ஜுன்:13 – புனித பதுவை அந்தோனியார்

ஜுன்:13
புனித பதுவை அந்தோனியார்
மறைவல்லுனர் – (கி.பி.1195-1231)

 

போர்த்துக்கல் நாட்டில் லிஸ்பன் நகரில் பிறந்த இவர் தம் இறுதி நாள்களை இத்தாலி நாட்டில் பதுவை நகரில் செலவழித்ததாலும் இவரது கல்லறை இங்கே இருப்பதாலும் இவர் பதுவை அந்தோனியார் என்று அழைக்கப்படுகின்றார். இவரது திருமுழுக்குப் பெயர் பெர்டினான்ட். இவர் கப்புச்சின் சபையில் சேர்ந்த போது இவருக்கு முன்னோடியாக விளங்கிய தவ முனிவர் (பெரிய) அந்தோனியாரின் பெயராகத் தமது பெயரை மாற்றிக் கொண்டார்.

பிரபு குலத்தில் தோன்றிய இவர் 15 வயதில் அகஸ்டினியன் துறவியானார். 8 ஆண்டுகள் கொயிம்ப்ராவில் தவ முயற்சிகளிலும் மறைக்கல்வி கற்றுக் கொள்வதிலும் செலவழித்தார். கி.பி.1220ல் மொரோக்கோவில் கிறிஸ்துவுக்காக குருதி சிந்தி உயிர் துறந்த பிரான்சிஸ்கன் துறவிகளின் உடல்களை டான்பேட்ரோ கொண்டு வந்ததை புனிதர் பார்த்தார்.

பார்த்த பிறகு அவருக்குள் தாமும் போய் இயேசுவுக்காக குருதி சிந்த வேண்டும் என்ற தணியாத தாகம் ஏற்படவே தற்செயலாக அவரது துறவு மடத்திற்கு வந்த கப்புச்சின் சபையாரிடம் தம்மை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சினார். கி.பி.1221ல் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

மொரோக்கோவுக்கு புறப்படத் தம்மை தயாரித்துக் கொண்டார். புறப்படுமுன் கொடிய நோயினால் தாக்கப்பட்டு ஜரோப்பாவுக்கு திரும்பிவிட முயன்றார். எதிர்மாறாக சிசிலியில் மெசினா நகருக்கு கப்பல் போய்ச்சேர்ந்தது. நேரே அசிசி நகரை அடைந்தார். அப்போது ஃபோர்லி என்ற இடத்தில் ஒரு குருப்பட்டம் நிகழ எல்லாம் தயார் நிலையிலிருந்தது. விழா மறையுரை ஆற்ற ஒப்புக் கொண்டிருந்த டொமினிக்கன் சபைத் துறவி வர இயலாத நிலை ஏற்ப்பட்டது.

மறையுரை ஆற்றும்படி நம் புனிதரைக் கேட்டுக் கொண்டனர். அவர் இசைந்தார். ஆனால் பேசத் தொடங்கியதும் அவரது திறமை ஆழமான மறைநூல் அறிவு, நாவன்மை, மக்களின் நெஞ்சங்களை மேலே எழுப்பும் ஆற்றல் அத்தனையும் கேட்டவர் யாவரையும் ஆழ்ந்த வியப்பில் ஆழ்த்தின.

இதை நேரில் பார்த்த சபைத் தலைவர் லாம்பர்டி பகுதி முழுவதிலும் மறையுரை ஆற்றும் பணிப்பொறுப்பை அவரிடம் அளித்தார். இறையியலும் அவர் துறவிகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியதாயிற்று. பாவிகள் நூற்றுக் கணக்கில் வந்து அவரிடம் அடைக்கலம் அடைந்தனர். பாறை மனம் கொண்ட பாவிகள் ஞான வாழ்வில் அக்கறை காட்டாதவர் யாவரும் அவரை அனுகிய வண்ணம் இருந்தனர்.

புனித அசிசியாரின் இறப்புக்குப் பின் அந்தோனியார் இத்தாலிக்கு வரவழைக்கப்பட்டார். அது முதல் இறுதி நாள்வரை பதுவையில் அவர் தங்கினார். ஒரு காட்டுப் பகுதியில் தங்கி கி.பி.1231ல் தொடர்ச்சியாக மறையுரை ஆற்றி வந்தார். இதனிடையில் இவர் முற்றிலும் உடல் வலிமையிழந்து காணப்பட்டார். பதுவை நகருக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் அனைத்து அருட்சாதனங்களையும் பெற்றவராக புனிதராக காலஞ் சென்றார். அப்போது இவருக்கு வயது 36. (ஜுன்:13, 1231.)

இறந்த மறு ஆண்டே இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. கி.பி.1946ல் திருத்தந்தை 12ம் பத்திநாதர் மறைவல்லுநர் பட்டமளித்து இவரை பெருமைப்படுத்தினார். இன்று திருச்சபையில் இவரை நினைவு கூர்வதற்கு முதன்மையான காரணம் ஏழைகளின் மீது இவர் கொண்டிருந்த பரிவிரக்கம். இவர் பெயரால் இன்றும் ரொட்டிகள் ஆலய வளாகங்களில் ஏழைகளுக்கு அளிக்கப்படும் வழக்கத்தை நாம் பார்க்கிறோம். இழந்த பொருட்களை கண்டுபிடிக்க இவரின் உதவியை மக்கள் நாடுகின்றதைப் பார்க்கின்றோம். பல புதுமைகள் அன்றும் இன்றும் நடைபெறுவதைக் கானும் போது மிக வியப்பாக இருக்கிறது.

இப்புனிதரின் பெயர் கொண்டுள்ள ஆலயங்களில் சமய பாகுபாடற்ற முறையில் இந்துக்களும், முஸ்லீம்களும் பல்லாயிரக்கணக்கில் வருகின்றனர். திருமணத்தை நல்ல முறையில் நடத்திக் கொடுக்க, பிள்ளை வரம் பெற்றுத்தர, காணாமற்போனதைக் கண்டுபிடிக்க, பேய்பிடித்தவரிடம் பேயின் விலங்குகளை அறுத்தெறிய, இவ்வாறு பல நன்மைகளை எதிர்பார்த்து அவற்றைப் பெற்று மகிழ்ச்சியடைகின்ற ஆயிரக்கணக்கான பக்தர்களை நாம் இன்றும் காணலாம். இதற்கு இறைவனுடன் இணைந்து வாழ்ந்து மேலுலகில் இறைவனிடம் ஆற்றல் பெற்றவர் என்ற காரணம் தவிர வேறு எதையும் சொல்வது முற்றிலும் தவறாகும்.
ஆனால் அதேவேளையில் இப்புனிதர் மட்டில் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்கள் அல்லாதவரும் கொண்டிருக்கும் மூடநம்பிக்கை எதுவாயினும் அதைச் சுட்டிக்காட்டவும் நாம் தயங்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *