ஒப்புரவு அருட்சாதனம்

ஒப்புரவு (பாவசங்கித்தனம்.)

திருச்சபை சட்டநூலின் படிப்பினைகள்

நூல் – 4

பகுதி 1

தலைப்பு 4

ஒப்புரவு அருளடையாளம்.

தி.ச. 959. ஒப்புரவு அருளடையாளத்தில் விசுவாசிகள் சட்டமுறையான பணியாளரிடம் தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவற்றுக்காக மனம்வருந்தி, தங்களை மாற்றி அமைக்கும் நோக்கம் கொண்டுள்ளனர். இவர்கள் அதே பணியாளரால் அளிக்கப்படும் பாவமன்னிப்பால், திருமுழுக்கிற்குப்பின் செய்த பாவங்களுக்குக் கடவுளிடமிருந்து மன்னிப்புப் பெறுகின்றனர், அதேநேரத்தல் தங்கள் பாவத்தால் புண்படுத்தப்பட்ட திருச்சபையுடன் ஒப்புரவாகின்றனர்.

இயல் 1

அருளடையாளக் கொண்டாட்டம்.

தி.ச. 960. தங்களிடம் கனமானபாவம் இருப்பதாக உணரும் விசுவாசிகள், கடவுளோடும் திருச்சபையோடும் ஒப்புரவு ஆவதற்கான ஒரே சாதாரண வழி தனிப்பட்ட, முழுமையான பாவ அறிக்கையும் பாவமன்னிப்பும் ஆகும். உடல்ரீதியான அல்லது மனரீதியான இயலாமை மட்டுமே இத்தகைய பாவஅறிக்கைக் கடமையிலிருந்து விடுவிக்கிறது. இச்சூழ்நிலையில் வேறு வழிகள் மூலமாகவும் ஒப்புரவைப் பெற்றுக் கொள்ள முடியும்.

தி.ச. 961. கீழ்க்கண்ட சூழ்நிலைகள் இருந்தாலன்றி, தனிப்பட்ட முன்பாவ அறிக்கையின்றி, மனம் வருந்துவோர் பலருக்கு ஒரே நேரத்தில் பொதுவான முறையில் பாவமன்னிப்பு அளிக்கக்கூடாது.

2) இறக்கும் ஆபத்து நெருங்கியுள்ளது மற்றும் தனிப்பட்ட மனம் வருந்துNhரின் பாவஅறிக்கையைக் கேட்கக் குருவுக்கோ, குருக்களுக்கோ போதுமான நேரமில்லை.

3) முக்கியமான தேவை உள்ளது, அதாவது, மனம் வருந்துவோரின் எண்ணிக்கையைக் கருத்திற்கொள்ளும்போது, தனிப்பட்ட மனம் வருந்துவோரின் பாவஅறிக்கையைக் உரியகாலத்தில், சரியான முறையில் கேட்பதற்குப் பாவமன்னிப்பாளர்கள் போதுமான அளவில் இல்லை, இதனால் மனம் வருந்துவோர், தங்களின் சொந்தக் குற்றமின்றி, நீண்டகாலத்திற்கு அருளடையாளத்தின் அருளை அல்லது திருவிருந்தைப் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவர். மனம்வருந்துவோரின் எண்ணிக்கை அதிகம் என்ற காரணத்திற்காக மட்டும் பாவமன்னிப்பாளர்கள் எளிதில் கிடைக்கமாட்டார்கள் என்றால், அது போதுமான தேவையாகக் கருதப்படுவதில்லை. இத்தகைய சூழ்நிலை ஒரு சில பெரிய திருவிழா அல்லது திருப்பயணத்தின்போது ஏற்படக்கூடும்.

4) 1, 2-ன் விதிமுறைக்கேற்ப, தேவையான நிபந்தனைகள் உள்ளனவா என்பதைத் தீர்மானிப்பது மறைமாவட்ட ஆயரைச் சார்ந்தது. அவர், ஆயர் பேரவையின் ஏனைய உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்ட வரையறைகளைக் கருத்திற்கொண்டு, அத்தகைய தேவையுள்ள காரியங்களை நிர்ணயிக்கலாம்.

தி.ச. 962. கிறிஸ்தவ விசுவாசி, ஒரே நேரத்தில் பலருக்கு அளிக்கப்படும் பாவமன்னிப்பைச் செல்லத்தக்க விதத்தில் அடைவதற்கு, அவர் சரியான ஏற்புடைய நிலையில் உள்ளவராக இருப்பதோடு மட்டுமின்றி, அதே வேளையில் தற்போது தனிப்பட்ட முறையில் பாவஅறிக்கை செய்யமுடியாத கனமான பாவங்களை, உரிய காலத்தில் பாவஅறிக்கை செய்யும் எண்ணம் கொண்டவராகவும் இருக்கவேண்டும்.

2) கிறிஸ்தவ விசுவர்சிகள், இயன்றவரை, பொது மன்னிப்புப் பெறும் வேளையிலும், 1-ல் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளைப் பற்றி அறிவுறுத்தவேண்டும். இறக்கும் ஆபத்திலும்கூட, நேரம் இருந்தால், ஒவ்வொருவரும் மனத்துயர் வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு ஓர் அறிவுரை முன்னதாக வழங்கவேண்டும்.

தி.ச. 963. நியாயமான ஒரு காரணம் தடுத்தாலன்றி, பொது பாவமன்னிப்பின் மூலம் கனமான பாவங்கள் மன்னிக்கப்பட்ட ஒருவர், வாய்ப்புக் கிடைக்கும்போது கூடிய விரைவில், மற்றொரு பொதுப் பாவமன்னிப்புப் பெறுவதற்கு முன் தனிப்பட்ட பாவஅறிக்கை செய்யவேண்டும். இக்காரியத்தில் தி.;ச. 989 –ல் குறிப்பிடப்பட்டுள்ள கடமையைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

தி.ச. 964. அருளடையாளப் பாவஅறிக்கைகளைக் கேட்பதற்கு உரிய இடம் ஆலயம் அல்லது செபக்கூடமாகும்.

2) ஓப்புரவு அருளடையாள இருக்கையைப் பொறுத்தவரையில், ஆயர் பேரவை விதிமுறைகளை நிர்ணயிக்கவேண்டு;ம். இக்காரியத்தில், மனம்வருந்துவோருக்கும் பாவமன்னிப்பாளருக்குமிடையே, வலைத்தொட்டி பொருத்தப்பட்ட ஒப்புரவு இருக்கைகள் எப்பொழுதும் திறந்த வெளியில் வைக்கவேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும், இவ்வாறு, விரும்புகின்றவர்கள் அவற்றைத் தன்னுரிமையுடன் பயன்படுத்த முடியும்.

3) நியாயமான ஒரு காரணமின்றி, ஒப்புரவு அருளடையாள இருக்கைக்குப் புறம்பே பாவஅறிக்கைகளைக் கேட்கக்கூடாது.

இயல் 2

ஒப்புரவு அருளடையாளப் பணியாளர்

தி.ச. 965. குரு ஒருவரே ஒப்புரவு அருளடையாளப் பணியாளர் ஆவார்.

தி.ச. 966. திருப்பணியாளர் செல்லத்த்கவிதத்தில் பாவமன்னிப்பு அளிப்பதற்கு, திருப்பட்ட அதிகாரத்தைத்தவிர, தாம் பாவமன்னிப்பு அளிக்கும் விசுவாசிகளின்மேல் அவ்வதிகாரத்தைச் செயற்படுத்துவதற்கான செயலுரிமை கொண்டிருப்பது அவசியமாகும்.

2) குரு, இச்செயலுரிமையைச் சட்டத்தின் மூலமாகவோ, தி.ச. 969 –ன் விதிமுறைக்கேற்ப, தகுதி வாய்ந்த அதிகாரியால் அளிக்கப்படும் சலுகை மூலமாகவோ பெறமுடியும்.

தி.ச. 967. உரோமைத் தலைமைக் குருவைத் தவிர, உலகெங்கும் கிறிஸ்துவின்; விசுவாசிகளின் பாவ அளிக்கையைக் கேட்கும் செயலுரிமையைக் கர்தினால்மார்கள் சட்டத்தின் மூலமாகவே கொண்டுள்ளனர், அவ்வாறே ஆயர்களும் இச்செயலுரிமையைக் கொண்டுள்ளனர். ஒரு மறைமாவட்ட ஆயர் இச்செயலுரிமையை ஒரு குறிப்பிட்ட காரியத்தில் மறுத்தாலன்றி அவர்கள் அதைச் சட்ட முறைப்படி எங்கும் பயன்படுத்தலாம்.

2) பதவியின் மூலமாகவோ, தாங்கள் இணைக்கப்பட்டுள்ள மறைமாவட்டத்தின் அல்லது தஙகளுடைய உறைவிடத்தின் தலத்திருச்சபை ஆளுநரிடமிருந்து பெற்ற சலுகையின் மூலமாகவோ பாவ அறிக்கைகளை வழக்கமாகக் கேட்பதற்குச் செயலுரிமை கொணடவர்கள், அச் செயலுரிமையை, தலத்திருச்சபை ஆளுநர் ஒரு குறிப்பிட்ட காரியத்தில் மறுத்தாலன்றி, எங்கும் பயன்படுத்தமுடியும். இக்காரியத்தில் தி.ச. 974, 2 மற்றும் 3 –ன் விதியமைப்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

3) பதவியின் மூலமாகவோ, தி.சச .968, 2 மற்றும் 969, 2 ன் விதிமுறைகளுக்கேற்பத் தகுதி வாய்ந்த தலைவரின் சலுகைமூலமாகவோ, பாவஅறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமை அளிக்கப்பெற்றவர்கள், துறவற சபை அல்லது மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகம் இவற்றின் இல்லத்திலுள்ள உறுப்பினர்கள் மற்றும் அங்கு இரவும் பகலும் தங்கிவாழும் மற்றவர்களைப் பொறுத்தவரை, இச்செயலுரிமையைச் சட்டத்தாலேயே எங்கும் கொண்டுள்ளனர். இவர்கள் இச்சலுகையை, ஒரு குறிப்பிட்ட காரியத்தில் ஏதாவது ஓர் உயர்தலைவர் தமது ஆளுகைக்கு உட்பட்டவர்களைப் பொறுத்தவரை, மறுத்தாலன்றி, சட்ட முறைப்படிப் பயன்படுத்தலாம்.

தி.ச. 968. பதவியின் மூலமாக தலத்திருச்சபை ஆளுநர், பாவமன்னிப்புக்கான அகநிலைத் தலைவர், பங்குக்குரு மற்றும் பங்குக்குருவின் இடத்தில் இருப்போர் ஒவ்வொருவரும், தங்களது ஆட்சி உரிமைக்குள் பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமை கொண்டுள்ளனர்.

3) சபை அமைப்புச்சட்டங்களின் விதிமுறைக்கேற்பச் செயற்படுத்தும் ஆட்சி உரிமை கொண்டுள்ள, திருஆட்சிப்பீட அதிகாரத்திற்கு உட்பட்ட திருப்பணியாளர் துறவற சபையின் அல்லது மறைத்தூதுப் பணி வாழ்வுச் சமூகத்தின் தலைவர்கள், தங்கள் பதவியின் மூலமாக, தங்கள் ஆளுகை;குட்பட்டவர்கள் மற்றும் தங்கள் இல்லத்தில் இரவும் பகலும் தங்கியிருப்பவர்களின் பாவஅறிக்கைளைக் கேட்கும் செயலுரிமை கொண்டுள்ளனர். இக்காரியத்தில் தி;.ச. 630, 4 ன் விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

தி.ச. 969. தலத்திருச்சபை ஆளுநர் மட்டுமே, எந்தவொரு குருவுக்கும் எந்தவொரு விசுவாசியின் பாவஅறிக்கையைக் கேட்கும் செயலுரிமையை வழங்கத் தகுதி வாய்ந்தவர் ஆவார், ஆயினும், துறவற சபைகளின் உறுப்பினர்களாக இருக்கும் குருக்கள் இச்செயலுரிமையை, தங்களுடைய தலைவர்களின் குறைந்தஅளவு ஊகிக்கப்பட்ட அனுமதியின்றி, பயன்படுத்தக்கூடாது.

2) தி.ச. 968, 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள துறவற சபை அல்லது மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகத்தின் தலைவர், தமது ஆளுகைக்கு உட்பட்டவர்கள் மற்றும் தமது இல்லத்தில் இரவும் பகலும் தங்கியிருப்பவர்களின் பாவஅறிக்கையைக் கேட்கும் செயலுரிமை எந்தவொரு குருவுக்கும் வழங்கத் தகுதி வாய்ந்தவர் ஆவார்.

தி.ச. 970. தேர்வு மூலம் குருக்கள் தகுதியுடையவர்கள் என்று கண்டறியப்பட்டாலன்றி அல்லது வேறொரு வழியில் அவர்களது தகுதியுடைமை தெளிவாகத் தோன்றினாலன்றி, அவர்களுக்குப் பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமையை வழங்கக்கூடாது.

தி.ச. 971. தலத்திருச்சபை ஆளுநர் ஒரு குருவுக்கு, அவர் தமது ஆளுகை எல்லைக்குள் உறைவிடமோ தற்காலிக உறைவிடமோ கொண்டிருந்தாலும் கூட கூடியமட்டும் அவருடைய திருச்சபை ஆளுநரை முதலில் கலந்தாலோசிக்காமல் வழக்கமாகப் பாவஅறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமையை வழங்கக்கூடாது.

தி.ச. 972. பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமையை, தி.ச. 969 –ல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிவாய்ந்த அதிகாரியால், வரையறுக்கப்படாத அல்லது வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டும் வழங்கமுடியும்.

தி.ச. 973. வழக்கமாகப் பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமையை எழுத்து வடிவில் வழங்கவேண்டும்.

தி.ச. 974. தலத் திருச்சபை ஆளுநரும், அவ்வாறே தகுதிவாய்ந்த தலைவரும் கனமான காரணத்திற்காக அன்றி, வழக்கமாகப் பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமையைத் திரும்பப் பெறக்கூடாது.

2) தி.ச. 967. ல் குறிப்பிடப்பட்டுள்ள தலத் திருச்சபை ஆளுநரால் வழங்;கப்பட்ட பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமை, அவரால் திரும்பப்பெறப்படும்;போது, குரு அச்செயலுரிமையை எங்கும் இழந்துவிடுகிறார். மற்றொரு ஆளுநரால் திரும்பப்பெறப்படும்;போது திரும்பப்பெறும் ஆளுநரின் எல்லையில் மட்டும் குரு அதை இழந்துவிடுகிறார்

3) பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமையை, குருவிடமிருந்து திரும்பப்பெறும் எந்தவொரு தலத் திருச்சபை ஆளுநரும், அந்தக் குரு இணைக்கப்பட்டுள்ள சொந்தத் திருச்சபை ஆளுநரிடம் அல்லது அக்குரு துறவற சபையின் உறுப்பினராக இருந்தால், அவரின் தகுதிவாய்ந்த தலைவரிடம் தெரிவிக்கவேண்டும்.

4) தமது சொந்த உயர் தலைவரால் பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமை, திரும்பப்பெறப்படும்;போது, சபை உறுப்பினர்களின் பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமையை குரு எங்கும் இழந்துவிடுகிறார். ஆனால் தகுதிவாய்ந்த வேறொரு தலைவரால் அச்செயலுரிமைத் திரும்பப்பெறப்படும்போது, அத்தலைவரின் ஆட்சி உரிமைக்கு உட்பட்ட உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் மட்டுமே அதை இழந்துவிடுகிறார்.

தி.ச. 975. தி.ச. 967. 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள செயலுரிமை, திரும்பப்பெறப்படுவதால் மட்டுமன்றி, பணி இழப்பு, அல்லது மறைமாவட்டத்துடன் கொண்டுள்ள இணைப்பு நீக்கம் அல்லது உறைவிடம் இழப்பு ஆகியவற்றாலும் முடிவடைகிறது.

தி.ச. 976. எந்தவொரு குருவும், அவருக்கு பாவஅறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமை இல்லை என்றாலும், அங்கீகாரம் பெற்ற ஒரு குரு உடனிருந்தாலும் கூட, இறக்கும் ஆபத்திலிருக்கும் எந்தவொரு மனம் வருந்துவோரையும் எவ்விதப் பாவங்களிலிருந்தும் கண்டனங்களிலிருந்தும் செல்லத்தக்கவிதமாகவும் சட்டமுறையாகவும் விடுவிக்கலாம்.

தி.ச. 977. பத்துக் கட்டளைகளின் ஆறாம் கட்டளைக்கு எதிரான பாவத்தில் குற்ற உடந்தையாளரின் பாவமன்னிப்பு, இறக்கும் ஆபத்திற்குப் புறம்பே, செல்லத்தக்கது அல்ல.

தி.ச. 978. குரு பாவஅறிக்கைகளைக் கேட்பதில், ஒரே நேரத்தில் தாம் நடுவராகவும் குணமளிப்பவராகவும் செயல்படுகிறார் என்பதையும், இறைவனுடைய நீதி மற்றும் இரக்கத்தின் பணியாளராக இறைவனால் ஏற்படுத்தப்பட்டுள்ளார் என்பதையும் நினைவில் நிறுத்தவேண்டும். இவ்வாறு அவர் இறைவனுடைய மகிமைக்கும் ஆன்ம மீட்புக்கும் உதவமுடியும்.

2) திருச்சபையின் பணியாளர் என்ற முறையில், பாவமன்னிப்பாளர், அருளடையாளத்தை நிறைவேற்றுவதில் திருஆசிரியத்தின் கோட்பாடுகளையும் தகுதிவாய்ந்த அதிகாரியால் இயற்றப்பட்ட விதிமுறைகளையும் உண்மையுடன் கடைப்பிடிக்கவேண்டும்.

தி.ச. 979. குரு, கேள்விகளைக் கேட்பதில் மனம் வருந்துவோரின் நிலை மற்றும் வயதைக் கருத்திற்கொண்டு, விவேகத்துடனும் நுண்மதியுடனும் செயல்படவேண்டும்: பாவ உடந்தையாளரின் பெயரைக் கேட்பதைத் தவிர்க்கவேண்டும்.

தி.ச. 980. பாவமன்னிப்புக் கேட்கும் மனம் வருந்துவோரின் ஏற்புடைய நிலையைப் பற்றிப் பாவமன்னிப்பாளருக்கு எவ்வித ஐயமும் இல்லையென்றால், பாவமன்னிப்பை மறுக்கவோ தாமதப்படுத்தவோ கூடாது.

தி.ச. 981. மனம் வருந்துவோரின் நிலையைக் கருத்திற்கொண்டு, பாவமன்னிப்பாளர், பாவங்களின் தன்மைக்கும் எண்ணிக்கைக்கும் ஏற்ப, நலம் பயக்கும் மற்றும் பொருத்தமான பரிகாரங்களை விதிக்கவேண்டும். மனம் வருந்துவோர் தாமாகவே இப்பரிகாரங்களை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளார்.

தி.ச. 982. பத்துக் கட்டளைகளின் ஆறாம் கட்டளைக்கு எதிராகத் தன்னுடன் பாவச்செயலுக்குத் தூண்டுதல் என்னும் குற்றத்தை, குற்றமற்ற பாவமன்னிப்பாளரின் மேல் திருச்சபை அதிகாரியிடம் பொய்யாகத் பலரறியக் குற்றஞ் சாட்டியதாக ஒருவர் பாவஅறிக்கை செய்தால், அவர் முதலில் தமது பொய்க்குற்றச்சாட்டை முறையாகத் திரும்பப்பெற்று, மேலும் தீங்கு விளைவித்திருந்தால், அதற்குப் பரிகாரம் செய்யத் தயாராக இருந்தாலன்றி, அவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கக்கூடாது.

தி.ச. 983. அருளடையாள முத்திரை உடைக்கமுடியாதது, எனவே பாவமன்னிப்பாளர் சொல்லாலோ வேறு எவ்விதத்திலோ மனம் வருந்துவோரை எக்காரணத்தை முன்னிட்டும் காட்டிக் கொடுப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது
2) மொழிபெயர்ப்பாளர் இருந்தால் அவரும், பாவஅறிக்கையிலிருந்து எவ்விதத்திலாவது பாவங்களைப் பற்றித் தெரியவந்த அனைவரும் இரகசியம் காக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

தி.ச. 984. பாவமன்னிப்பாளர் மனம்வருந்துவோருக்குத் தீமை பயக்கும் விதத்தில் பாவஅறிக்கையிலிருந்து பெற்ற தகவல்களைப் பயன்படுத்த, இரகசியம் வெளியிடும் எவ்வித ஆபத்தும் தவிர்க்கப்பட்டாலும்கூட, தடைசெய்யப்பட்டுள்ளார்.

2) அதிகாரத்திலுள்ள ஒருவர், பாவங்களைப்பற்றி ஒப்புரவு அறிக்கையில் எந்த ஒரு காலத்திலும் தாம் பெற்ற தகவலை, வெளியரங்க ஆளுகைக்காக எவ்விதத்திலும் பயன்படுத்தக்கூடாது.

தி.ச. 985. துறவறப் புகுநிலையாளர்களின் இயக்குநரும் அவருடைய துணையாளரும், குருத்துவக் கல்லூரி அல்லது மற்றக் கல்வி நிறுவனத்;தின் அதிபரும், அதே இல்லத்தில் தங்கிவாழும் மாணவர்களின் அருளடையாளப் பாவஅறிக்கைகளைத் தனிப்பட்ட சூழ்நிலைகளில் மாணவர்கள் தாங்களாகவே கோரினாலன்றி, கேட்கக் கூடாது.

தி.ச. 986. பணியின் காரணமாக ஆன்ம அக்கறை ஒப்படைக்கப்பட்டவர்கள், தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள விசுவாசிகள் தங்கள் பாவஅறிக்கைகளைக் கேட்கும்படி நியாயமான முறையில் கோரும்போது, அதற்கு ஏற்பாடு செய்யக் கடமைப்பட்டுள்ளனர். அவர்களின் வசதிக்கேற்ற நாள்கள் மற்றும் நேரங்களில் தனிப்பாவ அறிக்கையிடுவதற்கு வாய்ப்பு அளிக்கவேண்டும்.

2) ஓர் அவசரத் தேவையில் எந்தப்பாவமன்னிப்பாளரும், இறக்கும் ஆபத்தில் எந்தக் குருவும் கிறிஸ்தவ விசுவாசிகளின் பாவஅறிக்கையைக் கேட்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இயல் 3

மனம் வருந்துவோர்.

தி.ச. 987. கிறிஸ்தவ விசுவாசிகள் ஒப்புரவு அருளடையாளத்தின் மீட்பளிக்கும் மருந்தைப் பெற வேண்டுமென்றால், அதற்கு ஏற்புடைய நிலையைக் கொண்டிருப்பது அவசியம். அதன் விளைவாக, அவர்கள் தாங்கள் கட்டிக்கொண்ட பாவங்களை உதறித்தள்ளுவர், தங்களையே மாற்றி அமைக்கும் மனவுறுதி கொண்டிருப்பர், இறைவனிடம் திரும்பி வருவர்.

தி.ச. 988. கிறிஸ்தவ விசுவாசி, கனமான ஆய்வுக்குப் பின் தான் உணாகிற, திருமுழுக்கிற்குப் பின் கட்டிக்கொண்டதும், இதுவரை திருச்சபையின் அதிகாரத்தால் நேரடியாக மன்னிக்கப்படாததும், தனிப்பாவ அறிக்கையில் வெளிப்படாததுமான அனைத்துக் கனமான பாவங்களையும், அவற்றின் தன்மை மற்றும் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு, பாவஅறிக்கை செய்யவேண்டும்.

2) அற்பப் பாவங்களையும் அறிக்கையிடக் கிறிஸ்தவ விசுவாசிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

தி.ச. 989. அனைத்து விசுவாசிகளும், தன்னறிவு வந்த வயதை அடைந்தபின் குறைந்த அளவு ஆண்டுக்கு ஒருமுறை தங்களின் கனமான பாவங்களை உண்மையுடன் அறிக்கையிடக் கடமைப்பட்டுள்ளனர்.

தி.ச. 990. மெழிபெயர்ப்பாளர் மூலம் பாவஅறிக்கையிட எவருக்கும் தடையில்லை. இக்காரியத்தில் தவறாகப் பயன்படுத்துதலையும் இடறலையும் அகற்றவேண்டும், தி;ச் 983இ 2 ன் விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டு;ம்.

தி.ச. 991. எந்தக் கிறிஸ்தவ விசுவாசிக்கும், அவர் விரும்புகின்ற, சட்ட முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட பாவமன்னிப்பாளரிடம், வேறொரு வழிபாட்டு முறையைச் சார்ந்தவரிடங்கூட, பாவஅறிக்கையிடத் தன்னுரிமை உண்டு.

இயல் 4.

பாவத்தண்டனைக் குறைப்பு

தி.ச. 992. பாவத்தண்டனைக் குறைப்பு என்பது இறைவன் முன்னிலையில் ஏற்கெனவே குற்றப்பொறுப்பு மன்னிக்கப்பட்ட பாவத்துக்குரிய இம்மைத் தண்டனையின் பொறுத்தலாகும். ஆதைக் கிறிஸ்தவ விசுவாசி தக்க ஏற்புடைய நிலையிலும், குறிப்பிட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டும், திருச்சபையின் உதவியுடன் அடைகின்றார். மீட்பின் பணியாளர் என்ற முறையில், திருச்சபையானது கிறிஸ்து மற்றும் தூயவர்களுடைய நற்பேறுபலன்கள் கருவூலத்தை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்தளித்துப் பயன்படுத்துகிறது.

தி.ச. 993. பாவங்களுக்குரிய இம்மைத் தண்டனைகளிலிருந்து, பகுதியளவாகவோ முழுமையாகவோ விடுவிப்பதைப் பொறுத்து, பாவத்தண்டனைக் குறைப்பு, பகுதி அளவானது அல்லது முழுமையானது எனப்படும்.

தி.ச. 994. எந்த விசுவாசியும், பகுதி அளவான அல்லது முழுமையான பாவத்தண்டனைக் குறைப்புகளைத் தமக்காகப் பெறலாம், அல்லது ஒப்புதலாதரவு முறையில் இறந்தவர்களுக்காகப் பயன்படுத்தலாம்.

தி.ச. 995. திருச்சபையின் உச்ச அதிகாரத்தைத் தவிர, யாருக்குச் சட்டத்தாலோ உரோமைத் தலைமைக் குருவினாலோ பாவத் தண்டனைக் குறைப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ அவர்கள் மட்டுமே அதை வழங்கமுடியும்.

2) உரோமைத் தலைமைக் குருவுக்குக் கீழ்நிலையிலுள்ள எந்த ஓர் அதிகாரியும், பாவத் தண்டனைக் குறைப்பை வழங்கும் அதிகாரத்தை மற்றவர்களிடம், திருத்தூதரக ஆட்சிப்பீடத்தால் அது தெளிவாக வழங்கப்பட்டிருந்தாலன்றி, ஒப்படைக்க முடியாது.

தி.ச. 996. ஒருவர் பாவத்தண்டனைக் குறைப்புகளைப் பெறத் தகுதி உள்ளவராக இருப்பதற்கு, அவர் திமுழுக்குப் பெற்றவராகவும், திருச்சபையின் உறவுஒன்றிப்பிலிருந்து நீக்கப்படாதவராகவும், விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து முடிக்கும் வேளையிலாவது அருள் நிலையில் உள்ளவராகவும் இருத்தல்வேண்டும்.

2) ஆயினும், பாவத்தண்டனைக் குறைப்புகளைப் பெறத் தகுதியுள்ளவர் அவற்றைப் பெறுவதற்கு, குறைந்த அளவு அவற்றைப் பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருக்கவேண்டும். சலுகையின் நிபந்தனைகளுக்கேற்ப, விதிக்கப்பட்டுள்ள செயல்களை உரிய நேரத்திலும் உரிய முறையிலும் செய்து முடிக்கவேண்டும்.

தி.ச. 997. பாவத்தண்டனைக் குறைப்புகளை வழங்குதல் மற்றும் அவற்றின் பயன்பாட்டைப் பொறுத்தவரையில், திருச்சபையின் சிறப்புச் சட்டங்களில் அடங்கியுள்ள மற்ற விதியமைப்புகளையும் கடைப்பிடிக்கவேண்டும்..

ஒப்புரவு வழிபாடு:

1. பாங்களை நினைத்துப் பார்த்தல் (ஆன்ம சோதனை)

2. பாவங்களுக்காக மனம் வருந்துதல்

3.பாவ அறிக்கையிடல்.

(குருவிடம் சென்றதும் ,சிலுவையடையாளம் இட்டு )
பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே – ஆமென்.

சுவாமி நான் பாவியாய் இருக்கிறேன். நான் செய்த பாவங்களுக்காக மனஸ்தாபப்படுகிறேன். நான் இந்த அருட்சாதனத்தைப் பெற்று …நாட்கள் அல்லது ….வாரங்கள் அல்லது ….மாதங்கள் ஆகின்றன.

(ஒவ்வொரு பாவத்தையும் எத்தனை தடவை செய்தோம் என்பதைத் தாழ்ச்சியுடன் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லவும். ,இறுதியில் 🙂

இந்தப் பாவங்களுக்காகவும் மறந்துபோன எல்லா பாவங்களுக்காகவும் என் கடந்த கால வாழ்க்கையில் செய்த அனைத்து பாவங்களுக்காகவும் மனம் வருந்துகிறேன். எனக்குப் பாவ மன்னிப்பு அளித்தருளும்.

4.அறிவுரையும் பாவப் பரிகாரமும்:

(குரு கூறும் அறிவுரைகளைக் கவனமுடன் கேட்கவும். அவர் கொடுக்கிற பரிகாரம் மனத்துயர் ஜெபத்திற்குப் பின் செய்யவேண்டும்.)

5.குருவின்பாவப் பொறுத்தல் ஆசீர்

குரு : இரக்கம் நிறைந்த தந்தையாகிய இறைவன், தம் திருமகனின் இறப்பினாலும் உயிர்ப்பினாலும் உலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கிய இறைவன், பாவ மன்னிப்புக்காகத் தூய ஆவியைப் பொழிந்தருளிய இறைவன், திருச்சபையின் திருப்பணி வழியாக உமக்கு மன்னிப்பும் சமாதானமும் அருள்வாராக. நானும் பிதா,சுதன்,பரிசுத்த ஆவியின் பெயரால் உம் பாவங்களிலிருந்து உம்மை விடுவிக்கிறேன். சமாதானத்துடன் செல்லுங்கள்.

பெறு : நன்றி. (எழுந்து இருப்பிடம் செல்க. மனத்துயர் செபம் முடிக்கவிலை என்றால் தொடரவும்.)

மனத்துயர் செபம் ;

(குரு பொறுத்தல் ஆசீர் வழங்கும் போதே கீழ்கண்ட மனத்துயர் செபம் சொல்லுக.)

என் இறைவா, நன்மை நிறைந்தவர் நீர். அனைத்துக்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன்.

உமது அருள் துணையால் நான் மனந்திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொண்டிருக்கிறேன்.

எங்கள் மீட்பராம் இயேசுகிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும்.

பின்னர் குரு கொடுத்த பரிகாரத்தை ஜெபிக்கவேண்டும் அல்லது செய்ய வேண்டும்.