கப்படும்வரை, தொடர்வதாக ஊகிக்கப்படுகிறது.
இயல் 5.
திருமணக் கொண்டாட்டமுறை.
தி.ச. 1108. தலத்திருச்சபை ஆளுநர் அல்லது பங்குக்குரு அல்லது அவர்களில் யாராவது ஒருவரிடமிருந்து கட்டளைப் பேராண்மை பெற்ற குரு அல்லது திருத் தொண்டர் முன்னிலையிலும் மற்றும் இரண்டு சாட்சிகள் முன்னிலையிலும், கீழ்கண்ட திருச்சபைச் சட்டங்களில் உள்ள விதிகளுக்கேற்பச் செய்யப்படும் திருமண ஒப்பந் தங்கள் மட்டுமே செல்லத்தக்கதாகும். இக்காரியத்தில் தி.சச.144, 1112, 1, 1116 மற்றும் தி.ச. 1127, 1-2 ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிவிலக்குகளைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
2) உடனிருந்து, ஒப்பந்தம் செய்துகொள்ளும் இரு தரப்பினரின் சம்மத வெளிப்பாட்டைத் திருச்சபையின் பெயரால் கேட்டு, அதைப் பெறுபவர் மட்டுமே திருமணத்தை நடத்திவைப்பவராகக் கருதப்படுவார்.
தி.ச. 1109. பணி அடிப்படையில், தலத்திருச்சபை ஆளுநரும் பங்குக்குருவும், அவர்கள் தீர்ப்பு அல்லது ஆணை மூலம் திருச்சபையின் உறவுஒன்றிப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலோ, இறைப்பணியிலிருந்து விலக்கப்பட்டிருந்தாலோ, பணிநீக்கம் செய்யப்பட்டி ருந்தாலோ அல்லது அவ்வாறு அறிவிக்கப் பட்டிருந்தாலோ அன்றி, தங்களது எல்லைக்குள், தங்களுடைய ஆளுகைக்கு உட்பட்டவர்களுடைய திருமணத்திற்கு மட்டுமல்ல, உட்படாதவர்களுடைய திருமணத்தையும் செல்லத்தக்க விதத்தில் நடத்திவைக்கின்றனர். ஓப்பந்தம் செய்பவர்களில் ஒருவர் இலத்தீன் வழிபாட்டுமுறையைச் சார்ந்தவராக இருத்தல் அவசியம்.
தி.ச. 1110. ஆள்சார்ந்த ஒரு திருச்சபை ஆளுநரும் ஒரு பங்குக்குருவும், தங்கள் பணியின் அடிப்படையில், தங்கள் ஆளுகை வரம்பிற்குள், குறைந்த அளவு ஒரு தரப்பினர் தங்களது ஆளுகைக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே, அவர்களின் திருமணத்தைச் செல்லத்தக்க விதத்தில் நடத்தி வைக்கின்றனர்.
தி.ச. 1111. 1) தலத்திருச்சபை ஆளுநரும் பங்குக்குருவும், செல்லத்தக்க விதத்தில் பணியில் இருக்கும் வரை, குருக்களுக்கும் திருத்தொண்டர்களுக்கும், தங்களுடைய எல்லை வரம்பிற்குள் திருமணங்களை நடத்திவைக்கும் செயலுரிமையை, பொதுவான ஒன்றைக்கூட, கட்டளைப் பேராண்மையாக வழங்க முடியும்.
2) திருமணங்களை நடத்திவைக்கும் செயலுரிமைக் கட்டளைப் பேராண்மை செல்லத்தக்கதாக இருக்க வேண்டுமென்றால், குறிப்பிட்ட ஆள்களுக்குத் தெளிவாக வழங்கவேண்டும், தனிப்பட்டக் கட்டளைப் பேராண்மை யாக இருந்தால், குறிப்பிட்டத் திருமணத்திற்கு வழங்க வேண்டும், ஆயினும், பொதுவான கட்டளைப் பேராண்மையாக இருந்தால், எழுத்து வடிவில் வழங்க வேண்டும்.
தி.ச. 1112. 1) குருக்களும் திருத்தொண்டர்களும் இல்லாத இடங்களில், மறைமாவட்ட ஆயர், ஆயர் பேரவையின் முந்திய சாதகமான கருத்துடன் மற்றும் திரு ஆட்சிப் பீடத்தின் அனுமதி பெற்று, திருமணங்களை நடத்தி வைக்கப் பொதுநிலையினருக்குக் கட்டளைப் பேராண்மை வழங்கலாம்.
2) திருமணம் செய்ய இருப்பவர்களுக்கு அறிவுரை வழங்கக்கூடிய, திருமணத் திருவழிபாட்டை முறையாக நடத்துவதற்குத் தகுதியுடைய, பொருத்தமான ஒரு பொதுநிலையினரைத் தேர்ந்தெடுக்கவேண்டும்
தி.ச. 1113. தனிப்பட்டக் கட்டளைப் பேராண்மை வழங்கப் படுமுன், திருமணம் செய்வதற்கான தன்னுரிமை நிலையை நிலைநாட்டுவதற்காகச் சட்டம் விதிக்கும் எல்லாக் காரியங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தி.ச. 1114. திருமணத்தை நடத்திவைப்பவர், ஒப்பந்தம் செய்யும் இரு தரப்பினருடைய திருமணம் செய்யும் தன்னுரிமைநிலை சட்ட விதிமுறைக்கேற்ப நிலை நாட்டப்பட்டுள்ளது என்பது அவருக்குத் தெளிவாக இருந்து, மேலும் பொதுவான கட்டளைப் பேராண்மை யால் நடத்தி வைப்பவர், இயன்றவரை, பங்குக்குருவின் அனுமதிபெற்றிருந்தாலன்றி, சட்டத்திற்கு முரணாகச் செயல்படுகிறார்
தி.ச. 1115. திருமண ஒப்பந்தம் செய்யும் இருதரப்பினரில் யாராவது ஒருவர் எந்தப் பங்கில் நிரந்தர உறைவிடம் அல்லது தற்காலிக உறைவிடம் அல்லது ஒருமாத கால உறைவிடம் கொண்டுள்ளாரோ, அங்குத் திருமணங் களைக் கொண்டாடவேண்டும், நாடோடிகளின் திருமணங்களை அவர்கள் எந்தப் பங்கில் தற்போது தங்கி இருக்கிறர்ர்களோ, அங்கு கொண்டாடவேண்டும், சொந்தத் திருச்சபை ஆளுநர் அல்லது பங்குக்குருவின் அனுமதியுடன் திருமணத்தை வேறோரிடத்தில் கொண்டாடலாம்.
தி.ச. 1116. 1) சட்டவிதிமுறைக்கேற்ப, திருமணத்தை நடத்திவைக்கும் தகுதிவாய்ந்த ஒருவர், மிக்க சிரமமின்றி, உடனிருக்கமாட்டார் அல்லது அவரை அணுக முடியாது என்றிருந்தால், உண்மையான ஒரு திருமணத்தைச் செய்ய விரும்புவோர், அதை இரண்டு சாட்சிகள் முன்னிலையில் மட்டுமே செல்லத்தக்க விதத்திலும் சட்டமுறைப்படியும் செய்ய முடியும்:
1) மரண ஆபத்தில்,
2) மரண ஆபத்திற்குப் புறம்பே, இத்தகை சூழ்நிலைக் ஒருமாதத்திறக நீடிக்கும் என விவேகத்துடன் முன்னறியும் போது,
2) இவ்விரு சூழ்நிலைகளிலும், எளிதில் கிடைக்கக்கூடிய குரு அல்லது திருத்தொண்டர் உடனிருக்க முடியும் என்றால், அவர் திருமணக் கொண்டாட்டத்தின் போது, மற்ற சாட்சிகளுடன் உடனிருக்க அழைக்கப்பட வேண்டும், இக்காரியத்தில் சாட்சிகளுக்கு முன்னிலை யில் மட்டுமே கொண்டாடப்படும் திருமணம் செல்லத் தக்கதாகும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 1117. திருமண ஒப்பந்தம் செய்யும் இருதரப்பினரில் குறைந்த அளவு யாராவது ஒருவர் கத்தோலிக்கத் திருச் சபையில் திருமுழுக்குப் பெற்றவராகவோ அல்லது அதில் ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவோ இருந்து, அதிலிருந்து வெளிப்படையான செயலால் விலகாம லிருந்தால், மேலே கூறப்பட்டுள்ள முறையைக் கடைப்பிடிக்கவேண்டும், இக்காரியத்தில் தி.ச. 1127, 2 ன் விதியமைப்புகளைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 1118. 1) கத்தோலிக்கரிடையே அல்லது ஒரு கத்தோலிக்கத் தரப்பினருக்கும் திருமுழுக்குப் பெற்ற கத்தோலிக்கரல்லாத ஒரு தரப்பினருக்கும் இடையே நடைபெறும் திருமணத்தைப் பங்கு ஆலயத்தில் கொண்டாடவேண்டும், தலத்திருச்சபை ஆளுநர் அல்லது பங்குக்குருவின் அனுமதியுடன் அதை வேறோர் ஆலயத்திலோ செபக்கூடத்திலோ கொண்டாடலாம்.
2) தலத்திருச்சபை ஆளுநர் வேறொரு தகுந்த இடத்pல் திருமணத்தைக் கொண்டாட அனுமதிக்கலாம்.
3) ஒரு கத்தோலிக்கத் தரப்பினருக்கும் திருமுழுக்குப் பெறாத ஒரு தரப்பினருக்கும் இடையிலான திரு மணத்தை, ஓர் ஆலயத்திலோ வேறொரு தகுந்த இடத்திலோ கொண்டாடலாம்.
தி.ச. 1119. ஓர் அவசரத் தேவைக்குப் புறம்பே, திருமணக் கொண்டாட்டத்தில், திருச்சபையால் அங்கீகரிக்கப் பட்டுள்ள அல்லது சட்டமுறையான வழக்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள சடங்குமுறைகளைக் கடைப் பிடிக்கவேண்டும்.
தி.ச. 1120. ஆயர் பேரவை தனது செ.ந்தத் திருமணச் சடங்குமுறையை உருவாக்கலாம். அத்தகைய சடங்கு முறை, அந்த இடத்தினுடையவும் மக்களுடையவும் வழக்கங்களுக்கு இயைந்ததாகவும் கிறிஸ்தவ மன நிலைக்கு ஏற்றதாகவும் இருக்கவேண்டும். அதை திருஆட்சிப்பீடம் மறுஆய்வு செய்யவேண்டும், இக் காரியத்தில், திருமணத்தை நடத்திவைக்கும் ஒருவர் உடனிருந்து, ஒப்பந்தம் செய்யும் தரப்பினரின் சம்மத வெளிப்பாட்டைக் கேட்டுப் பெறவேண்டும் என்ற சட்டத்தைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 1121. 1) ஒரு திருமணக் கொண்டாட்டத்திற்குப்பின், அது கொண்டாடப்பட்ட இடத்தின் பங்குக்குரு அல்லது அவரது இடத்தை வகிப்பவர், அவர்கள் இருவரில் எவருமே திருமணத்தை நடத்தி வைக்கவில்லை என்றாலும் கூட, கூடியவிரைவில், ஆயர்பேரவை அல்லது மறைமாவட்ட ஆயராவல் விதிக்கப்பட்டுள்ள முறைக்கு ஏற்ப, கீழ்க்கண்டவைகளைத் திருமணப் பதிவேட்டிலி குறிக்கவேண்டும், மணமக்கள், திருமணத்தை நடத்திவைத்தவர் மற்றும் சாட்சிகளின பெயர்கள், திருமணக் கொண்டாட்டத்தின இடம் மற்றும் நாள்.
2) தி.ச. 1116 ன் விதிமுறைக்கேற்ப ஒரு திருமண ஒப்பந்தம் செய்யப்படும் போதெல்லாம், ஒரு குருவோ திருத்தொண்டரோ கொண்டாட்டத்தின்போது உடன் இருந்திருந்தால் அவர் இல்லையெனில், சாட்சிகள் மணஒப்பந்தம் செய்யும் தரப்பினருடன் இணைந்து, செய்யப்பெற்ற திருமணத்தைப் பற்றி, கூடிய விரைவில், பங்குக்குருவுக்கோ தலத்திருச்சபை ஆளுநருக்கோ தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
3) திருச்சபை சட்டமுறையிலிருந்து விலக்கீடு பெற்றுச் செய்யப்பெற்ற திருமணத்தைப் பொறுத்தவரையில், விலக்கீடு கொடுத்த தலத்திருச்சபை ஆளுநர், விலக் கீடும் திருமணக் கொண்டாட்டமும் செயலகத்திலுள்ள திருமணப் பதிவேட்டிலும், எந்த கத்தோலிக்கத் தரப்பினரின் தன்னுரிமை நிலை பற்றிப் பங்குக்குரு ஆய்வுசெய்தாரோ, அத்தரப்பினரின் சொந்தப் பங்கிலுள்ள திருமணப் பதிவேட்டிலும் பதிவு செய்யப்படுவதைக் கவனித்துக் கொள்ளவேண்டும். கொண்டாடப்பட்ட திருமணம், இடம் மற்றும் கடைப்பிடிக்கப்பட்ட பகிரங்கமுறை ஆகியவற்றைக் கத்தோலிக்கத் தரப்பினர், கூடிய விரைவில், அதே திருச்சபை ஆளுநருக்கும் பங்குக்குருவுக்கும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளார்.
தி.ச. 1122. 1) செய்யப்பெற்ற திருமணம் பற்றி மணமக்களின் திருமுழுக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள திருமுழுக்குப் பதிவேடுகளிலும் குறிக்கவேண்டும்.
2) மணமக்களில் ஒருவர், அவர் திருமுழுக்குப் பெறாத ஒரு பங்கில் திருமணம் செய்திருந்தால், திருமணம் கொண்டாடப்பட்ட இடத்தின் பங்குக்குரு செய்யப்பெற்ற திருமணத்தைப் பற்றிய அறிவிப்பைத் திருமுழுக்கு வழங்கப்பட்ட இடத்தின் பங்குக்குருவுக்கு, கூடிய விரைவில், அனுப்பவேண்டும்.
தி.ச. 1123. எப்போதெல்லாம் புற அரங்கில் ஒரு திருமணம் செல்லத்தக்கதாக்கப்படுகிறதோ அல்லது செல்லாதது என அறிவிக்கப்படுகிறதோ அல்லது இறப்பைத் தவிர வேறுவிதத்தில் முறையாக அதன் கட்டு அவிழ்க்கப் படுகிறதோ, அப்போதெல்லாம் திருமணத்தைக் கொண்டாடிய இடத்தின் பங்குக் குருவுக்கு அதைத் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு அக்குறிப்பு திருமணம் மற்றும் திருமுழுக்குப் பதிவேட்டில் முறையாகக் குறிக்கப்படவேண்டும்.
இயல் 6
மதக்கலப்புத் திருமணம்.
தி.ச. 1124. கத்தோலிக்கத் திருச்சபையில் திருமுழுக்குப் பெற்ற, அல்லது திருமுழுக்குப் பெற்ற பிறகு ஏற்றுக் கொள்ளப் பட்டு அதிலிருந்து வெளிப்படையான செயலால் விலகாதிருக்கும் ஒருவருக்கும், கத்தோலிக்கத் திருச்சபையோடு முழு உறவு ஒன்றிப்பில் இல்லாத திருச்சபை அல்லது திருச்சபை சமூகத்தின் உறுப்பினராக உள்ள ஒருவருக்கும் இடையே, தகுதி வாய்ந்த அதிகாரியின் தெளிவான அனுமதியின்றித் திருமணம் தடைசெய்யப்பட்டுள்ளது.
தி.ச. 1125. இத்தகைய அனுமதியைத் தலத்திருச்சபை ஆளுநர், நியாயமான, அறிவுக்கொத்த காரணம் இருந்தால் கொடுக்கலாம்: கீழ்க்கண்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டாலன்றி, அவர் அதைக் கொடுக்கக் கூடாது.
1) கத்தோலிக்கத் தரப்பினர், விசுவாசத்திலிருந்து வழுவக் கூடிய ஆபத்துக்களை அகற்றத் தாம் தயாராக இருப்பதாக அறிக்கையிடவேண்டும், எல்லாக் குழந்தைகளுக்கும் கத்தோலிக்கத் திருச்சபையில் திருமுழுக்கு அளித்து, அதில் அவர்களை வளர்க்கத் தம்மால் இயன்ற அனைத் தையும் செய்ய அவர் உண்மையான வாக்குறுதி அளிக்க வேண்டும்.
2) கத்தோலிக்கத் தரப்பினர் அளிக்கக்கூடிய இந்த வாக் குறுதிகளை உரிய காலத்தில் மற்றத் தரப்பினருக்கு அறிவிக்கவேண்டும், இவ்வாறு கத்தோலிக்கத் தரப் பினரின் வாக்குறுதியையும் கடமையையும் பற்றி மற்றத் தரப்பினர் உண்மையிலேயே தெரிந்துள்ளார் என்பது தெளிவாகும்,
3) திருமணத்தின் இன்றியமையாத நோக்கங்களையும் பண்புகளையும் பற்றி இரு தரப்பினருக்கும் பயிற்றுவிக்க வேண்டும், இவற்றை இருதரப்பினரில் எவராலும் ஒதுக்கிவிட முடியாது.
தி.ச. 1126. எப்போதும் தேவைப்படுகிற இந்த அறிக்கை களையும் வாக்குறுதிகளையும் எவ்விதத்தில் கொடுக்க வேண்டும் என்பது பற்றி ஆயர் பேரவை நிர்ணயிக்க வேண்டும். மேலும், இவற்றைப் புற அரங்கில் எவ்வாறு நிலைநாட்டவேண்டும் என்றும், இவற்றைக் கத்தோலிக் கரல்லாத தரப்பினருக்கு எவ்வாறு தெரியப்படுத்த வேண்டும் என்றும் ஆயர் பேரவை வரையறுக்க வேண்டும்.
தி.ச. 1127. 1) மதக்கலப்புத் திருமணத்தில் பயன்படுத்த வேண்டிய முறையைப் பொறுத்தவரையில், தி.ச 1108, ன் விதியமைப்புகளைக் கடைப்பிடிக்கவேண்டும். ஆயினும், ஒரு கத்தோலிக்கத் தரப்பினர், கீழைத் திருச்சபை வழிபாட்டுமுறையைச் சார்ந்த கத்தோலிக்கர் அல்லாத தரப்பினருடன் திருமண ஒப்பந்தம் செய்யும்போது, திருச்சபைச் சட்டமுறைக் கொண்டாட்டம் சட்ட முறைக்காக மட்டுமே தேவைப்படுகிறது. ஆயினும், திருமணத்தின் செல்லத்தக்கநிலைக்கு ஒரு திருப் பணியாளரின் உடனிருப்பு தேவைப்படுகிறது. இக்காரியத்தில் சட்டப்படி கடைப்பிடிக்க வேண்டியவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்.
2) திருச்சபைச் சட்டமுறையைக் கடைப்பிடிப்பதில் கடினமான இடையூறுகள் குறுக்கிட்டால், கத்தோலிக்கத் தரப்பினரின் தலத்திருச்சபை ஆளுநர், திருமணம் கொண்டாடப்படும் இ.டத்தின் தலத்திருச்சபை ஆளுநரைக் கலந்தாலோசித்து, குறிப்பிட்டக் காரியங் களில் அதிலிருந்து விலக்கீடு அளிக்கும் உரிமை கொண்டுள்ளார். இக்காரியத்தில் திருமணத்தின் செல்லத்தக்கநிலைக்கு ஏதாவதொரு பகிரங்கமுறைக் கொண்டாட்டம் தேவைப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய விலக்கீட்டை ஒரே விதத்தில் அளிப்பதற்கான விதிமுறைகளை நிர்ணயிப்பது ஆயர் பேரவைக்கு உரியது.
3) 1 ன் விதிமுறைக்கேற்ப, திருச்சபைச் சட்டமுறையான திருமணக் கொண்டாட்டத்திற்கு முன்போ பின்போ, சம்மதத்தைக் கொடுக்கும் அல்லது புதுப்பிக்கும் எண்ணத் துடன் அதே திருமணத்தை நடத்தும் கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கரல்லாத பணியாளர் ஒன்றிணைந்து, ஒவ்வொருவரும் தத்தம் சடங்கு முறையை நிறை வேற்ற, இரு தரப்பினரின் சம்மதத்தைக் கேட்கும் சமயக் கொண்டாட்டம் இருக்கக்கூடாது.
தி.ச. 1128. தலத்திருச்சபை ஆளுநர்களும் ஆன்ம மேய்ப்பர்களும், கத்தோலிக்க மணமக்களும் மதக் கலப்புத் திருமணத்தில் பிறந்த குழந்தைகளும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில், அருள்வாழ்வு சார்ந்த உதவிகள் அவர்களுக்குக் குறைவுபடாமல் இருக்கும் வண்ணம் கவனித்துக்கொள்ளவேண்டும், மேலும், மணவாழ்வு மற்றும் குடும்பு வாழ்வின் ஒற்றுமையைப் பேணிவளர்க்க மணமக்களுக்கு உதவி புரியவேண்டும்.
தி.ச. 1129. தி.ச. 1127 மற்றும் 1128 ன் விதியமைப்புகள், தி.ச. 1086, 1 ல் குறிப்பிடப்பட்டுள்ள மதவேறுபாட்டுத் தடையைக் கொண்டுள்ள திருமணங்களுக்கும் பொருந்தும்.
இயல் 7
இரகசியமாகக் கொண்டாடப்படும் திருமணம்.
தி.ச. 1130. கனமான அவசரக் காரணத்திற்காக, தலத்திருச் சபை ஆளுநர் ஒரு திருமணம் இரகசியமாகக் கொண்டாடப்படுவதற்கு அனுமதிக்கலாம்.
தி.ச. 1131. ஒரு திருமணத்தை இரகசியமாகக் கொண்டாடுவதற்கு அளிக்கப்படும் அனுமதி உள்ளடக்கியவை:
1) திருமணத்திற்கு முன் செய்ய வேண்டிய ஆய்வை இரகசியமாகச் செய்யவேண்டும்.
2) திருமணக் கொண்டாட்டம் பற்றிய இரகசியத்தைத் தலத்திருச்சபை ஆளுநர், திருமணத்தை நடத்தி வைப்பவர், சாட்சிகள் மற்றும் மணமக்கள் காப்பாற்றவேண்டும்.
தி.ச. 1132. இரகசியத்தைக் காப்பாற்றுவதால் மாபெரும் இடறல் அல்லது திருமணத்தின் புனிதத்தன்மைக்குப் பெரும் தீங்கு ஏற்படும் என்ற அச்சுறுத்தல் இருந்தால், தி.ச. 1131, 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள இரகசியக் காப்புக் கடமை, தலத்திருச்சபை ஆளுநருக்கு முடிவடைகிறது, இது திருமணக் கொண்டாட்டத்திற்குமுன் இருதரப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கவேண்டும்.
தி.ச. 1133. இரகசியமாகக் கொண்டாடப்பட்ட ஒரு திருமணத்தைச் சிறப்புப் பதிவேட்டில் மட்டுமே பதிவு செய்யவேண்டும், இப்பதிவேட்டைச் செயலகத்தின் இரகசிய ஆவணக்காப்பகத்தில் வைக்கவேண்டும்.
இயல் 8
திருமணத்தின் விளைவுகள்.
தி.ச. 1134. செல்லத்தக்க ஒரு திருமணத்திலிருந்து மணமக்களிடையே ஒரு பிணைப்பு எழுகிறது, இப் பிணைப்பானது தன்னியல்பிலேயே நிரந்தரமானது, தனி உரிமை கொண்டது. மேலும், கிறிஸ்தவத் திருமணத்தில், மணமக்கள் தங்கள் நிலைக்குரிய கடமைகளுக்காகவும் மாண்புக்காகவும் ஒரு தனிப்பட்ட அருளடையாளத்;தால் வலுப்பெற்று, ஒருவிதத்தில், திருநிலைப்படுத்தப்படு கின்றனர்.
தி.ச. 1135. மணமக்கள் ஒவ்வொருவரும் திருமண வாழ்வு உறவுச் சமூகத்தைச் சார்ந்த காரியங்களைப் பொறுத்தவரையில் சரிநிகர் கடமையும் உரிமையையும் கொண்டுள்ளனர்.
தி.ச. 1136. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல், சமூக, கலாச்சார மற்றும் அறநெறி, சமயம் சார்ந்த வளர்ப்பில் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டிய சீர்மிகு கடமையையும் முதன்மையான உரிமையையும் கொண்டுள்ளனர்.
தி.ச. 1137. செல்லத்தக்க ஒரு திருமணத்தில் அல்லது செல்லத்தக்க திருமணம் என ஊகிக்கப்படும் ஒரு திருமணத்தில் கருவுற்ற அல்லது பிறந்த குழந்தைகள் சட்டமுறையான குழந்தைகள் ஆவர்.
தி.ச. 1138. 1) தெளிவான நேர்மாறான வாதங்களால் எண்பிக்கப்பட்டாலன்றி, சட்டமுறையான திரு மணத்தால் குறித்துக்காட்டப்படுபவரே தந்தை ஆவார்.
2) திருமணக்கொண்டாட்ட நாளிலிருந்து குறைந்த அளவு 180 நாள்களுக்குப் பின்னும், திருமண வாழ்வு முறி வடைந்த நாளிலிருந்து 300 நாள்களுக்குள்ளும் பிறந்த குழந்தைகள் சட்டமுறையான குழந்தைகள் என ஊகிக்கப்படுவர்.
தி.ச. 1139. பெற்றோர்களின் அடுத்துவரும் திருமணங்கள் வழியாக, அவை செல்லத்தக்கவையாயினும் அல்லது செல்லத்தக்க திருமணம் என ஊகிக்கப்பட்டவை யாயினும், அல்லது திருஆட்சிப்பீடத்தின் மேல்நிலைச் சலுகை வழியாகச் சட்டமுறையற்ற குழந்தைகள் சட்டமுறையானவராக்கப்படுவர்.
தி.ச. 1140. திருச்சபைச் சட்ட விளைவுகளைப் பொறுத்த வரையில், சட்ட முறையாக்கப்பட்ட குழந்தைகள், சட்டம் வேறுவிதமாகத் தெளிவகக் குறிப்பிட்டாலன்றி, சட்டமுறையான குழந்தைகளுக்கு எல்லாவற்றிலும் இணையாக உள்ளனர்.
இயல் .9.
மணமக்களின் பிரிவு
உட்பிரிவு 1
பிணைப்பு அவிழ்ப்பு.
தி.ச. 1141. உறுதிப்படுத்தப்பட்டதும் தாம்பத்திய உறவால் முழுமை பெற்றதுமான ஒரு திருமணம் சாவைத் தவிர, எந்தவொரு மனித சக்தியாலும் அல்லது எந்தவொரு காரணத்தாலும் அவிழ்க்கப்பட முடியாதது.
தி.ச. 1142. திருமுழுக்குப் பெற்றவர் இடையே அல்லது திருமுழுக்குப் பெற்ற ஒரு தரப்பினருக்கும் திருமுழுக்குப் பெறாத ஒரு தரப்பினருக்கும் இடையே நடந்த, தாம்பத்திய உறவால் முழுமை பெறாத ஒரு திருமணம், இரு தரப்பினரோ ஒரு தரப்பினரோ விண்ணப்பித்தால், மற்றத் தரப்பினர் விரும்பவில்லை என்றாலும் கூட, நியாயமான ஒரு காரணத்திற்காக, உரோமைத் தலைமைக்குருவால் அவிழ்க்கப்படலாம்.
தி.ச. 1143. 1) திருமுழுக்குப் பெறாத இருவர் செய்து கொண்ட திருமணம், திருமுழுக்குப் பெற்ற தரப்பினரின் விசுவாச நலனுக்காக, திருமுழுக்குப் பெறாத தரப்பினர் விலகிச்சென்றால் மட்டுமே, திருமுழுக்குப் பெற்ற தரப்பினர் புதிய திருமண ஒப்பந்தம் செய்வதாலேயே பவுல் சலுகையால் அவிழ்க்கப்படுகிறது.
2) திருமுழுக்குப் பெற்றவர், திருமுழுக்குப் பெற்றபின், மற்றத் தரப்பினர் விலகிச் செல்வதற்கு நியாயமான காரணம் கொடுத்திருந்தாலன்றி, திருமுழுக்குப் பெறாத தரப்பினர் திருமுழுக்குப் பெற்றத் தரப்பினருடன் கூடிவாழ, அல்லது படைத்தவரைத் தூற்றாமல் அமைதியாகக் கூடிவாழ விரும்பாவிட்டால், அவர் விலகிச் சென்று விட்டதாகக் கருதப்படுவர்.
தி.ச. 1144. 1) திருமுழுக்குப் பெற்றத் தரப்பினர் புதிய திருமண ஒப்பந்தத்தைச் செல்லத்தக்க விதத்தில் செய்யவேண்டுமென்றால், திருமுழுக்குப் பெறாத தரப்பினரிடம் எப்பொழுதும் இடைவினா கேட்கவேண்டும்.:
1) அவரும் திருமுழுக்குப் பெற விரும்புகிறாரா?
2) அவர் படைத்தவரைத் தூற்றாமல் திருமுழுக்குப் பெற்றத் தரப்பினருடன் ஆறைந்த அளவு அமைதியாகக் கூடிவாழ விரும்புகின்றாரா?
2) இந்த இடைவினாவைத் திருமுழுக்குப் பெற்றபின் கேட்கவேண்டும், ஆயினும், கனமான காரணத்திற்காக, தலத்திருச்சபை ஆளுநர் திருமுழுக்கிற்கு முன்பே இடைவினாவைக் கேட்க அனுமதிக்கலாம், இடைவினாவைக் கேட்கமுடியாது அல்லது அது பயனற்றது என்று குறைந்த அளவு சுருக்கமான, வழக்கு விசாரணைக்குப் புறம்பான நடவடிக்கை வாயிலாகத் தெளிவாக இருந்தால், திருமுழுக்குpற்கு முன்போ பின்போ, இந்த இடைவினாவிலிருந்துகூட விலக்கீடு அளிக்கலாம்.
தி.ச. 1145. 1) இடைவினாவை, வழக்கமாக மதம் மாறிய தரப்பினரின் தலத்திருச்சபை ஆளுநரின் அதிகாரத்தால் கேட்கவேண்டும். திமுழுக்குப் பெறாத தரப்பினர் பதிலளிக்கக் கால அவகாசம் கேட்டால், தலத்திருச்சபை ஆளுநர் அதை அளிக்கவேண்டும், இருப்பினும், இக்கால அவகாசம் எவ்விதப் பதிலுமின்றி முடிவடைந்திருந்தால், அவரின் மௌனம் எதிர்மறைப் பத்லாகக் கருதப்படும் என எச்சரிக்கவேண்டும்.
2) மதம் மாறிய தரப்பினரால் தனிப்பட்ட முறையில் கேட்கப்பட்ட இடைவினாவும் செல்லத்தக்கதாகும், மேலே விதிக்கப்பட்ட முறையைக் கடைப்பிடிக்க முடியாது என்றால், அது உண்மையில் சட்டமுறை யானதும் ஆகும்.
3) இவ்விரு காரியங்களிலும் இடைவினா கேட்கப்பட்டது என்பதும் அதன் விளைவும் புற அரங்கில் சட்ட முறையாகத் தெளிவாக இருக்கவேண்டும்.
தி.ச. 1146. திருமுழுக்குப் பெற்றத் தரப்பினர் ஒரு கத்தோலிக்கத் தரப்பினருடன் புதிய திருமண ஒப்பந்தம் செய்ய உரிமை கொண்டுள்ளார்:
1) மற்றத் தரப்பினர் இடைவினாவுக்கு எதிர்மறையில் பதில் அளித்திருந்தால் அல்லது இடைவினா சட்ட முறைப்படி விடப்பட்டிருந்தால்,
2) திருமுழுக்குப் பெறாத தரப்பினர், ஏற்கெனவே இடை வினா கேட்கப்பட்டோ கேட்கப்படாமலோ, முதலில் படைத்தவரைத் தூற்றாமல் அமைதியாகக் கூடிவாழ்ந்து, அதன்பின் நியாயமான காரணமின்றி விலகிச்சென்றால், இக்காரியத்தில் சச, 1144 மற்றும் 1145 ன் விதியமைப்புகளைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 1147. ஆயினும், தலத்திருச்சபை ஆளுநர், கனமான ஒரு காரணத்திற்காக, திருமுழுக்குப் பெற்றத் தரப்பினர் பவுல் சலுகையைப் பயனபடுத்தி கத்தோலிக்கரல்லாத தரப்பினருடன், அவர் திருமுழுக்குப் பெற்றவராயினும் பெறாதவராயினும், திருமண ஒப்பந்தம் செய்ய அனுமதிக்கலாம். இக்காரியத்தில் மதக்கலப்பபுத் திருமணங்களைப் பற்றிய திருச்சபைச்சட்ட விதிமைப்புகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
தி.ச. 1148. 1) திருமுழுக்குப் பெறாத பல மனைவியரை ஒரே நேரத்தில் கொண்டிருக்கும் திருமுழுக்குப் பெறாத ஓர் ஆண், கத்தோலிக்கத் திருச்சபையில் திருமுழுக்குப் பெற்றபின், முதல் மனைவியுடன் இருப்பது அவருக்குக் கடினமாக இருந்தால், மற்றவர்களை விலக்கிவிட்டு, அவர்களில் ஒருவரை மனைவியாக வைத்துக் கொள்ளலாம். திருமுழுக்குப் பெறாத பல கணவர்களை ஒரே நேரத்தில் கொண்டிருக்கும் திருமுழுக்குப் பெறாத ஒரு பெண்ணுக்கும் இது பெருந்தும்.
2) 1 ல் குறிப்பிடப்பட்ட காரியங்களில், திருமுழுக்குப் பெற்றபின் சட்ட முறையான முறையில் திருமண ஒப்பந்தம் செய்யவேண்டும், இக்காரியத்தில், தேவைப்பட்டால், மதக்கலப்புத் திருமணங்களைப் பற்றிய விதியமைப்புகளையும் மற்றச் சட்ட ஏற்பாடு களையும் கடைப்பிடிக்கவேண்டும்.
3) இடம் மற்றும் ஆள்களின் அறநெறி, சமூக, பொருளா தார சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, முதல் மனைவி மற்றும் விலக்கப்பட்ட மற்ற மனைவியரின் தேவைகளுக்கு, நீதி, கிறிஸ்தவ அன்பு மற்றும் இயல்பான இரக்கம் தழுவிய நீதியின் விதிமுறைகளுக்கேற்பப் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதைத் தலத் திருச்சபை ஆளுநர் கவனித்துக் கொள்ளவேண்டும்.
தி.ச. 1149. திருமுழுக்குப் பெறாத ஒருவர், கத்தோலிக்கத் திருச்சபையில் திருமுழுக்குப் பெற்றபின், திருமுழுக்குப் பெறாத வாழ்க்கைத் துணைவருடன், சிறைப்பட்டநிலை அல்லது வேதகலாபனையின் காரணமாக, மீண்டும் கூடிவாழ முடியவில்லை என்றால், இடைப்பட்ட காலத் தில் மற்றத் தரப்பினர் திருமுழுக்குப் பெற்றிருந்தாலும் கூட, வேறொரு திருமண ஒப்பந்தம் செய்யமுடியும், இக்காரியத்தில் ச.1141 ன் விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 1150. ஐயப்பாட்டிற்குரிய ஒரு காரியத்தில், விசுவாசச் சலுகை, சட்டத்தின் தயவைப் பெற்றுள்ளது.
உட்பிரிவு 2
திருமணப்பிணைப்பு நீடிக்கையில் பிரிந்து வாழ்தல்
தி.ச.1151. வாழ்க்கைத் துணைவர்கள், சட்டமுறையான காரணம் அவர்களை விடுவித்தாலன்றி, மணவாழ்வைப் பாதுகாக்கக் கடமையும் உரிமையும் கொண்டுள்ளனர்.
தி.ச. 1152. 1) கிறிஸ்தவ அன்பால் உந்தப்பட்டு, குடும்ப நலனில் அக்கறை கொண்டு, ஒரு வாழ்க்கைத் துணைவர், விபசார வாழ்க்கைத் துணைவருக்கு மன்னிப்பை மறுக்காமலும் மணவாழ்வை முறிக்காமலும் இருக்க மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றது, ஆயினும், அவர், வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ மற்றவரின் குற்றத்தை மன்னியாது இருந்திருந்தால், மண வாழ்வைத் துண்டித்துக் கொள்ள உரிமை கொண்டு ள்ளார். ஆனால், அவர் விபசாரத்திற்கு உடன்பட்டிருக் கக்கூடாது, அதற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடாது, அல்லது அவரே விபசாரம் செய்திருக்கக்கூடாது.
2) குற்றமற்ற வாழ்க்கைத் துணைவர், விபசாரத்தைப் பற்றி அறிந்தபின், மற்ற வாழ்க்கைத் துணைவருடன் விருப்பமுடன் திருமணம் சார்ந்த பாசத்தில் தொடர்ந்து வாழ்ந்திருந்தால், மறைமுகமான மன்னிப்பு உள்ளது. குற்றமற்ற வாழ்க்கைத் துணைவர் ஆறு மாதங்களுக்கு மணவாழ்வைத் தொடர்ந்து, நாட்டு அதிகாரியிடமோ திருச்சபை அதிகாரியிடமோ துணைநாடல் செய்யவில்லை என்றால் மறைமுகமான மன்னிப்பபு ஊகிக்கப்படுகிறது.
3) குற்றமற்ற வாழ்க்கைத் துணைவர் தாமாகவே மணவாழ்வைத் துண்டித்துக் கொண்டிருந்தால், ஆறுமாதங்களுக்குள் தமது பிரிவுக்கான வழக்கைத் தகுதிவாய்ந்த திருச்சபை அதிகாரியிடம் கொண்டு வர வேண்டும், இவ்வதிகாரி, எல்லாச் சூழ்நிலைகளையும் ஆய்வு செய்த பின், குற்றமற்ற வாழ்க்கைத் துணைவர் குற்றத்தை மன்னிக்கவும், பிரிவை நிரந்தரமாக நீடிக்காதிருக்கவும் தூண்ட முடியுமா என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.
தி.ச. 1153. வாழ்க்கைத் துணைவரில் யாராவது ஒருவர் மற்றவரின் அல்லது குழந்தைகளின் ஆன்மாவுக்கு அல்லது உடலுக்குப் பேராபத்தை விளைவித்தாலோ, குடும்ப வாழ்வை மிகவும் கடினமாக்கினாலோ, அவர், மற்றத் தரப்பினர், தலத்திருச்சபை ஆளுநரின் ஓர் ஆணை மூலமாகவோ தாமதத்தின் காரணமாக ஆபத்து ஏற்படும் என்றால் தமது சொந்த அதிகாரத்தாலேயே பிரிந்து போவதற்குச் சட்டமுறையான காரணத்தைத் தருகிறார்.
2) எல்லாக் காரியங்களிலும், பிரிவுக்கான காரணம் முடிவடையும்போது, திருச்சபை அதிகாரி வேறுவிதமாக ஏற்பாடு செய்திருந்தால் அன்றி, மணவாழ்வை மீண்டும் தொடரவேண்டும்.
தி.ச. 1154. வாழ்க்கைத் துணைவர்களின் பிரிவுக்குப்பின், குழந்தைகளின் உரிய வாழ்வாதாரத்திற்கும் கல்விக்கும் எப்போதும் தக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
தி.ச. 1155. குற்றமற்ற வாழ்க்கைத் துணைவர் பாராட்டு தற்குரிய விதத்தில் மற்ற வாழ்க்கைத் துணைவரை மணவாழ்வுக்கு மீண்டும் அனுமதிக்கமுடியும், இத் தகைய சூழ்நிலையில், அவர் பிரிவுக்கான உரிமையைத் துறந்துவிடுகின்றார்.
இயல் 10;
திருமணத்தின் சட்டமுறைப்படுத்தல்
உட்பிரிவு 1
சாதாரண சட்டமுறைப்படுத்தல்
தி.ச. 1156. ஒரு முறியல்தடையின் பொருட்டுச் செல்லாத ஒரு திருமணத்தைச் சட்டமுறைப்படுத்த, தடை முடிவு க்கு வரவேண்டும் அல்லது அதற்கு விலக்கீடு அளிக்க வேண்டும், மேலும் குறைந்த அளவு தடையைப் பற்றி அறிந்துள்ள தரப்பினர் சம்மதத்தைப் புதுப்பிக்கவேண்டும்
2) தொடக்கத்தில் இரு தரப்பினரும் சம்மதத்தைக் கொடுத்து, பின்பு அதை மீண்டும் திரும்பப் பெறவில்லை என்றாலும்கூட, சட்டமுறைப்படுத்தலின் செல்லத் தக்கநிலைக்கு, இச்சம்மதப் புதுப்பித்தல் திருச்சபைச் சட்டத்தால் தேவைப்படுகிறது.
தி.ச. 1157. சம்மதப்புதுப்பித்தல், திருமணத்திற்கான மனத்தின் புதியதொரு செயலாகும், சம்மதத்தைப் புதுப்பிக்கும் தரப்பினர் தொடக்கத்திலிருந்தே இத் திருமணம் செல்லாது என்று அறிவார் அல்லது கருதுகிறார்.
தி.ச. 1158. தடை பகிரங்கமாக இருந்தால், சம்மதத்தை இருதரப்பினரும் திருச்சபைச்சட்ட முறையில் புதுப்பிக்கவேண்டும், இக்காரியத்தில் தி.ச. 1127, 2 ன் விதியமைப்பைக் கருத்தில்கொள்ளவேண்டும்.
2) தடையை எண்பிக்க முடியாது எனில், தடையைப் பற்றி அறிந்திருக்கும் தரப்பினரால் தனிப்பட்ட முறையிலும் இரகசியமாகவும் சம்மதத்தைப் புதுப்பித்தல் போது மானது, ஆனால், மற்றத் தரப்பினர் தாம் அளித்த சம்மதத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கவேண்டும், அல்லது இரு தரப்பினரும் தடை பற்றி அறிந்திருந்தால், இரு தரப்பினரும் சம்மதத்தைப் புதுப்பிக்கவேண்டும்.
தி.ச. 1159. சம்மதக் குறைபாட்டினால் செல்லாத ஒரு திருமணம், சம்மதம் கொடுக்காமலிருந்த தரப்பினர் தற்போது சம்மதம் கொடுத்தால், சட்ட முறையாக்கப் படுகிறது, ஆனால் மற்றத் தரப்பினரால் கொடுக்கப்பட்ட சம்மதம் தொடர்ந்து நிலைத்திருக்கவேண்டும்.
2) சம்மதக் குறைபாட்டை எண்பிக்கமுடியாது எனில், சம்மதம் கொடுத்திராத தரப்பினர், தனிப்பட்ட முறையிலும் இரகசியமாகவும் சம்மதம் கொடுத்தால் போதுமானது.
3) சம்மதக் குறைபாட்டை எண்பிக்கமுடியும் என்றால், சம்மதத்தைத் திருச்சபைச் சட்டமுறையில் கொடுப்பது அவசியமாகும்.
தி.ச. 1160. திருச்சபைச் சட்டமுறைக் குறைபாட்டினால் செல்லாத ஒரு திருமணத்தைச் சட்டமுறையாக்கு வதற்கு, திருமண ஒப்பந்தத்தைத் திருச்சபைச்சட்ட முறையில் புதிதாகச் செய்யவேண்டும், இக்காரியத்தில் தி.ச. 1127, 2 ன் விதியமைப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
உட்பிரிவு 2
மூலத்தன்மை சட்டமுறைப்படுத்தல்
தி.ச. 1161. செல்லாத ஒரு திருமணத்தின் மூலத்தன்மை சட்ட முறைப்படுத்தல் என்பது, சம்மதம் புதுப்பித்தலின்றி அதைச் செல்லத்தக்கதாக்குவதாகும். இது தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்படுகிறது. ஏதாவது தடையிருந் தால் அதிலிருந்தும், திருச்சபைச் சட்டமுறையைக் கடைப்பிடியாதிருந்தால் அதிலிருந்தும் விலக்கீடு அளித்தலையும், திருச்சபைச் சட்டமுறையான கடந்தகால விளைவுகளைப் பின்னோக்கிப் பார்க்கும் தன்மையையும் உள்ளடக்கியது.
2) சலுகை வழங்கப்பட்ட கணத்திலிருந்து சட்டமுறைப் படுத்துதல் நிகழ்கிறது. ஆயினும், வேறுவிதமாகத் தெளிவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலன்றி, திருமணக் கொண்டாட்டக் கணத்திலிருந்து பின்னோக்கிப் பார்க்கும் தன்மை இருப்பதாகக் கருதப்படுகிறது.
3) இரு தரப்பினரும் மணவாழ்வில் தொடர்ந்து நிலைத் திருக்க விரும்புவது நிகழக் கூடியதாக இருந்தாலன்றி, மூலத்தன்மை சட்டமுறைப்படுத்தலை வழங்கக் கூடாது.
தி.ச. 1162. இரு தரப்பினரிடமோ ஏதாவதொரு தரப்பின ரிடமோ சம்மதம் இல்லை என்றால், சம்மதம் தொடக்கத்திலிருந்து இல்லை என்றாலும் அல்லது தொடக்கத்தில கொடுக்கப்பட்டுப் பிறகு திரும்பப் பெறப்பட்டிருந்தாலும் திருமணத்தை மூலத்தன்மை சட்டமுறையில் முறைப்படுத்த முடியாது.
2) ஆயினும், தொடக்கத்திலிருந்து உண்மையில் சம்மதம் இல்லாமலிருந்து ஆனால், பிறகு சம்மதம் கொடுக்கப் பட்டிருந்தால், சம்மதம் கொடுக்கப்பட்ட கணத்திலிருந்து மூலத்தன்மை சட்டமுறைப்படுத்தலைக் கொடுக்கலாம்.
தி.ச.1163. இருதரப்பினரின் சம்மதம் நிலைத்திருந்தால் மட்டுமே, தடையின் பொருட்டோ சட்டமுறையான முறையின் குறைபாட்டின் பொருட்டோ செல்லாத ஒரு திருமணம் மூலத்தன்மையில் சட்டமுறையாக்கப்படும்.
2) தடை முடிவுக்கு வந்திருந்தால் மட்டுமே, இயற்கைச் சட்ட அல்லது ஆக்கப்பட்ட இறைச்சட்டத் தடையின் பொருட்டு செல்லாத ஒரு திருமணத்தை மூலத்தன்மை முறையில் சட்டமுறையாக்க முடியும்.
தி.ச. 1164. மூலத்தன்மை சட்டமுறைப்படுத்தல், அதைப் பற்றி ஒரு தரப்பினரோ இரு தரப்பினரோ அறியாமல் இருப்பினும்கூட, வழங்கலாம், ஆயினும் கனமான ஒரு காரணத்திற்காக அன்றி அதனை வழங்கக்கூடாது.
தி.ச. 1165. மூலத்தன்மை சட்டமுறைப்படுத்தல் திருத் தூதரக ஆட்சிப்பீடத்தால் வழங்க முடியும்.
2) அதே திருமணத்தில் செல்லாநிலைக்குப் பல காரணங் கள் இருந்தாலும் கூட, மதக்கலப்புத் திருமணத்திற்கான மூலத்தன்மை சட்டமுறைப்படுத்தலுக்கு, தி.ச. 1125 ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு, குறிப்பிட்ட காரியங்களில் மூலத்தன்மை சட்ட முறைப் படுத்தல், மறைமாவட்ட ஆயரால் வழங்கப்படலாம், ஆயினும் ச. 1078, 2 ன் விதிமுறைக்கேற்ப, எந்தத் தடையின் விலக்கீடு திருத்தூதரக ஆட்சிபீடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதோ அந்தத் தடை இருந்தால் அல்லது ஏற்கெனவே முடிவுக்கு வந்துவிட்ட இயற்கைச்சட்ட அல்லது ஆக்கப்பட்ட இறைச்சட்டத் தடையைப் பற்றிய தாக இருந்தால், மூலத்தன்மை சட்டமுறைப்படுத்தலை மறை ஆயர் வழங்க முடியாது.
திருமணச்சடங்கு
அறிவுரை
குரு : அன்புமிக்க மணமக்களே, திருச்சபையின் திருப்பணியாளர்கள் முன்பாகவும், இத்திருக்கூடடத்தின் முன்னிலையிலும் உங்கள் அன்பை நம் ஆண்டவர் முத்திரையிட்டுக் காத்தருளுமாறு இங்கு வந்திருக்கிறீர் கள். உங்கள் அன்பைக் கிறிஸ்து நிறைவாக ஆசீர்வதிக் கின்றார். ஏற்கெனவே அவர் உங்களைப் புனித திரு முழுக்கால் அர்ச்சித்துள்ளார், இப்போதோ மற்றொரு திருவருட்சாதனத்தின் வழியாக உங்களுக்கு அருள் வளம் ஈந்து, நீங்கள் ஒருவருக்கொருவர் என்றும் பிரமாணிக்கமாய் இருக்கவும், திருமணத்தின் ஏனைய கடமைகளை ஏற்று நிறைவேற்றவும் உங்களுக்கு ஆற்றல் அளிக்கின்றார். எனவே, உங்கள் கருத்தை அறிந்து கொள்ள, திருச்சபையின் முன்னிலையில் உங்களை வினவுகிறேன்.
(மணமக்கள் இருவரும் தனித்தனியே வினாக்களுக்குப் பதில் கூற வேண்டும்)
குரு: (பெயர்…பெயர்) நீங்கள் இருவரும் முழுமனச் சதந்திரத்துடன் திருமணம் செய்து கொள்ள எவ்வித வற்புறுத்தலுமின்றி இங்கு வந்திருக்கிறீர்களா?
மணமக்கள் : ஆம் வந்திருக்கிறோம்.
குரு: நீங்கள் மணவாழ்க்கை நெறியைப் பின்பற்றி, வாழ்நாளெல்லாம் ஒருவரையொருவர் நேசிக்கவும் மதிக்கவும் தயாராய் இருக்கிறீர்களா?
மணமக்கள்: ஆம், தயாராய் இருக்கிறோம்.
குரு: இறைவன் உங்களுக்கு அருளும் மக்களை நீங்கள் அன்புடன் ஏற்று, கிறிஸ்துவின் போதனைக்கும் திருச்சபையின் சட்டத்திற்கும் ஏற்றப்படி வளர்ப்பீர்களா?
மணமக்கள்: ஆம் வளர்ப்போம்.
மன ஒப்புதல்:
குரு : நீங்கள் திருமண ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதால், உங்கள் வலது கைகளைச் சேர்த்துப் பிடியுங்கள், இறைவன் திருமுன், திருச்சபையின் முன்னிலையில் உங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள்.
(இருவரும் கைகளைச் சேர்த்து பிடிக்கிறார்கள்)
மணமகன் : (பெயர்) என்னும் நான், (பெயர்) என்னும் உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாயிருந்து, என் வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்.
மணமகள் : (பெயர்) என்னும் நான், (பெயர்) என்னும் உங்களை என் கணவராக ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உமக்குப் பிரமாணிக்கமாயிருந்து, என் வாழ்நாளெல்லாம் உம்மை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்.
குரு : திருச்சபையின் முன்னிலையில் நீங்கள் தெரிவித்த இந்த சம்மதத்தை ஆண்டவர் கனிவுடன் உறுதிப்படுத்தி, தம் ஆசியை உங்கள் மீது நிறைவாய் பொழிந்தருள் வாராக! இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக் கட்டும்.
எல் : ஆமென்.
மாங்கலியம் அணிவித்தல்:
குரு : (மாங்கலியத்தை ஆசீர்வதித்து) ஆண்டவரே, உம் அடியார் இவர்களையும் இவர்களது அன்பையும் ஆசீர் வதித்துப் புனிதப்படுத்தியருளும். இந்த மாங்கலியம் இவர்களுக்குப் பிரமாணிக்கத்தின் அடையாளமாய் அமைந்து, ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பை ஆழந்த அன்பையும் நினைவூட்ட வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடு கிறோம். – ஆமென்
மணமகன் : (மணமகளின் பெயரைச் சொல்லி) … என் அன்புக்கும் பிரமாணிக்கத்துக்கும் அடையாளமாக இந்தத் திருமாங்கலியத்தை பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே அணிந்து கொள்.
(மாலைகள் அருகிலிருந்தால் அவற்றை குரு எடுத்துத் தர, மணமக்கள் ஒருவரொருவருக்கு மாலை அணிவிக்கலாம்.)
விசுவாசிகளின் மன்றாட்டு ;
(தொடக்கத்தையும் இறுதி செபத்தையும் குரு சொல்ல, நான்கு மன்றாட்டுக்களை சபையில் உள்ள மணமக்க ளின் பெற்றோரும் உறவினரும் ஆளுக்கொரு மன்றாட் டாகச் சொல்வது நல்லது.)
குரு : அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே, இப்புதிய குடும்பத்தின் அன்பு எப்போதும் தொடர்ந்து வளர வேண்டுமென்று இவர்களுக்காக மன்றாடுவோம்.
- இப்பொழுது திருமணத்தில் ஒன்றிணைந்த இப்பதிய மணமகனும் மணமகளும் தங்கள் இல்லற வாழ்வில் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் என்றும் வாழ்ந் திட வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடு கிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். - உலகிலும் திருச்சபையிலும் அமைதி நிலவ வேண்டுமென்றும், திருச்சபையின் ஒற்றுமை மேன்மேலும் வளர வேண்டுமென்றும் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். - கானாவூர் திருமணத்தில் மணமக்களுக்கு ஆசியளித் தது போல், இம்மணமக்களுக்கும் ஆசியளித்து , உம் அன்புக்கு அடையாளமாக மக்களைப் பெற்று அவர் கள்என்றும் மகிந்திருக்கச் செய்ய வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். - இப்புதிய மணமக்கள் (பெயர்…) அமைக்கும் இல்லமும், மற்ற கிறிஸ்தவக் குடும்பங்கள் அனைத்துமே தம் திருமண அருளில் என்றும் நிலைத்து நிற்கவும், உம் திருப்பெயருக்கு ஏற்ற சாட்சிகளாயத் திகழவும் வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடு கிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
குரு: நமது தனிப்பட்ட தேவைகளுக்காக சற்று நேரம் மௌனமாக ஜெபிப்போம்….
குரு : தந்தையே, உம் பிள்ளைகளாகிய இப்புதிய மணமக்களுக்கு உண்மையான அன்பை நீர் தாராளமாய் வழங்குவதால், நிறை ஒற்றுமையோடு இவர்கள் வாழச் செய்தருளும். நீர் இணைத்த இவ்விருவரையும் எதுவும் பிரிக்காதிருப்பதாக. உம் ஆசி பெற்ற இவர்களை எத்தீங்கும் தீண்டாதிருப்பதாக.எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆமென்.