பொதுக்காலம் 21 வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-25

சகோதரர் சகோதரிகளே, திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும். சிலுவை பற்றிய செய்தி அழிந்துபோகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை. ஏனெனில், “ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. இவ்வுலகைச் சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டார் அல்லவா? கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்துகொள்ள முடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்துகொள்ளவில்லை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்சய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார். யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக் கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். ஏனெனில் மனித ஞானத்தை விடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையை விட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 33: 1-2. 4-5. 10-11

பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.

நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.
யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். பல்லவி

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்;
அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்;
மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்துவிடுகின்றார்.
ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்;
அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்; மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். நள்ளிரவில், `இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, `எங்கள் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள். முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, `உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது’ என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, `ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள். அவர் மறுமொழியாக, `உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *