கிறிஸ்து பிறப்பு பெருவிழா.2012.12.25


2012.12.25

முன்னுரை.
உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாட பெருமகிழ்ச்சியுடன் ஒன்று கூடியுள்ளோம்.
முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இக்காலத்தில்; தம் மகன் வழியாக நம்மோடு பேசுகின்றார். நாம் செய்த அறச் செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தினால் கடவுள் நம்மை மீட்டார்: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத் தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன, என்பது இயேசுவின் பிறப்பு நமக்குத் தரும் உறுதி மொழியாகும். இதுவே நமக்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி. இயேசுவின் பிறப்பு நம் ஒவ்வொருவருக்கும் எண்ணிறைந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகின்றது. விடுதலையும், மகிழ்வும், அமைதியும் அவரது பிறப்பின் வழியாக நாம் பெற்றுக்கொள்ளும் செல்வங்களாகும். இதற்காகவே மீட்பர் இயேசு நமக்காகப் பிறந்துள்ளார். இந்த நற்செய்தி கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோருக்கு நிறைவான மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாக இருக்கும்.
இந்த அருள் உண்மைகளை நம் மனத்தில் ஆழமாகப் பதித்தவர்களாக, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழவும், ஆண்டவருக்குள் மகிழ்ந்திருந்து, அவரை எப்பொழுதும் புகழ்ந்தேத்தவும், நாம் அனைவரும் அமைதியின் தூதர்களாக வாழவும் பணிபுரியவும் வரம் கேட்டுச் செபிப்போம்.

முதல் வாசகம்
மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்:இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 52:7-10

நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ;உன் கடவுள் அரசாளுகின்றார் ; என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்: அவர்கள் அக்களிப்பு ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்: ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்: ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்: எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். புpற இனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்: மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா. 98: 1-6.
பல்லவி: உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.பல்லவி

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்: பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.பல்லவி

யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்தேத்துங்கள்: யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்,பல்லவி

இரண்டாம் வாசகம்.
கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்:.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-6

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்: இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்: இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
இவ்வாறு இறைமகன் வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார். ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது ;நீ என் மைந்தர்: இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன் ; என்றும், ;நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார் என்றும் எப்போதாவது கூறியதுண்டா? மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, ;கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக். 2:13-14
அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்
இடையர்கள் மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும்; கண்டார்கள்:
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 15-20

வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரை யொருவர் நோக்கி, ;வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்;; என்று சொல்லிக்கொண்டு, விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.
அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது..
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.
1. முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக எம் மூதாதையரிடம் பேசிய இறைவனாகிய தந்தையே! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்கும் ஞானத்தையும், வலிமையையும் அளித்து நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், அவர்களுக்கு தேவையான அருள் வரங்களை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வியத்தகு செயல்களால் எம்மை வழிநடாத்தும் தந்தையே! உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழவும், அமைதியின் தூதர்களாக வாழவும், செயற்படவும் தேவையான ஞானத்தை அளித்துக் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. மக்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறியும் தந்தையே! உலக நாடுகளில் அனைத்திலும் உண்மைக்காகவும், நீதிக்காகவும், விடுதலைக்காகவும், உரிமை வாழ்வுக்காகவும், அன்புக்காகவும் தாகித்து நிற்கும் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, அவர்களின் குறைகளைப் போக்கி நிறைவு செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அரும்பெரும் செயல்கள்; புரியும் வல்லவராம் தந்தையே இறைவா! நீர் எமக்கு கொடுத்துள்ள எல்லா வளங்களுக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம். இம் மகிழ்வின் காலத்தில் அவற்றை நாம் விரயமாக்காது, தேவையற்ற, ஆடம்பரப் பொருட்களுக்காகச் செலவிடாது பெறுப்புணர்வோடு அவைகளைப் பயன்படுத்துவதற்கும், ஏழைகளோடு அவற்றைப் பகிர்ந்து வாழ்வதற்கும் வேன்டிய நல்லுள்ளத்தை எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே! இன்று இத்திருப்பலியில் பங்குகொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர்மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்  2012 Christmas 25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *