திருப்பட்டங்கள்
திருவருட்ச்சாதனங்கள் பற்றி திருச்சபை சட்டநூலின் படிப்பினைகள்
நூல் – 4
பகுதி 1
தலைப்பு 6
திருப்பட்டங்கள்.
திருச்சபை சட்டம் 1008. இறை ஏற்பாட்டின்படி கிறிஸ்தவ விசுவாசிகளில் ஒரு சிலர் திருப்பட்ட அருளடை யாளத்தால் அழியா முத்திரையுடன் திருப்பணியாளராக ஏற்படுத்தப்படுகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும், தத்தம் படிநிலைக்கேற்ப, தலையாகிய கிறிஸ்துவின் பெயரால், போதித்தல், புனிதப்படுத்துதல், ஆளுதல் எனும் பணிகளை நிறைவேற்றத் திருநிலைப் படுத்தப்பட்டு, பிரதிநிதிகளாக அனுப்பப்படுகின்றனர். இவ்வாறு இவர்கள் இறைமக்களைப் பேணிக் காக்கின்றனர்.
தி.ச.1009. ஆயர்நிலை, குருத்துவநிலை, திருத்தொண்டர் நிலை ஆகியவை திருப்பட்டங்களாகும்.
2) இவை ஒவ்வொரு படிநிலைக்கும் திருவழிபாட்டு நூலில் விதித்துள்ளபடி, தலைமீது கைகளை வைப்பதாலும் திருநிலைப்பாட்டு வேண்டுதலாலும் வழங்கப்படுகின்றன.
இயல் 1.
திருப்பட்டகொண்டாட்டமும் பணியாளரும்.
தி.ச. 1010. திருப்பட்டத்தை ஞாயிற்றுக்கிழமையிலோ கடன் திருநாளிலோ, ஆடம்பரத் திருப்பலியின்போது கொண்டாடவேண்டும். ஆனால், மேய்ப்புப்பணிக் காரணங்களுக்காக மற்ற நாள்களிலும், சாதாரண வாரநாள்களிலும்கூட அது நடைபெறலாம்.
தி.ச. 1011. திருப்பட்டம் பொதுவாக மறைமாவட்டப் பேராலயத்தில் கொண்டாடப்படவேண்டும். ஆயினும் மேய்ப்புப்பணி காரணங்களுக்காக வேறு ஓர் ஆலயத் திலோ செபக்கூடத்திலோ அதனைக் கொண்டாடலாம்.
2) திருப்பட்டக் கொண்டாட்டத்தில் இயன்ற அளவு பெருந்திரளான மக்கள் இருக்கும் பொருட்டு, திருப் பட்டத்தினரையும் மற்றக் கிறிஸ்தவ விசுவாசிகளையும் அழைக்கவேண்டும்.
தி.ச. 1012. திருப்பட்டத்தின் பணியாளர் திருநிலைப் படுத்தப்பட்ட ஆயராவார்.
தி.ச. 1013. திருத்தந்தையின் ஆணை முன்னதாகத. தேளிவாக இருந்தாலன்றி, எந்தவேர் ஆயரும் எவரையும் ஆயராகத் திருநிலைப்படுத்த அனுமதிக்கப்படு வதில்லை.
தி.ச. 1014. திருத்தூதரக ஆட்சிப்பீடத்தினால் விலக்கீடு வழங்கப்பட்டிருந்தாலன்றி, ஆயர் திருநிலைப்பாட்டின் போது, திருநிலைப்படுத்தும் முதன்மை ஆயர், தம்முடன் குறைந்த அளவு திருநிலைப்படுத்தும் ஆயர்கள் இருவரை இணைத்துக் கொள்ளவேண்டும். ஆயினும், ஆயர் நியமனம் பெற்றவரைத் திருநிலைப் படுத்தும் போது, அங்கு இருக்கும் அனைத்து ஆயர்களும் இவர்களுடன் ஒன்றிணைந்து திருநிலைப்படுத்துவது மிகவும் பொருத்தமாகும்.
தி.ச. 1015. திருப்பட்டம் அல்லது திருத்தொண்டர் பட்டம் பெறவிருக்கும் ஒவ்வொருவரும், தமது சொந்த ஆயரால் அல்லது அந்த ஆயரிடமிருந்து சட்ட முறையான இசைவாணைக் கடிதங்களுடன் திருநிலைப் படுத்தப்படவேண்டும்.
2) சொந்த ஆயர், நியாயமான ஒரு காரணத்தால் தடைசெய்யப்பட்டிருந்தாலன்றி, தமது ஆளுகைக்கு உட்பட்டவருக்குத் தாமே திருப்பட்டம் அளிக்கவேண்டும். ஆயினும் திருத்தூதரகச் சலுகை இல்லாமல், கீழைத் திருச்சபையின் வழிபாட்டுமுறைக்கு உட்பட்ட ஒருவருக்குச் சட்டமுறையாகத் குருப்பட்டம் அளிக்க முடியாது.
3) திருப்பட்டங்களைப் பெற இசைவாணைக் கடிதங்களை வழங்கக்கூடியவர் ஆயராக இருந்தால் அவர் தாமே அத் திருப்பட்டங்களை வழங்கலாம்.
தி.ச. 1016. மறைமாவட்டத் திருப்பட்டத்தினர் குழாமில் தங்களை இணைத்துக்கொள்ள விருப்பமுள்ளவர்களின் திருத்தொண்டர் திருப்பட்டத்தைப் பொறுத்தவரையில், வேட்பாளருக்கு எந்த மறைமாவட்டத்தில் நிலையான உறைவிடம் உள்ளதோ, அந்த மறைமாவட்ட ஆயர், அல்லது எந்த மறைமாவட்டத்திறகுத் தம்மை அர்ப் பணிக்க விரும்புகிறாரோ, அந்த மறைமாவட்ட ஆயர் உரிய ஆயராவார். மறைமாவட்டத் திருப்பட்டத்தினர் குழாமின் குருத்துவத் திருப்பட்டத்தைப் பொறுத்த வரையில், வேட்பாளர் திருத்தொண்டர் திருப்பட்டத் தினால் எந்த மறைமாவட்டத்தில் இணைக்கப்பட்டு ள்ளாரோ, அந்த மறைமாவட்டத்தின் ஆயர் உரிய ஆயராவார்.
தி.ச. 1017. ஓர் ஆயர் தமது ஆட்சி உரிமைக்கு வெளியே, அந்த மறைமாவட்ட ஆயரின் அனுமதி பெற்றிருந்தா லன்றித் திருப்பட்டங்கள் அளிக்க முடியாது.
தி.ச. 1018. மறைமாவட்டத் திருப்பணியாளருக்கு இசை வாணைக் கடிதங்கள் கொடுப்பவர்கள்:
1) தி.ச. 1016 –ல் குறிப்பிட்டுள்ள உரிய ஆயர்.
2) திருத்தூதரக நிர்வாகி, ஆலோசனைக் குழாமின் ஒப்புத லுடன் மறைமாவட்ட நிர்வாகி, தி.ச. 495, 2 –ல் குறிப் பிடப்பட்டுள்ள குழுவின் ஒப்புதலுடன் திருத்தூதரக மறை ஆட்சிவட்டத்தின் பதில்- பதில் குரு, திருத்தூதரக மறை ஆட்சி ஆளுகையின் பதில் ஆளுநர்.
2) மறைமாவட்ட ஆயராலோ, திருத்தூதரக மறைஆட்சி வட்டத்தின் பதில்குரு அல்லது திருத்தூதரக மறை ஆட்சிவட்டத்தின் ஆளுநராலோ திருப்பட்டங்கள் பெற அனுமதி மறுக்கப்பட்டவர்களுக்கு, மறைமாவட்ட நிர்வாகியோ, திருத்தூதரக மன்ற ஆட்சி வட்டத்தின் பதில்- குருவோ, திருத்தூதரக மறை ஆட்சிவட்டத்தின் பதில் ஆளுநரோ இசைவாணைக் கடிதங்கள் கொடுக்கக்கூடாது.
தி.ச. 1019. திரு ஆட்சிப் பீட அதிகாரத்திற்கு உட்பட்டத் திருப்பணியாளர் துறவற சபை அல்லது திருப்பணியாளர் மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்களின் உயர் தலைவர்கள், தங்கள் சபை அமைப்புச்சட்டங்களின்படி நிரந்தரமாக அல்லது உறுதியாக இணைக்கப்பட்ட உறுப்பினர்களுக்குத் திருத்தொண்டர் திருப்பட்டம் அளிப்பதற்கான இசைவாணைக் கடிதங்களைக் கொடுக்கலாம்.
2) வேறு எந்த சபையையோ சமூகத்தையோ சார்ந்த உறுப்பினர்களின் திருப்பட்டம், மறைமாவட்டத் திருப் பணியாளர்களுக்குரிய சட்டத்தால் நெறிப்படுத்தப்படு கிறது. தலைவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சலுகையும் திரும்பப் பெறப்படுகிறது.
தி.ச. 1020. தி.சச, 1050 மற்றும் 1051 ன் விதிமுறைக்கேற்ப, தேவையான சான்றிதழ்களும் ஆவணங்களும் முன்னதாகப் பெற்றிருந்தாலன்றி, இசைவாணைக் கடிதங்கள் வழங்கப்படலாகாது.
தி.ச. 1021. திருத்தூதரக ஆட்சிப்பீடத்துடன் உறவு ஒன்றிப்பில் இருக்கும் எந்த ஓர் ஆயருக்கும் இசைவாணைக் கடிதங்கள் அனுப்பலாம். ஆனால், திருப்பட்டம் பெறுபவரின் திருவழிபாட்டுச் சடங்குமுறையைச் சாராத ஆயருக்கு, திருத்தூதரகச் சலுகை இருந்தாலன்றி, இசைவாணைக் கடிதங்களை அனுப்பலாகாது.
தி.ச. 1022. திருப்பட்டம் பெறுவதற்கான சட்டமுறையான இசைவாணைக் கடிதங்களைத் திருப்பட்டம் அளிக்கும் ஆயர் பெற்றபின், அவை நம்பத்தக்கவை எனத் தெளிவான சான்று இருந்தாலன்றித் திருப்பட்டம் அளிக்க முற்படலாகாது.
தி.ச. 1023. திருப்பட்டம் வழங்குவதற்கான இசைவா ணைக் கடிதங்கள், அவற்றைக் கொடுப்பவராலும் அல்லது அவரது வழிவருபவராலும் வரையறுக் கப்படவோ திரும்பப்பெறப்படவோ முடியும். ஆனால், ஒருமுறை வழங்கப்பட்டுவிட்டால், வழங்கியவரின் அதிகார முடிவினால் அவை முடிவுறுவதில்லை.
இயல் 2
திருப்பட்ட வேட்பாளர்கள்
தி.ச. 1024. திருமுழுக்குப் பெற்ற ஓர் ஆண் மட்டுமே செல்லத்தக்கவிதத்தில் திருப்பட்டம் பெறுகிறார்.
தி.ச. 1025. சட்டமுறைப்படி குருத்துவ அல்லது திருத்தொண்டர் திருப்பட்டங்களை வழங்குவதற்குத் தேவையானவை: வேட்பாளர், உரிய ஆயர் அல்லது தகுதிவாய்ந்த உயர் தலைவரின் கணிப்பின்படி, சட்டவிதிமுறைக்கேற்பத் தகுதிகாண் பருவகாலத்தை முடித்து, தேவையான குணநலன்களைக் கொண்டிருக்க வேண்டும், எவ்விதச் சட்டமுரணானநிலை அல்லது தடைக்கு உட்படாதிருக்கவேண்டும், தி.சச 1033- 1039 –ன் விதிமுறைக்கேற்ப முன்தேவைகளை நிறைவு செய்திருத்தல் வேண்டும், மேலும் தி.ச. 1050-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைப் பெற்று, தி.ச. 1050 ல் குறிப்பிட்டுள்ள ஆய்வு செய்திருக்கவேண்டும்.
2) மேலும், அதே சட்டமுறையான தலைவரின் கணிப்பில், திருச்சபையின் பணிக்கு அவர் பயனள்ளவர் எனக் கருதப்படல் வேண்டும்.
3) மற்றொரு மறைமாவட்டத்தின் பணிக்காகக் குறிக்கப்பட்ட, தமது ஆளுகைக்கு உட்பட்ட ஒருவருக்குத் திருப்பட்டம் அளிக்கும் ஆயர், அந்த ஆள் அந்த மறைமாவட்டத்துடன் இணைக்கப்படுவார் என்பதை உறுதி செய்யவேண்டும்.
உட்பிரிவு 1
திருப்பட்ட வேட்பாளர்களின் தகுதிகள்
தி.ச. 1026. ஒருவர் திருப்பட்டம் பெறுவதற்குத் தேவையான தன்னுரிமை கொண்டவராக இருக்கவேண்டும். எவரையும் எவ்விதத்திலும் எக்காரணத்திற்காகவும் திருப்பட்டங்களைப் பெறுமாறு கட்டாயப்படுத்துவது அல்லது திருச்சபைச் சட்டப்படி தகுதிவாய்ந்த ஒருவரை அவற்றைப் பெற விடாமல் தடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
தி.ச. 1027. திருத்தொண்டர் திருப்பட்டமும் குருத்துவத் திருப்பட்டமும் பெற விரும்புவோர், சட்டவிதி முறைக்கேற்ப, துல்லியமான உருவாக்கம் பெற வேண்டும்.
தி.ச. 1028. வேட்பாளர்கள் எந்தவொரு திருப் பட்டத்திற்கும் உயர்த்தப்படுமுன், அந்தத் திருப்பட்டம் பற்றியும் அதன் கடமைகள் பற்றியும் உரியமுறையில் அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக் கிறார்கள் என்பதை மறைமாவட்ட ஆயரோ தகுதிவாய்ந்த தலைவரோ உறுதி செய்யவேண்டும்..
தி.ச. 1029. அனைத்தையும் கவனத்தில்கொண்டு, உரிய ஆயரின் அல்லது உயர் தலைவரின் விவேகமிக்க கணிப்பில், பின்வரும் தகுதியுடையவர்களை மட்டுமே திருப்பட்டங்களுக்கு உயர்த்தவேண்டும். முழுமையான விசுவாசம் உடையவர்கள், நேர்மையான நோக்கத்தால் உந்தப்பட்டவர்கள், தேவையான அறிவு உடையவர்கள், நன்மதிப்புக் கொண்டவர்கள், நல்லொழுக்கம், எண்பிக்கப்பட்ட நற்பண்புகள் உடையவர்கள் மற்றும் பெறவேண்டிய திருப்பட்டத்திற்குரிய ஏனைய உடல், உள குணநலன்கள் கொண்டவர்கள்.
தி.ச. 1030. குருத்துவத் திருப்பட்டம் பெறுவதற்காகக் குறிப்பிடப்பட்டு, தமது ஆளுகைக்கு உட்பட்ட திருத் தொண்டர்கள் குருத்துவத் திருப்பட்டம் பெறுவதை, திருச்சபைச்சட்ட காரணத்திற்காக மட்டுமே, அது மறைவாக இருப்பினுங்கூட, உரிய ஆயரோ தகுதி வாய்ந்த உயர் தலைவரோ தடை செய்யலாம். இக்காரி யத்தில் சட்டவிதிமுறைக்கேற்ப, மேல்முறையீடு செய்யும் உரிமையைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 1031. இருபத்து ஐந்து வயதை நிறைவு செய்து, போதுமான உளமுதிர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கன்றிக் குருத்துவத் திருப்பட்டம் அளிக்கப்படலாகாது. மேலும், திருத்தொண்டர் திருப்பட்டத்திற்கும் குருத்துவ திருப்பட்டத்திற்கும் இடையே, குறைந்த அளவு ஆறுமாத இடைவெளியாவது இருந்திருக்கவேண்டும். குருத்துவ திருப்பட்டம் பெறக் குறிக்கப்பட்டவர்கள் இருபத்து மூன்று வயது நிறைவான பிறகே திருத்தொண்டர் திருப்பட்டத்திறகு அனுமதிக்கப்படுவார்கள்.
2) திருமணமாகாத நிரந்தரத் திருத்தொண்டர் திருப்பட்டத்திற்கான வேட்பாளர், குறைந்த அளவு இருபத்து ஐந்து வயது நிறைவு செய்தாலன்றித் திருத்தொண்டர் திருப்பட்டத்திற்கு அனுமதிக்கப் படலாகாது. திருமணமானவராக இருந்தால், குறைந்த அளவு முப்பத்து ஐந்து வயது நிறைவு செய்து, மனைவியின் ஒப்புதலைப் பெற்றிருந்தாலன்றி, அப்பட்டத்திற்கு அனுமதிக்கப்படலாகாது.
3) ஆயர் பேரவை குருத்துவத் திருப்பட்டத்திறகும் நிரந்தரத் திருத்தொண்டர் பட்டத்திற்கும் தேவையான வேறொரு முதிpர் வயதை நிர்ணயித்து விதிமுறை வழங்கலாம்.
4) 1 மற்றும் 2 ன் விதிமுறைக்கேற்பத் தேவைப்படும் வயதிலிருந்து ஓராண்டுக்கு மேற்பட்ட விலக்கீடு, திருத்தூதரக ஆட்சிப்பீடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தி.ச. 1032. குருத்துவத் திருப்பட்டம் பெறவிரும்புவோர் ஐந்து ஆண்டு மெய்யியல்- இறையியல் பாடத்திட்டங்களை முடித்த பின்னரே திருத்தொண்டர் திருப்பட்டத்திற்கு உயர்த்தப்படலாம்.
2) திருத்தொண்டர் தமக்குரிய பாடத்திட்டங்களை முடித்தபின், குருத்துவத் திருப்பட்டத்திற்கு உயர்த்தப்படுமுன், ஆயராலோ தகுதிவாய்ந்த உயர் தலைவராலோ நிர்ணயிக்கப்பட்ட உரிய காலத்தை மேய்ப்புப் பணியில், திருத்தொண்டர் திருப்பட்டத்தை செயற்படுத்தி, பங்கேற்கவேண்டும்.
3) நிரந்தரத் திருத்தொண்டர் திருப்பட்டம் பெற விரும்புபவர் பயிற்சிக்காலத்தை முடித்திருந்தாலன்றி, அவரை அத்திருப்பட்டத்திற்கு உயர்த்தக்கூடாது.
உட்பிரிவு 2
திருப்பட்டத்திற்கான முன்தேவைகள்.
தி.ச. 1033. புனித உறுதிப்பூசுதல் அருளடையாளத்தைப் பெற்றிருப்பவர் மட்டுமே சட்டமுறைப்படி திருப்பட்டங்களுக்கு உயர்த்தப்படுவர்.
தி.ச. 1034. குருத்துவ அல்லது திருத்தொண்டர் திருப்பட்டத்தைப் பெறவிரும்புபவர் முதலில் தி.சச.1016 மற்றும் 1019 ல் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரியால் திருவழிபாட்டுச் சேர்க்கைச் சடங்கு முறையில் வேட்பாளராகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலன்றி, அவருக்குத் திருப்பட்டம் அளிக்கமுடியாது. அவர் முன்னதாகவே தாமே எழுதிக் கையொப்பமிட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருக்கவேண்டும், அது அதே அதிகாரியால் எழுத்து வடிவத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவேண்டும்.
2) வார்த்தைப்பாடுகளால் திருப்பணியாளர் சபையில் இணைக்கப்பட்டுள்ள ஒருவர், இந்தச் சேர்க்கையைப் பெற வேண்டிய கடமை இல்லை.
தி.ச. 1035. நிரந்தர அல்லது தற்காலிகத் திருத்தொண்டர் பட்டத்திற்கு ஒருவர் உயர்த்தப்பெறுமுன், அவர், வாசகர், பீடத்துணைவர் பணிகளைப் பெற்றிருக்கவேண்டும், அவற்றைப் பொருத்தமான காலத்திற்கு செயல்படுத்தி யிருக்கவேண்டும்.
2) பீடத்துணைவர் பணியையும் திருத்தொண்டர் திருப் பட்டத்தையும் வழங்குவதற்கு இடையில், குறைந்த அளவு ஆறு மாதங்கள் இடைவெளி இருத்தல்வேண்டும்.
தி.ச. 1036. வேட்பாளர், திருத்தொண்டர் திருப்பட்டத் திற்கோ குருத்துவத் திருப்பட்டத்திற்கோ உயர்த்தப்பட, அவருடைய சொந்த ஆயரிடமோ, தகுதிவாய்ந்த உயர் தலைவரிடமோ, தாமே எழுதிக் கையொப்பமிட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருக்கவேண்டும். அதில், தாமாகவே தன்னுரிமையோடு திருப்பட்டங்கள் பெறவிருக்கிறார் என்றும், திருச்சபைப் பணிக்குத் தம்மையே நிரந்தரமாக அர்ப்பணிப்பார் என்றும் சான்றுறுதி அளிக்கவேண்டும். அதே நேரத்தில் திருப்பட்டம் பெறத் தம்மை அனுமதிக்கவேண்டும் என்றும் விண்ணப்பிக்கவேண்டும்.
தி.ச. 1037. நிரந்தரத் திருத்தொண்டர் திருப்பட்டத்திற்கான திருமணமாகாத வேட்பாளர், அவ்வாறே, குருத்துவத் திருப்பட்டத்திற்கான வேட்பாளர், விதிக்கப்பட்டுள்ள வழிபாட்டுச் சடங்குமுறையில் பகிரங்கமாக, இறைவனுக்கும் திருச்சபைக்கும் முன்பாக மணத்துறவுக் கடமையை ஏற்றிருந்தால் (அல்லது ஒரு துறவறச்சபையில் நிரந்தர வார்த்தைப்பாடு எடுத்திருந்தால்) அன்றித் திருத்தொண்டர் திருப்பட்டம் பெற அனுமதிக்கப்படமாட்டார்.
தி.ச. 1038. குருத்துவத் திருப்பட்டத்திற்கு உயர்த்தப்பட மறுக்கும் ஒரு திருத்தொண்டர், திருச்சபைச் சட்டத் தடையினாலோ, மறைமாவட்ட ஆயர் அல்லது தகுதிவாய்ந்த உயர் தலைவரால், மதிப்பீடு செய்யவேண்டிய வேறு கனமான காரணத்தினாலோ தடை செய்யப்பட்டிருந்தாலன்றி, அவர் பெற்ற திருப்பட்டத்தைச் செயற்படுத்தத் தடை செய்யக்கூடாது.
தி.ச. 1039. எந்தவொரு திருப்பட்டத்திற்கும் உயர்த்தப்படவேண்டிய அனைவரும், திருச்சபை ஆளுநரால் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மற்றும் முறையில் குறைந்த அளவு ஐந்து நாள் தியானம் செய்யவேண்டும். குருத்துவத் திருப்பட்ட வேட்பாளர்கள் தக்க முறையில் தியானம் செய்தார்கள் என்பதைத் திருப்பட்டம் கொடுப்பதற்குமுன் ஆயர் உறுதி செய்து கொள்ளவேண்டும்.
உட்பிரிவு 3
சட்டமுறையான நிலையும் மற்றத் தடைகளும்
தி.ச. 1040. எந்தவொரு தடையாலும் கட்டுண்டவர்கள், அது சட்டமுரணான நிலை எனப்படு;ம் நிரந்தரமான தடையாயினும் சரி, அல்லது சாதாரணத் தடையாயினும் சரி, திருப்பட்டங்கள்; பெறத் தடை செய்யப்பட்டுள்ளனர். ஆயினும், கீழ்க்கண்ட சட்டங்களில் இல்லாத எந்தவொரு தடைக்கும் உட்படுத்தப்படுவதில்லை.
தி.ச. 1041. திருப்பட்டங்களைப் பெறுவதற்குக் கீழ் கண்டவர்கள் சட்ட முரணான நிலையில் உள்ளனர்:
2) ஏதாவது ஒருவகை மனநோயால் அல்லது மற்ற உளநலக்குறைவால் துன்புறும் ஒருவர், அதனால் தக்கமுறையில் பணிகளை நிறைவேற்றத் தகுதியற்றவர் என, வல்லுநர்களைக் கலந்தாலோ சித்தபின், கணிக்கப்பட்ட ஒருவர்,
3) விசுவாச மறுதலிப்பு, திரிபுக்கொள்கை, அல்லது சமயப்பிளவு என்ற குற்றம் புரிந்த ஒருவர்,
4) ஏற்கெனவே உள்ள திருமணக் கட்டினாலோ, திருப் பட்டத்தினாலோ, பகிரங்க, நிரந்தர கற்பு வார்த்தைப் பாட்டினாலோ கட்டுண்ட நிலையில் உள்ளவர் அல்லது செல்லுநிலைத் திருமணத்தால் அல்லது அதே வார்த்தைப்பாட்டால் கட்டுண்ட ஒரு பெண்ணுடன் திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டவர், திருமணம் செய்ய, அது நாட்டுச் சட்டத் திருமணமாக இருப்பினும், முயற்சி செய்த ஒருவர்,
5) வேண்டுமென்றே கொலை செய்தவர் அல்லது உண்மையாகவே கருச்சிதைவு விளைவித்தவர் மற்றும் நேர்மறையாக அதற்கு ஒத்துழைத்தவர்கள்,
6) கொடூரமாகவும் தீய நோக்கோடும் தம்மையோ மற்றவரையோ உடல் ஊனம் செய்தவர் அல்லது தற்கொலை செய்ய முயற்சி செய்த ஒருவர்.
7) ஆயர் அல்லது குருத்துவத் திருப்பட்டத்தைக் கொண்டி ராமல், அல்லது பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஏதாவதொரு திருச்சபைச் சட்டத் தண்ட னையால் அத்திருப்பட்டத்தைச் செயற்படுத்துவதிலி ருந்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அத் திருப்பட்டத்தில் உள்ளவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள திருப்பட்டச் செயல்களை நிறைவேற்றிய ஒருவர்.
தி.ச. 1042. திருப்பட்டங்களைப் பெறுவதிலிருந்து கீழ்க் கண்டவர்கள் சாதாரண முறையில் தடை செய்யப் பட்டுள்ளனர்:
2) சட்டமுறையாக நிரந்தரத் திருத்தொண்டர் நிலைக்குக் குறிக்கப்பட்டிருந்தாலன்றி, மனைவியைக் கொண்டிருக் கும் ஓர் ஆண்.
3) தி.ச 285, மற்றும் 286 ன் விதிமுறைக்கேற்ப, திருப்பணி யாளருக்குத் தடை செய்யப்பட்டுள்ள, கணக்கு கொடுக்க வேண்டிய அலுவலை அல்லது நிர்வாகத்தைக் கொண்டி ருக்கும் ஒருவர், இந்த அலுவலையும் நிர்வாகத்தையும் துறந்து, கணக்கு கொடுத்து விடுபடுகின்ற வரைக்கும் இத்தடை அவரைக் கட்டுப்படுத்தும்.
தி.ச. 1043. கிறிஸ்தவ விசுவாசிகள், திருப்பட்டங்களுக் குரிய தடைகள் ஏதேனும் அறிந்திருந்தால் திருப் பட்டத்திற்குமுன் அவற்றைத் திருச்சபை ஆளுநருக்கோ பங்குக்குருவுக்கோ தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
தி.ச. 1044. 1) ஏற்கெனவே பெற்ற திருப்பட்டங்களைச் செயல்படுத்தக் கீழ்கண்டவர்கள் சட்டமுரணான நிலையில் உள்ளனர்:
1) திருப்பட்டங்களைப் பெறுவதற்குச் சட்டமுரணான நிலையால் கட்டுண்டிருந்தபோது, சட்டத்திற்கு முரணாகத் திருப்பட்டங்களைப் பெற்ற ஒருவர்,
2)தி.ச. 1041, 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்தைப் புரிந்த ஒருவர், அக்குற்றம் பகிரங்கமாக இருந்தால்,
3) தி.ச. 1040, 3இ 4, 5 மற்றும் 6 ல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குற்றத்தைப் புரிந்த ஒருவர்,
2) திருப்பட்டங்களைச் செயல்படுத்தக் கீழ்கண்டவர்கள் சட்டமுரணான நிலையில் உள்ளனர்:
1) திருப்பட்டங்களைப் பெறுவதற்குச் சட்டமுரணான நிலையால் கட்டுண்டிருந்தபோது, சட்டத்திற்கு முரணாகத் திருப்பட்டங்களைப் பெற்ற ஒருவர்,
2) தி.ச. 1041, 1 ல் குறிப்பிடப்பட்டுள்ள மனநோயால் அல்லது ஏதாவதொரு உளநலக் குறைவால் துன்புறும் ஒருவர், வல்லுநர் ஒருவரைக் கலந்தாலோசித்தபின், திருச்சபை ஆளுநர் குறிப்பிட்ட திருப்பட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கும் வரை, இத்தடை நீடிக்கும்.
தி.ச. 1045. சட்டமுரணான நிலை மற்றும் தடைகள் பற்றிய அறியாமை இவற்றிலிருந்து விடுவிப்பதில்லை.
தி.ச. 1046. சட்டமுரணான நிலைகளும் தடைகளும், வெவ்வேறு காரணங்களால் எழுகின்றபோது, பன் மடங்காகினறன. இருப்பினும், வேண்டுமென்றே செய்த கொலை, அல்லது உண்மையான கருச்சிதைவு விளைவு ஆகியவற்றிலிருந்து எழும் சட்டமுரணான நிலையாக இருந்தாலன்றி, அதே காரணத்தை மீண்டும் நிகழச் செய்தால், அவை பன்மடங்காவதில்லை.
தி.ச. 1047. 1) சட்டமுரணான நிலைக்குக் காரணமான காரியம், நீதிமன்ற அரங்கத்திற்குக் கொண்டுவரப்பட்டி ருப்பின், எல்லா சட்டமுரணான நிலைகளிலிருந்தும் விலக்கீடு அளித்தல், திருத்தூதுரக ஆட்சிப்பீடத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
2) திருப்பட்டஙகள் பெறுவதற்கான கீழ்க்கண்ட சட்ட முரணான நிலைகளிலிருந்தும் தடைகளிலிருந்தும் விலக்கீடு அளிப்பதும் திருத்தூதரக ஆட்சிப்பீடத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
1) தி.ச. 1041, 2 மற்றும் 3 ல் குறிப்பிடப்பட்டுள்ள பகிரங்க மான குற்றங்களிலிருந்து எழும் சட்டமுரணான நிலை,
2) தி.ச. 1041, 4 ல் குறிப்பிடப்பட்டுள்ள பகிரங்கமான அல்லது மறைவான குற்றங்களிலிருந்து எழும் சட்டமுரணான நிலை,
3) தி.ச. 1042, 1 ல் குறிப்பிடப்பட்டுள்ள தடை,
3) தி.ச. 1041, 3 ல் குறிப்பிடப்பட்டுள்ள திருப்பட்டங்களைச் செயல்படுத்தத் தடையாக உள்ள பகிரங்கமான சட்டமுரணான நிலைகளிலிருந்து மட்டும், 5, 4 ல் குறிப்பிடப்பட்டுள்ள மறைவான சட்டமுரணான நிலைகளிலிருந்தும்கூட விலக்கீடு அளித்தலும் திருத்தூதுரக ஆட்சிப்பீடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
4) திருஆட்சிப்பீடத்திற்கு ஒதுக்கப்படாத, சட்டமுரணான நிலைகளிலிருந்தும் தடைகளிலிருந்தும் திருச்சபை ஆளுநர் விலக்கீடு அளிக்கலாம்.
தி.ச. 1048. மிக அவசர, மறைவான காரியங்களில், திருச்சபை ஆளுநரையோ, தி.ச. 1041, 3 மற்றும் 4 ல் குறிப்பிடப்பட்டுள்ள சட்டமுரணான நிலைகளுக்கு, பாவமன்னிப்புக்கான அகநிலைப் பிரிவையோ அணுகமுடியாதபோது, மேலும் உடனடியான ஆபத்துக்குரிய பெருந்தீங்கோ நற்பெயர் இழப்போ இருந்தால், திருப்பட்டத்தைச் செயல்படுத்தச் சட்டமுரணான நிலையில் உள்ள ஒருவர் அதைச் செயல்படுத்தலாம். இருப்பினும், அவர் கூடியவிரைவில் திருச்சபை ஆளுநரையோ, பாவமன்னிப்புக்கான அகநிலைப் பிரிவையோ, தமது பெரைக் குறிப்பிடாமல், பாவமன்னிப்பாளர் வழியாக, அணுக வேண்டிய கடமையைக் கொண்டுள்ளார் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 1049. சட்டமுரணான நிலைகளிலிருந்தும் தடைகளிலிருந்தும் விலக்கீடு கேட்கும் விண்ணப் பத்தில், எல்லாச் சட்டமுரணான நிலைகளையும் தடைகளையும் குறிப்பிடவேண்டும். இருப்பினும், பொதுவான விலக்கீடு, தி.ச. 1041, 4 ல் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது நீதிமன்ற அரங்கிற்குக கொண்டுவரப்பட்டுள்ள மற்றச் சட்டமுரணான நிலைகள் தவிர, நல்லெண்ணத்து டன் விடப்பட்டவைகளுக்குச் செல்லும். ஆனால் தீய எண்ணத்துடன் விடப்பட்டவைகளுக்கு அது செல்லாது.
2) வேண்டுமென்றே செய்த கொலை, அல்லது உண்மை யான கருச்சிதைவு ஆகியவற்றிலிருந்து எழும் சட்ட முரணான நிலையாக இருப்பின், விலக்கீட்டின் செல்லத் தக்க நிலைக்குக் குற்றங்களின் எண்ணிக்கையும் குறிப்பிடப்படவேண்டும்.
3) திருப்பட்டங்கள் பெறுவதற்காகச் சட்டமுரணான நிலைகளிலிருந்தும் தடைகளிலிருந்தும் அளிக்கப்படும் பொதுவான விலக்கீடு எல்லாத் திருப்பட்டங்களுக்கும் செல்லத்தக்கதாகும்.
உட்பிரிவு 4
தேவையான ஆவணங்களும் ஆய்வும்.
தி.ச. 1050. ஒருவரைத் திருப்பட்டங்களுக்கு உயர்த்துவதற்குக் கீழ்க்கண்ட ஆவணங்கள் தேவைப்படுகின்றன:
1) தி.ச. 1032 ன் விதிமுறைக்கேற்ப படிப்புகளை முறையாக முடித்ததற்கான சான்றிதழ்,
2) குருத்துவ திருப்பட்டம் பெறுவோருக்குத் திருத்தொண்டர் பட்டம் பெற்றதற்கான சான்றிதழ்,
3) திருத்தொண்டர் திருப்பட்டத்திற்கு உயர்த்தப்பட, திருமுழுக்கு, உறுதிப்பூசுதல் பெற்றதற்கான சான்றிதழ்கள், மேலும், தி.ச. 1035 ல் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளைப் பெற்றதற்கான சான்றிதழ், அவ்வாறே, தி.ச. 1036 ல் குறிப்பிடப்பட்டு;ள்ள உறுதிமொழி அறிக்கை அளித்ததற்கான சான்றிதழ், நிரந்தரத் திருத்தொண்டர் திருப்பட்டத்திற்கு உயர்த்தப்படவேண்டியவா திருமணமானவராக இருந்தால், அவருடைய திருமணச் சான்றிதழும், அவருடைய மனைவியின் ஒப்புதல் சான்றிதழும்
தி.ச. 1051. திருப்பட்டம் பெறுவோருக்குத் தேவையான குணநலன்களை ஆய்வு செய்வதைப் பொறுத்த வரையில், கீழ்க்கண்ட விதியமைப்புகளைக் கடைப்பிடிக்கவேண்டும்,
1) குருத்துவக் கல்லூரியின் அல்லது பயிற்சி இல்லத்தின் அதிபரிடமிருந்து பெற வேண்டிய திருப்பட்டங்களுக்குத் தேவையான குணநலன்களைப் பற்றிய ஒரு சான்றிதழ். அது, வேட்பாளரின் சரியான கோட்பாடு, உண்மையான பக்தி, நல்லொழுக்கம், பணியாற்றுவதற்கான தகுதி பற்றியதாக இருக்கவேண்டும். அவ்வாறே உரிய ஆய்வுக்குப்பின், அவரின் உடல், உள நலன் பபற்றிய சான்றிதழ் இருக்கவேண்டும்.
2) மறைமாவட்ட ஆயர் அல்லது உயர் தலைவர், தகுந்த முறையில் ஆய்வை நடத்த, கால, இட சூழ்நிலைகளுக் கேற்ப, தமக்குப் பயனுள்ளதெனத் தோன்றுகிற மற்ற வழிமுறைகள், அதாவது, சான்றிதழ்க் கடிதங்கள், பொது அறிவிப்புகள், அல்லது மற்றத் தகவல்களையும் பயன்படுத்தலாம்.
தி.ச. 1052. 1) தமக்கே உரிய உரிமையுடன் திருப்பட்டம் அளிக்கும் ஆயர், அதற்கு முற்படுவதற்கு, தி.ச. 1050 ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் தம்மிடம் உள்ளன என்பதையும், மேலும் சட்டவிதிமுறைக்கேற்ப ஆய்வு செய்யப்பட்டு, வேட்பாளரின் தகுதி நேர்மையான ஆதாரங்களால் எண்பிக்கப்பட்டுள்ளது என்பதையும் உறுதி செய்து கொள்ளவேண்டும்.
2) தம் ஆளுகைக்கு உட்படாத ஒருவருக்குத் திருப்பட்டம் அளிக்கும் ஓர் ஆயர், அதற்கு முற்படுவதற்கு, அத்தகைய ஆவணங்கள் தம்மிடம் அளிக்கப்பட்டுள்ளன என்றும், சட்டவிதிமுறைகளுக்கேற்ப ஆய்வு செய்யப்பட்டுள்ள தென்றும், மேலும் வேட்பாளரின் தகுதி எண்பிக்கப் பட்டுள்ளதென்றும் இசைவாணைக் கடிதங்கள் குறிப் பிட்டால் போதுமானது. வேட்பாளர் ஒரு துறவற சபை அல்லது மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகத்தின் உறுப்பினராக இருந்தால், அவர் சபையில் அல்லது சமூகத்தில் உறுதியாக இணைக்கப்பட்டுள்ளார் என்றும், கடிதம் வழங்கும் தலைவரின் ஆளுகைக்கு உட்பட்டவர் என்றும் இசைவாணைக் கடிதங்கள் சான்றளிக்க வேண்டும்.
3) மேலேக் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் இருந்தபோதிலும்கூட, பெற வேண்டிய திருப்பட்டங்களுக்கு வேட்பாளர் தகுதியுள்ளவரா என்று குறிப்பிட்ட ஒருசில காரணங்களுக்காக ஆயருக்கு ஐயப்பாடு எழுந்தால், அவர், அவரைத் திருப்பட்டத்திற்கு உயர்த்தக்கூடாது.
இயல் 3
அளிக்கப்பட்ட திருப்பட்டத்தின் பதிவும் சான்றிதழும்.
தி.ச. 1053. 1) திருப்பட்டம் அளிக்கப்பட்டபின், திருப்பட்டம் பெற்ற தனிநபர்களின் பெயர்கள், திருப்பட்டப் பணியாளரின் பெயர், இடம் திருப்பட்ட நாள் ஆகியவற்றைச் சிறப்புப் பதிவேட்டில் பதிவு செய்து, திருப்பட்டம் பெற்ற இடத்தின் செயலகத்தில் கவனமுடன் வைக்கவேண்டும், ஒவ்வொரு திருப்பட்டத்தின் அனைத்து ஆவணங்களையும் கவனமுடன் பாதுகாக்கவேண்டும்.
2) திருப்பட்டம் அளிக்கும் ஆயர், திருப்பட்டம் பெற்ற ஒவ்வொருவருக்கும், அவர் பெற்ற திருப்பட்டத்தின் நம்பகமான சான்றிதழை வழங்கவேண்டும். இசைவாணைக் கடிதங்களுடன் தமது சொந்த ஆயரல்லாத வேறோர் ஆயரால் திருப்பட்டம் பெற்றவர்கள், சிறப்புப் பதிவேட்டில் பதிவு செய்து, ஆவணக் காப்பகத்தில் வைப்பதற்காக இச்சான்றிதழைத் தங்களின் சொந்தத் திருச்சபை ஆளுநரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
தி.ச. 1054. திருப்பட்டம் பெற்றவர் மறைமாவட்டக் குருவாக இருந்தால், தலத்திருச்சபை ஆளுநரும், துறவற சபையைச் சார்ந்தவராக இருந்தால், அச்சபையின் தகுதிவாய்ந்த உயர் தலைவரும், திருப்பட்டம் பெற்றவர் திருமுழுக்குப் பெற்ற இடத்தின் பங்குக்குருவுக்கு, அளிக்கப்பட்ட ஒவ்வொரு திருப்பட்டத்தைப் பற்றிய அறிவிப்பையும் அனுப்பவேண்டும். அதைப் பங்குக்குரு, தி.ச. 535, 2 ன் விதிமுறைக்கேற்ப, திருமுழுக்குப் பதிவேட்டில் குறிக்கவேண்டும்.
திருச்சடங்கு
குருத்துவ திருநிலைபடுத்தும் திருப்பலி
பவனி
திருப்பலி முன்னுரை
சபை மன்றாட்டு
அனைத்தையும் அமைத்தாளும் இறைவா, உம் ஒரே மகனை என்றென்றும் பெரிய குருவாக ஏற்படுத்தினீர்
தம்முடைய பணியாளராகவும் மறைபொருள்களின் கண்காணிப்பாளராகவும் அவர் தேர்ந்துகொண்ட மறைப்பணியாளர்கள், தாங்கள் ஏற்றுக்கொண்ட பணியை நிறைவேற்றுவதில், உண்மையுள்ள ஊழியராய் விளங்கச் செய்தருளும். உம்மோடு…
அல்லது
சபை மன்றாட்டு
அன்புமிக்க இறைவா, நீர் உம் மக்களை வழிநடத்துவத்ற்கு மறைப்பணியாளர்களின் தொண்டினைப் பயன்படுத்துகின்றீர்; எனவே, உமது திருவுளத்திற்கு ஏற்றவாறு பணிபுரிவதில்
மறைப்பணியாளர்கள் இறுதிவரை நிலைத்திருக்கச் செய்தருளும்.இவ்வாறு தங்கள் மறைப்பணியாலும் புனித வாழ்க்கையாலும் அவர்கள் கிறிஸ்துவில் உமக்கு மிகுந்த மகிமை அளிப்பார்களாக. உம்மோடு…
முதல் வாசகம்
இரண்டாம் வாசகம்
(நற்செய்திக்குப்பின் குருப்பட்ட நிகழ்வு ஆரம்பமாகிறது)
குருத்துவ திருநிலைப்பாட்டு சடங்கு
- பெற்றோரிடம் ஆசீர்
- ஆசீர் பெற்று திரும்பிய பின்
குரு : குருவாகத் திருநிலைப்படுத்தப்பட வேண்டியவர்(கள்) முன் வருக.
(பெயர்(கள்)) : திருத்தொண்டர் —————————————
பெறுவோர் :இதோ வருகிறேன்.
முன் வந்ததும் தகுதியை ஆயர் கேட்டு அறிதல்
இப்போது ஆயர் அவர்கள் திருத்தொண்டர் ————————————— இறைவனின் தலைசிறந்த அழைப்பாகிய குருத்துவ அழைத்தலைப் பெற இவர் தகுதியுடையவர்தான என்பதை அறிய இவரை குருத்துவத்திற்கு பரிந்துரைக்கும் மேலாளரிடம் கேட்டு ஆய்ந்து அறிய வருகின்றார்… ஆயர் இவரை குருத்துவ நிலைக்குத் தேர்ந்து கொள்கிறோம் என்றதும் மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ‘இறைவனுக்கு நன்றி’ என்று பதில் அளிக்கவும்.
குரு : பேரருள் தந்தையே, நம் சகோதரர் இவரை(களை)க் குருவாகத் திருநிலைப்படுத்த அன்னையாம் திருச்சபை தங்களைக் கேட்டுக்கொள்கின்றது.
ஆயர் : இப்பணிக்கு இவர்(கள்) தகுதியுள்ளவர்(கள்) என உமக்குத் தெரியுமா?
குரு : கிறிஸ்தவ மக்களைக் கேட்டறிந்ததிலிருந்தும் இவருக்குப் பயிற்சியளித்தவர்களின் பரிந்துரைகளி லிருந்தும், இவர் தகுதியுள்ளவர் எனச் சான்று பகர்கின்றேன்.
ஆயர் : நம் இறைவனும் மீட்பருமான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் துணையில் நம்பிக்கை வைத்து, நம் சகோதரர் இவரை(ர்களை)க் குருத்துவ நிலைக்குத் தேர்ந்து கொள்கிறோம்.
எல் : இறைவனுக்கு நன்றி !
ஆயரின் அறிவுரைகள்
(ஆயர் தொடர்ந்து குருக்களின் கடமைகளைப் பற்றி மறையுரை ஆற்றுகிறார்.)
அன்பு மிக்க சகோதரர்களே, சகோதரிகளே, உங்கள் உறவினர் அல்லது நண்பரான இவரை குருத்துவ நிலைக்கு உயர்த்த வேண்டிய இந்நேரத்தில் எத்தகைய நிலையைத் திருச்சபையில் இவர் அடையவிருக் கின்றார் என்று நீங்கள் கருத்துடன் சிந்திக்க வேண்டும்.
இறைவனின் புனித மக்கள் அனைவரும் கிறிஸ்துவில் அரச குருத்துவத் திருக்கூட்டம் ஆகின்றனர் என்பது உண்மை. ஆயினும், நம் பெரிய குருவாகிய இயேசு கிறிஸ்து திருச்சபையில் குருத்துவப் பணியைத் தமது பெயரால் மக்களுக்கு நிறைவேற்ற சீடர் சிலரைத் தேர்ந்தெடுத்தார். எவ்வாறெனில் தந்தை அவரை அனுப்பினதுபோல் அவரும் ஆசிரியர், குரு, மேய்ப்பர் என்ற தம் முப்பணியைத் தொடர்ந்தாற்ற திருத்தூதர் களையும் அவர்கள் வழிவரும் ஆயர்களையும் உலகிற்கு அனுப்பினார். குருக்களோ ஆயரின் நிலைக்கு உதவி யாளராக நியமனம் பெறுகின்றனர். ஏனெனில், குருக்கள் ஆயரோடு குருத்துவப்பணியில் ஒன்றித்து, இறை மக்களுக்கு ஊழியம் செய்ய அழைக்கப் பெறுகின்றனர்.
இச்சகோதரர் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்தபின் குருவாக திருநிலைப்படுத்தப்பட இருக்கிறார். ஆசிரியரும், குருவும், மேய்ப்பருமான கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை இறைமக்களாகவும் திருக்கோயிலாகவும் உருவாக்கி வளர்ப்பதே இவரது பணியாகும்.
என்றென்றும் பெரிய குருவாம் கிறிஸ்துவைக் கண்டு பாவிக்கவும் ஆயரின் குருத்துவத்தில் இணைக்கப் பெறவும் இவர் புதிய ஏற்பாட்டின் மெய்யான குருவாக திருநிலைப்படுத்தப் பெறுவார். இதனால், இவர் நற்செய்தியை எடுத்துரைப்பார், இறைமக்களை வழிநடத்துவார் திருவழிபாடு நிகழ்த்துவார் சிறப்பாக ஆண்டவரின் திருப்பலியை ஒப்புக் கொடுப்பார்.
அன்புமிக்க மகனே, நீர் குருத்துவ நிலையை அடையப் போகிறீர். மகிழ்ச்சியுடன் நீர் பெற்றுக் கொண்ட கடவுளின் வார்த்தையை, ஆசிரியராகிய கிறிஸ்துவின் பெயரால் யாவருக்கும் எடுத்துரைத்துப் போதகப் பணியைக் கடமையுணர்வுடன் நிறைவேற்றும். ஆண்டவரின் நெறிகளை மனதிற்கொண்டு, நீர் படிப்பதை விசுவசிக் கவும், விசுவசிப்பதைப் போதிக்கவும், போதிப்பதைப் பின்பற்றவும் கருத்தாய் இரும்.
எனவே உம் போதனை இறைமக்களுக்கு ஊட்டமளிக்கும் உணவாய் இருக்கட்டும். உம் வாழ்வின் நறுமணம் கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக. இவ்வாறு உம் சொல்லாலும் செயலாலும் கடவுளின் திருச்சபையாகிய ஆலயத்தைக் கட்டியெழுப்பும்.
மேலும், கிறிஸ்துவின் அர்ச்சிக்கும் பணியையும் நீர் நிறைவேற்றும். ஏனெனில், உம் கையினால்தான் கிறிஸ்துவின் திருப்பலி அருட்சாதன முறையில் பீடத்தின்மீது ஒப்புக்கொடுக்கப்படுகின்றது. இப்பலியோடு விசுவாசிகளின் ஆன்மப் பலிகளை இணைத்து நிறை வுறச் செய்வதும் உம் பணியே; ஆகவே நீர் செய்வதன் உட்பொருளை உணர்ந்து கொள்ளும். நிகழ்த்தும் பலிக்கேற்றப்படி வாழ்க்கை நடத்தும். அப்பலியில் ஆண்டவருடைய இறப்பு உயிர்ப்பு என்ற மறை நிகழ்ச்சி களை நீர் கொண்டாடுவதால் உம்மையே தியாகப் பலியாக்கிப் புத்துயிர் பெற்றவராய் வாழக்கருத்தாய் இரும்.
திருமுழுக்கின் வழியாக, மனிதரை இறைமக்கள் கூட்டத்தில் சேர்ப்பது; ஒப்புரவு அருட்சாதனத்தால், கிறிஸ்துவின் பெயராலும் திருச்சபையின் பெயராலும் மன்னிப்பது, திரு எண்ணெய் ப+சி நோயாளிகளுக்கு நலமளிப்பது, திருவழிபாடு நிறைவேற்றுவது; இறை மக்களுக்காக மட்டுமின்றி உலகம் அனைத்திற்காவும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரங்களில் நன்றி கூறிப் புகழுரைத்து மன்றாடுவது – இவையாவும் உம் கடமை யாகும். நீர் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பெற்று கடவுளைச் சார்ந்தவற்றிற்கென மனிதரின் சார்பாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறீர் என்பதை மறக்க வேண்டாம். எனவே பெரிய குருவாகிய கிறிஸ்துவின் பணியை மனமுவந்து மெய்யன்புடன் நிறைவேற்றும். உம் நலத்தையன்று; கிறிஸ்துவுக்கு உரியவற்றையே தேடும்.
இறுதியாக அன்புமிக்க மகனே, திருச்சபையின் தலைவரும் ஆயருமான கிறிஸ்துவின் பணியைத் தொடர்ந்து நடத்தும். நீர் பணியாற்றும் மறைமாவட்டத் தின் ஆயருடனும், உம் சபைத் தலைவருடனும் மனமொத்து, கீழ்ப்படிதலுடன் பணி புரியும். கிறிஸ்தவ விசுவாசிகளை ஒரே குடும்பமாக இணைக்கக் கருத்தாய் இரும். இவ்வாறுதான் நீர் அவர்களைக் கிறிஸ்து வழியாகத் தூய ஆவியில் தந்தையாகிய இறைவனிடம் கொண்டு சேர்க்க முடியும். நல்லாயனின் முன்மாதிரியை என்றும் உம் கண்முன் நிறுத்தி அவர் பணிவிடை பெறுவதற்கன்று; பணிவிடை புரிவதற்கே வந்தார் என்றும், இழந்துபோனதைத் தேடி மீட்க வந்தார் என்றும் நினைவில் கொள்வீராக
- மறையுரை முடிந்த பின்
ஆயர் : அன்பு மகனே, (மக்களே) நீர் (நீங்கள்) குருத்துவ நிலை பெறுமுன் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்திருக்கிறீர் என்று இத்திருக்கூட்டத்திற்குமுன் எடுத்துரைப்பது பொருத்த மானதாகும்.
எனவே, நீர் (நீங்கள்) குருத்துவநிலையில் இருந்து கொண்டு ஆயர் நிலையில் இருப்போருக்கு உண்மை யான உதவியாளராக விளங்கி, தூய ஆவியின் வழி காட்டுதலுக்கு ஏற்ப ஆண்டவருடைய மந்தையை இடைவிடாமல் மேய்த்து உம் (உங்கள்) பணியை நிறைவேற்ற விரும்புகிறீரா?(ர்களா?)
பெறு : விரும்புகிறேன்
ஆயர் : நற்செய்தியை அறிவிப்பது, கத்தோலிக்க விசு வாசத்தை விளக்குவது ஆகிய அருள்வாக்குப் பணியைத் தகுதியுடனும் ஞானத்துடனும் நிறைவேற்ற நீர் (நீங்கள்) விரும்புகிறீரா?(ர்களா?)
பெறு : விரும்புகிறேன்
ஆயர் : இறைவனின் மகிமைக்காகவும் கிறிஸ்தவ மக்க ளின் அர்ச்சிப்புக்காகவு கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சி களை, சிறப்பாக நற்கருணைம்ப் பலியையும் ஒப்பரவு அருட்சாதனத்தையும் திருச்சபையின் மரபுக்கேற்ப பக்தியுடனும் பிரமாணிக்கத்துடனும் நிறைவேற்ற நீர் (நீங்கள்) விரும்புகிறீரா?(ர்களா?)
பெறு : விரும்புகிறேன்
ஆயர் : இடையறாது செபிக்க வேண்டுமென்ற கட்டளைக் குப் பணிந்து, உம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்காக எம்மோடு இணைந்து இறைவனின் இரக்கத்தை இறை ஞ்சி மன்றாட நீர் (நீங்கள்) விரும்புகிறீரா?(ர்களா?)
பெறு : விரும்புகிறேன்
ஆயர் : நமக்காகத் தம்மையே தூய பலிப்பொருளாகத் தந்தைக்கு ஒப்புக்கொடுத்த நம் பெரிய குருவாகிய கிறிஸ் துவுடன் நீர் (நீங்கள்) நாளுக்கு நாள் நெருங்கி ஒன்றித்து மனிதரின் மீட்புக்காக அவரோடு உம்மையே கடவுளுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறீரா?(ர்களா?)
பெறு :இறைவனின் துணையை நம்பி நான் விரும்புகிறேன்.
- கீழ்ப்படிதல் வாக்குறுதி
(குருப்பட்டம் பெறுவோர் ஆயரின் முன் முழங்காலிருந்து, அவருடைய கைகளில் ஒப்புவிக்கும் முறையில் இருக்க)
ஆயர் : எனக்கும் என்; வழி வரும் ஆயருக்கும் நீர்; வணக்கமும் கீழ்ப்படிதலும் தர வாக்களிக்கிறீரா?
பெறு : வாக்களிக்கிறேன்.
(If the Bishop is not the candidate’s own Ordinary, he asks:)
ஆயர் : உம் ஆயருக்கு நீர் வணக்கமும் கீழ்ப்படிதலும் தர வாக்களிக்கிறீரா?
பெறு : வாக்களிக்கிறேன்.
ஆயர் : இந்த நற்செயலை உம்மிடம் தொடங்கிய கடவுள் அதை நிறைவுறச் செய்வாராக.
(அனைவரும் நிற்க,)
- புனிதர்கள் மன்றாட்டுமாலை
ஆயர் : அன்புச் சகோதரரே, எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவன், தாமே குருத்துவப் பணிக்குத் தேர்ந்தெடுத்த இவ்வூழியர்(கள்) மீது தம் வானகக் கொடைகளைப் பொழியுமாறு மன்றாடுவோம்.
ஒரு : முழந்தாழிடுவோமாக !
(அனைவரும் முழந்தாழிட, குருப்பட்டம் பெறுவோர் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்க, புனிதர்களின் மன்றாட்டு மாலை பாடப் படுகிறது)
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
புனித மரியாயே, இறைவனின் தாயே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித மிக்கேலே
இறைவனின் புனித தூதர்களே
புனித சூசையப்பரே
புனித ஸ்நானக அருளப்பரே
புனித இராயப்பரே, சின்னப்பரே
புனித பெலவேந்திரரே
புனித அருளப்பரே
புனித மரிய மதலேனம்மாளே
புனித முடியப்பரே
புனித லவுரேஞ்சியாரே
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே
புனித அஞ்ஞேசம்மாளே
புனித பெர்பேத்துவா, பெலிசித்தம்மாளே
புன்pத கிரகோரியாரே
புனித அகுஸ்தீனாரே
புனித அத்தனாசியாரே
புனித பசிலியாரே
புனித மார்த்தீனாரே
புனித ஆசீர்வாதப்பரே
புனித பிராஞ்சீஸ்குவே, சாமிநாதரே
புனித பிராஞ்சீஸ்கு சவேரியாரே
புனித வியான்னி மரிய அருளப்பரே
புனித தெரேசம்மாளே
புனித சீயன்னா கத்தரீனம்மாளே
இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே
கருணைகூர்ந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே
தீமை அனைத்திலுமிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே
பாவம் அணைத்திலுமிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே
நித்திய மரணத்திலிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே
உமது மனிதவதாரத்தினாலே எங்களை மீட்டருளும் ஆண்டவரே
உமது மரணத்தினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டருளும் ஆண்டவரே
பரிசுத்த ஆவியின் வருகையினாலே எங்களை மீட்டருளும் ஆண்டவரே
உமது பரிசுத்த திருச்சபையை ஆண்டு காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்…..
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
திருச்சபைத் தலைவரையும், திருநிலைகளில் பணியாற்றும் அனைவரையும், திருமறை வாழ்வில் நிலைத்திருக்கச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்…
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அனைத்துலக மக்களுக்கும், சமாதானமும் மெய்யான ஒற்றுமையும் தந்தருளவேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்…
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உமது புனித ஊழியத்தில், எங்களை உறுதிப்படுத்திக் காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்…
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
தேர்ந்துகொள்ளப்பெற்ற இவரை, ஆசீர்வதிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்…
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
தேர்ந்துகொள்ளப்பெற்ற இவரை ஆசீர்வதித்து, புனிதப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்…
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
தேர்ந்துகொள்ளப்பெற்ற இவரை ஆசீர்வதித்து, புனிதப்படுத்தி, அர்ச்சிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்…
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உயிர்வாழும் கடவுளின் திருமகனாகிய யேசுவே, உம்மை மன்றாடுகிறோம்…
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்களுக்குச் செவிசாய்த்தருளும் (2)
கிறிஸ்துவே எங்களுக்குச் செவிசாய்த்தருளும் (2)
- நிறைவுச் செபம்
(ஆயர் மட்டும் எழுந்து நின்று)
ஆயர் : ஆண்டவரே, எம் இறைவா, எங்கள் மன்றாட்டு க்குச் செவிசாய்த்தருளும். உம் ஊழியர் இவரை(ர்களை) நீர் அர்ச்சிக்குமாறு இரக்கம்மிக்க உம் திருமுன் அழைத்து வந்துள்ளோம். இவர்(கள்) மீது தூய ஆவியின் ஆசியை யும், குருத்துவ அருளின் ஆற்றலையும் பொழிவீராக. இவ்வாறு உம் கொடைகளை எந்நாளும் இவர்(கள்) நிறைவாய்ப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றா டுகிறோம்.
எல் : ஆமென்.
ஒரு : எழுந்து நிற்போமாக !
- தொடர் மன்றாட்டு முடிந்து
(அனைவரும் எழுந்து நிற்க, குருப்பட்டம் பெறுவோர் ஒவ்வொருவராக ஆயர் முன் செல்ல, ஆயர் அவர் மேல் தம் இருகைகளையும் வைத்து மெளனமாக செபிக்கிறார் அவ்வாரே அங்கிருக்கும் குருக்கள் அனைவரும் தம் கைகளை வைத்து மெளனமாக செபிக்கின்றனர். பிறகு குருப்பட்டம் பெறுவோர் ஆயருக்கு முன் முழந்தாளிட, ஆயர் திருநிலைப் படுத்தும் செபத்தைச் சொல்லுகிறார். - ஆயர் திருப்பொழிவு செய்தல்:.
ஆயர் : ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! எங்களுக்குத் துணை யாக வந்தருளும். மனித மாண்பின் ஊற்றும் அனைத்து அருட்கொடைகளின் வள்ளலும் நீரே. அனைத்தும் உம்மால் தோன்றுகின்றன. உம்மால் நிலைபெறுகின்றன. குருத்துவ மக்களினத்தைக் கிறிஸ்துவின் திருப்பணி யாளர்களாய் உருவாக்க தூய ஆவியின் ஆற்றலினால் அம்மக்களிலே வெவ்வேறு நிலைகளை ஏற்படுத்துபவர் நீரே.
பழைய உடன்படிக்கையின்போதே, மறைபொருளாக அமைந்திருந்த அருட்சாதனங்கள் வழியாக ஏற்படுத்தப்பட்ட பணி நிலைகள் வளரலாயின. மக்களை ஆண்டு நடத்திப் புனிதப்படுத்த மோசேயையும் ஆரோனையும் நியமித்தபோது அவர்களுடன் தோழமை கொண்டிருக்கவும் அவர்களது பணியில் துணை நிற்கவும் நீர் பல்வேறு நிலையிலும் மாண்பிலும் மனிதர்களைத் தேர்ந்தெடுத்தீர்.
எவ்வாறெனில் பாலைவனத்தில், மோசேயின் மனநிலையை விவேகமுள்ள எழுபதுபேருக்கு அளித்து, அவர்கள் வழியாகப் பரவச் செய்தீர். அவர்களை உதவியாளர்களாகப் பயன்படுத்தி மோசே உம் மக்களை எளிதாக வழி நடத்தினார்.
அவ்வண்ணமே வரப்போகும் நலன்களின் நிழல்போல் அமைந்திருந்த கூடாரப் பலிகள், குருக்களின் சட்ட முறைமைப்படி குறைவுப்படாமல் நிகழ்ந்திட ஆரோனின் வழிவந்தோர்மீது அவர்தம் தந்தைக்குரிய நிறைவின் வளமையை வழிவழியாய்ப் பொழிந்தீர்.
தூயவரான தந்தையே, இறுதியாக உமது திருமகனையே இவ்வுலகுக்கு அனுப்பிவைத்தீர். அந்த இயேசுவையே தனிப்பெரும் திருத்தூதர் என்றும், தலைமைக்குரு என்றும் நாங்கள் அறிக்கையிடுகிறோம்.
இவரே தூய ஆவி வழியாக மாசற்ற காணிக்கையாகத் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்தார். தம் திருத்தூதர்களை உண்மையினால் புனிதப்படுத்தித் தம் பணியில் பங்கேற்கச் செய்தார். அவர்களோடு மீட்பு பணியை உலகெங்கும் அறிவிக்கவும் செயல்படுத்தவும் நீர் அவர்களுக்கு உதவியாளர்களைத் தந்தீர்.
இப்போதும் ஆண்டவரே வலுக்குறைந்த எமக்கு இத்தகைய உதவியாளரைத் தந்தருள உம்மை மன்றாடுகிறோம். திருத்தூதருக்குரிய குருத்துவப் பணியில் எமக்கு இவர் தேவைப்படுகிறார்.
எல்லாம் வல்ல தந்தையே, உம் அடியாராகிய இவருக்குத் குருத்துவ நிலைக்குரிய மாண்பினை அளித்தருள உம்மை மன்றாடுகிறோம். இவருடைய உள்ளத்தின் ஆழத்தில் புனிதத்தின் ஆவியைப் புதுப்பித்தருளும். இறைவா, உமது கொடையாகக் குருத்துவத்தின் இரண்டாம் நிலைக்குரிய பொறுப்பை இவர் பெற்றுக்கொள்வாராக. தம் சிறந்த வாழ்வால் நன்னடத்தைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்வாராக.
இறைவா, இவர் தம் ஆயருக்கும், தம் சபைத் தலைவருக்கும்; தகுந்த உதவியாளராய் இருப்பாராக. இவர் போதனையின் வழியாகத் தூய ஆவியின் அருளால், நற்செய்தியின் வார்த்தைகள் உலகின் கடை எல்லைவரை மனிதரின் உள்ளங்களில் நிறைபலன் தருவனவாக.
உம்முடைய மக்கள் மறுப்பிறப்பளிக்கும் திருமுழுக்கால் புதுப்பிக்கப்படவும், உமது திருப்பீடத்திலிருந்து திருவுணவு உண்டு ஊட்டம் பெறவும், பாவிகள் ஒப்புரவாக்கப்படவும், பிணியாளர்கள் வலுப்பெற்றெழவும் இவர் எம்மோடு சேர்ந்து உம்முடைய மறைபொருள்களைப் பிரமாணிக்கமாய் வழங்குவாராக.
ஆண்டவரே, இவரிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்காகவும் உலகம் அனைத்திற்காவும் உமது இரக்கப் பெருக்கத்தை இறைஞ்சி மன்றாட எம்மோடு இவர் இணைந்திருப்பாராக.
இவ்வாறு, அனைத்து நாடுகளும் கிறிஸ்துவில் ஒன்று சேர்க்கப்பட்டு உமது அரசில் ஒரே மக்கள் குலமாக மாற்றம் அடைவனவாக.
உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆமென்.
- திருவுடை அணிவித்தல்.
- திருஎண்ணை பூசல்
ஆயர் : (குருப்பட்டம் பெறுபவரின் உட்கைகளில் பரிமள தைலம் பூசி) தூய ஆவியினாலும், அருளாற்றலினாலும் தந்தையாம் இறைவன் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் திருநிலைப்படுத்தினார். இறைவனுக்குப் பலி செலுத்தவும் கிறிஸ்தவ மக்களைப் புனிதப்படுத்தவும் வேண்டிய அருளை அதே இயேசு கிறிஸ்து உமக்கு வழங்கி உம்மைக் காப்பாராக.
எல் : ஆமென்.
- அப்பத் தட்டும் இரசக் கிண்ணமும் அளித்தல்
(ஆயர் : கடவுளுக்கு ஒப்புக்கொடுக்குமாறு இறைமக்கள் கொண்டு வந்த இக்காணிக்கையை பெற்றுக் கொள்ளும். நீர் செய்வதின் உட்பொருளை உணர்ந்து கொள்ளும். நீர் நிகழ்த்த விருக்கும் திருச்சடங்கிற்கு ஏற்றபடி புனிதராயிரும். திருச்சிலுவையின் மறையுண்மைக்கு ஏற்ப உமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும். - அமைதியின் முத்தம் வழங்குதல்
இறை அமைதி உம்மோடு இருப்பதாக.
புதிய குரு : உம்மோடும் இருப்பதாக.
காணிக்கை பவனியுடன் திருப்பலி தொடர்கிறிது…
காணிக்கை மன்றாட்டு
எங்கள் அன்புத் தந்தையே, உம்முடைய மறைப் பணியாளர்கள் பீடத்தில திருப்பணியாற்றவும் இறை மக்களுக்குச் சேவை செய்யவும் வேண்டுமென்று திருவுளமானீரே அவர்களது ஊழியம் உமக்கு உவப்பு அளித்து, என்றும் நிலைத்திருக்கும் நற்கனிகளைத் திருச்சபைக்குக் கொடுப்பதாக. இந்த வரத்தை இத்திருப்பலியின் ஆற்றலால் தயவாய்த் தர வேண்டுமென்று, எங்கள்…
நன்றி மன்றாட்டு
இறைவா, உம்முடைய மறைப்பணியாளர்களும் மக்ககிய நாங்கள் அனைவரும் சேர்ந்து உமக்கு ஒப்புக்கொடுத்து உட்கொண்ட இத்திருவுணவுக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம். நீர் எங்களுக்கு வழங்கிய மறைப்பணியாளர்களுக்காக மன்றாடுகிறோம். அவர்களை நீர் உமது அன்பில் என்றும் நிலைத்திருக்கச் செய்து, உமக்கு மக்கள் எல்லார்க்கும் பணிவுடன் தொண்டாற்றச் செய்தருளும். எங்கள்…
திருப்பலி முடிவில் ஆயரின் இறுதி ஆசீருக்குப் பின்..
- புதிய குருவின் ஆசீர்
அனைவரும் : ஆமென்
குரு: சென்று வாழுங்கள், திருப்பலி நிறைவேறிற்று
மக்கள்: இறைவா உமக்கு நன்றி.
மகிழ்ந்திடாய் மானிலமே
உந்தன் மைந்தரின் மாட்சியிலே
இன்று பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால்
இன்பு புகழ்திடாய் திருமறையே
- உலகத்தின் பேரோளியாய் – வாழும்
உள்ளத்தின் ஆறுதலாய்
எந்த காலமும் வாழ்திடும் எழில் நிலையாம்
இன்பக் காட்சியே குருத்துவமே - குருத்துவ நீர் சுணையால் -திகழ்
கிறிஸ்துவை ஈன்றவளே
இன்று காய்ந்திடும் ஆறுக்கு
நீர் தெளிக்க வரும் குருக்களை காத்திடுவாய்