மே:26 – புனித பிலிப்புநேரி

மே:26
புனித பிலிப்புநேரி
குரு – (கி.பி.1513-1595)

இவர் இத்தாலியில் பிளாரன்ஸ் நகரில் பிறந்தவர். 26 வயது நடக்கும்போது வணிகத் தொழிலை விட்டு விட்டு தமது ஆன்மீக நலனைக் குறித்தும் மற்றவர்களின் ஆன்மீக ஈடேற்றத்தை முன்னிட்டும் உரோமை நகர் சென்றடைந்தார். தத்துவக்கலை, இறையியல் பயின்றதோடு ஜெபத்திலும,; தவமுயற்சிகளிலும் தம்மை மிகவும் ஈடுபடுத்திக் கொண்டார். அந்நகரில் 12 மைல் சுற்றளவில் இருந்த புகழ்மிக்க 7 தேவாலயங்களையும் மாலையானதும் நடந்தே சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டு இரவில் புனித செபஸ்தியாரின் புதை குழி வளாகத்தில் தங்குவார்.

மேலும் நலிவுற்ற மக்களின் நலன்களைக் கருதி மருத்துவ மனைகளில் நோயாளிகளைச் சந்திப்பார். தெரு வழியாக செல்லும் போது ஆன்மீகத்தில் அக்கறையற்றவர்களை இணங்கண்டு தமது திறமையான பேச்சினாலும் அனுகுமுறைகளினாலும் இறைவன் பக்கம் மனம்மாறச் செய்வார். இந்த அனுபவமானது கி.பி.1548ல் தமது குறிக்கோளை ஏற்றுக் கொண்டவர்களை ஒருங்கிணைக்கவும் திவ்ய நற்கருணை ஆராதனை பக்தி முயற்சிகளை தொடங்குவதற்கும் புனிதரைத் தூண்டியது. இவ்வாறு 10 ஆண்டுகள் உருண்டோடின.

இவரின் ஆன்ம குரு இவரைக் குருத்துவததை நாடப் பணித்தார். குருப்பட்டம் பெற்றபின் 33ஆண்டுகளாக “ஆரட்டரி„ என்று அழைக்கப்படும் செபக் குழுவை பல குருக்களைக் கொண்டு நடத்தினார். ஏராளமான ஞானப்பயன் கிடைப்பதைக் கண்டு மகிழ்ந்தார். இவர்களே (ஆரட்டோரியன்ஸ்) “ஜெபக் குழுவினர்„ என்று இந்நாள்வரை போற்றப்படுகின்றனர். நாள்தோறும் இவரிடம் ஒப்பரவு அருட்சாதனம் பெறவும் ஆன்மீக ஆலோசனை பெறவும் தொழிலாளர் பல பணிகளை முடித்தபின் வந்த வண்ணம் இருந்தனர். கர்தினால்கள் பலரும் குருக்களும் இவரது ஆலோசனையை நாடிவந்தனர். இவர் திருப்பலி நிறைவேற்றும் போதெல்லாம் பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார். இளைஞர்கள் பலரை ஆன்மீக வாழ்வுக்கு கொண்டு வந்து சேர்த்தார். எப்போதும் மகிழ்ச்சியாயிருக்கவும் ஆழமான இறைஅனுபவம,; தாழ்ச்சி, ஒறுத்தல் ஆசைகளைக் கட்டுப்படுத்தல் அடிக்கடி ஒப்பரவு அருட்சாதனத்தைப் பெறுதல் ஆகியவற்றில் தம்மிடம் வந்தவர்களுக்கு பயிற்சி அளித்தார். இளைஞர் ஒருவர் திவ்விய நன்மை உட்கொண்ட உடனே தன் அலுவலகத்திற்கு விரைவாக போய்விடுவார். ஒருமுறை இவரது குற்றத்தை உணர்த்தும் முகமாக பூசைக்கு உதவி செய்யும் சிறுவர் இருவரிடம் எரியும் மெழுகுவர்த்திகளை கொடுத்து “அந்த இளைஞரின் பின்னால் ஓடுங்கள்„ என்றார். இளைஞரும் தம் குற்றத்தை இதன்மூலம் உணர்ந்து திருத்திக் கொண்டார். சிலருக்கு மற்றவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் பழக்கம் இருந்ததைக் கண்டு அவர்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். பிறரை பழிதூற்றும் ஒரு பெண்ணிடம் ஒரு வாத்தின் இறகுகளைப் பறிக்கச் சொன்னார். பறித்து முடித்த பின் அவற்றைக் காற்றில் பறக்கவிடச் சொன்னனார். இதன்பின் அந்தப் பெண்ணிடம் இன்னொன்று செய்யுமாறு கேட்டிருக்கின்றார். அதாவது அவ்வளவு முடிகளையும் ஒன்று சேர்த்துக் கொண்டுவரக் கேட்டிருக்கின்றார். இது இயலாதே என்று பெண்கூற அப்படித்தான் நீ மற்றவர்களின் பெயரைக் கெடுத்தபின் அதை நீ சரிப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொள் திருத்திக் கொள் என்று சொன்னார்.

இவரை உரோமை நகரின் இரண்டாம் அப்போஸ்தலர் என அழைக்கின்றார்கள். இது இவருக்கு மிகப் பொருத்தம். நாள்தோறும் பிலிப்பு வைகறையில் தாழ்ச்சியுடன் எழுப்பிய மன்றாட்டு ஆண்டவரே, பிலிப்பை உமது அருட்கரம் கொண்டு நடத்தும். இல்லாவிட்டால் பிலிப்பு உம்மைக் காட்டிக் கொடுத்து விடுவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *