All posts by Anthonithas Dalima

பிப்ரவரி:11 புனித லூர்து அன்னை

பிப்ரவரி:11
புனித லூர்து அன்னை

 

கி.பி.1858ம் ஆண்டு பிப்ரவரி 11ல் தென் பிரான்ஸ் நாட்டில் பிரனீஸ் மலையடிவாரத்தில் லூர்து என்ற சிற்றூருக்கு அருகில் குன்றுகளிற்கிடையே முதன்முறையாக பெர்நதத் சுபீரு என்ற நாட்டுப்புறத்து 14 வயது சிறுமிக்கு விறகு சேகரிக்கச் சென்ற இடத்தில் கன்னிமாமரி காட்சியளிக்கின்றார். இளமைத் தோற்றத்துடன் மரியா மிக அழகானவராக காணப்பட்டார் என்று குறிப்பிடுகின்றார். கையில் ஒரு செபமாலை இருந்ததையும் பார்க்கிறார். பெர்நதத்திற்கு வாழ்த்துக் கூறி தம்முடன் செபிக்க அழைக்கின்றார் கன்னிமரி.

பிப்ரவரி 25ல் மீண்டும் காட்சியளித்து மரியன்னை கூறுவார்: “அங்கே தெரிகின்ற அருவியில் போய் உன்னைக் கழுவிக் கொண்டு, நீர் பருகு”. அருவியை நோக்கி போகும் போது, அங்கு அல்ல என்று சொல்லி மரியா குகையின் தரைப் பகுதியை சுட்டிக்காட்டினார். நான் அங்கே போனேன். கை வைத்துப் பார்த்தால் தூசி படிந்த தண்ணீர் கொஞ்சம் காணப்பட்டது. குடிப்பதற்கான அளவு இல்லை. கொஞ்சம் சுரண்டிப் பார்த்தால் தண்ணீர் கொஞ்சம் கூடுதலாக வந்தது. ஆனால் மண் கலந்து இருந்தது. மூன்று முறை அதை கையினால் அள்ளி அகற்றி விட்டு அடுத்த முறை பருகினேன். அருகில் இருந்தவர்கள் ஏளனம் செய்தனர். காரணம் பருகிய வேளையில் முகமெல்லாம் மண் படிந்து இருந்தது. ஆனால் மாலைப் பொழுதுக்குள் தண்ணீர் பீரிட்டு வரத் தொடங்கியது என்று குறிப்பிடுகிறார். ஒரு வாரத்திற்குள் அந்த நீரூற்றினின்று இன்றுவரை ஓடிவரும் தண்ணீர் நாள்தோறும் 32000 காலன் ஆகும்.
1858 மார்ச் 25ம் நாள் மங்கள வார்த்தை திருநாள். மரியன்னை மீண்டும் அவ்விடத்தில் காட்சி தருகின்றார். இந்த முறை அந்த தாயின் பெயரைக் கேட்கிறார் சிறுமி பெர்நதத். நாமே “அமல உற்பவி” என்ற விடை கிடைக்கிறது. 4 ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருத்தந்தை 9ம் பத்திநாதர் “தேவ அன்னை அமல உற்பவி. பாவ மாசு எதுவுமின்றி உற்பவித்தவர்” என்பது விசுவாசப் பிரமாணம் என்று அறுதியிட்டுக் கூறியிருந்தார். கடைசியாக 18வது முறையாக கார்மேல் மலைக் கன்னியின் திருநாளன்று மரியன்னை பெர்நதத்துக்கு காட்சியளித்தார். காட்சிகளிலெல்லாம் பாவிகளுக்காக மன்றாடப் பணிக்கின்றார். செபத்துடன் தவமுயற்சிகள் இன்றியமையாதவை என்று குறிப்பிடுகின்றார். அந்த இடத்தில் பவனி வர வேண்டும், ஆலயம் எழுப்பப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். கூட்டம் கூடிவிட்ட நிலையிலும் பரவசமாகி விட்ட பெர்நதத் மட்டுமே மரியின் உருவத்தைப் பார்க்க முடிந்தது.
உலகின் அத்திசையிலிருந்தும் இன்று ஆண்டுதோறும் எண்ணற்ற திருப்பயணிகள் அங்கு செல்கின்றனர். ஆயிரக் கணக்கான புதுமைகள் நடைபெறுகின்றன. பல தரப்பட்ட கொடிய நோய்கள் நீங்குகின்றன. மருத்துவர்களால் முற்றிலும் கைவிடப்பட்டவர்களுக்கு அவர்கள் கண்முன்னே குணம் கிடைத்துள்ளது. பாவிகள் பலர் மனம் திரும்புகின்றனர் என்பது தான் சிறப்பு. : “உனக்கு நான் காட்சி கொடுத்ததினால் நீ இவ்வுலகில் துன்பம் இல்லாமல் வாழ்வாய் என்று நான் கூறமாட்டேன். மாறாக உனக்கு கலப்பில்லா மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு மறுஉலகில் தான”; என்று லூர்து அன்னை பெர்நதத்துக்கு கூறியிருந்ததுபடி அவர் பல வேதனைகளை அனுபவித்த பிறகு இறைவனடி சேர்ந்தார்.
12.02.99 “இந்து” ஆங்கில நாழிதழ் கீழ்கண்ட புதுமை சொல்லப்படுகிறது. கொடிய நோயின் பின்விளைவாக முடக்கு வாதத்தில் விடப்பட்ட ஒரு நோயாளி லூர்து நகரின் புனிதத் தலத்திற்கு கொண்டு வரப்பட்டார். 51 வயதான இவர் முற்றிலும் முடமாகி நடக்க இயலாதிருந்தவர். இங்கு புனித அருவிக்கு அருகில் கொண்டு வரப்பட்ட சில மணி நேரத்திற்குள் துணை இன்றி நடக்க ஆரம்பித்தார். இது 66வது புதுமையாக மருத்துவர்களால் ஐயந்திரிபற ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் திருச்சபை ஐயத்திற்கு இடமின்றி தெய்வச் செயல்தான் புதுமைதான் என்று புடமிட்டு சோதித்தறிந்த பின் ஏற்றுக் கொண்டது 12 ஆண்டுகளுக்கு பிறகே என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுக்காலம், வாரம் 5 சனி

முதல் வாசகம்

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 12: 26-32; 13: 33-34

அந்நாள்களில் இப்போதுள்ள நிலை நீடித்தால் அரசு தாவீதின் வீட்டுக்கே திரும்பிச் சென்றுவிடும். ஏனெனில், இம்மக்கள் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்தில் பலிசெலுத்த இனிமேலும் போவார்களானால், அவர்களது உள்ளம் யூதாவின் அரசன் ரெகபெயாம் என்ற தங்கள் தலைவனை நாடும்; என்னைக் கொலை செய்துவிட்டு யூதாவின் அரசன் ரெகபெயாம் பக்கம் சேர்ந்து கொள்வார்கள் என்று தன் இதயத்தில் எரொபவாம் சொல்லிக் கொண்டான். இதைப் பற்றித் தீரச் சிந்தித்து, அவன் பொன்னால் இரு கன்றுக் குட்டிகளைச் செய்தான். மக்களை நோக்கி, நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா! இஸ்ரயேலரே! இதோ, உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டுவந்த உங்கள் தெய்வங்கள்!என்றான். இவற்றுள் ஒன்றைப் பெத்தேலிலும் மற்றொன்றைத் தாணிலும் வைத்தான். இச்செயல் பாவத்துக்குக் காரணமாயிற்று. ஏனெனில் மக்கள் கன்றுக் குட்டியை வணங்கத் தாண் வரையிலும் செல்லத் தொடங்கினர். மேலும் அவன் தொழுகை மேட்டுக் கோவில்கள் கட்டி, லேவியரல்லாத சாதாரண மக்களை அவற்றில் குருக்களாக நியமித்தான். அதுவுமின்றி, யூதாவின் விழாவுக்கு இணையாக, எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் எரொபவாம் ஒரு விழாவை எற்படுத்திப் பலிபீடத்தின் மேல் பலியிட்டான். அவ்வாறே பெத்தேலிலும் தான் செய்து வைத்த கன்றுக் குட்டிகளுக்குப் பலியிட்டான். மேலும் தான் அமைத்திருந்த தொழுகை மேடுகளின் குருக்களைப் பெத்தேலில் பணி செய்யும்படி அமர்த்தினான். இவற்றின் பின்னும் எரொபவாம் தன் தீய வழியை விட்டு விலகாமல் சாதாரண மக்களைத் தொழுகை மேட்டுக் குருக்களாக அமர்த்தினான். யார் விரும்பினார்களோ, அவர்களை அவன் திருநிலைப்படுத்த, அவர்கள் தொழுகை மேட்டுக் குருக்கள் ஆயினர். இச்செயல் எரொபவாமின் வீடு பாவத்திற்கு உள்ளாவதற்கும் மண்ணிலிருந்து அழிந்தொழிந்து போவதற்கும் காரணமாயிற்று.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 106: 6-7. 19-20. 21-22


பல்லவி: ஆண்டவரே! உம் மக்கள்மீது இரக்கம் காட்டி என்னை நினைவுகூரும்.

எங்கள் மூதாதையரின் வழிநடந்து, நாங்களும் பாவம் செய்தோம்; குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம்.
எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர் செய்த வியத்தகு செயல்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. பல்லவி

அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;
தங்கள் `மாட்சி’க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்துகொண்டனர். பல்லவி

தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;
காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்;
செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா. : (மாற்கு 8:1-10)

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-10

அக்காலத்தில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம், “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை. நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பி விட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்” என்று கூறினார். அதற்கு அவருடைய சீடர்கள், “இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?” என்று கேட்டார்கள். அப்போது அவர் அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள் “ஏழு” என்றார்கள். தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள். சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன. அவற்றின்மீது அவர் ஆசி கூறிப் பரிமாறச் சொன்னார். அவர்கள் வயிறார உண்டார்கள்; மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள். அங்கு இருந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேர். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்; உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பிப்ரவரி:10 புனித கொலாஸ்திக்கா

பிப்ரவரி:10
புனித கொலாஸ்திக்கா
துறவினி-(கி.பி.480-547)

இத்தாலியில் செல்வந்தர்களான பெற்றோர்களுக்கு இரட்டைக் குழந்தைகளாக பிறந்தவர்கள் கொலாஸ்திக்காவும் அவர் சகோதரர் பெனடிக்டும். இளவயதிலிருந்தே இருவரும் பெற்றோரின் செல்வங்களை குப்பையென மதித்து வந்தனர். இச்சூழலில் பெனடிக்ட் முதலில் சுபியாக்கோவுக்கும் அங்கிருந்து மோன்டே காசினோவுக்கும் சென்ற போது பெனடிக்ட் தொடங்கிய துறவு மடத்திற்கு சற்று அப்பால் கொலஸ்திக்காவுக்கும் ஒரு மடத்தைக் கட்டி முடித்தார். இவரோடு வாழ்ந்த துறவினிகள் பெனடிக்ட் தயாரித்த துறவுவாழ்வு ஒழுங்குகளையே பின்பற்றினர்.
ஆண்டுக்கு ஒரு முறை தவக்காலம் தொடங்குமுன் இரட்டைப் பிள்ளைகள் ஆன்மீகம் பற்றிப் பேசி பரவசம் அடைய ஒன்றாக வந்து சந்திப்பது வழக்கம். அவர்களின் கடைசிசந்திப்பைப் பற்றி புனித கிரகரி அழகாக விபரிக்கின்றார். சந்திப்பு முடிந்த பின் மாலைநேரமாகி விட்டதென்று தங்கையிடம் விடைபெற முயல்கிறார் பெனடிக்ட். தமது இறுதி நேரம் அண்மையில் இருக்கிறது என்பதை உணர்ந்த கொலஸ்டிக்கா இரவு முழுவதும் தங்குங்கள் ஆசை தீர ஆன்மீக காரியங்களைப் பற்றி பேசி மகிழ்வோம் என்று அண்ணனிடம் கூறுகின்றார். அண்ணனோ இது நம் சபை ஒழுங்குக்கு எதிரானது, என்று சொல்லி தம் துறவிகளுடன் விடை பெற முயல்கின்றார்.
அண்ணனை வற்புறுத்துவதில் இனிப் பயனில்லை என்று முடிவு செய்து இறைவனிடம் மிக உருக்கமாக மன்றாடுகின்றார். உடனே இடி மின்னலுடன் கூடிய பெரு மழை பெய்யத் தொடங்கியது. பெனடிக்ட் புறப்பட முடியாத நிலையில் சகோதரியே என்ன செய்துவிட்டாய்? இறைவன் உன்னை மன்னிக்கட்டும் என்றார். நான் உங்களிடம் ஒரு விருப்பத்தை தெரிவித்தேன் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதே விருப்பத்தை எல்லாம் வல்லவரிடம் சமர்ப்பித்தேன். என் மன்றாட்டும் கேட்கப்பட்டது. என்று பதில் உரைத்தார்.
மறுநாள் காலையில் பெனடிக்ட் தம் தோழர்களுடன் விடை பெற்றச் சென்றார். 3 நாள்கள் உருண்டோடின. ஆவர் தனது மடத்து ஆலயத்தில் செபித்துக் கொண்டிருந்தார். அவ்வேளையில் தன் தங்கையின் ஆன்மா வெண்புறா வடிவில் விண்ணில் பறந்து செல்வதாக காட்சி கண்டார். இதைத் தொடர்ந்து தம் உடன் துறவிகளிடம் தம் தங்கை இறைவனடி சென்றுவிட்டார் என்று அறிவித்தார். பின்னர் தனக்கென்று தயாரித்திருந்த கல்லறையில் தங்கையை அடக்கம் பண்ணினார். இன்று பெனடிக்டைன் சபை 14 நாடுகளில் வேரூன்றியுள்ளது. இந்த இரு புனிதர்களும் தொடங்கிய துறவற சபை ஏறத்தாழ 5000 புனிதர்களை உருவாக்கித் திருச்சபைக்கு கொடுத்துள்ளது.

பொதுக்காலம், வாரம் 5 வெள்ளி

முதல்வாசகம்


அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 29-32; 12: 19

ஒரு நாள் எரொபவாம் எருசலேமிலிருந்து வெளியே போனபோது, சீலோவைச் சார்ந்த அகியா என்ற இறைவாக்கினர், அவனை வழியில் கண்டார். அவர் புதுச் சால்வை ஒன்று அணிந்திருந்தார். இருவரும் வயல் வெளியே தனித்திருந்தனர். அப்பொழுது அகியா தாம் போர்த்தியிருந்த புதுச் சால்வையை எடுத்து அதைப் பன்னிரு துண்டுகளாய்க் கிழித்தார். பிறகு அவர் எரொபவாமை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: இவற்றில் பத்துத் துண்டுகளை உனக்கென எடுத்துக்கொள். ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இவ்வாறு கூறுகிறார்: இதோ, நான் சாலமோன் கையினின்று அரசைப் பறித்து, பத்துக் குலங்களை உனக்கு அளிக்கப் போகிறேன். ஆயினும் என் ஊழியன் தாவீதை முன்னிட்டும், இஸ்ரயேலரின் நகர்கள் அனைத்திலிருந்தும் நான் தேர்ந்துகொண்ட எருசலேம் நகரை முன்னிட்டும் ஒரு குலம் மட்டும் அவன் கையில் இருக்கும்.’ ” தாவீதின் குடும்பத்துக்கு எதிராக அன்று கிளர்ந்தெழுந்த இஸ்ரயேலர் இன்றுவரை அவ்வாறே இருக்கின்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 81: 9-10. 11-12. 13-14


பல்லவி: கடவுளாகிய ஆண்டவர் நானே; நீங்கள் எனக்குச் செவிசாய்ப்பீர்
.

உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது.
உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர் நானே. பல்லவி

ஆனால் என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை.
எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின் கடின இதயங்களிடமும் அவர்களை விட்டு விட்டேன். பல்லவி

என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.
நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா. : (மாற்கு 7:31-37)

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37

இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக்கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ் நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி, “எப்பத்தா” அதாவது `திறக்கப்படு’ என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மாந்தை மாதா திருவிழா

மன்னார் மறைசாட்சிகளின் மண்ணில் , கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆழத்தையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றி நிற்கும் மாந்தை மாதா திருத்தலத்தின் பெருவிழாவைக் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அறிய மாந்தை மாதா திருவிழா

பொதுக்காலம், வாரம் 5 வியாழன்

முதல் வாசகம்

 

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 4-13

அந்நாள்களில் சாலமோன் முதுமை அடைந்தபோது, அவருடைய மனைவியர் அவர் இதயத்தை வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றும்படி மாற்றிவிட்டனர். அதனால் அவர் உள்ளம் தம் தந்தை தாவீதின் உள்ளத்தைப்போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கவில்லை. சாலமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்தையும் அம்மோனியரின் அருவருப்பான மில்கோமையும் வழிபடலானார். இவ்வாறு சாலமோன், ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தார். தம் தந்தை தாவீது ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியது போன்று அவர் செய்யவில்லை. சாலமோன் எருசலேமுக்கு எதிரில் இருந்த மலையில் மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும் அம்மோனியரின் அருவருப்பான மோலேக்குக்கும் தொழுகை மேடுகளைக் கட்டினார். இப்படியே தங்கள் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுவதற்காக, வேற்றினத்தாரான தம் மனைவியர் எல்லாருக்கும் சாலமோன் இவ்வாறு செய்து கொடுத்தார். ஆண்டவர் சாலமோன்மீது சினமுற்றார். ஏனெனில் தமக்கு இருமுறை காட்சியளித்திருந்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து அவர் இதயம் விலகிச் சென்றது. வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம் என்று ஆண்டவர் அவருக்குக் கட்டளையிட்டிருந்தும், அக்கட்டளையை அவர் கடைப்பிடிக்கவில்லை. ஆகையால் ஆண்டவர் சாலமோனை நோக்கி, நான் உன்னோடு செய்த உடன்படிக்கையையும், நான் உனக்கு விதித்த நியமங்களையும் மீறி, நீ இவ்வாறு நடந்துகொண்டதால் உன் அரசை உன்னிடமிருந்து பறித்து அதை உன் பணியாளனுக்குக் கொடுக்கப்போவது உறுதி. ஆயினும் உன் தந்தை தாவீதின் பொருட்டு, உன் காலத்தில் நான் இதைச் செய்யமாட்டேன். உன் மகன் கையினின்று அதைப் பறித்து விடுவேன். ஆயினும் அரசு முழுவதையும் பறித்துவிடாமல், என் அடியான் தாவீதின் பொருட்டும் நான் தேர்ந்து கொண்ட எருசலேமின் பொருட்டும் ஒரு குலத்தை உன் மகனிடம் விட்டுவைப்பேன் என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 106: 3-4. 35-36. 37,40


பல்லவி: ஆண்டவரே! உம் மக்கள்மீது இரக்கம் காட்டி என்னை நினைவுகூரும்!

நீதிநெறி காப்போர் பேறுபெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபெற்றோர்!
ஆண்டவரே! நீர் உம் மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவுகூரும்!
அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணை செய்யும்!பல்லவி

வேற்றினத்தாரோடு கலந்து உறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர்;
அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்; அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின. பல்லவி

அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர்;
எனவே, ஆண்டவரின் சினம் அவர்தம் மக்களுக்கெதிராகப் பற்றியெரிந்தது; தமது உரிமைச் சொத்தை அவர் அருவருத்தார்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களிடம் மிகுந்துள்ள தீமையை அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. அல்லேலூயா. :(மாற்கு 7:24-30)

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 24-30

அக்காலத்தில் இயேசு புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை. உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது. அவர் ஒரு கிரேக்கப் பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார். இயேசு அவரைப் பார்த்து, “முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். அதற்கு அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், “நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று” என்றார். அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பிப்ரவரி:08 புனித ஜெரோம் எமிலியானி

பிப்ரவரி:08
புனித ஜெரோம் எமிலியானி
குரு-(கி.பி.1481-1537)

இவர் பிரபு குலத்தில் தோன்றியவர். படையில் சேர்ந்து பணியாற்றிய பின் த்ரவிதோ நகரின் ஆளுநராக நியமனம் பெற்றிருந்தார். அங்கு நடந்த போரில் கைதியாக்கப்பட்டு விலங்கிடப்பட்டார். சிறையில் நடந்த இன்னல்களை மிகுந்த பொறுமையுடன் ஏற்றுக் கொண்டார். இவர் தேவ தாயாரின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். சிறையில் நாட்களை செபத் தியானத்தில் செலவழித்தார். சிறையில் மரியன்னை இவருக்கு காட்சியளித்து இவருடைய விலங்குகளை உடைத்து இவரை சிறையில் இருந்து விடுவித்தார். எமிலியான் அந்த விலங்கை அந்தத் தாயின் பீடத்தில் தொங்கவிட்டு தேவ ஊழியத்தில் தம் வாழ்நாட்களை செலவழிக்க முடிவு செய்தார். அக்காலத்தில் ஏற்பட்ட கொள்ளை நோய்களால் வருந்துவோரைச் சந்தித்து தம்மாலியன்ற உதவியளித்தார்.
கொள்ளை நோயினிமித்தம் கைவிடப்பட்ட ஆதரவற்ற பிள்ளைகளைச் சேர்த்து அவர்களுக்கு தொண்டு புரிந்தார். இவர்களைப் பேணுவதற்காகவே ஒரு துறவற சபையை நிறுவினார். பல நகரங்களிலும் இருந்த பிள்ளைகளை ஒன்று சேர்த்து பேணி வருவது இந்த சபையினரின் முதன்மையான குறிக்கோளாயிருந்தது. 1537ம் ஆண்டில் ஒரு முறை புனித தொற்று நோயாளருக்கு பணிவிடை செய்து வருகையில் தாமும் அதே நோயால் தாக்கப்பட்டு மண்ணக வாழ்வை முடித்துக் கொண்டு விண்ணக வாழ்வை பெற்றுக் கொண்டார். 9ம் பத்திநாதர் இவரை ஆதரவற்ற ஏழைகளுக்கு பாதுகாவலராக அறிவித்தார்.

பொதுக்காலம், வாரம் 5 புதன்

முதல் வாசகம்


அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 10: 1-10

அந்நாள்களில் ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, சாலமோன் அடைந்திருந்த புகழைப் பற்றிச் சேபா நாட்டு அரசி கேள்வியுற்றுக் கடினமான கேள்விகள் மூலம் அவரைச் சோதிக்க வந்தார். அவர் பரிவாரங்களோடும், நறுமணப் பொருள், மிகுதியான பொன், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றைச் சுமந்துவந்த ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார். அவர் சாலமோனிடம் தம் மனத்திலிருந்த கேள்விகள் அனைத்தையும் வெளிப்படுத்தினார். சாலமோன் அவருடைய கேள்விகளுக்கெல்லாம் விடை கூறினார். அவர் கேட்டவற்றுள் பதிலளிக்க இயலாதபடி எதுவும் அரசருக்குப் புதிராகத் தோன்றவில்லை. சேபாவின் அரசி, சாலமோனுக்கு இருந்த பல்வகை ஞானம், அவர் கட்டியிருந்த அரண்மனை, அவர் உண்டு வந்த உணவு வகைகள், அவருடைய அலுவலரின் வரிசைகள், பணியாளர்களின் சுறுசுறுப்பு, அவர்களுடைய சீருடை, பானம் பரிமாறுவோரின் திறமை, ஆண்டவரின் இல்லத்தில் அவர் செலுத்திய எரிபலிகள் ஆகியவற்றைக் கண்டு பேச்சற்றுப் போனார். அவர் அரசரை நோக்கிக் கூறியது: உம்முடைய செயல்களையும் ஞானத்தையும் பற்றி என் நாட்டில் நான் கேள்விப்பட்டது உண்மையே எனத் தெரிகிறது. நான் இங்கு வந்து அவற்றை நேரில் காணும் வரை, அச்செய்திகளை நம்பவில்லை. இப்பொழுதோ, இங்குள்ளவற்றுள் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லை என அறிகிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதை விட, உம் ஞானமும் செல்வமும் மிகுதியாய் இருக்கின்றன. உம்முடைய மனைவியர் நற்பேறு பெற்றோர்! எப்போதும் உமக்குப் பணிபுரிந்து உம்முடைய ஞானம் நிறைந்த மொழிகளைக் கேட்கும் உம்முடைய பணியாளரும் நற்பேறு பெற்றவரே! உம்மீது பரிவு கொண்டு உம்மை இஸ்ரயேலின் அரியணையில் அமர்த்திய உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! ஆண்டவர் இஸ்ரயேலின் மீது என்றென்றும் அன்பு கொண்டுள்ளதால், அவர்களுக்கு நீதி நியாயம் வழங்க உம்மை அரசராக ஏற்படுத்தியுள்ளார்.அவர் ஏறத்தாழ நாலாயிரத்து எண்ணூறு கிலோ பொன், ஏராளமான நறுமணப் பொருள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அரசருக்கு அளித்தார். சேபாவின் அரசியிடமிருந்து வந்தது போல, அத்துணை நறுமணப் பொருள்கள் அரசர் சாலமோனுக்கு அதன் பிறகு வந்ததே இல்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 37: 5-6. 30-31. 39-40


பல்லவி: நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்.

உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். பல்லவி

நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும்.
கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை. பல்லவி

நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில்அவர்களுக்கு வலிமையும் அவரே.
ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்;
அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை. அல்லேலூயா. : (மாற்கு 7:14-23)

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 14-23

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, “நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்று கூறினார். அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப் பற்றிக் கேட்க, அவர் அவர்களிடம், “நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப்படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய்விடுகிறது” என்றார். இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயன என்று குறிப்பிட்டார். மேலும், “மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.